நூல் – பிரபஞ்சன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ஆசிரியர் – பி.என்.எஸ்.பாண்டியன்
வெளியிடு – டிஸ்கவரி புக் பேலஸ்’
பி.என்.எஸ். பாண்டியன்
புதுச்சேரியைச் சேர்ந்த ஊடகவியலாளர். கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.
தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா ஆவணப்படம் இயக்கியவர். புதுச்சேரியின் அரசியல் வரலாற்றைப் பேசும் “ஊரடங்கு உத்தரவு” எனும் நூல் தந்தவர்.
ஐயா பிரபஞ்சனின் கடைசிக் காலத்தில் அவரைப் பேணிப் பாதுகாத்த ஜீவன் இவர்.
நூலுக்குள்…
———————–
பொருளடக்கத்தில் 14 சிறுகதைகள் உள்ளன.
1. பிரும்மம்
2. மனுஷி
3. அப்பாவின் வேஷ்டி
4. பாதுகை
5. மரி என்கிற ஆட்டுக்குட்டி
6. ஒரு நெகடிவ் அப்ரோச்
7. குமாரசாமியின் பகல் பொழுது
8. வெளியேற்றம்
9. கமலா டீச்சர்
10. யாசுமின் அக்கா
11. அண்ணாச்சி
12. ஒரு மதியப் பொழுதில்
13. ஓடாத பிள்ளையாரும் ஓடிய காவேரியும்
14. குழந்தை அழுதுக் கொண்டே இருக்கிறது.
பிரபஞ்சன்
——————–
பிரபஞ்சனின் கதை உலகம், அன்றாட மனிதர்களின் வாழ்க்கைப் போக்கை கூர்ந்து கவனித்து எழுதப்பட்டது. அவரின் எழுத்து சாமான்யர்களைப் பேசியது.
1995-ம் ஆண்டு இவரின் ’வானம் வசப்படும்’ எனும் நாவலுக்கு தமிழுக்கான சாகத்ய அகாடமி விருது பெற்றார்.
பிரபஞ்சன் இளம் தலைமுறையினருக்கு என்றுமே நல்லுதாரணமாகத் திகழ்கிறார்.
பிரும்மம்
—————-
தன் வீட்டின் முன் உள்ள காலி இடத்தில் நடப்பட்ட முருங்கைமரம் தான் கதையின் மொத்தமும். அந்த முருங்கைமரத்திற்கும் வீட்டிற்கும் உள்ள உறவையும் அற்புதமாகச் சொல்ல சொல்ல கதை நம்முடன் பயணம் செய்கிறது.
குழந்தைகளின் குதுகூலமே முருங்கை மரத்தை நான் தோறும் பார்ப்பதுதான். முருங்கை மரம் பக்கத்து வீட்டு குடியில் இருப்பவர்கள் அம்மாவோடு ஐக்கியமாகிறார்கள். எல்லோரும் நேரம் ஒதுக்கி வந்து பேசி விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் போகும் போது நான்கு முருங்கைக்காயும், கீரையும், அவர்கள் கைகளில் சுமந்து கொண்டு போகிறார்கள்.
ஒரு இடத்தில் முருங்கை பற்றி பிரபஞ்சன் இப்படி வர்ணனை செய்கிறார்….
“அடர்த்தி இன்றி மற்றவை போல மிருக பலம் இன்றி வானத்தை நோக்கியே வளர்ந்தது. வானமே தன் லட்சியம் என்பது போல அது வளர்ந்தது. அதன் உச்சி வானக் கூரையைத் தொட்டாலும் என் மனசுக்குள் அது தவழும் குழந்தை”
” முருங்கையை பறவைகளோடும், தொங்கும் காய்களோடும் பார்த்தால், அசப்பில் தன் தோள் மீது குழந்தையைத் தூக்கி வைத்துக்கொண்டு குதி போடும் தாத்தாவைப் போலத் தோணும் ”
இப்படி முருங்கை மரத்தை ஈரம் சொட்ட சொட்ட மனது நனைய நனைய விவரிக்கிறார்.
பலத்த காற்றும், பேய் மழையும் முருங்கை மரத்தையே ஒடித்துப் போடுகிறது. வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் துக்கம் வந்தது போல அமைதியாக இருக்கிறார்கள்.
மறுநாள் வெயில் வீட்டிற்குள் வரத் தொடங்க, அனலாய் கொதிக்க முருங்கை மரம் இல்லாததன் விளைவு தெரிகிறது.
நாள் கடக்க….
ஒடிந்த மரத்திலிருந்து ஒர் இடத்தில் சின்னதாய் கிளைத்திருக்க……
முருங்கை கிளையிலிருந்து அரும்பி இருந்தது…..
பிரபஞ்சன் எழுதுகிறார்.
அரும்பி முளைத்து இருந்ததை
உயிர் என்கிறார்….
உயிர் தான்.
பாதுகை
—————
சப்பாத்துகள் பற்றிய கதை. சப்பாத்துகள் என்பது காலணி.
பொன்னுத்தம்பி துரைமார்கள் மாதிரி படித்தவன். அவர்களைப்போல் தொழிலும் செய்பவன். அவர்களைப் போல இருக்க ஆசைப்படுபவன். சப்பாத்து அணிந்து நீதிமன்றம் செல்கிறான்.
நீதிபதிக்கு இவன் போட்டிருக்கும் சப்பாத்து உறுத்துகிறது. உடனே கேட்கிறான்…. எனது அரசுதரப்பு வழக்கறிஞரான எனது நண்பரும், நீங்களும் நீதிமன்றத்துக்கு சப்பாத்து அணிந்து வந்துள்ளீர்கள்: நான் மட்டும் அணியக் கூடாது என்பதில் தங்கள் கட்டளையை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்கிறான். புதுச்சேரி நீதிமன்றம் அவனுக்கு சப்பாத்து போடத் தடை விதிக்கிறது.
சப்பாத்து போடக் கூடாது என்ற நீதிபதிக்கு எதிராக வழக்கிட்டு பாரீஸ் உயர்நீதிமன்றத்தில் வெற்றி பெற்று தெம்பாக நீதிமன்றத்துக்குள் நுழைகிறார் பொன்னுத்தம்பிப்பிள்ளை.
ஷண்முக முதலியார் பொன்னுத்தம்பி பற்றி இப்படி வாழ்த்துகிறார்
பிள்ளை, பிரெஞ்சு ஆட்சியோடு போராட்டம் கடத்தி முதல் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். பிரான்சிசும் மக்களாட்சி ஏற்பட்டிருக்கிறது. நாம் விடுதலை பெற ரொம்ப நாள் ஆகாது என்று நெஞ்சம் விம்ம வாழ்த்துகிறார்.
மரி என்கிற ஆட்டுக்குட்டி
——————————————-
ஒரு குழந்தை படிக்க வைக்க ஆசைப்படும் ஆசிரியர். நன்றாக படிக்கும் அற்புத மரி. அந்த இளம் பிஞ்சு வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் எனக் கதை வாழ்க்கையைப் பேசுகிறது. படிக்காத சிறு பெண்களுக்கான கதை மாெத்தமாய் கண்ணீரோடு பேசுகிறது.
”பைத்தியமே உலகத்திலே யார் தான் கெட்டுப் போனவங்க? யாராலுமே கெட முடியாது தெரியுமா? மனசுக்குள்ளே நீ கெட்டுப் போனவள் னு நினைக்கிறியாக்கும். அதை விட்டுடு. நீயும் கெட்டவள் இல்லை. உங்க அம்மாவும் அப்பாவுமே கெட்டவங்க இல்லே”
ஆசிரியரின் அன்பில் பள்ளி செல்கிறாள் என கதை முடியும்.
அப்பாவின் வேஷ்டி
———————————–
அப்பா ஒரு வேஷ்டி வைத்து இருப்பார். அது நல்ல நாளில் மட்டுமே வெளியே வரும். அப்பா அதை உடுத்தும் அழகையும் அந்த வேஷ்டி பற்றிச் சொல்கையிலும் எந்த மனிதனுக்குத்தான் பிடிக்காமல் போகும்?
அப்படியான வேஷ்டிக்கு அப்பா பாதுகாப்பதை, அதற்கு சோப்பு போடுவதை என பிரபஞ்சன் விவரிக்க நாமும் அதற்குள் உயிராகிப் போய் விடுகிறோம்.
அப்பா இல்லையென்ற போதில் அந்த வேஷ்டி உடுத்த மகனுக்கு ஆசை. ஆனால்….?
உயிரோட்டமாக கதையோடு கதையாய் நம்மை நம்மை உயிராக்குவதில் பிரபஞ்சனை மிஞ்சி யார் சொல்லி விட முடியும்?
வேஷ்டி ஒவ்வொரு மகனும் தந்தையும் படிக்க வேண்டிய கதை.
ஒவ்வொரு சிறுகதையும் நம்மை அசைத்துப் பார்க்கிறது. மனிதர்களின் வழி அறத்தை| உண்மையை பாசாங்கு இல்லா மனிதர்களை பட்டவர்த்தமாக சொல்கிறார்.
நாம் பார்க்கும் சம்பவங்களை, கடந்து போன மனிதர்களை வலி நிறைந்த வாழ்வை கதையாய் பதியம் செய்திருக்கிறார் பிரபஞ்சன்.
அவரின் முக்கியமான கதைகளை மக்களிடம் சேர்த்து இருக்கிறது டிஸ்கவரி புக் பேலஸ் –
பிரபஞ்சனின் கதைகளை அற்புதமாக தொகுத்து கொடுத்து இருக்கிறார் ஆசிரியர் பி.என்.எஸ்.பாண்டியன்.

