எழுத்தாளர் பிரபஞ்சனின் (Prapanchan) 'கமலா டீச்சர்' சிறுகதை-யை (Kamala Teacher Tamil Short Story) முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘கமலா டீச்சர்’ சிறுகதை

எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘கமலா டீச்சர்’ சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

விடிவெள்ளிகளும் கரும்புள்ளிகளும்

– மணி மீனாட்சிசுந்தரம்.

இலக்கியம் வாழ்க்கையின் பதிவாக மட்டுமல்லாமல் வாழ்க்கை பற்றிய விமர்சனமாகவும் இருக்கிறது.எழுத்தாளரின் ஆழ்மனத்தில் வேர்கொண்ட நினைவுகளே கதைகளாகக் கிளைத்துப் பரவுகின்றன. அதில் வேம்பின் கசப்பும் உண்டு ; கரும்பின் இனிப்பும் உண்டு.

ஆசிரியரைப் பற்றிய கதைகள் ஓர் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதைக் கூறுவதோடு, ஓர் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்கக் கூடாது என்பதையும் கூறுகின்றன.

அக்கதைகள், எப்படிப்பட்டவராக ஆசிரியர் இருக்க வேண்டும் என்பதில், ஆசிரியர் என்னும் பணிக்குரிய பண்புகளை இச்சமூகத்திடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன. எப்படிப்பட்டவராக ஓர் ஆசிரியர் இருக்கக்கூடாது என்பதில் சமூகத்திடம் திட்டமான வரையறைகள் இருந்தாலும், கதைகளில் அது மீண்டும் மீண்டும் சொல்லப்படும் காரணத்தில் ஒரு மாணவப் பருவத்தின் ஆற்றாமையும் ஒரு பணிமுறையின் மெத்தனமும் உள்ளடங்கித் தெரிகிறது.

எழுத்தாளர் பூமணியின் ‘பொறுப்பு’ சிறுகதையில் வரும் ஆசிரியர் காளிமுத்து தூங்குவதற்காகவே பள்ளிக்கு வருகிறார். மாணவர்களை மிரட்டியும் அடித்தும் பணியவைத்து, எதையாவது படிக்கச் சொல்லிவிட்டு மேசையில் தலை வைத்துத் தூங்கிவிடுகிறார்.பள்ளிக்கூடத்தைக் கடந்துசெல்கிறவர்கள் ஆசிரியரின் தலை தூக்கி இருப்பதை அரிதாகவே காண்கின்றனர். காளிமுத்து ஆசிரியர் விடுமுறை என்றாலே சங்கடப் படுகிறார். ஏனென்றால் வீட்டில் பகலில் தூங்க அவருக்கு அனுமதியில்லை.
அவருடைய மனைவி அவரிடம் தொடர்ந்து வேலை வாங்குகிறார். சுதந்திர தினம், பள்ளி வேலை நாளில் வந்ததற்காகக் கவலைப்படுகிறார்.
கோடியேற்றிய பிறகு வீட்டுக்குச் செல்லவேண்டுமே, தூங்க முடியாதே என எரிச்சல் படுகிறார். நமக்கும் அவரைப் பார்த்து எரிச்சல் வரத்தான் செய்கிறது.

எழுத்தாளர் கந்தர்வனின் ‘கதை’யில் வரும் மரியம்மா டீச்சர் கற்பித்தலில், மாணவர் உயர்வில் அக்கறையற்ற வராக இருக்கிறார்.கல்வி கற்பித்தலை விட , தான் சார்ந்த வேதத்தைப் பரப்புவதிலேயே ஆர்வம் காட்டுகிறார். வார விடுமுறை நாள்களில் மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்துப் பைபிள் கதைகளைக் கூறுகிறார். வகுப்பறையில் எப்போதும் சிடுசிடுவென இருக்கும் மரியம்மா டீச்சர், அப்போது மட்டும் அன்பே உருவானவராக நடந்துகொள்கிறார்.
பாடம் நடத்துவதில் ஆர்வமற்ற தம் ஆசிரியர், பைபிள் கதைகளை உருகி உருகிச் சொல்வதைப் பார்த்து மாணவர்கள் வியப்படைகின்றனர்.

காளிமுத்துசாரையும், மரியம்மா டீச்சரையும் போன்று சிலர் இருக்கலாம்.ஆனால்,இவர்களை ஆசிரியர்களின் பொதுவான உதாரணங்களாகக் கொள்ளமுடியாது.
விரும்பத்தகாத, அரிதான இவர்களைப் போலல்லாமல், விரும்பத்தகுந்த ஓர் அரிதான ஆசிரியரே ‘கமலா டீச்சர் ‘.

எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘கமலா டீச்சர்’ தனித்துத் தெரிவதோடு, வாராது வந்த மாமணி என எண்ண வைக்கிறார்.ஒரு மாணவனின் பார்வையிலேயே ‘கமலா டீச்சரின்’ கதை சொல்லப்படுகிறது.

கமலா டீச்சர் பள்ளிக்கூடம் இருக்கும் கிராமத்திலேயே தங்கியிருக்கிறார்.வயதான அப்பாவையும், சித்தபிரமை பிடித்த தாயாரையும் பராமரிக்கும் இளம்பெண் அவர். திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. கடைசியாக வந்த சம்பந்தம் வேலையை விடச் சொன்னதால், திருமணம் வேண்டாமெனச் சொல்லிவிடுகிறார்.பெற்றோர்களைப் பார்த்துக்கொள்வதற்காக மண வாழ்வை மறுக்கிறார்.கணக்கு டீச்சர் அவர்.ஆனாலும் தமிழும் வரலாறும் கூடுதலாகப் படித்திருக்கிறார். பாடத்தில் பின்தங்கிய மாணவர்களை மாலை நேரம் வீட்டுக்கு வரவைத்துச் சொல்லிக்கொடுக்கிறார்.அதற்குப் பெற்றோர்கள் பணம் கொடுக்க முன்வந்தாலும் வாங்கிக்கொள்ள மறுக்கிறார். சனி, ஞாயிறுகளில் கிராமத்து மனிதர்களுக்கு உதவியாக இருக்கிறார்.டீக்கடைக்காரர் முதல் ரேஷனுக்கு விண்ணப்பத்தவர்கள் வரை கடிதம் எழுத டீச்சரையே நாடுகிறார்கள்.அவர், ஊருக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதால் ஊர் அவர்மீது மரியாதையையும் அன்பையும் பொழிகிறது.

கமலா டீச்சரின் கதையைச் சொல்லும் மாணவன் பெற்றோரைப் பிரிந்து தாத்தா வீட்டில் தங்கிப் படிக்கிறான்.முதல் சந்திப்பிலேயே கமலா டீச்சரை அவனுக்குப் பிடித்து விடுகிறது. கமலா டீச்சர் அவனைக் கபடியில் சேர்த்துவிட்டு அவனுக்குள் இருந்த காட்டுப் பலத்தை ஒழுங்குபடுத்துகிறார் ; வகுப்புத் தலைவனாக்கிப் பொறுப்பை ஏற்படுத்துகிறார்.

“கமலா டீச்சர் பையன்களுக்குள் இருக்கும் பையன்களுக்கு வாத்தியாராக இருந்தார்.பெண்களுக்குள் இருக்கும் பெண்களைக் கண்டுபிடித்தார்”.

மாணவன் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது தன்னுடன் படிக்கும் அழகான சுமதிக்குக் காதல் கடிதம் கொடுக்கப்போய் பெரிய பிரச்சனையாகி விடுகிறது. தலைமையாசிரியர் மாணவனின் சீட்டைக் கிழிக்க முடிவுசெய்தபோது கமலா டீச்சர் தலைமையாசிரியரிடம் மன்றாடி அவனைக் காப்பாற்றுகிறார்.

/டீச்சர் என்னிடம்,”வைத்தி, நீ ஒண்ணும் தப்பு செய்திடல.ஆனால், இது அவசரம்.இன்னும் நிறைய பெண்களைப் பார்,பழகு.அதில் ஒருத்தியைத் தேர்ந்தெடு.உன் நிலைமை உயர உயர உயர்வான பெண்கள் உனக்குக் கிடைப்பார்கள் ” என்றார்./

அவன் பள்ளி இறுதி வகுப்பு முடித்துக் கல்லூரிக்குச் செல்லும்போது கமலா டீச்சர் அவனுக்கு இரண்டு புதிய உடைகளும் பணமும் கொடுத்து அனுப்புகிறார்./”வைத்தி நல்லா படிக்கணும்.படிப்புதான் மனுஷனை மனுஷனா வாழவைக்கும்.நிறைய படி.நிறைய யோசி.உனக்கு எது தேவைன்னாலும் என்னிடம் கேளு” என்கிறார்./

அவனுடைய திருமணத்திற்கு டீச்சர் வரவில்லை. பள்ளி அட்மிஷன் நேரம் என்பதால் வாழ்த்து மட்டும் அனுப்புகிறார்.நீண்ட காலம் கழித்து ஆசிரியரை மாணவன் சந்திக்கச் செல்கிறான். கமலா டீச்சர் தன் பெற்றோர் மரணத்திற்குப்பின் தன்னுடைய வீட்டை மாணவிகளின் விடுதிக்குத் தானமாகக் கொடுத்துவிட்டு வாடகை வீட்டில் குடியிருக்கிறார்.

/ ” இப்படித் தனிமை உங்களுக்குக் கஷ்டமா இல்லையா டீச்சர்?” என்று கேட்டேன்./

/ “இல்லை.நான் ஒரு டீச்சர்.அதில்தான் எனக்குச் சந்தோசம், திருப்தி எல்லாம்.ஒரு மனைவியா, புருஷன் புள்ளைன்னு எனக்கிருக்க முடியாது.எனக்கு இதுதான் சரி.இன்னும் ஒரு தடவை தொடக்கத்திலிருந்து என்னை வாழச் சொன்னா டீச்சராத்தான் வாழ்வேன்’./ என்கிறார் கமலா டீச்சர்.

யார் இப்படிச் சொல்வார்?தன்னுடைய வேலையையே தனது வாழ்க்கையாகக் கருதும் ஒருவரால்தானே இப்படிச் சொல்லமுடியும்.விதிக்கப்பட்ட வேலையைக் கடனே எனச் செய்பவர்கள் மத்தியில் தனது வேலையையே தனது விதியெனக் கொண்டவர் கமலா டீச்சர். கமலா டீச்சர் இன்றில்லை.ஊர் அவரது நினைவுகளைக் கொண்டாடுகிறது ; மாணவர்களின் மனத்தில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கமலா டீச்சர், எழுத்தாளர் பிரபஞ்சனின் கதையில் மட்டுமே வருபவர் என்று எண்ணுகிறீர்களா? எழுத்தாளர் பாவண்ணன், கமலா டீச்சர் போன்ற ஒருவரைப் பற்றித் தனது கட்டுரை ஒன்றில் விவரித்திருப்பதை நான் படித்திருக்கிறேன். கிராமங்களுக்குச் சென்று கேளுங்கள். எல்லா கிராமங்களிலும் கமலா டீச்சர் தென்பட மாட்டார்கள். ஒரு சில ஊர்களில் கட்டாயம் இருப்பார்கள்.ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் கமலா டீச்சரின் எண்பது சதவீத பண்புகளைக் கொண்ட ஆசிரியர்கள் உறுதியாகத் தென்படுவார்கள்.அவர்களே நம் சமூகத்தையும் கல்வியையும் முன் நகர்த்திச் செல்கிறார்கள்.

உதவிய நூல்கள் :

1.தபால்காரர் பெண்டாட்டி, பிரபஞ்சன்,
நற்றிணை பதிப்பகம், சென்னை – 77

2. பூமணி சிறுகதைகள்,
நற்றிணை பதிப்பகம், சென்னை – 77

3. கந்தர்வன் சிறுகதைகள் (தொகுப்பு : பவா செல்லத்துரை) வம்சி புக்ஸ்,
திருவண்ணாமலை – 606601

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

No photo description available.

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 2 Comments

2 Comments

  1. நாகேந்திரன் இ

    கமலா டீச்சர் சிறுகதை மிகவும் அருமை ஐயா.

  2. மகாமணி

    சிறப்பு கமலா டீச்சர் போன்று முன்னர் நிறைய கிராமங்களில் இருந்தார்கள். ஊரும் டீச்சரும் உறவு முறையுடன் வாழ்ந்தர்கள். இன்றய நவீன உலகில் அவை அரிதாகி விட்டது. குற்றங்கள் பெருகி விட்டது. சிறப்பான கவிதைக்கு வாழ்த்துக்கள் ஐயா. 🌹🌹.
    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *