“கரப்பான் பூச்சி நகைக்குமோ?” – நூல் அறிமுகம்
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் எடுத்த இரண்டு புத்தகங்களில் ஒன்று, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி மாண்புமிகு பிரபா ஸ்ரீதேவன் அவர்கள் ‘தினமணி’ நாளிதழில் 2013-15 காலப்பகுதியில் நடுப்பக்கக் கட்டுரைகளாக எழுதிய 45 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். அவ்வப்போது வாசித்திருந்தாலும், அவற்றைத் தொகுப்பாக வாசிப்பது ஒரு தனிச் சிறப்பு. நீதித்துறையின் பின்னணியில் இருந்து கொண்டு, ஆசிரியர் சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள அநீதி, அக்கறை, அன்பின் பன்முகத்தன்மை போன்றவற்றைத் தீர்க்கமான பார்வையுடன் அணுகியுள்ளார்.
உறவுகளின் ஆழம்: ‘பாடப்படாத ஹீரோக்கள்’
தாயன்பைப் பற்றி எண்ணற்ற படைப்புகள் வந்திருந்தாலும், ஆசிரியர் வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் தந்தையின் அன்பைப் பற்றிய ‘அன்புடன் அப்பா…’ என்ற கட்டுரை தனித்து நிற்கிறது. ஒரு தேர்வுக் குழுவில் சந்தித்த நேர்மையான மாணவி, விவாகரத்துக்குப் பிறகும் குழந்தைகளுக்குத் தாயன்பை மறுக்காத தந்தை என, வெளியுலகிற்குத் தெரியாமல் தொடரும் பாசத்தின் பல முகங்களைச் சித்திரிக்கிறது. “எந்த வேலை செய்தாலும் அதில் உன் திறனைக் காண்பித்து சிறப்பாகச் செய்” எனக் கற்பிக்கும் தந்தையைப் போல், பல ‘பாடப்படாத ஹீரோக்களான’ அப்பாக்களின் பங்களிப்பை அவர் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.
இயற்கையும் நீதியும்: ‘கரப்பான் பூச்சி நகைக்குமோ?’
புத்தகத்தின் தலைப்புக் கட்டுரையான ‘கரப்பான் பூச்சி நகைக்குமோ?’, சுற்றுச் சூழல் அக்கறை குறித்த ஒரு அபாய எச்சரிக்கை. மதுரை ஒத்தக்கடை யானைமலையை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தகர்க்க முயன்றபோது மக்கள் ஒன்றிணைந்து போராடித் தடுத்த கதையை சில வரிகளில் தொட்டுக்காட்டி, மணல் கொள்ளை, இயற்கை வளச் சுரண்டல், காடுகள் அழிப்பு போன்ற செயல்கள் எத்தகைய பேரபாயங்களை விளைவிக்கும் என்பதை விளக்குகிறார்.
மாண்புமிகு நீதிபதி சந்துரு அவர்கள் அணிந்துரையில் சுட்டிக் காட்டுவது போல, “இத்தகைய கேடுகளைக் கேட்க தெய்வம் தூணிலிருந்து வராது; சுனாமியாய், வெள்ளமாய், பேரலையாய் வந்து நம்மை அழிக்கும்,” என்ற ஆசிரியரின் எச்சரிக்கை அழுத்தமானது.
சட்டமும் சமூக மாற்றமும்
சமூகப் பிரச்னைகளில் ஆசிரியரின் நீதிக் குரல் கூர்மையாக ஒலிக்கிறது. ‘இன்னும் எதற்காகக் காத்திருக்கிறோம்?’ என்ற கட்டுரையில், விவசாயத் தற்கொலை, வரதட்சணைக் கொடுமை, காதல் தோல்வி எனத் தற்கொலைகளுக்குப் பின்னால் உள்ள சமூகச் சூழல்களை விவரிக்கிறார். மேலும், தற்கொலையைக் குற்றமாக்கும் ஐ.பி.சி 309-வது பிரிவை நீக்க வலியுறுத்திய ஆசிரியரின் அக்கறை, 10 ஆண்டுகள் கழித்து (பாரதீய நியாய ஸன்ஹிதா சட்டத்தில்) அப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் நிறைவேறியுள்ளது பெரும் திருப்தி அளிக்கிறது.

‘விசாகா வழக்கு ஒரு ஒளிவிளக்கு’ கட்டுரையில், பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்க சட்டம் இயற்றக் காரணமான ராஜஸ்தான் பன்வாரிதேவி குறித்த முக்கியத்துவம் வாய்ந்த விசாகா வழிகாட்டல்களைப் பற்றிப் பேசுகிறார். (நான் தற்போது சென்னை உயர்நீதிமன்ற பெண்ணுரிமை வழக்கறிஞரான திருமதி தனா மாத்ரி குருசாமி அவர்கள் எழுதிய TREATISE ON POSH ACT என்ற புத்தகத்தை மொழியாக்கம் செய்து கொண்டிருக்கிறேன். அதில் சட்டம் இயற்ற தூண்டுதலாக அமைந்த விசாகா வழிகாட்டல்கள் பற்றி விரிவாக வருவதை படித்திருந்ததால், நீதிபதியவர்களின் கட்டுரையின் கூர்மை உடனே விளங்கியது)
‘நியாயத்தைத் தேடிச் செல்லும் பாதை’ கட்டுரையில், அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரத்தையும், இந்தியாவில் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் அவலத்தையும் இணைத்துப் பேசுகிறார். “சாதாரண மக்கள் நீதிமன்றத்திற்கு போனால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஜனநாயகம் நிற்கிறது,” என்று அவர் ஆகஸ்ட் 2013-ல் பதிவு செய்த கவலை, இன்றும் தீர்க்கப்படாத ஒன்றாகத் தொடர்வது வேதனையின் உச்சம்.
தேசமும் மனிதநேயமும்
அனைவருக்கும் கல்வியறிவு, தீண்டாமை ஒழிப்பு போன்ற பொதுப் பார்வையோடு வாழ்ந்த தனது கொள்ளுத்தாத்தா நீதிபதி வி. கிருஷ்ணசாமி ஐயர் குறித்த நினைவுகள், பிச்சை எடுப்பவரையும் மனிதத்தோடு பார்க்க வலியுறுத்தும் கருத்துக்கள் என, அடிப்படை மனிதநேயம் ஆழமாகப் பேசப்படுகிறது.
மேலும், ‘புவிசார் குறியீடு பலவிதம்’ என்ற கட்டுரையில் மதுரை மல்லி, திருப்பதி லட்டு, காஞ்சிப்பட்டு எனப் புவிசார் குறியீடுகளின் முக்கியத்துவத்தை அறிவுசார் சொத்துரிமையோடு இணைத்து விவரிக்கிறார். இந்தப் புவியியல் பன்முகத்தன்மை, “கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் – காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்,” என்ற பாரதியின் கவிதை வரிகளை நினைவூட்டுகிறது.
சமூகக் கடமை
புள்ளி விவரங்களில் மறையும் சோகம் – என பெருகி வரும் மோட்டார் வாகன விபத்துக்கள், உயிாிழப்புகள், இழந்த சொந்தங்களின் அன்புக்கு, பாசத்திற்கு, அரவணைப்பிற்கு எவ்வாறு கணக்குப்பார்ப்பது என்கிற கலையை முன்னிறுத்தி இழப்பீடு வழக்குகளை விரைந்து முடிப்பதில் நீதிமன்றம், வழக்கறிஞர் அனைவருக்கும் பொறுப்புள்ளது என்பதை வலியுறுத்துகிறார்.
விவாதம் என்பது சண்டையல்ல – என்கிற கட்டுரையில் ஒவ்வொரு கருத்திற்கும் மாற்றுக் கருத்து உண்டு என்ற புரிதல் இல்லாமல் தொலைக்காட்சி விவாதங்கள் தெருச்சண்டை போல் மாறிவிட்டதை சாடுகிறார். முதல் முறை வாக்காளர்களே – என்ற கட்டுரையில் இளைஞர்கள் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதோடு, முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட ஒருவரின் அனுபவத்தைக் கேட்ட போது “ஒரு துடைப்பமாவது கொடுங்கள், உங்களுக்கு வாக்களிக்கிறேன்” என வாக்குரிமை வியாபாரமாகிப் போனதை வெளிப்படுத்துகிறார்.
ஆனை ஆனை அழகர் ஆனை, கட்டிக் கரும்பை மிதிக்கும் ஆனை, காவேரி ஜலத்தில் குளிக்கும் ஆனை என குழந்தைகளுக்கு கதைகளைச் சொல்லுங்கள், இயற்கையை அறிமுகப்படுத்துங்கள் என ‘மாய உலகின் திறவுகோல்’ என்ற கட்டுரையில் வலியுறுத்துகிறார். நான் என் தாத்தாவிடம் கதைகேட்டிருக்கிறேன், என் பெண்ணுக்கு கதை சொல்லியிருக்கிறேன், இன்று பேரனுக்கும் கதைகள் பிடித்திருக்கிறது, கதை சொல்லிக் கொண்டே சில மணிநேரங்கள் அவனுடன் செலவிடுவது சுகானுபாவமாக இருக்கிறது.
முடிவுரை
45 கட்டுரைகளையும் தனித்தனியாகப் பேசினால், அது புத்தக விமர்சனமாக இல்லாமல் மறுபதிப்பாகிவிடும். நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் அவர்கள் இந்த 45 கட்டுரைகள் மூலம் சமூகத்துக்கு அளித்திருப்பது 45 நல்முத்துக்கள்.
அவரது ஆங்கிலப் புத்தகமான ‘OF VINEYARD EQUALITY’ முன்னர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது எனக்கு மகிழ்ச்சியான அனுபவம். அதேபோல, இந்தப் புத்தகம் வாசித்த நிறைவையும், சமூகத்தைப் பற்றிய ஆழமான புரிதலையும் அளிக்கிறது. தீர்க்கமான பார்வை, கனிவான அக்கறை, சட்டத்தின் மீதான நம்பிக்கை ஆகியவற்றை ஒருங்கே கொண்ட இந்தத் தொகுப்பை அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று என்று நிச்சயமாகப் பரிந்துரைப்பேன்.
நூலின் விவரங்கள்:
நூல் : கரப்பான் பூச்சி நகைக்குமோ? (Karappaan Poochchi Nagaikkumo)
ஆசிரியர் : நீதியரசர் பிரபா ஶ்ரீதேவன் (Prabha Sridevan)
வெளியீடு : கவிதா வெளியீடு
விலை: ரூ.225
எழுதியவர் :
✍🏻 சம்பத் ஸ்ரீனிவாசன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
