பிக்குவுக்கு மழைக்காலம் மிகவும் துன்பமிக்கதாகி விட்டது. மழைக்காலம் தொடங்கிய போது பசந்தபூரில் பைகுந்த சாஹாவின் வீட்டில் நடந்த திருட்டு ஒட்டுமொத்தமாகத் தவறாகி விட்டது. அவனுடைய கும்பல் மொத்தமும் பிடிபட்டு விட்டது. கும்பலில் இருந்த பதினோரு பேரில் பிக்கு மட்டும்தான் தப்பிக்க முடிந்தது. ஆனால் அதற்கு முன்னால் அவனது தோளில் ஒரு ஈட்டி பாய்ந்து விட்டது. அவன் இரவோடு இரவாக பதினோரு மைல்கள் கடந்து மாதபங்கா பாலத்தை அடைந்தான். பகலில் அவன் சதுப்புநிலக் காட்டில் சேற்றில் பாதி முங்கியவாறு மறைந்திருந்தான். இரவில் இன்னொரு இருபது மைல்கள் நடந்து சித்லாபூரில் பெஹ்லாத் பக்தியின் வீட்டுக்குச் சென்றான்.
பெஹ்லாத் அவனுக்கு அடைக்கலம் கொடுக்க நேரடியாகவே மறுத்து விட்டான். மாறாக அவனது தோளைச் சுட்டிக் காட்டிக் கூறினான், “மோசமான காயம் நண்பா. நிச்சயமா அது நஞ்சாகி விடும். அது வீங்கிப் போகும். அதை ரொம்ப நாளைக்கு ரகசியமா வைக்க முடியாது, சரியா? நீ மட்டும் கொலை செய்யாம இருந்திருந்தா . . .”
”இப்பவே உன்னக் கொல்லத் தோணுது, பெஹ்லாத்”
”இந்த வாழ்நாள்ள நடக்காது, நண்பா.”
அருகில் வடக்கில் ஐந்து மைல் தொலைவில் ஒரு காடு இருந்தது. அங்குதான் பிக்கு மறைந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கு பெஹ்லாத் சில மூங்கில்களை வெட்டி, சிஞ்சூரி புதர்களுக்கு இடையில் ஒரு பந்தலை அமைத்துக் கொடுத்தான். பனையோலைகளை வெட்டித் தற்காலிகக் கூரையும் கட்டிக் கொடுத்தான். பிறகு சொன்னான், “மழை புலிகள மலையப் பாத்து விரட்டிட்டது. இங்கே நீ அமைதியா, அருமையான ஓய்வை எடுக்கலாம் பிக்கு. பாம்புகள் மட்டும் கிட்டே வராமல் இருக்கணும், அவ்வளவுதான்.”
”சாப்பாட்டுக்கு என்ன செய்யறது?”
”நான் உனக்கு அவலும், வெல்லமும் கொடுக்கல? ஓண்ணு ரெண்டு நாள்ள உனக்குக் கொஞ்சம் அரிசியும் கொண்டு வறேன்; நான் இங்கே அடிக்கடி வந்தா, எல்லோரும் சந்தேகப் படுவாங்க.”
பெஹ்லாத் இலைகளையும், பச்சிலைகளையும் வைத்துக் காயத்துக்கு கட்டுப் போட்டு விட்டு, முடிந்த வரை விரைவில் வருவதாகக் கூறிவிட்டுச் சென்றான். அன்று இரவு பிக்குவுக்குக் காய்ச்சல் வந்து விட்டது. அடுத்ட நாள் காலை, பெஹ்லாத் கூறியது சரிதான் என்பதை பிக்கு உணர்ந்தான். காயத்தில் சீழ் பிடித்து விட்டது. அவனது வலது கை மோசமாக வீங்கி, அசைக்க முடியாமல் போனது.
புலிகள் கூட மழைக்காலத்தில் ஓடிப் போய்விடும் அந்தக் காட்டில், பிக்கு அந்தக் குறுகலான மேடையில் எப்படியோ இரண்டு பகல்களையும், இரண்டு இரவுகளையும் ஓட்டி விட்டான்; காய்ச்சல், வலி, கடுமையான மழை, கொசு, வண்டுகள், அவ்வப்போது உடலில் ஒட்டிக் கொண்ட அட்டைகளை பிய்த்துப் போடுவது என்று மிகவும் சிரமப்பட்டான். மழை உள்ளே அடித்த போது தோல் வரை நனைந்து போனான், மறைவில் மூச்சு இழுப்பால் அவதிப் பட்டான், வெப்பமான பகலில் சிரமப் பட்டான், மேலே ஊர்ந்த பூச்சிகள் அவனைப் பைத்தியமாகவே ஆக்கி விட்டன. பெஹ்லாத் கொடுத்து விட்டுச் சென்ற பீடிகள் தீர்ந்து விட்டன. பெஹ்லாத் கொடுத்து விட்டுச் சென்ற அவல் ஒன்றிரண்டு நாட்கள் வரும், ஆனால் வெல்லம் தீர்ந்து விட்டது. அங்கு கூட்டம் கூட்டமாக வந்த செவ்வெறும்புகள் மிகவும் அதிருப்தியடைந்து பிக்கு மீது படையெடுத்தன.
வாழ்வதற்குப் போராடிய பிக்கு பெஹ்லாதை நாசமாகப் போக என்று சபித்தான். பெஹ்லாத் வந்திருக்க வேண்டிய தினத்தில் காலையில் தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் பெஹலாதுக்காக மாலை வரை காத்திருந்தான். மேற்கொண்டு தாகத்தைத் தாங்க முடியாமல் அவன் கீழே இறங்கிப் பக்கத்தில் இருந்த ஓடைக்குச் சென்று சட்டியில் தண்ணீரைப் பாதி நிரப்பிக் கொண்டு திரும்பி கடுமையான வலியுடன் மேடையில் ஏறினான். அவனுக்கு இருந்த பசியால் வேறு வழியின்றி வறண்ட அவலை மென்று தின்றான். நன்றாக இருந்த ஒற்றைக் கையால் ஈ எறும்புகளையும், கொசுக்களையும் நசுக்கிக் கொன்று கொண்டிருந்தான். அட்டைகள் நோய்த்தொற்று ரத்தத்தை உறிஞ்சி விடும் என்று நம்பி காயத்தைச் சுற்றி அட்டைகளை வைத்தான். அவனது தலைக்கு மேல் இருந்த சிஞ்சூரி இலைகளிலிருந்து ஒரு பச்சைப் பாம்பு எட்டிப் பார்ப்பதைக் கண்டு, கையில் கம்புடன் இரண்டு மணி நேரம் அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். கம்பால் அவ்வப்போது அதிலிருந்த பாம்புகளை விரட்ட பச்சைத் தழையில் தட்டிக் கொண்டிருந்தான்.
அவன் சாகப் போவதில்லை. அவன் நிச்சயமாக சாக மாட்டான். இந்த நிலைமைகளில் உயிர் வாழ்வதற்குக் காட்டு மிருகங்களுக்கே கடுமையாக இருந்திருக்கும். ஆனால் அவன் சாவை ஏமாற்றுவான்.
பெஹலாத் தனது குடும்பத்துடன் அடுத்த கிராமத்துக்கு ஒரு திருமணத்துக்காகச் சென்றிருந்தவன், அங்கு சாராயத்தைக் குடித்து விட்டு மட்டையாகி விட்டான். அடுத்த நாளும் அவன் வரவில்லை. உண்மையில், பிக்கு எப்படிக் காட்டில் உயிர் வாழ்கிறான் என்று அவன் மூன்று நாட்களுக்கு யோசிக்கும் நிலையில் கூட இல்லை.
அதே சமயம், பிக்குவின் அழுகிப் போன காயத்திலிருந்து சீழ் வடிந்து கொண்டிருந்தது. அவனது உடலே ஊதிப் போய் விட்டது. அவனது காய்ச்சல் அடங்கி விட்டது. ஆனால் அவனது உடலில் பரவிய மிகவும் துன்புறுத்தும் வலி அவனது உணர்வுகளை மழுங்கடித்தது. அவனுக்கு இப்போது பசியோ, தாகமோ எடுக்கவில்லை. அவனது உடலில் ரத்தத்தை உறிஞ்சி விட்டு அட்டைகள் விழுந்தாலும், அவனுக்கு அந்த உணர்வே இல்லை. அவனது காலில் தண்ணீர் சட்டி உதை பட்டுக் கீழே விழுந்து உடைந்து விட்டது. தண்ணீரில் நனைந்து போன அவல், சாக்குடன் சேர்ந்து அழுகியது. அவனது அழுகிப் போன காயத்திலிருந்து கிளம்பிய மோசமான நாற்றம் நரிகளைக் கவர்ந்திழுக்க, அவை இருட்டில் மேடையைச் சுற்றி வந்தன.
மதிய நேரத்தில் தனது உறவினர்களின் வீட்டிலிருந்து திரும்பிய பெஹ்லாத், பிக்குவைப் பார்க்க வந்து விட்டு, தனது தலையை அவநம்பிக்கையுடன் ஆட்டிக் கொண்டான். அவன் ஒரு சட்டியில் சோற்றையும், வறுத்த மீனையும், கொஞ்சம் காய்கறிகளையும் பிக்குவுக்காகக் கொண்டு வந்திருந்தான். அவன் நோயுற்ற மனிதனுடன் மாலை வரை உட்கார்ந்திருந்து விட்டுத் தான் கொண்டு வந்த உணவைத் தானே உண்டு முடித்தான். அவன் வீட்டுக்குச் சென்று விட்டு ஒரு சிறிய ஏணியுடனும், தனது மைத்துனன் பரத்துடனும் திரும்பி வந்தான்.
ஏணியை ஒரு கட்டில் போல உபயோகித்துக் கொண்டு, இருவரும் பிக்குவை பெஹ்லாதின் வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர். அவனைப் பரணில் வைக்கோலைப் பரப்பி அங்கு படுக்க வைத்தனர்.
வாழவேண்டும் என்ற எண்ணம் பிக்குவுக்கு வலுவாக இருந்ததால், மோசமான இருப்பிடத்தையும், மருத்துவ உதவியே இல்லதிருந்ததையும் தாண்டி, அவன் மரணத்தை வென்று விட்டான். ஆனால் அவனது வலது கை வேலை செய்யாமல் போய் விட்டது. முதலில் அவனால் அதை அசைக்க முடியவில்லை. பிறகு அது ஒரு இறந்து போன கிளையைப் போலத் தொங்கி விட்டது.
அவனது காயம் ஓரளவு ஆறியதும், சுற்றிலும் யாரும் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்டு அவன் சிலசமயம் பரணிலிருந்து ஒற்றைக் கையால் இறங்கினான். பிறகு, ஒருநாள் மாலை மிகவும் மோசமான ஒரு விஷயத்தை செய்து விட்டான்.
பெஹ்லாத் வீட்டிலில்லை. அவன் பரத்துடன் சாராயம் குடிக்கச் சென்று விட்டான். பெஹ்லாதின் தங்கை தண்ணீர் எடுக்க ஆற்றுக்குச் சென்று விட்டாள். அவனது மனைவி குழந்தையைப் படுக்க வைக்க அறைக்குள் சென்றாள். அவள் பிக்குவின் கண்ணிலிருந்த நோக்கத்தைக் கண்டு கொண்டு, விரைவாக அறையிலிருந்து வெளியேற முயன்றாள். பிக்கு அவளது கையைப் பிடித்தான்.
ஆனால் பிக்குவின் மனைவி ஒரு பக்டியின் (இந்தியாவின் ஒரு பழங்குடி இனம்) மகள். அவளை ஒரு கையால், பலவீனமான உடலால் கீழே அழுத்த முடியவில்லை. அவள் அவனைத் தூக்கி அடித்து விட்டு வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டே அறையிலிருந்து வெளியேறினாள். பெஹ்லாத் வீடு திரும்பியதும் அவனிடம் எல்லாவற்றையும் கூறினாள்.
தலையில் சாராயம் வேலை செய்து கொண்டிருக்க, பெஹ்லாத் உடனடியாகச் செய்தது இரண்டு பக்கமும் வஞ்சகம் செய்யும் பிசாசை அடித்து விரட்டுவதுதான். அவனுடைய பருமனான தடியை வைத்துத் தனது மனைவியை விலக்கி விட்டு பிக்குவின் தலையைப் பிளக்க அவன் பாய்ந்தான். ஆனால் அவனது குடித்த நிலையில் கூட, அவ்வாறு செய்வது அவனது பொறுப்பு என்றாலும் தனியாக அவனால் முழுதாக அதைச் செய்து விட முடியாது என்பதைப் புரிந்து கொண்டான். பிக்கு ஏற்கனவே ஒரு கையில் ஒரு சவரக் கத்தியை உறுதியாகப் பற்றிக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான். எனவே ஆயுதங்களால் தாக்கிக் கொள்வதை விடுத்து அவர்கள் இருவரும் மோசமான வசவுகளைப் பரிமாறிக் கொண்டனர். கடைசியில் பெஹ்லாத் கூறினான், “உனக்காக நான் ஏழு ரூபாய் செலவு செஞ்சிருக்கேன் – என்னோட பணத்த குடுத்துட்டு என் வீட்லேருந்து ஓடிப் போ, நாயே”.
”எங்கிட்ட ஒரு கங்கணம் இருந்தது – பாஜூ – என்னோட இடுப்புல சொருகிருந்தது” என்றான் பிக்கு. “நீ அதத் திருடிட்ட. எனக்கு அது வேணும். அப்புறம் நான் போறேன்.”
”உன்னோட பாஜூவுக்கு என்னாச்சுங்கறது யாருக்கு வேணும்?”
”நீ ஒழுங்கா என்னோட பாஜூவ திருப்பிக் கொடுத்துடறது நல்லது, பெஹ்லாத்!. இல்லேன்னா உன்னோட கழுத்த சாஹா சகோதரர்கள்ள இளையவனோட கழுத்த அறுத்த மாதிரி அறுத்துடுவேங்கறது மட்டும் நிச்சயம். என்னோட கங்கணத்த கொடுத்ததும் நான் போயிடுவேன்.”
பிக்குவுக்கு அவனுடைய கங்கணம் திருப்பிக் கிடைக்கவில்லைதான். இந்தக் குழப்பத்தில், பாரத் வந்து சேரவும், இருவரும் சேர்ந்து பிக்குவை அமுக்கி விட்டனர். பலவீனமான, முடமாகிப் போன பிக்குவால் பெஹ்லாதின் ஒரு கையில் கடித்து வைக்க மட்டுமே முடிந்தது. பெஹ்லாதும், அவனது மைத்துனனும் பிக்குவை கிட்டத்தட்ட உயிர் பொய்விடும் வரை அடித்தனர். அவனுடைய காயம் மீண்டும் திறந்து கொண்டது. வழிந்த ரத்தத்தைத் தனது கையால் வழித்து விட்டு விட்டு அவன் தப்பி ஓடினான். இருட்டில் அவன் எங்கே தப்பி ஓடினான் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், பெஹ்லாதின் வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு அந்த நள்ளிரவில் அக்கம்பக்கத்து வீட்டினர் அனைவரும் விழித்துக் கொண்டனர்.
”அழிஞ்சு போச்சு…. மொத்தமும் அழிஞ்சது! அந்தத் தீய சனி என் வீட்ட பிடிச்சிடுச்சு” என்று தலையில் அடித்துக் கொண்டு அலறினான் பெஹ்லாத். ஆனால் போலீசுக்கு பயந்து அவன் பிக்குவின் பெயரை வெளியிடவில்லை.
அந்த இரவில், பிக்குவின் காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. சித்தால்பூருக்கு அருகில் ஒரு ஆறு உள்ளது. பெஹ்லாதின் வீட்டுக்குத் தீ வைத்த பிறகு ஒரு மீன்பிடிப் படகைத் திருடிக் கொண்டு பிக்கு அந்த ஆற்றில் மிதந்து கொண்டிருந்தான். படகை வலிக்கும் அளவுக்கு பலமில்லாததால் ஒரு தட்டையான மூங்கிலை வைத்து படகைத் தள்ளிக் கொண்டிருந்தான். காலையில் கூட அவனால் வெகுதூரம் சென்றுவிட முடியவில்லை.
தனது வீட்டை இழந்து விட்ட பெஹ்லாத் விளைவுகளைக் கூட நினைக்காமல் தன்னைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் போலிசிடம் கூறிவிடுவானோ என்று பிக்கு பயந்தான். கொஞ்ச காலமாக அவனைப் போலீஸ் துரத்திக் கொண்டிருந்தது. பைகுந்த சாஹாவின் வீட்டில் நடந்த கொலைக்குப் பிறகு போலீஸ் முயற்சி இருமடங்கு வேகமடைந்தது. முப்பது மைல்களுக்குள் எங்காவது தலையைக் காட்டுவது மிகவும் ஆபத்தானது. ஆனல் பிக்கு தப்பித்து விடும் ஆற்றாமையுடன் இருந்தான். முந்தைய நாள் மாலையிலிருந்து அவன் எதுவும் உண்ணவில்லை. அவன் பலவீனமாக இருந்ததுடன், அவன் வாங்கிய அடியால் உடல் மரத்துப் போயிருந்தது. விடிகாலையில் அவன் படகை ஒரு சிறுநகரத்தில் விட்டான். தனது காயத்தை ஆற்று நீரில் கழுவிக் கொண்டு நகரத்துக்குள் சென்றான். பசி அவனை வாட்டியது. அவனிடம் காசில்லாததால் பொறியைக் கூட வாங்க முடியவில்லை. அவன் சந்தையில் பார்த்த முதல் மனிதனிடம் நின்றான். “ஒண்ணு ரெண்டு காசு குடுங்க சார்” என்று பிச்சை எடுத்தான்.
அந்த மனிதர் கலைந்து போன தலையும், கிழிந்த இடுப்புத் துணி, தொங்கிக் கொண்டிருந்த கையையும் பார்த்து விட்டுப் பரிதாபப்பட்டு பிக்குவுக்கு ஒரு நாணயத்தைக் கொடுத்தார்.
”ஒண்ணுதானா சார், இன்னொண்ணு கிடைக்குமா?” என்று கேட்டான் பிக்கு.
”ஒண்ணு உனக்கு மகிழ்ச்சியா இல்லையா, ஒழிஞ்சு போ” என்று விரட்டினார் அந்த மனிதர்.
ஒரு கணம் தனது வழக்கமான வசவை அந்த மனிதர் மீது வீசத் தயாராக இருந்தான் பிக்கு. ஆனால் அவன் தனது நிலையை எண்ணிப் பார்த்தான். மாறாக அந்த மனிதரை கொஞ்சம் முறைத்துப் பார்த்து விட்டு பலசரக்குக் கடையிலிருந்து கொஞ்சம் பொரியை வாங்கி வாயில் அடைத்து விழுங்கினான்.
ஆக, பிக்கு ஒரு பிச்சைக்காரனாகி விட்டான்.
பகுதி 2
சில நாட்களிலேயே உலகின் பழமையான இந்தத் தொழிலின் நுட்பங்களை பிக்கு கற்றுக் கொண்டான். அவன் எப்படி உடலை வைத்துக் கொள்ள வேண்டும், எப்படிக் கேட்க வேண்டுமென்பதையெல்லாம் விரைவில் கற்றுக் கொண்டான். அவனது முடி இப்போது சிக்கலாகி, கொண்டையாகி, பேன் பரவி விட்டது. சில சமயம் பைத்தியம் பிடித்தது போல் தலையை சொறிந்து கொண்டான், ஆனால் முடியை வெட்ட மறுத்து விட்டான். ஒரு கிழிந்த கோட்டை வாங்கிக் கொண்டு கடுமையான வெப்பத்தில் கூட அதை அணிந்து கொண்டான். அவனது தொங்கிப் போன கை அவனது தொழிலில் ஒரு முக்கியமான பண்டம். அது வெளியே தெரியும்படி இருக்க வேண்டும். தோளுக்குக் கீழே வலது கையை கோட்டிலிருந்து கிழித்தெடுத்து விட்டான். தனக்கு ஒரு தகரக் குவளையையும், ஒரு தடியையும் வாங்கிக் கொண்டான்.
காலையிலிருந்து மாலை வரை சந்தைக்கு அருகில் ஒரு புளியமரத்தின் கீழ் அமர்ந்து கொண்டான். அவனது காலை உணவு ஒரு பைசா பெருமானமுள்ள பொரி. மதியத்தில் அவன் சந்தைக்கு அருகில் கைவிடப்பட்ட ஒரு தோட்டத்துக்குச் சென்று விடுவான். ஒரு ஆலமரத்துக்கு அடியில் செங்கற்களையும் தனது மண்சட்டிகளையும் வைத்து ஒரு அடுப்பை உருவாக்கிக் கொண்டான். அதில் சோற்றை வடிப்பான். சில நாட்களில் கொஞ்சம் மீன் அல்லது சில நாட்கள் காய்கறி. வயிறு நிரம்ப உண்ட பிறகு மரத்தில் சாய்ந்து கொண்டு, புளியமரத்துக்குத் திரும்புமுன் சாப்பாட்டுக்குப் பிந்தைய பீடியை ரசித்துக் குடிப்பான்.
அங்கே நாள் முழுதும் முனகிக் கொண்டு கிடப்பான், “ஹே பாபா, ஒரு பைசா. எனக்கு நீங்க கொடுங்க, கடவுள் உங்களுக்குக் கொடுப்பார்; ஹே பாபா, ஒரு பைசா . . . “
பல பண்டைய பழமொழிகளைப் போல், “பிக்ஷாயா நைபா நைபா சா” – ஒருபோதும் பிச்சை எடுக்காதே” என்ற சுலோகம் மொத்தத்தில் பொருந்தாதது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு பேர் பிக்குவைக் கடந்து சென்றனர். சராசரியாக ஒவ்வொரு பதினைந்தாவது ஆளிடமிருந்து ஒரு பைசாவையோ, அரைப் பைசாவையோ அவன் பெற்றான். பிக்குவின் தினசரி சம்பாத்தியம் ஐந்திலிருந்து ஆறு அணா வரை இருந்தது. சில சமயம் எட்டணா கூடக் கிடைத்தது. இதைத் தவிர சந்தை வாரத்தில் இரண்டு நாட்கள் கூடியது. அந்த இரண்டு நாட்களிலும் பிக்குவின் வருமானம் ஒரு ரூபாய்க்குக் குறைவாக இல்லை.
மழை நின்றது. ஆற்றங்கரைகளில் வெள்ளை நிறப் பூக்கள் நிறைந்தன. மாதம் எட்டணா வாடகையில் பிக்கு படகுக்காரன் பின்னுவின் குடிசைக்கருகில் ஒரு சேரிப்பகுதிக்கு மாறினான். அவன் எப்படியோ முன்பு மலேரியாவால் மடிந்த ஒருவனின் அசிங்கமான, ஆனால் கனமான ஒரு போர்வையைப் பெற்றான். வயல்களில் சாக்குகளிலிருந்து வைக்கோலைத் திருடிக் கொண்டான். வைக்கோலுக்கு மேல் சாக்கை விரித்து வசதியாகத் தூங்கினான். நகரில் வீடு வீடாகப் பிச்சைக்குச் சென்றதில் அவனுக்குக் கொஞ்சம் கிழிந்த உடைகளும், விரிப்புகளும் கிடைத்தன. அவற்றையெல்லாம் சுருட்டித் தலையணையாக வைத்துக் கொண்டான். ஆற்றிலிருந்து சில்லென்ற காற்று ஈரத்துடன் அடித்த போது பிக்கு அந்தத் துணிச் சுருளிலிருந்து ஒரு துணியை உருவி அதைப் போர்த்திக் கொண்டான்.
திருப்தியான வாழ்க்கையும், போதுமான உணவும் சில காலத்தில் பிக்குவை உயிர்ப்பித்து விட்டன. அவனது மார்பில் தசைகள் மேலெழுந்து நிற்க, அவன் கையை மடக்கிய போது தசைகள் இறுகி நின்றன. பிக்கு வலுவான உடல் ஆரோக்கியத்தைப் பெற்று விட்டான். அடக்கப்பட்ட அவனது உடல்பசி அவனை சிடுசிடுப்புக் கொண்டவனாகவும், பொறுமையில்லாதவனாகவும் மாற்றி விட்டது. அவன் இன்னும் பழைய பிச்சையெடுக்கும் நுட்பங்களையே உபயோகித்தான், ஆனால் யாராவது மறுத்தால், கடும் கோபம் கொண்டான். கடந்து போகிறவர்கள் அவனைக் கண்டு கொள்ளாமல் போனால், தெருவில் அவ்வளவாக நடமாட்டம் இல்லா விட்டால் அவர்களை ஏசினான். கடைக்காரர்கள் கொஞ்சம் அதிகம் கொடுக்க மறுத்தால் அவர்களைத் தாக்குமளவுக்குச் சென்றான். ஆற்றங்கரையில் குறிப்பாகப் பெண்கள் குளிக்க வரும் நேரத்தில் பிச்சையெடுப்பது போல் நடித்தான். அவர்கள் பயந்து அவனை அங்கிருந்து செல்லுமாறு அலறிய போது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அவன் நகராமல் இருந்து கொண்டு ஆணவத்துடன் முறைத்தான்.
இரவில், புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.
ஒரு பெண்ணில்லாமல் அவனது வாழ்க்கை மிகவும் கொடுமையாக இருந்தது. அவன் ஒரு காலத்தில் கட்டுப்பாடின்றி வாழ்ந்த வாழ்க்கைக்காக அவனது மனம் ஏங்கியது.
அந்தச் சமயங்களில் அவன் சாராயக் கடையில் முட்ட முட்டக் குடித்து விட்டு பெரிய கலாட்டா செய்து விட்டு பிறகு பாஷியின் அறைக்குச் சென்று ஆவேசமான இரவுகளைக் கழித்தான். சில சமயம் அவர்கள் வீடுகளைக் கொள்ளையடித்து, வீட்டுக்காரர்களைக் கொலை செய்து விட்டு, இருளில் நகைகள், பணத்துடன் மறைந்த பொழுது இவனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். கணவன் கட்டி வைக்கப்பட்டுப் படுகொலை செய்யப்படும் பொழுது மனைவி கண்ணில் தெரியும் விளக்க முடியாத உணர்வு, தனது மகனின் உடலிலிருந்து ரத்தம் தெறிக்கும் பொழுது ஒரு தாயின் இதயம் வெடிக்கும் அலறல் – அலறல்களைக் கேட்பது அல்லது ஒரு தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் அவற்றைப் பார்ப்பதை விட கிளர்ச்சியூட்டுவது வேறு எதாவது உண்டா? கிராமத்திலிருந்து கிராமத்துக்கு ஓடி, காடுகளில் மறைந்து வாழ்ந்த அப்போது கூட அவன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவனது கும்பலில் பலரும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர், ஆனால் அவன் ஒருமுறை மட்டுமே மாட்டிக் கொண்டான்.
அது அவனும் ராக்கு பக்டியும் சேர்ந்து பஹானாவிலிருந்து ஸ்ரீபதி பிஸ்வாசின் தங்கையைக் கடத்தியபோது நடந்தது. அவனுக்கு அப்போது ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அவர்களால் அவனை ஓரிரண்டு ஆண்டுகள் மட்டும்தான் அடைத்து வைத்திருக்க முடிந்தது. ஒரு மழைநாள் மாலையில் அவன் சிறையின் சுவரில் ஏறித் தப்பி விட்டான். அவனே வீடுகளில் புகுந்து திருடத் தொடங்கினான். மதிய வேளைகளில் கிராமக் குளங்களில் இருந்த பெண்களை சத்தமில்லாமல் அணுகி, அவர்கள் கழுத்தை நெறித்து, அவர்களிடமிருந்து நகைகளைக் கொள்ளையடித்தான். நவகாளியில் ராக்குவின் மனைவியை இழுத்துக் கொண்டு கடல் கடந்து ஹாட்டியாவுக்குச் சென்றான். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவளைக் கைவிட்டு விட்டு, விரைவில் மூன்று கும்பல்களுடன் வேலை செய்தான். அவன் சென்ற கிராமங்களையே மறந்து விடுமளவுக்கு ஏராளமான கிராமங்களைக் கொள்ளையடித்தான். மிகச் சமீபத்தில் பைகுந்த சாஹாவின் இரண்டாவது தம்பி தொடர்புடைய சம்பவத்தில் அவனது குத்துக் கத்தியால் அவனது தொண்டையை இரண்டாகப் பிளந்து விட்டான்.
எப்படிப்பட்ட நேரம் அது, அதிலிருந்து இந்த இடத்துக்கு வந்து விட்டது . . .
கொல்லுவதில் ஒரு காலத்தில் போதை பெற்றவன், இப்போது தனக்குச் சில்லறை கொடுப்பவர்களை ஏசுவதன் மூலம் மட்டுமே திருப்தியடைய வேண்டியிருந்தது. அவனது வலு இன்னும் குறையவில்லை. ஆனால் அவன் அதை உபயோகிக்கும் நிலையில் இல்லை. இரவில் நேரம் கழித்துக் கடைக்காரர்கள் தமக்கு முன் கட்டுக் கட்டாகப் பணத்தை வைத்து எண்ணும் கடைகள் இருந்தன. கணவர்கள் வேலைக்குச் சென்றிருக்க, பெண்கள் தனியாக இருக்கும் வீடுகள் இருந்தன. அவர்களைக் கூர்மையான ஆயுதம் வைத்துத் தாக்கி விட்டு இரவோடு இரவாகப் பணக்காரனாவதை விட்டு விட்டு அவன் படகுக்காரன் பின்னுவின் பாழான கொட்டகையில் தூங்கிக் கொண்டிருந்தான்.
சிலசமயம், தூக்கத்தில் தனது வலது கையை உணர்ந்த போது, அவனது ஏமாற்றம் கட்டுக்கடங்காமல் இருந்தது. பயந்து போன, கோழைத்தனமான ஆட்கள் நிறைந்திருந்த ஒரு உலகில் அவன் எல்லையற்ற துணிவும், வலுவும் கொண்டு அவன் இருந்தான், ஆனால் ஒரு தொங்கிப் போன கையால் அவன் இல்லாதவன் போல் ஆகிவிட்டான். யாருக்காவது இப்படி ஒரு விதி நேருமா?
சந்தைக்கு வெளியே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு இன்னொரு பிச்சைக்காரி இருந்தாள். அவள் குறிப்பிடும்படியான இளவயது கொண்டவள், ஈர்க்கும்படியான அழகையும் பெற்றிருந்தாள். ஆனால் அவளுக்குக் காலில் முட்டிக்குக் கீழ் மோசமான நீண்ட புண் இருந்தது.
இந்த நீண்ட புண்ணின் காரணமாக அவள் பிக்குவை விட அதிக வருமானம் ஈட்டினாள். அது சரியாகி விடாமல் இருக்க சிறப்பு கவனம் எடுத்துக் கொண்டாள்.
சிலசமயம் பிக்கு அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொள்வான். “இது ஆறாது, சரிதானே?”
”அது சரியாப் போகத்தான் செய்யும், சரியான மருந்து குடுத்தா உடனே ஆறிடும்.”
உடனே ஆவலாக பிக்கு சொல்வான், “அப்ப உடனே போய் மருந்து வாங்கிக்கோ, வேகமா சரி பண்ணிக்கோ. அது சரியானதும், இனிமேல் நீ பிச்சை எடுக்க வேண்டியதில்லைன்னு உனக்குத் தெரியும். நான் உன்ன என்னோட வச்சுக்கறேன்.”
”நான் உங்கூட தங்கிடுவேங்கற மாதிரி”
”ஏன்? நீ ஏன் எங்கூட இருக்க மாட்ட? நான் உனக்கு உடையும், உணவும் தருவேன், வசதியா வச்சுப்பேன். நாள் பூரா நீ ஓய்வு எடுத்துக்கலாம். நீ ஏன் என்ன வேணாம்னு சொல்ற?”
பிச்சைக்காரி மசியவில்லை. அவள் தனது வாயில் புகையிலையை அடக்கிக் கொண்டு சொன்னாள், “நீ கொஞ்ச காலத்துல என்னத் தூக்கிப் போட்டப்புறம் எனக்கு திரும்ப எப்படி புண் வரும்?”
பிக்கு தான் அவளுக்கு நம்பிக்கையாக, விசுவாசத்துடன் இருப்பதாக சத்தியம் செய்தான். அவன் பூமியில் இருக்கும் அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகக் கூறினான். ஆனாலும் பிச்சைக்காரி ஒப்புக் கொள்ளவில்லை. பிக்கு வெறுத்துப் போய்த் திரும்பினான்.
அந்த சமயத்தில், நிலா தொடர்ந்து வானில் ஏறியது, ஆற்றில் அலைகள் கடந்து சென்றன, சிறிது குளிர்ச்சி காற்றில் நல்ல உணர்வை விட்டுச் சென்றது. பிக்குவின் கொட்டகைக்கு அருகிலிருந்து வாழை மரத்திலிருந்த வாழைப்பழங்கள் காணாமல் போயின. படகுக்காரன் பின்னு அவற்றை விற்றுத் தனது மனைவிக்கு ஒரு வெள்ளி ஒட்டியாணம் வாங்கினான். பனங்கள் புளித்து சிக்கலான, திறன்மிக்க சாராயமானது. பிக்குவின் பேரார்வம் வெறுப்புணர்வை விஞ்சி விட்டது. அவன் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் இழந்து விட்டான்.
ஒருநாள் காலை அவன் நேராக பிச்சைக்காரியிடம் சென்றான். “சரி, இப்படியே நீ எங்கூட வந்துடு” என்று அழைத்தான்.
”ஏன் சீக்கிரம் வர முடியாதா? இப்ப ஓடிப்போயிடு. போய் ஒரு கரும்போட அடித்தண்டோட தோலப் போய்த் தின்னு.”
”ஏன், நான் ஏன் போய் அடித்தண்டோட தோல திங்கணும்?”
”நான் உனக்காக மூச்சப் பிடிச்சுக்கிட்டுக் காத்திருக்கேன்னு நினைச்சியா. நான் இப்ப அவங்கூட இருக்கேன்.”
அவளது பார்வையை ஒட்டித் டிரும்பிப் பார்த்த பிக்கு அங்கு ஒரு நொண்டி, தாடிப் பிச்சைக்காரன் இருந்ததைப் பார்த்தான். அவனும் பிக்குவைப் போல உடலையும், வயதும் கொண்டிருந்தான். பிக்குவின் கையைப் போல, அவனது ஒரு கால் சூம்பியிருந்தது. அவன் அல்லாவின் பெயரைச் சொல்லிப் பிச்சையெடுத்த போது அதை கவனமாக வெளியே தெரியும்படி வைத்திருந்தான். அவனுக்கு அருகில் ஒரு சிறிய மரக்கால் இருந்தது.
”நீ ஏன் இங்க உக்காந்திருக்க?” என்று பிச்சைக்காரி கேட்டாள். “ஓடிப்போயிடு, இல்லேன்னா அவன் இங்க உன்னப் பாத்தா கொன்னுடுவான்”.
”ஆமா, ஆமா இங்க ஒவ்வொரு ஆண்குறியும் இன்னொருத்தனக் கொன்னுக்கிட்டுத்தான் இருக்கு” என்று முனகினான் பிக்கு. “அவன மாதிரி பத்துப் பேர நான் சமாளிக்க முடியும். நான் உன்ன என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவேன்.”
”அப்ப போய் அவங்கிட்ட சவால் விடு. ஏன் என்னைச் சுத்திக்கிட்டு இருக்க?”
”அவன விடு. எங்கூட வந்துடு.”
”ஓ என் அன்பே! கொஞ்சம் புகையிலை வேணுமா? நீ என்னோட புண்ணப் பாத்ததும் ஓடிப் போயிட்ட. அப்புறம் ஏன் நான் உன்ன சேத்துக்கணும் தேவிடியா மகனே? நான் ஏன் அவன விடணும்? உனக்கு வீடு இருக்கா? என் நாக்குல மாட்றதுக்கு முன்னாடி ஓடிப்போயிடு”.
பிக்கு நகர்ந்தாலும், அவளை விட்டு விடவில்லை. அவள் தனியாக இருக்கும்போது அவளிடம் வந்து உட்கார்ந்தான். அவளுடன் பேச முயன்றான். “நீ உன்னோட பேர் என்னன்னு சொன்ன?”
இந்த மாதங்களில் ஒருவர் இன்னொருவரின் பெயரைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். இன்னொருவரின் அடையாளம் கூட அவர்களுக்குத் தெரியாது.
அந்தப் பெண் புகையிலைக் காவி படிந்த பல்லுடன் அவனை முறைத்தாள்.
”திரும்ப வந்துட்டியா? போ, அங்க பிச்சையெடுக்கற கிழவிகிட்டப் போ” பிக்கு அவளுக்குப் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தான். அவன் இப்போது ஒரு சாக்கைத் தனது தோளில் எடுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான். ஏனென்றால் பலரும் அவனுக்குப் பைசாவுக்கு பதில் தானியங்களைக் கொடுத்தனர். அவன் சாக்கிலிருந்து ஒரு பழத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான். “இத உனக்காகத் திருடிட்டு வந்தேன்.”
பிச்சைக்காரி உடனே அவளை ஆராதித்தவன் கொடுத்த பழத்தை உரித்து ஆவலுடன் தின்றாள். மகிழ்ச்சியுடன் சொன்னாள், ”உனக்கு என் பேர் வேணுமா? பாஞ்சின்னு கூப்பிடுவாங்க – பாஞ்சி. நீஎனக்கு வாழைப்பழம் குடுத்த. நான் என்னோட பேர சொல்லிட்டேன். இப்ப ஓடு.”
பிக்கு எழவில்லை. ஒரு பெரிய வாழைப்பழத்தைக் கொடுத்த பிறகு அவளது பெயரை மட்டும் கேட்டுக் கொண்டு அவன் போக விரும்பவில்லை. அவன் பாஞ்சிக்கு அருகில் புழுதியில் அமர்ந்து கொண்டு முடிந்த வரை பேசிக் கொண்டிருந்தான். பார்ப்பவர்களுக்கு, இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டிருப்பது போல் தோன்றும்.
பாஞ்சியின் கூட்டாளியின் பெயர் பஷீர். ஒருநாள் பிக்கு அவனிடமும் பேச்சை வளர்க்க முயன்றான்.
”சலாம், மியா.”
”நீ ஏன் இங்க வந்த?” என்று கேட்டான் பஷீர். “எனக்கு சலாம் மியா சொல்லாத. உன்னோட மண்டையோட்ட பிளந்துடுவேன்.”
அவர்கள் இருவரும் திட்டிக் கொண்டனர். பிக்குவிடம் ஒரு கம்பு இருந்தது, பஷீரிடம் ஒரு பெரிய கல் இருந்தது. எனவே அவர்களது மோதல் உடல் ரீதியாக நடக்கவில்லை.
தனது புளியமரத்துக்குத் திரும்புவதற்கு முன் பிக்கு சொன்னான், “காத்துக்கிட்டு இரு. சீக்கிரத்துல உன்ன ஒழிச்சுக் கட்டிடுவேன்.”
”இங்க அவகூட உன்னத் திரும்பப் பாத்தேன்னா, அல்லா பேரால சொல்றேன், உன்னக் கொன்னுடுவேன்” என்று பதிலடி கொடுத்தான் பஷீர்.
பகுதி 3
இதே சமயத்தில் பிக்குவின் வருமானம் குறையத் தொடங்கியது. தெருவில் புதிய முகங்கள் மிகவும் அரிதாகவே தெரிந்தன. சிலபேர் இருந்தாலும், சில மாதங்களில் அவர்களது எண்ணிக்கை குறைந்தது. வழக்கமாக வந்தவர்களுக்குத் தினமும் பிக்குவுக்குக் காசு கொடுப்பதில் எந்தப் பயனும் இருப்பதாகத் தோன்றவில்லை. சுற்றிலும் பல பிச்சைக்காரர்கள் இருந்தனர்.
பிக்கு உயிர்வாழ்வதற்குப் போராடினான். திறந்த சந்தை நடந்த இரண்டு நாட்களைத் தவிர அவனால் ஒரு பைசாக்கூட சம்பாதிக்கவில்லை. அவன் கவலையில் ஆழ்ந்தான்.
குளிர்காலம் வந்து விட்டால், அவனுடைய கொட்டகையில் வாழ்வது கடினமானது. அவனுக்குச் சுவரும், கூரையும் உடைய ஒரு சரியான குடிசை தேவை.
மேலே கூரை இருக்கும் ஒரு நல்ல குடிசை இல்லாவிட்டால் எந்த இளம் பிச்சைக்காரியும் அவனுடன் வந்து தங்க ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆனால் தற்போதைய நிலையில் குறைந்து கொண்டிருந்த அவனது வருமானத்தால் ஒரு வயிற்றுக்குக் கூட உணவு அளிக்க முடியவில்லை. அவனது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வழி தேட வேண்டியிருந்தது.
அதை இங்கு செய்ய அவனுக்கு வழியே இல்லை. அவனால் திருடவோ, கொள்ளையடிக்கவோ முடியவில்லை; அவனால் உடலுழைப்புத் தொழிலாளியாக வேலை பார்க்க முடியவில்லை அல்லது முதலில் ஒரு ஆளைக் கொல்லாமல் அவனால் ஒற்றைக் கையை வைத்து அடிக்கவும் முடியவில்லை. அவனுக்கு பாஞ்சியை விட்டுவிட்டு நகரத்திலிருந்து வெளியேறவும் முடியவில்லை. அவனது மனம் அவனது அதிர்ஷ்டமின்மைக்கு எதிராகப் போராடியது. படகுக்காரன் பின்னுவையும், அவனது மகிழ்ச்சியான குடும்பத்தையும் பக்கத்துக் குடிசையில் பார்க்கப் பார்க்க அவனுக்கு வெறுப்புத் தோன்றியது. அவனுக்கு பின்னுவின் வீட்டைக் கொளுத்தி விட வேண்டும் என்ற தூண்டுதல் ஏற்பட்டது. அவன் ஆற்றங்கரையில் ஒரு பைத்தியக்காரனைப் போல் அலைந்தான். உலகத்திலுள்ள அனைத்து ஆண்களையும் துடைத்தெறிந்து விட வேண்டுமென்று அவனுக்குள் ஆசை கொழுந்து விட்டெறிந்தது. அனைத்து உணவையும், அனைத்துப் பெண்களையும் அவனே அனுபவிக்கலாம்.
மேலும் சில நாட்கள் விரக்தியில் சென்றன. பிறகு ஒருநாள் இரவு, பிக்கு தனது மதிப்புமிக்க பொருட்களை ஒரு சாக்கில் கட்டி எடுத்துக் கொண்டான். சேமிப்புப் பணத்தைத் தன் இடுப்பில் கட்டிக் கொண்டு கொட்டகையை விட்டுப் புறப்பட்டான். ஆற்றங்கரையில் ஒரு நீளமான இரும்புக் கம்பி கிடப்பதைப் பார்த்தான். அதன் ஒரு முனையை ஒரு கல்லில் ஈட்டி போலத் தீட்டிக் கொண்டான். அந்த ஆயுதத்தையும் தனது சாக்கில் வைத்துக் கொண்டான்.
நிலா இல்லாத வானத்தில் நட்சத்திரங்கள் மின்னின. கடவுளின் பூமியில் அது ஒரு சப்தமில்லாத அமைதி. பிக்கு தனது மனதில் ஒரு தீய திட்டத்துடன் இருண்ட தெருக்களில் நடந்தான். அந்தத் திட்டத்தின் எதிர்பார்ப்பு அவனைப் பைத்தியமாக்கியது. “கடவுளே, நீ மட்டும் என் இடது கையை எடுத்துக் கொண்டு, வலது கையை விட்டிருந்தால்” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.
அவன் ஆற்றை ஒட்டி அரை மைல் நடந்து ஒரு குறுகிய சாலை வழியாக நகரத்தை அடைந்தான். சந்தை இடது புறமிருக்க, அவன் சந்துகள், தெருக்கள் வழியாக நடந்து மறுபக்கத்தை அடைந்தான். அங்குதான் நகரத்திலிருந்து முக்கிய சாலை வெளியே செல்லும். இந்த சாலையை ஒட்டி ஆறு ஒரு மைலுக்குச் சென்று பிறகு தெற்கே திரும்பும்.
இந்தச் சாலையில் வீடுகள் மிகச்சில. இடைவெளியும் அதிகம். பிறகு நெல்வயல்களும், காட்டுக்கு அருகில் சதுப்பு நிலமும் இருந்தன. இத்தகைய ஒரு இடத்தில், துரதிர்ஷ்டமிக்க இதயங்கள் அருகாமை இடங்களிலேயே ஏழைகளின் இடமாக சில கொட்டகைகளைப் போட்டிருந்தன. அதில் ஒன்று பஷீருடையது. தினமும் காலையில், அவன் ஒரு கட்டைக் காலை ஊன்றிக் கொண்டு நகரத்துக்கு சத்தத்தை எழுப்பிக் கொண்டே பிச்சை கேட்கச் சென்றான்; மாலையில் அவன் திரும்புவான். பாஞ்சி காய்ந்த சருகுகளைக் கொண்டு தீ மூட்டி அரிசி வேக வைப்பாள்; பஷீர் உட்கார்ந்து புகை பிடிப்பான். இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் பாஞ்சி காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொள்வாள். அவர்கள் இருவரும் தமது மூங்கில் படுக்கையில் படுத்துக் கொண்டு, தூங்குவதற்கு முன் தமது கடுமையான, அசிங்கமான மொழியில் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு இருக்கமான, அழுகிய நாற்றம் அவர்களது கூட்டிலிருந்து எழுந்தது. அவர்களது உடல்களும், படுக்கையும் ஓட்டை வழியாக வானத்தைப் பார்த்தன. இரவுக் காற்று அதை நிறைத்தது.
பஷீர் குறட்டை விட்டான். பாஞ்சி தூக்கத்தில் முணுமுணுத்தாள்.
பிக்கு ஒருநாள் அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள் என்று அறிய அவர்களைப் பின் தொடர்ந்தான். அவன் குடிசைக்குப் பின்னால் எட்டிப் பார்த்து கவனமாக காதைக் கொடுத்துக் கொண்டு வேலியின் அருகில் காத்திருந்தான். பிறகு அவன் முன்னால் சென்றான். பிச்சைக்காரர்களின் கொட்டைகளின் கதவுகளுக்குப் பூட்டு இருப்பதில்லை. பிக்கு எச்சரிக்கையுடன் அந்தக் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு, இரும்புக் கம்பியை இறுகப் பற்றிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான். வெளியே நட்சத்திரங்களின் ஒளி லேசாக இருந்தது. உள்ளேயே கடும் இருட்டு நிலவியது. பிக்கு தனது ஒரு கையால் தீக்குச்சியைப் பற்ற வைக்க வாய்ப்பேயில்லை. அவன் அறையின் நடுவில் நின்றபோது, அந்த இருட்டில் பஷீரின் இதயம் எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாக அறிவது கடினம் என்பதை உணர்ந்தான். அவன் தனது இடது கையால் தாக்குவான். தவறாகி விட்டால், நிச்சயமாக பஷீர் சத்தம் போடுவான், அது பெரிய பிரச்சனையை உண்டாக்கி விடும்.
அவர் ஒரு கணம் சிந்தித்தான். கட்டிலின் மேல்புறத்துக்குச் சென்று வேகமாக ஒரே வீச்சில் ஈட்டியை பஷீரின் தலையில் சொருகினான். இருட்டில் அந்தத் தாக்குதல் மரணத்தைக் கொடுத்து விட்டதா என்பது அவனுக்கு நிச்சயமாக இல்லை. ஈட்டி அவனது தலையில் ஊடுறுவி விட்டது என்பது அவனுக்கு நிச்சயமானாலும், அவனுக்கு திருப்தி இல்லை. கடும் வலுவுடன் பஷீரின் கழுத்தை அவன் பற்றினான்.
பாஞ்சியை நோக்கித் திரும்பி உறுமினான், “அமைதியாக இரு; சத்தம் போட முயற்சி பண்ணினேன்னா நான் உன்னக் கொன்னுடுவேன்.”
பாஞ்சி அலறவில்லை. அவள் மிரட்சியால் நடுங்கினாள்.
அவன் பஷீரின் உடல் அடங்கியதும்தான் கழுத்தை விட்டான்.
அவன் ஆழமாக மூச்சை விட்டுச் சொன்னான், “பாஞ்சி, விளக்க ஏத்து.”
பாஞ்சி விளக்கை ஏற்றியதும், பிக்கு தனது கைவேலையை திருப்தியுடன் பார்த்தான். அவன் ஒரே கையுடன் அவ்வளவு வலுவான ஒரு ஆளைக் கொன்றது குறித்து மிகவும் பெருமைப்பட்டான்.
அவன் பாஞ்சியை நோக்கித் திரும்பிக் கூறினான், “யாரு யாரக் கொன்னாங்கன்னு பாத்தியா? நான் திரும்பத் திரும்ப அவங்கிட்ட சொன்னேன்: மியாபாயி, நீ எல்லை தாண்டி போற, அத விட்டுடு. ஆனா மியாபாயி எரிச்சலடைந்து என்னோட தலைய உடைக்கறதா சொன்னான். அத நீ ஏன் செய்யக் கூடாது மியாபாயி, தயவுசெய்து என்னோட தலைய உடச்சுடு”. பிக்கு தலையைக் குனிந்து கொண்டு, இப்படியும் அப்படியும் ஆட்டினான். பஷீரின் உடலைப் பார்த்து திருப்தியுடன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான். திடீரெனக் கோபம் கொண்டு கூறினான், “அவனோட மகாராணிக்கு குரல் போயிடுச்சோ? ஏ, அறுவெறுப்பான பொண்ணே, எதாவது சொல்லு. இல்லேன்னா உன்னையும் நான் கொல்லணும்னு நினைக்கறியா?”
பாஞ்சி பயத்தில் நடுங்கி முணுமுணுத்தாள், “நீ இப்ப என்ன செய்யப்போற?”
”என்னப் பாரு” என்றான் பிக்கு. “அவனோட பணத்த எங்க வச்சிருக்கான்?”
பாஞ்சி பஷீர் ஒளித்து வைத்திருந்த புதையலைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடித்தாள். முதலில் அவள் தெரியாதது போல் நடித்தாள். ஆனால் பிக்கு பிறகு அவளது முடியைப் பிடித்து உலுக்கியதும் உண்மையைக் கக்கி விட்டாள்.
பஷீர் வாழ்நாள் முழுதும் சேர்த்து வைத்திருந்த பணம் பெரிய தொகையாக இருந்தது – சில்லறையாக நூறு ரூபாய்க்கு மேல் தேறும். முன்னால் பிக்கு ஆட்களைக் கொன்று பலமடங்கு சம்பாதித்திருந்தான். ஆனால் இந்தப் பணம் அவனைக் குறிப்பாக மகிழ்ச்சிப்படுத்தியது. ”உனக்கு வேண்டியத கட்டி எடுத்துக்கோ பாஞ்சி. இருட்டா இருக்கும்போதே கிளம்பிடுவோம். நவமி(ஒன்பதாவது நாள்) நிலா சீக்கிரம் எழுந்துடும். மிச்ச தூரத்த நிலா வெளிச்சத்துல கடந்துடலாம்.”
பாஞ்சி தன்னுடைய பொருட்களைக் கட்டினாள். பிறகு பிக்குவின் கையைப் பிடித்துக் கொண்டு சாலைக்கு நொண்டிக் கொண்டே சென்றாள். பிக்கு கிழக்கே பார்த்து விட்டுச் சொன்னான், “சீக்கிரமே நிலா வந்துடும்.”
”நாம எங்க போறோம்?” என்று கேட்டாள் பாஞ்சி.
”நகரத்துக்குப் போறோம். ஒரு படகைத் திருடுவோம். பகல்ல சிப்பத்திப்பூர் (ஸ்ரீபதிபூர்) சுத்தி இருக்கற காட்டுல மறைஞ்சுக்குவோம். அப்புறம் ராத்திரில நேரா நகரத்துக்குப் போயிடுவோம். வேகமா வா பாஞ்சி. இன்னும் கொஞ்சம் மைல் போகணும்.”
தன்னுடைய பலவீனமான கால்களை வைத்துக் கொண்டு பாஞ்சி நடக்கக் கஷ்டப்பட்டாள். ஒரு இடத்தில் பிக்கு திடீரென நின்றாள். “உன்னோட கால் வலிக்குதா பாஞ்சி?”
”ஆமா”
”உன்ன என்னோட முதுகுல தூக்கிட்டு போகவா?”
”உன்னால முடியுமா?”
”நிச்சயமா முடியும், வா”
பாஞ்சி பிக்குவின் கழுத்தைச் சுற்றிக் கைகளைப் போட்டு அவன் முதுகில் ஏறினாள். பிக்கு அவளைச் சுமந்து கொண்டு முன்னால் சாய்ந்து விரைவாக நடக்கத் தொடங்கினான். மெல்லிய வெளிச்சத்தில் சாலையின் இருபுறமும் இருந்த நெல்வயல்கள் அசைவின்றி இருந்தன. தூரத்து கிராமத்தின் மரங்களுக்குப் பின்னாலிருந்து நிலா எழுந்தது. கடவுளின் பூமியில் சாந்தமான அமைதி நிலவியது.
ஒருவேளை அந்த நிலாவுக்கும், பூமிக்கும் ஒரு வரலாறு இருக்கலாம். ஆனால் பிக்குவும், பாஞ்சியும் தமது மரபணுக்களில் ஒரு இருளின் பாரம்பரியத்தை சுமந்து சென்றனர், தமது குழந்தைகளின் எலும்புகளுக்குள் ஆழமாக விதைக்கப் போகும் மரபணு, புராதானமான ஒரு இருள், நாகரீகமான இந்த உலகின் வெளிச்சம் ஊடுறுவ முடியாத ஒரு இருள். அது ஒருபோதும் ஊடுறுவாது.
இந்தக் கதை மாணிக் பந்தோபாத்யாய் என்பவரால் 1937ஆம் ஆண்டு எழுதப்பட்டது. மாணிக் பந்தோபாத்யாய் (1908-1956) மறைந்து முக்கால் நூற்றாண்டுகளான பிறகும் இன்னும் நவீன வங்காள இலக்கியத்தின் நட்சத்திரமாகத் திகழ்கிறார். 1937இல் அஹிடக்னி சக்ரவர்த்தியால் வங்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது.
தமிழில்: கி.ரமேஷ்
Leave a Reply
View Comments