‘கோல்டு கேஸ்’ (Cold Case) – மானுட முயற்சிகளும் அமானுட நிகழ்வுகளும்

Prithviraj Sukumaran's Cold Case Movie Review by Era. Ramanan in Tamil. Book Day And Bharathi TV are Branch of Bharathi Puthakalayam.ஜூன் 30 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் மலையாள திரைப்படம். தலைப்பில் இருக்கும் கோல்டு என்கிற ஆங்கில வார்த்தைக்கு ஊகிக்க முடியாத வழக்கு என்றும் கொடூரமான வழக்கு என்றும் இரு விதமாக பொருள் கொள்ளலாம். ஒளிப்பதிவாளர் தனு பாலக் இயக்கியுள்ள முதல் படம். ஸ்ரீநாத் வி நாத் என்பவர் கதை வசனம் எழுதியுள்ளார். பிரிதிவிராஜ், அருவி படத்தின் நாயகி அதிதி பாலன், அனில் நெடுமங்காட், லக்ஷ்மி பிரியா சந்திரமவுலி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒரு நீர்நிலையிலிருந்து கிடைக்கும் மண்டையோடு யாருடையது, அவர் கொலை செய்யப்பட்டாரா, யார் கொலை செய்தார்கள் என்பதுதான் கதை. மண்டையோட்டில் ஒரு பல் மட்டும் இருக்கிறது; அது செயற்கையாகப் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் காவல் துறைக்குக் கிடைக்கும் முதல் தடயம். அதிலிருந்து பிடித்து செயற்கைப் பல் பொருத்தியவர்களை தொடர்பு கொள்வது, காணாமல் போனவர்கள் பட்டியல் எடுப்பது, இன்னொரு ஊரில் கிடைத்த ஒரு கையின் டிஎன்ஏ, அதில் சிக்கியிருந்த தலை மயிர் என அறிவியலும் தடயவியலும் காவல்துறையின் முறையான துப்பு துலக்குதல் தொடர்கிறது. ஆனால் இன்னொரு புறம் தொலைக்காட்சியில் சுவாரசியமான நிஜ சம்பவங்களை தயாரிக்கும் மேதா என்ற பெண்ணின் வீட்டில் சில அமானுஷிய சம்பவங்கள் நடைபெறுகின்றன. அதைக் கண்டுபிடிக்க அவர் ஆவிகளுடன் பேசும் ஒருவரின் உதவியுடன் தன் வீட்டில் உலவும் ஆவி மரியா என்பவருடையது எனத் தெரிந்து கொள்கிறார். அந்தப் பெண் குறித்து துப்பு துலக்குகிறார். காவல்துறையினரின் நடவடிக்கைகளும் இந்தப் பெண்ணின் முயற்சிகளும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. உண்மைக் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படுகிறது.

படத்தின் பலம் இரண்டு தரப்பிலும் நடக்கும் நிகழ்வுகள் விறுவிறுப்பாக காட்டப்பட்டு பார்வையாளர்களின் ஆர்வத்தை இறுதி வரை தக்க வைப்பதே. முதல் சிறிது நேரத்திற்கு காவல்துறை நடவடிக்கைகளையும் மேதாவின் வீட்டு நடப்புகளையும் ஐந்து ஐந்து நிமிடங்களுக்கு மாறி மாறி காட்டுவது சற்று அலுப்பை தருகிறது. போகப் போக இது மாறி ஓட்டம் சீராகிறது.

Cold Case Teaser: Prithviraj Sukumaran's Dashing Cop Is Solving a Supernatural Case in This Thriller Dropping on Amazon Prime Video

மண்டை ஓடு கிடைத்த இடம் மந்திரியின் மகன் அடிக்கடி வரும் இடம் என்பதால் எதிர்கட்சிகள் அவர் மீது சந்தேகத்தைக் கிளப்ப, அவர் வலுவான காவல் குழுவிடம் விசாரணை ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்க, மலையாளப் படங்களில் அரசியல் அதிகம் உறுத்தாமல் இழையோடுவதை இதிலும் பார்க்க முடிகிறது. விவாகரத்து என்பது கேரள நடுத்தர குடும்பங்களில் ஒரு பிரச்சினையாக மாறுகிறது என்பதை பல படங்களில் பார்க்க முடிகிறது. இந்தப் படத்திலும் அது ஒரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது. தாய் சொல்வதை எந்த விமர்சனமும் இல்லாமல் கேட்பதால் கணவனைப் பிரியும் கதாநாயகி ஒருபுறம்; கடுமையான பணக் கஷ்டத்தில் தனக்கு உதவிய மனைவியை விட்டு முதலாளியின் மகள் பக்கம் சாயும் கணவனை விவாகரத்து செய்யும் இன்னொரு பெண் மரியா. இவர்கள் இருவரும் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள். ஆனால் மேதா தனியாக வாழ்வதை தைரியமாக எதிர்கொள்கிறாள். மரியாவுக்கு பெற்றோர்களும் இல்லாததால் துயரமான நிலை. முரண்பட்ட சிற்றன்னையிடமே பணத்தை கொடுத்து தஞ்சம் அடையலாம் என்று நினைக்கிறாள்.

சமூகத்தில் மதிப்பான பணியில் இருக்கும் ஒருவர் திடீரென கொலை செய்வாரா? சரி ஒரு நெருக்கடியான நிலைமையில் செய்துவிடுகிறார் என்றாலும் அதுவும் கொடூரமான முறையில் செய்வாரா என்பது கதையின் பலவீனமான அம்சமாகத் தெரிகிறது. கேரள மாநிலம் பகுத்தறிவு, கல்வி, சுகாதாரம் என்று முன்னணியில் இருந்தாலும் ஒரு பகுதி மக்கள் பேய், பிசாசு,மாந்திரீகம் போன்றவற்றில் நம்பிக்கை வைத்துள்ளனர். அதற்கு இந்தப் படமும் இது போன்ற வேறு சில படங்களும் சான்றுகளாக உள்ளன.

ஜோல்னாப்பையை மாட்டிக்கொண்டு தண்ணி அடிக்கும், ஆன்மீக யாத்திரை செய்யும் ஒருவர், பகுதியில் நடக்கும் அந்தரங்க விசயங்களை அறிந்து வைத்திருக்கும் டீக்கடைக்காரரும் புரோக்கரும், தன் வீட்டில் வசித்த மரியாவைப் பற்றி அதிகம் சொல்ல விரும்பாத கணவனை மீறி சில விவரங்களை கூறிவிடும் மனைவி என சுவாரசியமான எதார்த்தமான பாத்திரங்களை உலவ விட்டிருக்கும் இயக்குனரை பாராட்டலாம். முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் பிரிதிராஜும் அதிதி பாலனும் சிறப்பாக நடித்துள்ளார்கள். கேரளாவின் இயற்கை அழகை அவ்வப்பொழுது காட்டும் நல்ல ஒளிப்பதிவு. துப்பறியும் கதை வகைமையில் மானுட இயல்புகளையும் கலந்து காட்டியிருக்கிறார் இயக்குனர்.

இரா. இரமணன்இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.