எழுத்தாளர் பிரபஞ்சனின் “மரி என்கிற ஆட்டுக்குட்டி” சிறுகதை
அன்பின் மொழி
– மணி மீனாட்சிசுந்தரம்
( எழுத்தாளர் பிரபஞ்சனின் ‘ மரி என்கிற ஆட்டுக்குட்டி’ எனும் சிறுகதையை முன்வைத்து
எழுதப்பட்ட கட்டுரை)
இலக்கியம் நாம் பார்க்கக் கண் கூசுகின்ற ஒன்றை, சொல்லத் தயங்குகின்ற ஒன்றை பட்டவர்த்தனமாக நம்முன் காட்சிப்படுத்துகிறது ; விரிவாக நம்முன் சொல்லிக் காட்டுகிறது. அப்படி அது காட்ட வேண்டியதன்,சொல்ல வேண்டியதன் நிர்பந்தம், அனைவருக்கும் இதை உணர்த்தியாக வேண்டும் என்கிற அறத்தின் அடிப்படையில் முன் நிற்கிறது. இக்கதையில் வரும் மாணவி நம்மை அச்சமூட்டுகிறாள் ; கோபப் படுத்துகிறாள் ; கதையில் வரும் ஆசிரியரின் கையைப் பற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. இக்கதையில் வரும் மாணவியைப் போன்றவர்கள் வகுப்பறைகளில் இல்லாமலில்லை. ஆனால், அவர்களையும் வாஞ்சையுடன் அணுகும் கருணையை இக்கதை தனக்குள் வைத்துக் காண்பிக்கிறது.
” தமிழ் சார்…அந்த அற்புத மரிக்கு டி.சி. கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கிறேன்” என்றார் எச்.எம்.
இப்படித்தான் எழுத்தாளர் பிரபஞ்சனின் “மரி என்கிற ஆட்டுக்குட்டி” சிறுகதை தொடங்குகிறது.
புதுச்சேரியில் உள்ள பள்ளி அது. அற்புத மரி என்ற பெயருடைய மாணவி அவள்.பத்தாம் வகுப்புப் படிக்கிறாள்.
அவள் ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதில்லை.” போன ஆறு மாச காலத்துலே எண்ணிப் பன்னிரெண்டே
நாள்தான் ஸ்கூலுக்கு வந்திருக்கிறாள். பள்ளியில் இருந்து அவளைப் பற்றி வீட்டுக்குப் பலமுறைக் கடிதம் அனுப்பியும் இதுவரை யாரும் வந்து பார்க்கவில்லை.அவள் பள்ளிக்கு வருகிற சில நாள்களிலும் முறையாக உடை உடுத்தி வருவதில்லை.
“ஒரு பிரெஞ்ச் சைக்கிள்ளே, கண்ணுக்குட்டி மேலே உட்கார்ந்து வர்ற மாதிரி பாண்ட் போட்டுக்கொண்டு வர்றாள்.பாண்ட் ! என்ன மாதிரி பாண்ட்டுங்கறீர்? அப்படியே ‘சிக்’குன்னு பிடிச்சுக்கிட்டு, போட்டோவுக்குச் சட்டம் போட்ட மாதிரி,அதது அப்படிஅப்படி தெரியற மாதிரி…” இத்தினி பசங்க படிக்கிறாங்களேன்னு கொஞ்சமாச்சும் உடம்பிலே வெக்கம் வேணாம் ? இந்த இழவெடுத்த ஸ்கூல்லே ஒரு யூனிபார்ம்,ஒரு ஒழுங்கு,ஒரு மண்ணாங்கட்டி, ஒரு தெருப்புழுதி ஒன்றும் கிடையாது”.
தலைமையாசிரியர் அவளைப் பற்றிப் பொரிந்து தள்ளுகிறார். கேட்டுக்கொண்டிருக்கும் தமிழாசிரியர், “பாண்ட் சட்டை போடக் கூடாதுன்னு விதியொன்றும் நம்ம ஸ்கூல்ல இல்லியே சார் ” என்று அவளுக்குப் பரிந்து பேசுகிறார்.
தலைமையாசிரியருக்குக் கோபம் தலைக்கேறுகிறது. அவள் எப்போதாவது பள்ளிக்கு வரும் சிலநாள்களில் கூட ஒழுங்காக வகுப்பறையில் அமர்வது கிடையாது.
ஒருநாள் வகுப்புக்குள்ளேயே போகாமல் ” பிரண்ட்ஸ் அப்படீன்னு நாலு தடிக் கழுதைங்களோட ஸ்கூல் வாசல்லே சைக்கிள் மேலே உட்கார்ந்துகொண்டு ஐஸ் கிரீம் தின்னுட்டுச் சிரிச்சுப் பேசிட்டு இருந்திருக்கிறாள் “இதைப் பார்த்த சயின்ஸ் சார் “இப்படிப்
பண்ணக்கூடாது அற்புத மரி ” என்றதற்கு அவள், “உங்களுக்கு என்ன பொறாமையா இருக்கா சார் ” என்று கேட்டுவிடுகிறாள்.சயின்ஸ் சார் கண்கலங்கித் தலைமையாசிரியரிடம் முறையிடுகிறார்.தலைமையாசிரியர் அவளை அழைத்துக் கேட்டதற்கு அவரிடமே “இந்த ஸ்கூல் காம்பசுக்குள்ளே நடக்குறதுக்குத்தான் நீங்க பொறுப்பு.வெளியில் நடக்குற விவகாரத்துக்கெல்லாம் நீங்க என்னைக் கட்டுப்படுத்த முடியாது சார்னு” மூஞ்சியில் அடிச்ச மாதிரி சொல்கிறாள்.
” இந்த அநியாயம் இத்தோட போகலே. சாயங்காலம் பி.டி மாஸ்டர் கிட்ட சண்டை போட்டுக்கொண்டாள்.
அவன் இப்படிப் பண்ணப் படாது, இப்படி வளையணும், இந்த மாதிரி கையை வச்சுக்கணும்னு அவளைத் தொட்டுச் சொல்லிக் கொடுத்திருக்கான்.தொட்டவன் எசகு பிசகா எங்கேயோ தொட்டான் போலிருக்கு.இவ என்ன கேட்டிருக்காள் தெரியுமா?”
” சார் உங்க பொண்டாட்டியோட நீங்க படுக்கறது இல்லையான்னு கேட்டுட்டாள்.”
மரி பிறழ் நடத்தை கொண்ட மாணவி என்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட மாணவர்களைப் பார்த்துப் பள்ளி நிர்வாகம் பதட்டப்படவே செய்யும். கட்டற்று ஓடுகின்ற ஆற்று நீரைப் போன்ற மாணவர்களைக் கரை கட்டித் தெளிந்த குளம்போல வைக்க பிரயத்தனப்படும் அமைப்பு அது.சிறிய கல் பட்டுக் குளம் முழுதும் அலைகள் ஏற்பட அது ஒருபோதும் விரும்பாது.
பள்ளி என்பது விதிகளால் கட்டமைக்கப்பட்ட ஒழுங்கை உருவாக்கும் நடைமுறைகளைத் திட்டமாகப் பின்பற்றும் ஓர் அமைப்பு. மாணவர்கள் வரிசையாக வர வேண்டும், வரிசையாக நிற்க வேண்டும், வரிசையில் அமர வேண்டும் என எல்லாவற்றிலும் ஒரு வரிசை எனும் ஒழுங்கைப் பேண வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டும் ஓர் அமைப்பு அது.அது மேடையில் இருந்தே மாணவர்களைப் பார்க்கும்.
அப்படிக் கீழே பார்க்கும் போது வரிசையில் இருந்து வெளியே தெரியும் தலையை உள்ளிழுத்து வரிசையை நேராக்கவே முயற்சி செய்யும் ; முடியாதபோது அந்தத் தலையை வரிசையில் இருந்து அப்புறப்படுத்துவதிலேயே அவசரப்படும்.இது பள்ளிகளின் பொது இயல்பு. பிறழ் நடத்தை உடைய மாணவர்களைப் பார்த்து மற்ற மாணவர்களின் ஒழுங்கும் கெட்டுப் போய்விடும் எனப் பள்ளி பதறுமே அல்லாமல், பிறழ் நடத்தையுடைய மாணவரிடம் அதற்கான காரணங்களைத் தேடவும் களையவும் தீர்வு காணவும் ஆர்வம் காட்டாது.
பள்ளியின் இந்த இயல்பை நாம் பெருங்குற்றமாகவும் கருதிவிடவும் முடியாது.ஏனென்றால், முதலில் பிறழ் நடத்தையுடைய மாணவர்களை முழுமையாகப் பின்தொடரவும் அவர்களது பிரச்சனையை அணுகவும் போதுமான நேரம் பள்ளிகளிடத்தில் இல்லை.அடுத்து, பெற்றோர்கள் ஆர்வமுடன் பள்ளியிடம் கைகோர்க்க வேண்டும். பெற்றோர்கள் ஆர்வம் காட்டாத வரை பிறழ் நடத்தை கொண்ட மாணவர்களைப் பொதுவாகப் பள்ளி கையாளும் நடைமுறையே அற்புத மரியின் விசயத்திலும் இங்கு நடக்கிறது.
ஆனால், இக்கதையில் வரும் தமிழாசிரியர் மட்டும் விதிவிலக்காகச் சிந்திக்கிறார்.
” இப்ப போய் டி.சி.கொடுத்தவிட்டால், அவள் எஸ்.எஸ்.எல்.சி. எழுத முடியாமல் போய்விடும் சார்.அவள் வாழ்க்கை வீணாகப் போய்விடும்.” என்கிறார். “அந்தக் கழுதைக்கே அதைப் பத்திக் கவலை இல்லை. உமக்கெதுக்கு” என்று சீறுகிறார் தலைமையாசிரியர்.
தமிழாசிரியர் வீட்டுக்கு வந்து பள்ளியில் நடந்ததை மனைவியிடம் சொல்கிறார்.மரியின் வீட்டுக்குப் போய் பேசிப் பார்ப்போம் என்கிறார்.
” உங்களுக்கு எதுக்கு இந்த வம்பெல்லாம்? நீங்க சொல்றதைப் பார்த்தால், அது ரொம்ப ராங்கி டைப் மாதிரி தெரியுது.உங்களையும் தூக்கி எறிஞ்சு ஏதாச்சும் பேசிவிட்டால்?” என்கிறாள் மனைவி.
ஆசிரியர் மனைவியைச் சமாதானப்படுத்தி ஒருநாள் மாலையில் மரியின் வீட்டுக்கு மனைவியுடன் போகிறார். வீட்டில் மரி மட்டும் தனியாக இருக்கிறாள்.மூன்று முறை அழைத்த பின்பே வெளியில் வருகிறாள். ஆசிரியர் தன் மனைவியுடன் வீடுதேடி வந்ததைப் பார்த்து ஆச்சரியப்படுகிறாள்.” சும்மா பீச்சுக்குப் போய்கிட்டு இருந்தோம்.வழியிலே தானே உங்க வீடு.பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நுழைஞ்சிட்டோம்” என்று பேச்சுக் கொடுக்கிறார்.
வீட்டில் யாரும் இல்லையா?” என்கிறார்.
” வீடா சார் இது? வீடுன்னா அப்பா, அம்மா இருக்கணும். அப்பா எப்பவோ போயிட்டாரு.போயிட்டாருன்னா செத்துப் போயிடலே.எங்களை விட்டுப் போயிட்டாரு. அம்மா என்னைச் சுத்தமாக விட்டுவிடவில்லை. அப்பப்போ நாங்க சந்திக்கிறோம்.
சமயங்களிலே இரண்டு நாளுக்கு ஒருமுறை நாங்க பார்த்துக் கொண்டால் அதிகம்” என்கிறாள் மரி.
மரியின் பிறழ் நடத்தைக்குக் காரணம். அவளது பெற்றோர். வசதிக்குக் குறைவில்லை.அப்பா அவளிடம் இல்லை. அம்மா வேறு ஒருவருடன் வாழ்கிறார். பாவம் அன்பும் அரவணைப்பும் கண்டிப்பும் தேவையான இந்த வயதில் அதைத் தரவேண்டிய பெற்றோர் அங்கு இல்லை. இப்படிப்பட்ட விரக்தியான சூழலில் வாழ நேர்ந்த ஒரு சிறுமி சமூகத்தின் அல்லது பள்ளியின் ஒழுக்க மதிப்பீடுகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பாள்?!
” மரி…ஸ்கூலுக்கு வந்தால் ஒரு மாறுதலா இருக்குமில்லே” என்கிறார் ஆசிரியர். அவளோ ” நான் யாருக்காகப் படிக்கணும்?” என்று கேட்கிறாள்.
ஆசிரியரும் அவரது மனைவியும் மரியை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குப் போகிறார்கள். அவளிடம் பேசிப் பழகுகிறார்கள். அன்பு காட்ட ஆளில்லாத மரிக்கு அவர்களின் அன்பும் பேச்சும் பிடித்துப் போகிறது.
ஆசிரியரின் வீட்டுக்கும் அடிக்கடி சென்று பழக்கமாகிறாள் மரி.
ஒருநாள் மரி ” சீரியஸாகக் கேட்கிறேன் சார்.நான் இங்கே வந்து போறதிலே உங்களுக்குத் தொந்தரவு இல்லையே சார்?” என்கிறாள்.
” ஏன் சார்… கெட்டுப் போனவள்னு எல்லோரும் சொல்கிற என்னை எதுக்கு உங்க வீட்டிலே சேர்த்து, சோறும் போடறீங்க” என்கிறாள் மரி.
தன் அம்மாவின் மீதுள்ள கோபமே தனது பிறழ் நடத்தைகளுக்கான காரணம் எனக் கூறும் மரி, பல நாள்கள் கழிந்தபின் ஒருநாள் ஆசிரியரிடம்
” சார்…ஏன் நான் ஸ்கூலுக்கு வர்றதே இல்லைன்னு நீங்க கேட்கவில்லை” எனக் கேட்கிறாள்.
கண்களில் நீருடன் ” நீ ஏண்டி ஸ்கூலுக்கு வரலைன்னு என்னை அறைஞ்சு கேட்கணும் சார். அப்படிக் கேட்க யாரும் இல்லேங்கிறதுனாலதான் நான் இப்படி இருக்கேன்.என்மேல யாரும் இப்படி அன்பு செலுத்தியது இல்லை சார். அன்பு செலுத்தறவுங்களுக்குத்தானே அதட்டிக் கேட்கவும் அதிகாரம் இருக்கு?’ என்கிறாள்.
ஆசிரியர்,” அது உனக்கே தோணனும்னுதானே காத்திருக்கேன்.நாளையிலேயிருந்து நாம் ஸ்கூலுக்குப் போகிறோம்”
என்கிறார்.
மரி முகத்தை மூடிக்கொண்டு விசும்பி விசும்பி அழுவதுடன் கதை நிறைவுக்கு வருகிறது.
கதையைப் படித்து முடிக்கையில் ஒரு ஆசிரியர் தன் பள்ளியில் உள்ள பல மாணவர்களைப் பார்ப்பாரா? பிறழ் நடத்தையுள்ள ஒரு மாணவிக்காக இவ்வளவு மெனக்கெடுவாரா? மெனக்கெடத்தான் வேண்டுமா? என்ற கேள்வி மனத்தில் எழக் கூடும்.
மந்தையில் நிறைய ஆடுகள் இருந்தாலும் ஒரு வழி தவறிய ஆட்டை தன் மந்தைக்குள் கொண்டு வரவேண்டியது ஒரு மேய்ப்பரின் கடமையில்லையா?
இல்லை.ஆசிரியர் ஒன்றும் மேய்ப்பரல்ல.அவர் பாட அறிவைப் போதிக்கும் ஒரு அலுவலர் அவ்வளவுதான் என்கிறீர்களா?
பிரபஞ்சன் ‘ என்னைக் கண்டுபிடித்த குரு’ என்னும் கட்டுரையில், இந்தக் காலத்தில் ஆசிரியரின் பணி மாறிவிட்டது.அறிவைப் புகட்டுவதே ஆசிரியரின் வேலை என்பது பழைய நிலை.இன்று பாட அறிவை ஒரு மாணவன் ஆசிரியரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.அதற்குப் பல வழிகள் உள்ளன.ஆனால், நம் ஆசிரியர்கள்தாம் அதை ஒத்துக்கொள்ள, புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் என்கிறார்.
அப்படியெனில் இன்றைய ஆசிரியர்களுக்கு ‘ஆசான்’ எனும் சொல் பொருந்தாதா என்றால் ஆம் என்பதே பதிலாகிறது. இன்றைய ஆசிரியர்கள் ‘ஒரு மூத்த அனுபவமிக்க தோழனே’ என்கிறார் பிரபஞ்சன்.ஆசிரியர்கள் இந்த நிலையிலிருந்தே தம் பணியை அணுக வேண்டும் என்கிறார்.
அப்படி அணுகியவர்தான் இக்கதையில் வரும் தமிழாசிரியர்.அவரும் இக்கதையில் வரும் அற்புத மரியும் எழுத்தாளர் பிரபஞ்சனின் கற்பனையில் உதித்தவர்களல்ல. எழுத்தாளர் பிரபஞ்சன் கண்ட ,பழகிய, நிஜ மனிதர்களே. பிரபஞ்சன் சொல்கிறார் , “குழந்தைகள் பெற்றோர்களிடம், ஆசிரியர்களிடம், உலகத்திடம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்த மொழி அதுதான்.”
நன்றி.
உதவிய நூல்கள் :
1.மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை – 600005
2.மயிலிறகு குட்டி போட்டது – பிரபஞ்சன்
நற்றிணை பதிப்பகம்,
திருவல்லிக்கேணி,சென்னை – 600005
எழுதியவர் :
மணி மீனாட்சி சுந்தரம்
மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மரி என்கிற ஆட்டுக்குட்டி மிகவும் சிறப்பான பார்வை ஐயா. எல்லோரும் தமிழாசிரியர் போல் மாறுவோம் அல்லது மாறுவதற்கு முயற்சிப்போம். வாழ்த்துகள் ஐயா