ஒரு பெண் குழந்தையைப் பெற்றோர்
பாக்கியவான்கள்
மகளைப் பற்றிய நினைவுகள்
அம்மாவின் மடியைப்போல் இன்பமானது.
இவள் என் சட்டையை பிடித்துக்
கேள்வி கேட்கும் சர்வாதிகாரி
எல்லோருக்கும் என்னால் பதில் சொல்லிவிட முடியும்
ஆனால் இவளுக்கு பதில் சொல்ல முடியவில்லை
இவள் என்மேல் எறியும் கத்திகள்
என் உடலைக்கீறி வெளியேறும் குருதி
அவளுக்கான என் இசையைச் சுமந்து வருகிறது.
காலம் என் பதிலை அவளிடம்
கொண்டு சேர்க்கும் பொழுது
நான் கண்மூடியிருப்பேன்.
(சிச்சு என்கிற நிவேதிதாவுக்கு)
என்னோடு வாழ்ந்தவர்கள்
இந்த கவிதையின் தலைப்பு உங்களுக்கு ஒரு குறிப்பைத் தரலாம்
என் இறந்த காலம் குறித்துப் பேசுகிறேன்
அப்படியானால் என் இழப்புகளைக் குறித்துப் பேசுகிறேன்
இழப்பது அனைவருக்கும் பொது என்பதால்
என் இழப்புகள் குறித்து எவரும் வருந்த வேண்டாம்.
நீங்கள் வருந்த மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும்
பிறர் இழப்புக்களைத் தெரிந்து கொள்ள எட்டிப் பார்ப்பது
அநாகரிகமானதன்றோ!
தினமும் அவர்களைப் பார்த்தேன்
எதிர்ப்படும்போது சிரித்தார்கள்
அவர்கள் நல்ல மனிதர்கள்.
தினமும் அவர்களைப் பார்த்தேன்
பக்திமயமாகக் காட்சியளித்தனர்
நெற்றியில் மேலிழுத்த செந்தூரம்
ராம் ராம் என்று எப்போதும் முணுமுணுப்பு
அவர்கள் பக்திமான்கள்
அவர்கள் நல்ல மனிதர்கள்.
திருவிழாக்களில் பொறுப்பான
அங்கம் வகித்தனர்
பொறுப்பான அவர்கள் நல்ல மனிதர்கள்.
கோவில்களைச்
சுத்தமாக வைத்துக்கொண்டனர்
மனதைக்கூட அப்படியே வைத்துக் கொள்வார்கள்
இறையில்லத்தைப் பராமரிப்பதில்
பதற்றமுற்றனர்
அவர்கள் நல்ல மனிதர்கள்.
இந்த மலைப் பிரதேசத்தில்
நல்ல வசிப்பிடங்களில் வாழ்ந்தார்கள்
கௌரவமானவர்கள்
அவர்கள் நல்ல மனிதர்கள்.
அவர்கள் ஒற்றுமையாக இருந்தார்கள்
எல்லா வேலைகளையும் ஒற்றுமையாகச் செய்தார்கள்
அவர்கள் நல்ல மனிதர்கள்.
எங்கள் குழந்தைகளும் ஆடுகளும்
அவர்கள் முன்னால் தான் வளர்ந்தனர்.
ஆடுகளோடு வீடுதிரும்பும் ஆசிஃபா
அன்று மாலை வீடு திரும்பவில்லை
ஆடுகள் மட்டும் அப்பாவியாய்த் திரும்பி வந்தன
அவளைக் குன்றுகளில் தேடினோம்
பள்ளத் தாக்குகளில் தேடினோம்
சுனைகளண்டையில் தேடினோம்
இப்படிச் செல்வது அவளுக்குப் பழக்கமில்லை
என்றாலும் அவள் ஸ்னேகிதிகளின் வீடுகளில் தேடினோம்.
அவள் கால்தடங்கள் பார்த்துப் பார்த்துக்
கானகமெங்கும் தேடினோம்.
கடைசியாகக் காவல் நிலையம் சென்றோம்
தினமும் எங்களுக்கு எதிர்ப்பட்ட அந்த
நல்ல மனிதர்கள் அங்கேதான் இருந்தனர்.
எங்கள் தேவைகளைக் கேட்கச் சென்றபோதுதான்
அவர்களின் முகங்கள் வேறுபட்டன
விகாரமாயின
தேடிப் பார்க்கிறோம் என்றார்கள்
ஒரு வேலையை அண்ணன் தம்பிகளோடும் மகன்களோடும்
ஒற்றுமையாக முடித்துவிட்ட வெற்றிக் களிப்பில்.
எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது
இவர்கள் நல்லவர்கள்
இவர்கள் என்னோடு வாழ்ந்தவர்கள்.
(குழந்தை ஆசிஃபாவுக்கு)
3
புத்தகங்கள் என்றும் சுமையாக இருந்ததில்லை
எனக்கான நிரந்தர வசிப்பிடம்
கிடைக்கும் வரை!
விரும்பிப் படிக்கும் எல்லாப் புத்தகங்களுமே
என்னை சாட்சி சொல்ல அழைக்கின்றன-
வாழ்ந்துமுடித்த வாழ்க்கை
கையறு நிலையில்!
இப்போதும் காணாத தின்பண்டத்தை
நோக்கி ஓடும் குழந்தை போல
விரைந்தோடும் மனம் புத்தகங்களை நோக்கி
ஒரு பொன்மாலைப் பொழுதில்
கைநிறைய புத்தகங்களைத் திணித்துச் சென்றாள்
என் புதிய ஸ்னேகிதி
ஆட்டோவிவில் இருந்தபடியே.
அதன் பிறகு அவளைப் பார்க்க முடியவில்லை.
இன்றும் அவை நெருப்பாய்ச் சுடுகின்றன!
நிறைய புத்தகங்களைப் படித்து விட்டேன்.
எனக்கான வாழ்வை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
ககனப் பெருவெளியில் என்னைத் தொலைத்துவிட்டு!
உன்னையே முகர்கிறேன்
உன்னையே தழுவிக்கொள்கிறேன்
உன்னையே சுவாசிக்கிறேன்
உன்னையே நினைக்கிறேன்
உன்னில் வாழ்கிறேன்
உன்னிலே மரிக்கிறேன்
உனக்காக நான்
எனக்காக நீ என்று சொல்லிக்கொள்ளும்படி
இன்றும் புத்தகங்களே உடனிருக்கின்றன!
4
காற்றின் அறுவடை
அது ஊழிக்காலம்
மனிதவாடை அற்றுப்போன மயானம்
நீர்க்கால்களை உறிஞ்சி தாகம் தீர்த்துக்கொண்ட வெக்கை.
மரங்கள் சட்டகங்களில் பார்வைப் படங்களாக.
நிலமெனும் நல்லாள் புகைமூச்சு விட்டாள்.
அகழ்வாய்வுகள்போல் மணலற்ற குவாரிகளின் தடயங்கள்.
கடைசியாய் நீர்க்கோர்வைகளாக பாம்புகள் ஊர்ந்த செய்திகள்
புத்தகங்களில் பத்திரப்படுத்தப் பட்டுள்ளன.
மனிதர்கள் வாழ்ந்த செய்திகள்
கேட்பதற்கு ஆட்களற்று வந்துகொண்டிருந்தன.
களைத்த மாமிசம் நீரற்ற பசியில் யோனி காட்டி.
பிடிக்கக் கரங்களற்ற கருவிகள்.
கார்காலமும் பனிக்காலமும் மறக்கப்பட்டிருந்தன.
ஒரு வன்மத்தின் வக்கிரம் இயக்கிய விசை காலங்களை
ஊடறுத்துச் சென்றது
ககனப்பிழம்பு கருவுற்று மலர்ந்தாள்
மலர்ப்புச்செய்தி பகிர மனிதர்களில்லை.
மனிதம் இறக்க மன்பதையும்.
5
வசந்தம் புயலென
வீசக்கூடுமோ
கருணை இடியென
இறங்கக்கூடுமோ
அன்பு ஆவேசமாய்
அணைக்கக்கூடுமோ
இரக்கம் இன்றெனை
அழிக்கக்கூடுமோ
பிறவித் தென்றலும்
அருவியாகுமோ
அழகு இன்றெனை
ஆளக்கூடுமோ
பனியிதழ் உயிரினில்
பாயக்கூடுமோ?
பூம்பொழில் வீழ்ந்தெனைப்
புதைக்கக்கூடுமோ
பொன்மலை விசிறியென்
கனவு கலைக்குமோ ?
6
கோபுரக்கலசம் தொட்டுக் குண்டி கழுவிய குளத்தில்
தண்ணீர் வற்றிக் கிடக்கிறது!
பிண்டம் பிறந்து பிறைநெற்றி தான்வீழ்ந்து
அண்டம் துறந்து அரற்றுமோர் பேதையின்
உதரத்தி லுதித்த மாமகன் மன்னன்
மன்பதை கண்டான் மானுட முய்ய.
7
என்புதோல் போர்த்திய ஈசனே எந்தையே
துன்புறு தேகத்தில் துயரமும் வைத்தனை
அன்புறு நெஞ்சதில் ஆசையும் வைத்தனை
பண்புடைப் பரமனே பாதியில் விட்டனை.
இன்பம் என்றதோர் இல்பொருள் வைத்தனை
துன்பம் அதனதன் துணையெனச் சேர்த்தனை
இன்பமும் துன்பமும் ஒன்றென
உணர்ந்திடில்
இகபரம் என்றதோர் மாயையும் ஏதடா!
– ப்ரதிபா ஜெயச்சந்திரன்
சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள் தோழர்.. 💐💐💐💐…பாராட்டுகள்,,,,….
Thank you thozhar, please share with your friends