கே: ஹிந்தியை ஒரு மொழியாக பாட மொழியாக கற்றுக் கொடுக்கிறோம் என்று மத்திய அரசு சொல்லும் பொழுது அதற்கு ஒரு பெரிய எதிர்ப்பு… இது கல்விக்குள்ளே அரசியலைப் புகுத்துவது போன்று இல்லையா?
ப: அது எப்படி ஒரு மொழிக்கு மட்டும் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?

கே: தமிழ் படியுங்கள். இங்கிலீஷ் படியுங்கள். ஏதோ ஒரு நாட்டு மொழியை படிக்கிறீங்க.. ஹிந்தியையும் படிங்க…
ப: ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்று நான் கேட்கவே இல்லையே… நீங்கள்தான் சொல்கிறீர்கள். உயர்கல்விக்கு வர வேண்டும் என்றால் ஆங்கிலத்தில் படிக்க வேண்டும் என்று சொல்லி ஆங்கிலத்தை ஒரு அறிவு சார்ந்த விஷயத்தோட தொடர்புபடுத்துவதே அரசுதான்.

கே; ஆங்கிலம் படித்தால் வெளிநாடுகளுக்கு போக முடியுது.
ப: ஆங்கிலம் படித்தால் பிரான்ஸுக்குப் போக முடியாது. ஜெர்மனிக்கு போக முடியாது நீங்க ஜெர்மனிக்கு போக வேண்டுமென்றால் உங்களுக்கு ஜெர்மன் மொழி தெரிய வேண்டும். அங்கே போய் நீங்கள் பிஎச்டி பண்ண வேண்டுமென்றால் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.

பிரான்ஸுலயும் அப்படித்தான். ஏன் இங்கிலாந்துக்குள்ளே இருக்கிற அயர்லாந்துக்கோ, ஸ்காட்லாந்துக்கோ போக வேண்டுமென்றால் ஸ்காட் மொழி, ஐரிஷ் மொழி இவற்றைத் தெரிந்து கொண்ட பிறகுதான் போக முடியும். இங்கிலாந்திற்குப் போக வேண்டுமென்றால் அந்த போனடிக்ஸ் தெரிய வேண்டும். அதற்குண்டான தனியான பயிற்சி, அந்த டெஸ்டில் பாஸ் பண்ணினால்தான் அங்கே போய் படிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே இப்படி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

கே: இந்தியா முழுக்க மூன்று மொழி. ஹிந்தி படிக்கிறவர்களும் வேறு இரண்டு மொழி படித்துத்தான் ஆக வேண்டும். அப்படி இருக்கும் பொழுது தமிழ்நாடு மட்டும் இதை எதிர்க்க வேண்டுமென்றால், அதற்கு என்ன காரணம்?

ப: தமிழ்நாட்டில் இருந்து ஒரு குரல் வந்தது. பிற மாநிலங்களில் இருந்து அந்தக் குரல் வரவில்லை என்றால் உடனே இது தமிழ்நாட்டுப் பிரச்சனை என்று பார்க்க முடியாது. நாம் கேட்பது அருணாசலப்பிரதேசத்தில் இருக்கக்கூடிய, திரிபுராவில் இருக்கக்கூடிய, மேகாலயா, மணிப்பூரில் இருக்கக்கூடிய, நாகாலாந்தில் இருக்கக்கூடிய அந்த மக்களுடைய தாய்மொழியைக் காக்கின்ற போராட்டத்தைப் பற்றி நாங்கள் பேசுகிறோம்.

இந்தியாவில் இருக்கக்கூடிய இந்திய மொழிகள் அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று சொன்னால், அந்த மொழிகள் போய் விடாதா? ஒரு மொழி கற்பித்தலுக்கு உண்டான மொழி என்று நீங்கள் சொல்லவில்லை என்றால் அந்த மொழி எப்படி நிற்கும்? பயன்பாட்டில் இல்லாமல் போய் விடுமே. அப்படி பயன்பாட்டில் இல்லாமல் போய் விட்டால், அந்த மொழி அழிந்து போய் விடுமே. எனவே இந்தியாவில் இருக்கிற அனைத்து மொழிகளுக்கும் சமமான கற்றல் வாய்ப்பைக் கொடுங்கள் என்று சொல்கிறோம்.

கே: பிற மொழியைத் தெரிந்து கொள்வதால் என் தாய்மொழி எப்படி பாதிக்கப்படும்?
ப: தேவையையொட்டி ஒரு மொழியை யார் வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமென்றாலும் படித்துக் கொள்ளலாம். அதில் தப்பே கிடையாது. மூன்று வயதில் தேவை இருந்தால் ஒரு மொழி படியுங்கள். ஐந்து வயதில் தேவையிருந்தால் படியுங்கள். பத்து வயதில் தேவையிருந்தால் படியுங்கள். தேவையை ஒட்டி நானாகவே படிப்பது வேறு. இந்த மொழியைப் படி என்று கட்டாயப்படுத்துவது வேறு.

எங்கே கட்டாயப்படுத்தலாம் என்றால் தாய்மொழியிலே கல்வி என்பதைக் கட்டாயப்படுத்த வேண்டும். அதனால்தான் இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 350Bயில், ஒரு மாநிலத்தில் சிறுபான்மை மொழி பேசக்கூடிய மக்கள் இருந்தால் அவர்கள் மொழி தான் பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் சிறுபான்மை மொழி பேசக்கூடிய மக்களுக்கே அவர்கள் மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று சொன்னால், பெரும்பான்மை மக்கள் எந்த மொழியில் பயில வேண்டும்?

கே: அப்படி என்றால் நீங்கள் இரு மொழிக் கொள்கையும் தப்பு, மும்மொழிக் கொள்கையும் தப்பு என்கிறீர்களா?
ப: தாய்மொழி வழியிலே கல்வியைக் கொடுத்து விட்டு, குழந்தைக்குத் தேவைப்படக்கூடிய அல்லது குழந்தையின் சூழலில் இருக்கின்ற எத்தனை மொழியை வேண்டுமென்றாலும் கற்கின்ற வாய்ப்பை அந்தக் குழந்தைக்கு நீங்கள் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த மொழியைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது. curriculumல் இந்த மொழியைப் படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தக் கூடாது. 1920இல் சென்னை மாகாணத்தில் ஒரு சட்டம் இயற்றினார்கள்.

அதற்கு 1924இல் விதிகளை அமைத்தார்கள். அந்தச் சட்டத்தின் விதிகளைப் பார்த்தால் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் மட்டுமே பயிற்று மொழி. தாய்மொழி மட்டுமே. தெலுங்குகாரர்கள் என்றால் தெலுங்கு. தமிழ்காரன் என்றால் தமிழ். தாய்மொழி மட்டுமே பயிற்று மொழி.. ஆறாம் வகுப்பிற்குப் பிறகு ஆங்கிலம் என்பது ஒரு விருப்பப்பாடம். எப்போது என்று கேட்டால், பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டத்திலே பிரிட்டிஷ்காரர்களிடம் வேலை செய்ய வேண்டுமென்றால், இங்கிலீஷ் தெரியாமல் வேலை செய்ய முடியுமா என்ற கேள்வியை யாரும் அப்போது எழுப்பவில்லை.

கே: இருமொழிக் கொள்கையை வலியுறுத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், ஆங்கிலம் படித்ததால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளுக்கெல்லாம் போக முடிந்திருக்கிறது. ஐடி கம்பெனியில் வேலை செய்ய முடிகிறது. அதுவே தவறு என்றுதான் நீங்கள் சொல்ல வருகிறீர்களா?
தன்னுடைய தாய் மொழியில் படிக்க வேண்டும் என்று நடந்த போராட்டத்தில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்ட அந்த தினத்தைத் தான் நாம் உலக தாய்மொழி தினம் என்று சொல்லி உலகம் முழுக்க அனுசரித்துக் கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டில் எழுந்த போராட்டம்கூட அது தாய்மொழி தமிழுக்காக எழுந்த போராட்டம்.

எனவே பின்னால் வந்த அதனுடைய பரிணாமங்கள் எப்படி வேண்டுமென்றாலும் இருந்திருக்கலாம். இன்றைக்கு நாம் வைக்கக்கூடிய வாதம் என்னவென்றால், பயிற்றுமொழி தாய்மொழியாக இருக்க வேண்டும். கூட இன்னுமொரு மொழி, அது ஆங்கிலத்தை கற்பதனால் உடனடியாக சந்தையில் எனக்கு வேலை கிடைக்கும்..

சந்தையின் தேவைக்காக நான் ஒரு மொழி படிக்கிறேன் என்பது போன்ற ஒரு சூழல் இருந்தால் இன்னொரு மொழியை அவர்கள் படித்துக் கொண்டு போகட்டும். ஆனால் மூன்றாவது ஒரு மொழியை கட்டாயப்படுத்தி திணிக்காதீர்கள் என்றுதான் சொல்கிறோம். அதுவும் குறிப்பாக ஒரு மொழியை மட்டுமே நீங்கள் படிக்க வேண்டும் என்று சொல்வதை நாங்கள் திணிப்பு என்பதாக மட்டுமே நாங்கள் பார்க்கிறோம்.

கே: கல்விக் கொள்கையைத்தான் ஒரு பிரச்சனையாக எல்லோரும் சொல்கிறார்கள். இதுதான் அந்த வரைவு அறிக்கையில் வந்திருக்கிற ஒரு பகுதி. ஒட்டு மொத்தத்தில் அந்த வரைவு அறிக்கை எப்படி இருக்கிறது?
ப: இன்றைக்குகூட இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலே அட்டவணை ஏழில் மிகத் தெளிவாக மாநில மத்திய அரசினுடைய பங்களிப்பு பற்றிச் சொல்லும்போது பல்கலைக்கழகத்தை உருவாக்குதல் ஒழுங்குபடுத்துதல், கலைத்தல் என்ற உரிமை மாநில அரசுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மத்திய அரசிற்கு இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வரைக்கும் அரசியலமைப்புச் சட்டம் அப்படித்தான் இருக்கின்றது.

இந்த புதிய கல்வி கொள்கை என்ன செய்கிறது என்று கேட்டால், மாநில அரசாங்கத்திடம் இருக்கின்ற இந்த உரிமைகளை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது துணைவேந்தர் நியமனத்தில் இருந்து, பேராசிரியர்கள் நியமனம் வரைக்கும் அனைத்திந்திய அளவில் ஒரு ரிஜிஸ்டர் மெயிண்டெய்ன் பண்றதுக்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஒரு நேசனல் கமிசன் பற்றி பேசுகிறார்கள்.

இன்னும் நாம் அந்த வரைவைப் படிக்க வேண்டியிருக்கிறது. அதை விவாதிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பிரதமர் தலைமையில் என்று சொல்கிறார்கள். இப்போழுது செகண்டரி, ஹையர் செகண்டரி என்று வைத்திருக்கிறோம். 9லிருந்து 12 வரைக்கும் ஒரே பேட்டர்னா, ஒரு கோர்ஸா கொண்டு வருவது, எப்போது வேண்டுமென்றாலும் உங்கள் வசதிக்கேற்றவாறு நீங்கள் தேர்ச்சியடைந்து கொள்ளலாம் என்ற விஷயங்களெல்லாம் பேசி விட்டு, ஹையர் செகண்டரி முடித்த பிறகு, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியில் உங்களுடைய ஆப்டிட்யூடை டெஸ்ட் பண்ணிக் கொள்வது போல ஒரு டெஸ்ட் நீங்கள் எழுதிக் கொள்ள வேண்டும்.

அந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு நீங்கள் எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பார்கள். அந்தக் கல்லூரிகளுக்கு அந்த ஸ்கோரை அனுப்பி விடுவார்களாம். அந்தக் கல்லூரி அதை வைத்து உங்களுக்கு அட்மிசன் கொடுத்து விடுமாம்.

இப்போது நீங்கள் என்ன செய்ய வருகிறீர்கள் என்றால், தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் தங்களுடைய மாணவர்களுக்கான தகுதியைத் தீர்மானிக்க முடியாது. அவர்களுடைய மாணவர்களுக்கான தகுதியை யார் தீர்மானிக்கப் போகிறது என்றால் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி தீர்மானிக்கப் போகிறது. அப்படி என்றால் நீங்கள் நேரடியாக மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கிறீர்கள்.

இன்னும் அதிலே என்ன சொல்கிறார்கள் என்றால், ஒரு காலகட்டத்திலே யுனிவர்சிட்டி டிகிரி கொடுத்துக் கொண்டிருந்தது இல்லையா, இப்போது அப்படி இருக்கப் போவதில்லை. கல்லூரியே டிகிரி கொடுத்துக் கொள்ளலாம். இது போன்ற விஷயங்கள் எல்லாம் அதிலே இருக்கிறது. கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் இடையே ஓர் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. பல்கலைக்கழகம் என்பது ஆய்வுத் துறையோடு சேர்ந்தது. அது ஆய்வுக்கானதுதான். கல்லூரி என்பது படிப்புக்கானது.

இரண்டிற்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது இதற்கும் அதற்கும். அதனால்தான் இதை பல்கலைக்கழகம்னு வைத்திருக்கிறோம். அதை கல்லூரி என்று வைத்திருக்கிறோம். சந்தையில் ஆசிரியர், கல்லூரி, பல்கலைக்கழகம் எல்லாருக்குமே ஒரே பெயர்தான். Service Provider. இங்கே யுனிவர்சிட்டி ஸ்டூடென்ட், காலேஜ் ஸ்டூடென்ட் அப்படி எல்லாம் வித்தியாசம் கிடையாது. எல்லோரும் கன்ஸ்யூமர்தான். யுனிவர்சிட்டியில் ஹையர் எஜுகேசன் கிடையாது. அது வெறுமனே commodityதான். தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம் இது போன்ற ஆபத்துக்கள் இதற்குள்ளே நிறையவே இருக்கிறது.

கே: பள்ளிக் கல்வி மேம்படுமா?
ப: பள்ளிக் கல்வியை சிதைக்கிறார்கள் இப்பொழுது இருக்கிற பள்ளிக்கல்வியை வலுப்படுத்தி அடுத்த லெவலுக்கு கொண்டு போக வேண்டும். ஆனால் இப்போது பள்ளிக் கல்வியை சிதைக்கின்ற வேலையை அவர்கள் செய்கிறார்கள். சென்சஸ் எக்சாமினேசன் என்று சொல்கிறார்கள். அது என்ன சென்சஸ் எக்சாமினேசன் என்பதை நாம் இன்னும் ஆழமாக பார்க்க வேண்டிய அவசியமிருக்கிறது.

continuous and comprehensive evaluation என்று சொன்னார்கள். அதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. அதாவது ஒரு மாணவர் ஒவ்வொரு நாளும் என்ன திறன்களை வளர்த்துக் கொண்டே இருந்தார் என்பதைப் பார்ப்பது. நேற்று வரைக்கும் அவர் புத்தகத்தையே தொடமாட்டார்.

ஆனால் இன்றைக்கு அந்தக் குழந்தை புத்தகத்தை கையில் எடுக்கிறது. அப்படியென்றால் ஒரு படி முன்னேற்றம் ஒரு குழந்தை வேகமாக முன்னேறி விடும், ஒரு குழந்தை தங்கி தங்கி முன்னேறும் அதற்குத் தகுந்தாற் போல வயதுக்குத் தகுந்தாற்போல் அந்த குழந்தைக்கு நாம் கற்றல் ஆர்வத்தை உண்டாக்கி வருவதே ஒரு பள்ளியினுடைய வேலை என்று சொன்னார்கள். ஆனால் இப்போழுது அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இன்புட் மெதடுக்குப் பதிலாக அவுட்புட் மெதட் என்று சொல்கிறார்கள்.

இன்புட் மெதட் என்பது, ஒரு பள்ளிக்கூடத்தை எடுத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கூடத்திலே லைப்ரரி இருக்கும். லைப்ரேரியன் இருப்பார். நூல்கள் இருக்கும். செய்தித்தாள் இருக்கும். எல்லாம் இருக்கும். ஆசிரியர் இருப்பார். ஒரு பள்ளிக்கூடத்திற்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து விடுகிறீர்கள். இது இன்புட். நீங்கள் தர வேண்டிய அனைத்தையும் கொடுத்து விட்டீர்கள். இப்போழுது இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், லேர்னிங் அவுட்கம்மை வைத்து தான் உங்களுக்கு வசதிகள் செய்து கொடுப்போம் என்கிறார்கள்.

அதாவது கற்றல் திறனுக்கேற்றவாறு… ஒரு குழந்தை மிக மெதுவாக கற்றால் என்னவாகும்…? எல்லோருக்கும் ஒரே நேரத்தில் கற்றல் திறன் வெளிப்பாடு வரும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? கற்றல் திறன் வெளிப்பாடு என்பது மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். மாவட்டத்திற்குள்ளே இருக்கின்ற கிரமத்திற்கு கிராமம் மாறுபடலாம். மாநிலத்திற்கு மாநிலம் மாறும். இது பண்பாடோடு சம்பந்தப்பட்டது. அந்த லெவலில் இருந்து தான் கற்றல் திறன் வெளிப்பாட்டை நீங்கள் பார்க்க வேண்டும்.

கற்றல் திறன் வெளிப்பாட்டிற்கு ஓர் இண்டர்நேசனல் பெஞ்ச் மார்க், ஒரு நேசனல் பெஞ்ச் மார்க் என்று வைப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? இந்த ஆவணத்திலே அவர்கள் பேசுகின்ற அந்த அவுட்புட் மெதட் என்பது, நிதி ஆயோக்கின் மூன்று வருட திட்டம், ஏழு வருட திட்டம், பதினைந்து வருட திட்டத்தைப் படித்தீர்கள் என்றால், அதிலே இருக்கின்ற சொல்லாடல் இதிலும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

கே: மத்திய அரசு கையில் எடுத்துக் கொள்வதால், நிதி நிறைய கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமா?
ப: தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும், அதுமாதிரி மகாராஷ்ட்ராவிலேயும் ஒரு சட்டம் இருக்கிறது. தனியார் பள்ளி கட்டணம் ஒழுங்குபடுத்துதல் சட்டம். அதன் கீழ் ஒரு குழு. அதுதான் பள்ளியின் கட்டணத்தைத் தீர்மானித்து கொடுக்கிறது. அதற்கு மேல கட்டணம் வசூல் பண்ணினால், அதற்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. விசாரிக்கும் அதிகாரம் அரசுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கையிலே கட்டணங்களை தனியார் பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.

அப்படியென்றால் பள்ளிகளை ஒழுங்குபடுத்தக்கூடிய அந்த உரிமையை மாநில அரசுகள் இழக்கின்றன. கல்வி என்பது வியாபாரம் ஆகிறது. தனியார் பள்ளிகள் எவ்வளவு வேண்டுமென்றாலும் கட்டணம் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்வது கட்டண உயர்வுக்குத்தான் வழிவகுக்கும். நான் இவ்வளவு செலவு செய்வேன் என்று அரசு சொல்லவேயில்லை.

இவ்வளவு பணத்தை நீங்கள் செலவு பண்ணுங்க, இவ்வளவு பள்ளிகள் தேவைப்படுது, கட்டமைப்பை உருவாக்குங்கள் அப்படி எல்லாம் இதில் சொல்லப்படவேயில்லை. மாறாக அவர்கள் சந்தையிடம் கொடுப்பதற்கு, எந்தப் பள்ளி பலவீனமான பள்ளி என்பதைக் கண்டு பிடியுங்கள்.

பலவீனமான பள்ளியை பலமான பள்ளியோடு இணைத்து விடுங்கள். இரண்டு பள்ளிகள் இருக்கின்றன. பலவீனமான பள்ளியைக் கொண்டு போய் பலமான பள்ளியோடு இணைக்கிறீர்கள் என்றால் ஒரு பள்ளியை மூடுகிறீர்கள் என்றுதான் அர்த்தம். இரண்டாவது பல அடுக்கு கல்வி முறை. பல அடுக்கு கல்விமுறை என்ன செய்கிறது என்று கேட்டால், சமூகத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்துகிறது.

பல அடுக்குகள் என்றால் வசதியே இல்லாதவர்களுக்கு ஒரு மாதிரி, கொஞ்சம் ஐநூறு ரூபாய் இருக்கிறது என்றால் அவனுக்குத் தகுந்த மாதிரி ஒரு பள்ளிக்கூடம். கொஞ்சம் வசதியுடன் 10 ஆயிரம் ரூபாய் இருந்தால் அதற்குத் தகுந்த மாதிரி பள்ளிக்கூடம். ஒரு லட்சம் கட்டினால் இன்னொரு மாதிரி பள்ளிக்கூடம். இதெல்லாம் மாற்றி ஒரு பொதுப் பள்ளி முறைமையை பற்றி அவர்கள் பேசவில்லை.

கே: விவாதத்திற்கு வழி செய்து கொடுத்து விட்டோம். இனி வந்து நீங்கள் கருத்து சொன்னீர்கள் என்றால் நாங்கள் ஜனநாயகப்பூர்வமாக இதை எடுத்துக் கொள்வோம் என்று அரசு சொல்கிறது. இப்போதுகூட இது வரைவுதான். பயப்படாதீர்கள் என்று சொல்கிறது. அதை நம்புகிறீர்களா?
ப: முதலில் என்னுடைய மொழியில் நீங்கள் அந்த வரைவை கொடுத்து இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து கேட்கிறீர்கள். குஜராத்திலிருந்து கேட்கிறீர்கள். மராத்தியில் இருந்து கேட்கிறீர்கள் என்றால் என்னுடைய மொழியில் நீங்கள் கொடுக்கவில்லை.

என்னுடைய மொழியில் கொடுக்காமல் என்னை கருத்து சொல்லச் சொல்கிறீர்கள். அதுவே ஒரு வன்முறை. இப்போது அதை யார் மொழி பெயர்ப்பார்கள்? நான் ஒவ்வொருவரிடமாக போய் இதை மொழி பெயர்த்துக் கொடுங்கள் என்று கேட்க வேண்டும். இல்லையென்றால் ஆங்கிலம் யாருக்குத் தெரியுமோ அவர்கள் மட்டும் கருத்து சொன்னால் போதும் என்பது ஒரு அராஜகமான செயல் இல்லையா? இதுவே ஜனநாயகத் தன்மையற்ற ஒரு அணுகுமுறை.

டிசம்பர் மாதம் 2018இல் அந்த குழு அறிக்கை அரசிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2018 டிசம்பர் மாதம் கொடுத்த அறிக்கையை ஏன் ஐந்தரை மாதமாக வெளியிடாமல் வைத்திருந்தீர்கள்? ஐந்தரை மாதம் வெளியிடாமல் இருந்து விட்டு, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி வெளியிட்டு ஜூன் 30க்குள் நீங்கள் கருத்து கேட்கிறீர்கள். முப்பது நாட்களுக்குள் அந்த 484 பக்கத்தை வாசிக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும். மொழி பெயர்க்க வேண்டும்.

அதற்குப் பிறகு நான் கருத்து சொல்ல வேண்டும் என்றால், முப்பது நாள் இடைவெளி என்பது நியாயமான இடைவெளியா? 2016இல் ஓர் ஆவணம் வெளியிட்டார்கள். அதன் மீது கடுமையான விவாதம் நடந்தது. அதன் மீது கடுமையான கருத்து சொல்லப்பட்டது. அதில் என்னவெல்லாம் இருந்ததோ, அதனுடைய விரிவாக்கம்தான் இந்த வரைவு. அதிலிருந்து அவர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை. அந்த எதிர்ப்புகளை அவர்கள் உள்வாங்கிக் கொள்ளவில்லை.

இதெல்லாம் தப்பு என்று… உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். சமஸ்கிருதத்தைப் பற்றி இவர்கள் பேசுகிறார்கள். என்ன சொல்கிறார்கள் என்றால் இந்திய மொழி வளர்ச்சிக்கு சமஸ்கிருதம் மிகப் பெரிய பங்களிப்பு செய்திருக்கிறது. இந்திய மொழி வளர்ச்சி… நான் கேட்கிறேன். தமிழ் தெலுங்கு கன்னடம் இவையெல்லாம் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை.

மற்ற மொழிகள் எல்லாம் இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தை, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று சொல்கிறார்கள். பல மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த மொழிகள் இந்தியாவில் பேசப்பட்டு வருகின்றன. அது எப்படி… இந்திய மொழி வளர்ச்சிக்கு சமஸ்கிருதம் எப்படி உதவியது? இது ஒரு மிகப்பெரிய கேள்வி. அடுத்து பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்கு சமஸ்கிருதம் உதவியிருக்கிறது என்கிறார்கள். இங்கே வெவ்வேறு பண்பாடு.

இந்தியாவிற்குப் பெயரே யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ். பல மாநிலங்களைக் கொண்டது. காரணம் பல பண்பாடுகள். தமிழ்ப் பண்பாட்டில் தோற்றத்தைப் பற்றிய தொன்மக் கதையே கிடையாது மனிதன் எப்படி தோன்றினான் என்கிற தொன்மக் கதை தமிழில் கிடையாது. ஆனால் வடக்கில் அந்த தொன்மக் கதை உண்டு. ஒருவருடைய ஒவ்வொரு நரம்புகளில் இருந்து ஒவ்வொரு நரம்பிலிருந்து ஒவ்வொரு பிரிவு மக்கள் தோன்றினார்கள். தலையில் இருந்து, புஜத்தில் இருந்து என்று தோற்றத்தைப் பற்றிய தொன்மக் கதைகள் வடக்கில் இருக்கிறது.

ஆனால் இங்கே இல்லை. பண்பாடே வேறுபடுகிறது. அப்படியென்றால் சமஸ்கிருதம் எப்படி பண்பாட்டு ஒருமைப்பாட்டுக்கு பயன்பட்டது என்று சொல்கிறீர்கள்? சமஸ்கிருதத்தை பண்பாட்டு அடையாளமாக, இந்திய பண்பாட்டு அடையாளமாக பார்க்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள்.

மற்ற மொழிகளை பிற செம்மொழிகள் என்கிற அடைமொழிக்குள்ளே கொண்டு வருகிறீர்கள். சமஸ்கிருதத்திற்கு தனி அந்தஸ்து கொடுத்து விட்டு, மற்றவற்றை பிற செம்மொழிகள் என்று சொல்கிறீர்கள். இதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே 2014இல் விமர்சனம் கூறப்பட்டது. இப்படிச் சொல்லக்கூடாது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14இன் படி அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துங்கள். The Right to Equality என்றால் அனைத்து மொழிகளையும் சமமாக நடத்த வேண்டும்.

அதற்கும் அது பொருந்தும் என்ற விவாதம் இருக்கிறது. அதையெல்லாம் உள் வாங்கிக் கொள்ளவில்லையே… அந்த ஆவணத்திலே என்ன இருந்ததோ, அதைத்தான் இந்த ஆவணத்திலேயும் சொல்ல அவர்கள் முயற்சி செய்கிறார்கள் என்கிற போது இதுவரை அவர்கள் ஜனநாயகத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை

கே: இப்படி நினைத்துக் கொள்லலாமா? நாம் வெளியிலே நிறைய பேசுகிறோம். ஆனால் திருத்தம் அனுப்பும் போது, நம்மை விட வடக்கில் இருப்பவர்கள் நிறைய அனுப்புகிறார்கள். அவர்கள் அவர்களுடைய கருத்துக்களை அதிகமாகச் சொல்கிறார்கள். நாம் அறிவுத் தளத்திலே இதைச் செய்வதற்கு திருத்தங்களை அனுப்புவதற்கு, அரசோட மோதுவதற்கு நாம் வந்து….
ப: 2016இல் லட்சக்கணக்கான திருத்தங்கள் தமிழ்நாட்டில் இருந்து போய் இருக்கிறது. சின்ன சின்ன குக்கிராமங்களில் போய் நான் பேசி இருக்கின்றேன். தமிழ்நாட்டிலே கண்ணுக்குத் தெரியாத, எனக்கு அறிமுகம் இல்லாத நபர்கள்… அவர்கள் அழைத்து நாங்கள் போய் பேசியிருக்கிறோம். ஊர்க்கூட்டங்கள் நடத்தி இருக்கிறோம். விவாதங்கள் நடத்தி இருக்கிறோம். பல ஊர்களிலிருந்து தீர்மானங்கள் போயிருக்கிறது. மிகப் பெரிய அளவில் representation கொடுத்திருக்கிறோம். தொடக்கத்திலிருந்தே கொடுத்திருக்கிறோம்.

2016இல் வெளியிட்ட உடனே முதலில் நாங்கள் கொடுத்ததற்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து எங்களுக்கு கடிதமே வந்திருக்கிறது. நீங்கள் சொன்னதை ஏற்றுக் கொண்டு பிற மொழிகளில் மொழி பெயர்த்து நாங்கள் வெளியிடுகிறோம் என்று சொல்லி ஒன்பது மொழிகளில் மொழி பெயர்ப்பு வெளியிட்டார்கள். கால அவகாசத்தை நீட்டினார்கள். ஜூலை 31 என்று கொடுத்திருந்தார்கள்.

அந்த கால அவகாசத்தை நீட்டி செப்டம்பர் மாதம் வரைக்கும் கருத்து சொல்லலாம் என்று கால அவகாசம் கொடுத்தார்கள். தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படியான representation officialஆகப் போய் இருக்கிறது. கருத்தரங்கங்கள் மிக அதிக அளவில் நடந்திருக்கிறது. ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கிறது. கலெக்டர் மூலமாக மனுக்கள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. எனவே மனுக்கள் முறைப்படி போகவில்லை அப்படி என்று சொல்வது எந்த வகையிலும் நியாயம் இல்லை.

எல்லா வகையிலும் போய் இருக்கிறது. 2016 நவம்பர் 17 தமிழ்நாட்டினுடைய முழுமுயற்சியின் காரணமாக டெல்லியிலே மிகப் பிரம்மாண்டமான பேரணி நடந்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது. டெல்லி கல்வி அமைச்சர் உட்பட அனைத்து கட்சியின் தலைவர்களும் அந்த ஆர்ப்பாட்டத்தில் வந்து பங்கேற்று இருந்திருக்கிறார்கள்.

கே: இதைத் தடுக்க வேண்டுமென்றால் சாதாரண குடிமக்கள் என்ன செய்ய வேண்டும்?
ப: கிராமசபை கூட்டங்களைக் கூட்டச் சொல்லலாம். தேவையையொட்டி.. இப்போது குடியரசு தினத்தன்றைக்கு, மகாத்மா காந்தி பிறந்த நாளன்றைக்கு கிராமசபை கூடுகிறது. சுதந்திர தினம் அன்றைக்கு கூடுகிறது. அதுபோல, கல்வியைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கிராமசபை கூட்டங்களைக் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றலாம்.

மாணவர் அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் அமைப்புரீதியாக… பொதுமக்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்ல முடியாது. தமிழ்நாடு அரசுக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது. தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் உள்ள பேராசிரியர்கள், தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர் அமைப்புகள்… பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் அமைப்புகள்., பள்ளி ஆசிரியர் அமைப்புகள் இவர்களைக் கூப்பிட்டு அவர்களது கருத்துக்களைக் கேட்க வேண்டும். அழைப்பு கொடுத்து கேட்க வேண்டும்.

இப்படி மக்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டு, அதை தொகுத்து தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் கொடுக்க வேண்டும். இதற்கெல்லாம் கால அவகாசம் வேண்டுமென்றால், கால அவகாசம் வேண்டுமென்று தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கால அவகாசத்தைக் கோரிப் பெற்று தனது கருத்தைத் தெரியப்படுத்த வேண்டும். 62ஆவது கேட் மீட்டிங் நடந்தது.

அந்த கேட் மீட்டிங்கில் அப்போது செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள் அப்போது மாஃபா பண்டியராஜன் அவர்கள் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்தார். அவர் போய் பழைய கல்விக் கொள்கையிலே இதற்கு அடிப்படை ஆவணமாகப் பார்க்கப்படுகிற Some Inputs for Draft national Education Policyஇல் பல விஷயங்களை எதிர்த்திருக்கிறார்கள்.

இதெல்லாம் தமிழ்நாடு அரசால் ஏற்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்கள். எனவே இவர்கள் அன்று செல்வி ஜெயலலிதா இருக்கும் போது சொன்ன செய்திகள் இருக்கின்றன. எதிர்கட்சிகள் இருக்கின்றன. எதிர்கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

சட்டமன்றத்திலே சிறப்பான விவாதத்தை நடத்த வேண்டும். இப்படி பல வகையில் இந்திய அரசிற்கு இந்தக் கருத்துகளைச் சொல்லலாம். நாம் விரும்பக் கூடியது என்பது அருகமைப் பள்ளி அமைப்பில் தாய்மொழி வழியில் பொதுப்பள்ளி முறைமை மூலமாக கல்வி வழங்கப்பட வேண்டும். 1968 ஆவணத்தை, கல்விக் கொள்கையை, மும்மொழிக் கொள்கையைப் பற்றிப் பேசும் போது இந்த அரசு பேசுகிறது.

அதே 1968 ஆவணத்தில் Common Schoolஐப் பற்றி பேசப்பட்டிருக்கிறது. பொதுப்பள்ளி முறைமை பற்றி பேசப்பட்டிருக்கிறது. அதைப் பற்றி ஏன் இவர்கள் பேச மாட்டேன் என்கிறார்கள்? எனவே அருகமைப் பள்ளி அமைப்பில் தாய்மொழி வழியில் பொதுப்பள்ளி முறைமை மூலமாக கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் மெய்யான கல்வி உரிமையாக இருக்க முடியும். அந்தக் கல்வி உரிமைக்கான ஒரு ஒட்டுமொத்த குரலாக தமிழ்ச் சமூகம் எழ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *