ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள்

ஒரு நம்பிக்கையில்

சிறகுகள் தன்னை யுணர்கையில்

கலங்கள் கப்பல்களாகி

கடல்கள் கால்வாய்களாகி

சிறுவர்கள் கைகளில்

காகிதங்கள் போராயுதங்களாகும்

எனக்குக் கவிதைகளாகும்

ஒரு நம்பிக்கையில்

***********************************

வீடு

இரவில் எப்போதும் எரியும்

சோடியம் விளக்கு

புணர்ச்சி காட்டும்

 

செருப்புகள் மிதந்து சென்ற

கல் தளவரிசையில்

தலை சாய்க்க இடமுண்டு

 

இரும்புத் தகட்டால் வளைத்துக் கட்டப்பட்ட

வேலியேறி

சின்னமகன்

காம்பௌண்டுக்குள்

ஒன்றுக்கிருப்பான்

 

உக்கிரச் சூரியன்

கால்களைப் பரப்பி

சமையல் பாத்திரங்களின்

நிழலை அழிப்பான்.

 

ஹாரன்களும்

எந்திரச் சத்தங்களும்

என் இருக்கையை

நினைவுபடுத்தும்

 

அறிந்தவர்கள் என்று மட்டுமில்லை

எவரும் வரலாம்.

 

பெருநகர்ச் சாலையின்

நடைபாதை என்று

நீ சொல்லலாம்

ஆனால்-

எனக்கு இது வீடு

என் வீடு !

**********************************