ப்ரதிபா ஜெயசந்திரன் தொகுத்த “நவீன தலித் சிறுகதைகள்” புத்தகம் | Pradeepa Jeyachandran's Naveena Dalit Sirukathaigal Tamil Book Review | ச.முகிலன் | www.bookday.in

ப்ரதிபா ஜெயசந்திரன் தொகுத்த “நவீன தலித் சிறுகதைகள் ” – நூல் அறிமுகம்

“நவீன தலித் சிறுகதைகள் ” – நூல் அறிமுகம்

*தலித் மக்களின் வாழ்வியலைப் பேசும் கதைகள்* 

-ச.முகிலன்

நம் இந்திய துணைக்கண்டம் ஆதி காலந்தொட்டு பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்டது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி
வெவ்வேறு மொழியைச் சார்ந்த மன்னர்கள், வெவ்வேறு மதத்தைச் சார்ந்த மன்னர்கள், ஆங்கிலேயர்கள் என்று எத்தனை பேர் இங்கு ஆண்டாலும் எவர் ஒருவர் ஆட்சியிலும் எளிய மக்களின் வாழ்வில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு , அரசியல் அமைப்பை உடைய மக்களாட்சி நாடாக மாறிய பின்பும் கூட தலித் மக்களின் மீதான அடிமைத்தனம் தொடர்ந்தது. பின்னாளில் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, திராவிட அமைப்புக்கள், இடதுசாரி அமைப்புகள், 90-களுக்கு பின்னர் எழுச்சி பெற்ற தலித் அமைப்புகள் ஆகியோரின் தனித்தனி மற்றும் கூட்டுச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கியது. இன்னும் சமூகம் முழுமையாக மாறவில்லை என்றாலும் நம் செயல்பாட்டின் வீச்சை நாமே தெரிந்து கொள்ள நமக்கு நாமே வைத்துக் கொண்ட ஒரு தேர்வு தான் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் சார்பில் தொகுத்து வெளியிடப்பட்ட நவீன தலித் சிறுகதைகள் நூல்.

ததீஒமு அமைப்பின் இம்முயற்சி மிகுந்த பாராட்டுக்குரிய ஒன்று. தலித் மக்கள் தங்கள் வாழ்வை , தாங்கள் வாழும் சமூகத்தை எந்த அளவு புரிந்து வைத்திருக்கிறார்கள்? அவர்கள் சமூகத்திலுள்ள பிறரை எப்படி அணுகுகிறார்கள்? சமூகத்திலுள்ள பிறர் தலித் மக்களை எப்படி அணுகுகிறார்கள்? இருபத்தோராம் நூற்றாண்டிலும் சாதிய அமைப்புகளின் செயல்பாடுகள் எப்படியெல்லாம் உள்ளன? ஆகியவற்றை இத்தொகுப்பின் வழியாக அறியலாம்.

அதே சமயம் இடதுசாரி அமைப்புகள், திராவிட அமைப்புகள் மற்றும் தலித் அமைப்புகள் ஆகியவற்றில் தலித் அல்லாதோர் பங்காற்றும் போது அவர்களை தலித் மக்களும், தலித் அல்லாதோரும் எவ்வாறு அணுகுகிறார்கள் ? அவர்களின் செயல்பாடுகளின் போது உண்டாகும் இடர்பாடுகள், நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும், தலித் அல்லாதோரிடம் இன்றைய தலித் மக்களின் வாழ்வியல் குறித்த

பார்வையை அறிந்து கொள்ளவும் ஒரு நூலைத் தொகுக்கலாம் என்பது எனது கருத்து.

ததீஒமு அமைப்பின் சார்பில் தோழர் ப்ரதிபா ஜெயச்சந்திரன் அவர்களால் தொகுக்கப்பட்ட நவீன தலித் சிறுகதைகள் தொகுப்பு – புதிதாக எழுதுபவர்கள், நீண்ட நாட்களாக எழுதுபவர்கள் , பெண் எழுத்தாளர்கள் உள்ளிட்டோரிடம் கதைகளைப் பெற்று மொத்தம் 16 சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்துள்ளது. தொகுப்பிலுள்ள அனைத்து கதைகளும் இன்றைய சமூகத்தை உள்ளபடியே நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

“இறைமொழி” அவர்களின் “எதிர்காத்து” சாதியால் ஒடுக்கப்படும் ஒருவரை, அவரின் வரலாறு, சமூகத்திற்காக அவரின் முன்னோர் செய்த தியாகம் ஆகியவற்றை அறிந்த பின்னர் ஆதிக்க மனதோடு எதிர் கொண்டவரின் மனமாற்றத்தைப் பேசுகிறது.

சாதி, மதம், மொழி,பாலினம், வர்க்கம்,பதவி என எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்த சமூகம், வர்க்கத்தால், கல்வியால், குடும்பச் சூழலால், தனிமனித ஆர்வம் மற்றும் முயற்சியால் மேலெழுந்து வரும் ஒரு பெண்ணை என்னவாக எதிர்கொள்கிறது?

பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் அவர்களின் படுகொலையைக் தழுவி எழுத்தாளர் “எஸ்தர் ராணி” அவர்களால் எழுதப்பட்ட “சமம்” என்ற கதையில் இருபத்தோராம் நூற்றாண்டிலும் கூட தலித்துகளும் பெண்களும் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் அவல நிலையை பதிவு செய்கிறார்.

கதையின் முடிவில் எழுத்தாளர் “சார் இங்க எல்லாரும் சமம் இல்லையா? ” என்று வினா எழுப்புகிறார். வாசகர் மனதிலும் அதே வினா எழுகிறது. அதுதான் இக்கதையின் வெற்றி ஆகும்.

யாரோ ஒருவனை நம்பி ஏமாந்ததால் மனப்பிறழ்வுக்கு உள்ளான பெண்ணை “சின்ன சாதி சிறுக்கி” என்று இந்த சமூகம் அவமானப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அந்த நிலைக்குக் காரணமான ஆணைப் பற்றி சமூகத்திற்கு எந்த விமர்சனமும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லும் எழுத்தாளர், சின்ன சாதி சிறுக்கியோ ? பெரிய சாதி சிறுக்கியோ ? பெண்ணென்றால் எப்போதும் இந்த சமூகத்திற்கு இளக்காரம் தான் என்பதைக் கதையில் கூறியிருக்கிறார். ஒரு பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றி, அதனால் பிறந்த குழந்தையையும் அவளிடமிருந்து பறித்து, தன் மனைவியிடம் அனாதை ஆசிரமத்திலிருந்து குழந்தையை எடுத்து வந்ததாகக் கூறும் ஆண் எந்தச் சலனமும் இல்லாமல் வாழ்கிறான். “பேச்சி என்னும் பேரழகி” கதையில் தலித் வாழ்வியலோடு பெண்ணுரிமையும் பேசுகிறார் “முனைவர் கு.டெய்ஸி”.

வடமாநிலமோ, தென் மாநிலமோ, வட தமிழகமோ, தென் தமிழகமோ, நகரமோ கிராமமோ எந்தப் பகுதியாக இருந்தாலும் தலித்துகள் மட்டும் ஊரின் கிழக்கு திசையில் அல்லது ஊரின் ஒதுக்குப்புறத்தில் தங்கள் குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொள்வது அல்லது மற்றவர்களால் தாங்கள் குடியிருக்குக்கும் பகுதி ஊரின் ஒதுக்குப்புறமாக ஒதுக்கப்படுவது ஏன்? இதன் பின்னால் உள்ள அரசியல் இயங்கியலாக மாறி விட்டது தான் ஆகப் பெரும் சோகம். மும்பை போன்ற பெருநகரங்களிலும் இது தொடர்வது வேதனை தான். கர்ப்பிணியாக இருக்கும் ஒரு தலித் பெண் கழிப்பறைக்கு செல்வதில் உண்டாகும் இடர்பாடுகள், இயற்கை உபாதை கழிக்கக் கூட ஆளில்லா நேரம் பார்த்து செல்ல வேண்டி அசூயை, ஆளில்லா நேரம் அமையும் வரை இயற்கை உபாதை கட்டுப்படுத்தி வாழும் அவல நிலையை “காத்திருப்பு” என்னும் கதை வழியாக நமக்கு உணர்த்துகிறார் எழுத்தாளர் “புதிய மாதவி”

21ம் நூற்றாண்டில் பல்வேறு தளங்களில் நாம் பெருமளவு முன்னேற்றம் அடைந்து வந்திருந்தாலும் சாதி என்ற ஒன்று சமூகத்தை பின்னோக்கி இழுத்துக் கொண்டே தான் இருக்கிறது. பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்க முடியாத நிலை, இரட்டைக் குவளை முறையும் ஆங்காங்கே இன்றும் தொடர்கிறது. சாதிய தீண்டாமைக்கான கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் இருந்தும் அரசு இயந்திரத்தில் செயல்படும் காவல்துறை அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் நீதிபதிகளும் கூட சாதியவாதிகளாக இருப்பதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையான நீதி கிடைப்பதில்லை. அதன் காரணமாகவே இங்கு பெரும்பாலான மக்கள் நீதிமன்றத்தின் பக்கமும், காவல் நிலையத்தின் பக்கமும் செல்ல தயக்கமும் அச்சமும் கொள்கின்றனர். கிராமங்களில் சாதிய மனோபாவம் சற்று அதிகமாகவே இன்றளவும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கண்மாய் நீரை குடிநீராகப் பயன்படுத்தும் கிராமத்தில் தலித் மக்கள், தலித் அல்லாத யாராவது ஒருவர் எடுத்துத் தரும் நீரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். மாறாக அவர்கள் தாங்களாகவே நீரை எடுக்கக் கூடாது என்ற விதிமுறையுள்ள ஊரில் படித்து ஆசிரியர் பணியில் இருக்கும் தலித் ஒருவர் கண்மாயில் இறங்கி குளித்தால் என்னவாகும்? சமூக மாற்றத்திற்கான இம்முடிவை “கலகம் பிறக்காமல் நியாயம் பிறக்காது” என்ற கண்ணோட்டத்தில் நமக்குத் தருகிறார் எழுத்தாளர் “மு.தா. அன்பழகன்” தனது “தீட்டுப்படாத கண்மாய்” சிறுகதை வாயிலாக.

காலச் சூழல் மாறும் போது மனிதர்களும் மாறுவார்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். நமது நம்பிக்கை பொய்த்துப் போகும்போது உண்டாகும் வலி சொற்களால் விவரிக்க முடியாத ஒன்று. பொது குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாத நிலை, பொது கண்மாயில் குளிக்க முடியாத நிலை இவையெல்லாம் இருக்கும்பொழுது பொது என்ற சொல் உண்மையில் யாருக்கானது ?எதன் அடிப்படையில் பொது, தனி என்ற பிரிவினைகள் இங்கே உண்டாகிறது? என்ற வினாக்கள் இயல்பாகவே நமக்குள் எழுகிறது. எப்படி தண்ணீர் பிடிக்க விடுவதில்லையோ? அதேபோன்று தலித் மக்களிடம் தண்ணீர் வாங்கி குடிக்கவும் அவர்களிடமிருந்து உணவைப் பெற்று உண்ணவும் மறுதலிக்கிறது சமூகம். தலித் மக்கள் அரசுப்பள்ளியில் சமைக்கும் உணவை தங்கள் வீட்டுப் பிள்ளைகள் உண்ணக்கூடாது என்று எண்ணும் மக்கள் நம்மோடு தான் வாழ்கின்றனர். தங்கள் வீட்டுப் பிள்ளைகள் பசியில் இருந்தால் கூட தலித் மக்கள் சமைத்த உணவை உண்ணக்கூடாது என்று எண்ணும் மக்கள் அதை வைராக்கியமாகக் கருதுவதை நாம் இன்றும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் வளர்ந்து வரும் சந்ததியினர் பள்ளிக் காலத்திலிருந்து தங்களுக்குள் அன்பையும், அரவணைப்பையும், ஒற்றுமையையும் பேணி வருவதோடு இந்த சமூகத்திற்கு நம்பிக்கையை தருகின்றனர் என்பதை எழுத்தாளர் “சுந்தர செல்வன்” தனது “ஒன்றான புத்தகப்பை” கதையின் மூலமாகக் கூறுகிறார்.

கையை ஊன்றி கரணம் பாய்ந்து கொண்டிருந்த தலித் மக்களில் ஒரு சிலர் தங்களின் உழைப்பால் அல்லது கல்வியால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த பின்னர் அவர்கள் தங்கள் சக குடும்ப உறுப்பினர்களை, உறவினர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. இதன் காரணமாக தாங்களும் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்ற சிந்தனை பாதிக்கப்பட்டவர்களிடம் உண்டாகிறது. அதில் சிலர் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை மதிப்பதில்லை. மாறாக அவர்களது பொருளை எப்படி தன்வயப்படுத்தலாம் என்ற எண்ணம் கொள்கின்றனர். மரியாதை பணத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதே இதற்கு காரணம். அதை உணர்த்தும் விதமாக பேராசை கொண்டு சுய சாதிக்குள்ளேயே மற்றொருவர் நிலத்தை அபகரிக்க எண்ணுவதால், உண்டாகும் பிரச்சனைகளைப் பற்றிக் கூறுகிறது “அய்யனார் ஈடாடி” எழுதிய “நடுக்கம்மாய்” கதை .

எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும் என்பது பழமொழி. ஆனால் எந்தத் தெய்வமும் வலியோரை வாட்டுவதில்லை. அதனால் தான் அதிகாரமும் பலமும் இல்லாத தலித் பெண்களை பாலியல் வல்லுறவு செய்யும் வல்லூறுகள் இன்னும் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றன. அப்படி தங்கள் வாழ்வில் அழியாத ஒரு வடுவைத் தந்த பாதகர்களை பாதிக்கப்பட்ட பெண்கள் அவர்களே தண்டிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களிடையே வாழ்ந்து அவர்களின் வலியைப் புரிந்து கொள்ளும் ஆணின் கையில் அதிகாரம் கிடைத்தால் அது சமூகத்தில் எந்த வகையான நேர்மையான மாற்றத்தை உருவாக்கும் என்பதை மறுவாசிப்புக்கு உட்படுத்தி சமகால சமூகப் போராளிகள், அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள் குறித்த தகவல்களை நமக்குத் தருகிறார் ஒரு “நாள் டிஎஸ்பி’ என்னும் சிறுகதையில் எழுத்தாளர் “பாரத் தமிழ்”. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எழுதப்பட்ட இந்தக் கதையில் தலித் பெண்களை துன்புறுத்துவோர் அவ்வாறு நடந்து கொள்வதற்கு முதன்மையான காரணம் அவர்களின் சாதிய மனநிலையே.

வன்முறையை ஒருபோதும் ஆதரிக்காது “வெறுப்பின் கொற்றம் வீழ்க! அன்பே அறமென எழுக!” என்ற கொள்கை முழக்கத்தின் வழி வாழ்ந்து வருபவர்கள் கூட தொடர்ந்து இழப்புகளை மட்டுமே சந்தித்தால், அவர்கள் மீண்டும் ஒரு இழப்பை பெறக் கூடாது. இழப்புகளுக்காக வன்மமும் பழியும் அவர்கள் மனதில் சேரக்கூடாது என்பதற்காக இழப்பை உண்டாக்கிய குடும்பத்துப் பெண் தன் காதலனுக்காக, காதலை ஏற்றுக் கொள்ளாமல் ஆணவக் கொலைக்கு தயாராகும் பெற்றோருக்கும், உறவினருக்கும் கொடுக்கும் சாதிய மனநோய்க்கு எதிரான மருந்தாக எழுத்தாளர் “மணிவண்ணன்’ “அன்புக்காரி” என்ற சிறுகதையை எழுதியுள்ளார்.

தலித் பெண்ணான மல்லிகா ஆயாவிற்கு 40 வயது வரை குழந்தை இல்லை. 40 வயதிற்கு பின் குழந்தைகளை பெற்றெடுத்த மல்லிகா ஆயாவின் ஊரில் அதுவரை குழந்தையின்மையை குத்திக்காட்டி பேசியவர்கள், குழந்தை பெற்ற பின் இந்த வயசுல புள்ள பெத்துட்டியா என்றும் கேட்டு உதாசீனப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு மல்லிகா ஆயா, “உன் ஊர்ல இப்பயும் நீ கும்பிடு போடுறியே, அவங்க பொம்பளகிட்ட இப்படி நீ பேச முடியுமா? மாங்கா மண்ட ! அங்க ஒரு படி கீழ தான நீ ?உன் பவுசி தான் ஊருக்கே தெரியுமே ! என்று பதிலுரைக்கிறார். அதே ஊரில் வேறு சாதி ஆணை ஒரு காதலித்து திருமணம் செய்து கொண்ட சுமதி அக்காவை அவர்கள் குடும்பம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவரது அப்பா பலராம் தாத்தா படுக்கையில் விழுந்த போது சுமதி அக்கா மட்டுமே அவரின் கவனித்து கொள்கிறார். ஆனால் அவர் இறப்பில் கூட, சுமதி அக்காவின் சகோதரர்கள் சுமதி அக்காவிடம் பேசிக் கொள்ளவில்லை. சாதி புரையோடிக் போய் இருக்கும் சமூகத்தில் மல்லிகா ஆயா என்ற தலித் பெண் , தலித் ஆணைத் திருமணம் செய்து கொண்ட சுமதி அக்கா இவர்கள் இருவரிடம் மட்டும் சமூகம் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கிறது சாதிய மனநிலையோடு அவர்களை நடத்துவதில் என்பதை “முனைவர் முத்துக் கந்தன்” எழுதிய “பவுசி” சிறுகதை நமக்கு உணர்த்துகிறது.

புனைவையும், நடப்பு நிகழ்வையும் மாறி மாறி நான் லீனியர் பாணியில் வேங்கை வயல் பிரச்சனையை கதை கருவாகக் கொண்டு சமூகத்தைச் சாடும், கேள்வி கேட்கும், சாதிய மனநிலைக்கு எதிரான சாட்டையைச் சுழற்றும் “மஞ்சள் நிற மனிதர்கள் மீதிருந்து வீசும் துர்நாற்றம்” கதை எழுத்தாளர் “அன்பாதவன்” அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இங்கு தலித் மக்களுக்கு சமூகத்தில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு தலித் அமைப்புகளும் இடதுசாரி அமைப்புகளும் மட்டும் தான் குரல் எழுப்புகின்றனர்; போராடுகின்றனர். இதர கட்சிகளும், மற்றவர்களும் வேடிக்கை பார்த்து, கடந்து போகின்றனர். இன்னும் சொல்லப்போனால் தொடர்ந்து சாதியைச் சொல்லி இழிவுபடுத்துவதை மட்டுமே மனநிலையாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். யாரோ ஒருவரின் பிரச்சனை, அதை நான் ஏன் கண்டு கொள்ள வேண்டும் எனக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று வேடிக்கை பார்த்துக் கடப்பவர்களும் நிறைய பேர் உள்ளனர் என்பதை தனது கதையின் வழியாக ஆழமாக சொல்லிச் செல்கிறார் எழுத்தாளர் அன்பாதவன் அவர்கள்.

“இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்ற வள்ளுவரின் குரலை மதிப்பெண்ணுக்காக மட்டும் மனப்பாடம் செய்தவர்களும் அல்லது மேடைகளில் பேசி கைதட்டல் பெறுவதற்காக மனப்பாடம் செய்தவர்களும் உண்டு. ஆனால் குறளின் பொருளை முழுவதுமாக உள்வாங்கி அதை வாழ்வில் நடைமுறைப்படுத்துபவர்கள் உண்மையில் குறளை படிக்கத் தெரியாதவர்கள், குறளை செவி வழியாகக் கூட கேட்டு அறியாத‌ எளிய மக்களே. தனக்கு தீங்கு விளைவித்தவரை மன்னித்துக் கடப்பதற்கு நிச்சயமாக பரந்த மனப்பான்மை வேண்டும். பழிக்கு பழி, வன்மம் தீர்த்தல் என்பது பொதுவாக சமூகத்தில் நீக்குமற நிறைந்து காணப்படுகிறது. நம் வாழ்வின் ஊடாகக் கலந்திருக்கும் திரைமொழியும் ,காட்சிமொழியும் தொடர்ந்து இதைப் பேசி பழிக்குப் பழி வாங்குவதை வீரம் என்று காட்டி வருகிறது. இதனால் மன்னித்து விடுபவர்களை கோழையாகவும் , இயலாதவர்களாகவும் கேலி செய்யும் சூழல் சமூகத்தில் உண்டாகிறது. ஆனால் பழி வாங்குவதை விட மன்னித்து விடுவதும், தனக்கு துன்பம் விளைவித்தவருக்கும், உதவி செய்யும் சூழல் ஏற்பட்டால் உதவி செய்வதும், தனக்கு நேர்ந்த துன்பம் அவருக்கு நேராமல் பார்த்துக் கொள்வதும் மனித மாண்பு என எண்ணி வாழும் எளிய மக்களின் வாழ்வை பதிவு செய்து செய்கிறது எழுத்தாளர் “எஸ்.காமராஜ்” அவர்களின் “இன்னா செய்தாரின் முதலைக் கண்ணீர்” சிறுகதை . சாதியால் பாதிக்கப்பட்டவரைப் பற்றி பேசும் இக்கதையில், கல்வி பெறும் இளம் தலைமுறையினரால் சாதிய நோய் நீங்கி மாற்றம் உண்டாகும் என்ற நம்பிக்கையை நம்மிடையே விதைக்கிறார் எழுத்தாளர்.

காலம் காலமாக பெண்கள் மீதான அடக்குமுறை உடலாலும் மனதாலும் பல்வேறு வகைகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது . பெண் என்பவள் எளிய பெண்ணாக இருந்தாலும்,அரசியாக இருந்தாலும் , இல்லை வேறு யாராக இருந்தாலும் பெண் என்பவள் பெண் என்ற ஒரே காரணத்திற்காகவே அடக்குமுறைக்கு ஆளாவது தொடர்ந்து சமூகத்தில் நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஒரு ஆண் தன் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணை, மனைவியை, காதலியை, சமூகத்தில் தன் மதிப்பை உயர்த்திக்காட்டவும், சமூகம் சொல்லும் பழி சொல்லுக்கும், புற அழுத்தத்திற்கும் அஞ்சுவதாலும் பெண்ணை அடிமைப்படுத்துவதும் அடக்குமுறைக்கு உள்ளாக்குவதும் சந்தேகப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது என்கிறான். அவ்வாறான ஒரு கதையைத்தான் இந்தத் தொகுப்பின் தொகுப்பாளர் “ப்ரதீபா ஜெயச்சந்திரன்” அவர்கள் “மதனமாலை அம்மன் கதைப்பாடல்” என்னும் நாட்டார் வகை தெய்வங்களைக் குறிக்கும் கதைப் பாடலை, கருவாகக் கொண்ட கதையை நமக்குத் தந்திருக்கிறார். அரசியானாலும் அவளும் பெண் தானே என்ற எண்ணம் ஆணாதிக்க சமூகத்தில் மேலோங்கி நிற்பதை கதையின் வழியே நமக்கு உணர்த்துகிறார் எழுத்தாளர்.

சாதி என்னும் அழுக்கு இந்த சமூகத்தில் எங்கெங்கெல்லாம் பரவி விரிந்து கிடக்கிறது என்பதை நாம் நேரடி அனுபவங்கள் மூலமாகவும், கலை இலக்கியங்களின் வழியாகவும் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கல்வியும் வாசிப்பும் ஒரு மனிதனுக்கு முழுமையான அறிவைத் தந்து விடாது; சமூகம் பற்றிய பார்வையை மாற்றி விடாது: மாறுதலுக்கு மனிதன் உள்ளூறத் தயாராக வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது “எட்டாம் வகுப்பு அ பிரிவில் ஒரு தமிழாசிரியர்” என்னும் சிறுகதை. எழுத்தாளர் “அழகிய பெரியவன்” எழுதிய இந்தக் கதையில் சமூகத்தின் பார்வையில் அறிவார்ந்த, வரலாறு தெரிந்த, ஆசிரியராக இருக்கும் ஒருவர் ஏன் அம்பேத்கர் பற்றிய பாடத்தை வகுப்பில் நடத்தாமல் கடந்து செல்கிறார்? அம்பேத்கர் பற்றிய தகவல்களை ஏன் அவர் அறிந்திருக்கவில்லை? அம்பேத்கரை அவர் என்னவாகக் கருதி தன் மனதில் இருந்து, சிந்தனையிலிருந்து விலக்கி வைத்திருக்கிறார் ? இதை எழுத்தாளரின் புனைவு என்று எண்ணி நாம் கடந்து விட முடியாது நம் இந்தியத் திருநாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை எழுதிய வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் செயல்பட்டவர் என்பதை நம் அனைவரும் அறிந்திருந்தாலும், அந்த சட்டத்தைப் படித்து வழக்கறிஞர்களாக, நீதிபதியாக சட்டத்துறையில் பணியாற்றும் எத்தனை பேர் தங்கள் அலுவலகத்தில் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்திருக்கின்றனர் என்பது நிச்சயமாக கேள்வி எழுப்ப வேண்டிய ஒன்று. ஆனால் அவர்கள் தாங்கள் சார்ந்த சாதித் தலைவரின் படங்களை தங்கள் அலுவலகத்திலும், சட்டை பையிலும் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் கற்ற கல்வியும், சட்டமும் அவர்களுக்கு எந்த வகையான அறிவைக் கொடுத்துள்ளது என்பதை அவர்களுக்கே வெளிச்சம். இதைத்தான் எழுத்தாளர் அழகிய பெரியவன் இந்தக் கதையின் வழி நமக்கு உணர்த்துகிறார். ஆனால் மாற்றத்தை நோக்கி சிந்திப்பதே ஒரு படைப்பாளரின் கடமை என்பதை கதையின் முடிவின் வாயிலாக அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார்.

சிறுவயதில் நாம் அறிந்த ஒரு கதையில் இரண்டு பூனைகள் கொண்டு வந்த ஒரு ரொட்டியை பங்கு பிரித்துத் தருகிறேன் என்று வந்த குரங்கு இரண்டு பூனைகளையும் ஏமாற்றி முழுதாய் ரொட்டியை சாப்பிட்டுச் செல்லும்.

அதைப்போல எழுத்தாளர் “அபிமானி” அவர்கள் எழுதிய பகிர்வு கதையில் அந்த பூனைகளுக்கு நடந்த அநீதி நடந்துவிடக் கூடாது. வலியவன் சொல் சட்டமாக மாறிவிடக் கூடாது. எப்போதும் பாதிக்கப்பட்டவர் பக்கம் நிற்பதே அறம் என்பதை தனது எழுத்தின் வாயிலாக ஆணித்தரமாக கூறியிருக்கிறார். தலித் மக்களில், உறவினர்களாக அடுத்தடுத்த வீட்டில் குடியிருக்கும் இருவர் தங்களுக்குள் உண்டான ஒரு சிறிய நிலத்தகராறுக்காக சமூகத்தால் குறிப்பிடப்படும் மேல்சாதி நபர் ஒருவரிடம் பஞ்சாயத்துக்குச் செல்லும் போது அங்கு என்ன நேர்கிறது? இது போன்ற சொத்து பிரச்சனைகளில் நிலத்தகராறுகளில் சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவர் விட்டுக் கொடுப்பதும், ஒருவரையொருவர் புரிந்து கொள்வதும், சகித்துச் செல்வதும் எவ்வளவு முக்கியம் என்பதையும், இயலாதவர்கள் கூட தன்னைவிட வலிய ஒருவனை, அவனைவிட வலிய ஒருவனால் அடக்கிவிட நினைக்கும் உளவியல் சமூகத்தில் இயங்கியலாக மாறியிருக்கிறது என்பதையும் கதையின் வாயிலாக நமக்கு எடுத்துக் கூறுகிறார் எழுத்தாளர் அபிமானி.

தான் பிறந்தநாள் முதல், தன் பிறப்பு, வாழும் பகுதி , சூழல் ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து அடிமைப்படுத்தப்பட்டு வரும் ஒருவன் எதையெல்லாம் அதிகாரத்தின் குறியீடாக எண்ணுகிறான்; அஃறிணை பொருள் கூட தன்னை அதிகாரம் செய்வதாக அவன் உணர்கிறான் . இது வெறும் மனநிலை தான். தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு என்று எண்ணி கடந்து விட முடியாது. அதிகாரத்தால் எத்தனை முறை, அவன் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறான் என்பதை அவன் மனது மட்டுமே அறியும். அஃறிணை பொருள் மீது கூட அவன் அச்சமும் கோபமும் கொள்வதற்கு அடக்குமுறையால் அவன் மனதில் உண்டான பிம்பமே காரணம். மனிதர்கள் மீது தனது எதிர்ப்பைக் காட்ட முடியாமல், அவ்வாறான எதிர்ப்பினால் உண்டாகும் பின் விளைவுகளுக்கு அஞ்சி வாழும் ஒருவன் தனக்கு கிடைத்த நல்வாய்ப்பாக எண்ணி ஓர் அஃறிணைப் பொருளை அதிகாரத்தின் குறியீடாக எண்ணி அவன் செய்யும் செயல்களை
“பிணக் கூராய்வு செய்யப்படும் நாற்காலிகள்” கதையின் வாயிலாக எழுத்தாளர் க.மூர்த்தி நமக்கு உணர்த்துகிறார்.

தொகுப்பில் உள்ள 16 கதைகளின் வாயிலாக, எளிய மக்களின் பக்கம் நின்று மாற்றத்திற்காக உழைத்த அமைப்புகளால், சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், சாதியம் புரையோடிப் போய் இருக்கும் சமூகத்தில் மாற்றத்திற்காக இன்னும் நிறைய உழைக்க வேண்டிய அவசியம் இருப்பதையும் அறிந்து கொள்ளலாம். நடப்பு நிகழ்வுகளால் வருந்தும் நம் மனங்களில் , ஆங்காங்கே நடக்கும் சில நற்செயல்களால் நம்பிக்கை பூக்கிறது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:நவீன தலித் சிறுகதைகள்
ஆசிரியர்:
வெளியீடு:
விலை:₹.170 (10% Discount price was: ₹.153)
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 ச.முகிலன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
தொடர்புக்கு: 9444960935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *