நாட்டியக் குறிப்புகள்
பிரபஞ்சம் தனக்கான ஒழுங்கமைவில்
தினமும்
தன் நாட்டியத்தை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது
என் மூதாதையர்கள் சுவாசித்து வாழ்ந்திருந்த
கிராமத்திற்குச் சென்றிருந்தேன்
மண்டிப் படர்ந்து அகன்ற பூவரச இலைகளும் பூக்களும்
பேருந்தின் வேகத்தை உள்வாங்கிக்கொண்டு
நர்த்தனம் செய்தன
அந்தப் பசிய இலைகளின் லாவகம்
என் மயிர்க்கால்களைத் தொற்றிக்கொண்டது.
அரிதுயில்
வலங்கையின் லாவகம் மட்டும் அபரிமிதம்
மனம் இசைய
அனைத்துச் செயல்களும் அதிலாவகம்.
மனவேகத்தைத் தடம் பிடிக்கும்
சிந்தனையினின்று கழற்ற முடியாது-
நான் கட்டியிருப்பது
உயிருள்ள சலங்கை
கால்கள் காற்றினால் ஆனது
மனம் லயிக்கையில்
ஒழுங்கும் கட்டுத் திட்டமும் உள்ளது
எப்படி நடனமாக முடியும்
இசைபோன்ற பேரருவியல்லவா நடனம்!
எனக்கும் இந்த உலகிற்குமான
உறவும் தொடர்பும் என்ன?
இந்த உலகில் என் உயிர் முடிச்சுத்
தொடுபுள்ளி நடனம்
நடனம் பிரபஞ்சம்
லயிப்பில் கால்வரப்பெறும் நடனம்
பயில்வதால் அல்ல.
லயிப்பே உயிர்ப்பு.
– ப்ரதிபா ஜெயச்சந்திரன்