கோவிட்-19 பரவுவதைத் தடுத்து நிறுத்த உதவுகின்ற, டிஜிட்டல் கோவிட் -19 தொடர்பு தடமறிதல் முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ள ‘ஆரோக்ய சேது’ செயலியைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்படுவதை எதிர்த்து, 40க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.

மிக சமீபத்தில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் உத்தரவிற்குப் பிறகு, ஆரோக்ய சேது மொபைல் செயலியைக் கட்டாயமாகப் பயன்படுத்துவதன் மூலமாக தொழிலாளர்களின் தனியுரிமை மீறப்படுவது குறித்து தீவிர அக்கறையை வெளிப்படுத்துகிற வகையில், மே 1 அன்று அனுப்பப்பட்ட இந்த மனு, பின்னர் மே 2 அன்று முகப்பு கடிதத்துடன் அனுப்பப்பட்டது.

ஆரோக்ய சேது செயலி தற்போது சட்டப்பூர்வமாக இருக்கவில்லை. அதன் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் நோக்க வரம்பு, தரவு குறைத்தல், சேமிப்பு வரம்பு, துல்லியம், நேர்மை, ரகசியத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயலாக்குதலில் நேர்மை போன்ற தரவு பாதுகாப்புக் கொள்கைகளுக்கு இணக்கமாக இருக்கவில்லை என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டரீதியிலான உத்தரவாதத்துடன் குறிப்பிட்ட காலக்கெடுவைக் குறிப்பிட்டு விதிமுறை எதுவும் இல்லாததால், இந்த செயலி மூலம் சேகரிக்கபப்டும் மிகமுக்கியமான தனிப்பட்ட தரவுகள் கோவிட்-19 முடிந்த பிறகும் விவரக்குறிப்புக்களைத் தயாரிப்பதற்கும், பரந்த அளவில் கண்காணிப்பிற்கும் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளவர்களில் அம்னஸ்டி இந்தியா, பியூசிஎல், ஆசியா தலித் உரிமைகள் மன்றம், அகில இந்திய மத்திய தொழிற்சங்க கவுன்சில், பி.யு.டி.ஆர், இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம், எம்.கே.எஸ்.எஸ் மற்றும் இந்திய போக்குவரத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு ஆகியவை அடங்கும். ஓய்வுபெற்ற அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சிவில் சமூகத் தலைவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட முக்கிய நபர்கள் இந்த மனுவை வழிமொழிந்துள்ளனர்.

ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள இந்த மனுவுக்கு முகப்பு கடிதம் ஒன்றை, இணைய சுதந்திரத்திற்கான  அறக்கட்டளை தனியாக மே 2 அன்று அனுப்பி வைத்திருக்கிறது. அனைத்து அலுவலக ஊழியர்களும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அனைவரும் இந்த செயலியைக் கட்டாயப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை அதில் வைக்கப்பட்டுள்ளது.

Govt to procure e-monitoring wristbands to integrate with Aarogya ...

ஆரோக்ய சேது கட்டாயமாகத் திணிக்கப்படுவதால் ஏற்படும் தீங்குகளை முதல் கடிதம் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது என்று  இந்த முகப்பு கடிதத்தின் மூலம் ஐ.எஃப்.எஃப் உறுதி செய்கிறது. ’ஸ்மார்ட்போன் செயலியை கட்டாயமாக நிறுவுவதற்கு மாறாக, இந்த நேரத்தில் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகளில்  அரசியலமைப்பு  சார்ந்த கடமை மற்றும் குறிக்கோள்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உத்தரவிற்கு இணங்காமல் இருப்பது குற்றவியல் சார்ந்த தண்டனையை வழங்குவது இதில் இன்னும் மோசமான விஷயமாக இருக்கிறது.

இதன் மூலம், வாழ்வாதாரத்திற்கு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஊக்கம் மற்றும் நம்பிக்கை என்ற முன்மாதிரியை ஒதுக்கி விட்டு, வற்புறுத்தல் மற்றும் நிர்ப்பந்தம் ஆகியவற்றைக் கொண்டு வருகின்ற மாற்றத்தையே இது குறிப்பதாக இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என்று அந்த முகப்புக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டு கடிதங்களையும் முழுமையாக கீழே படிக்கலாம்.

1 மே 2020

பொருள்: கோவிட்-19 பரவலின் போது தொழிலாளர்களின் தனியுரிமை, தன்னாட்சி மற்றும் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கான  வேண்டுகோள்

அன்புள்ள ஐயா,

ஆரோக்ய சேது மொபைல் செயலியின் கட்டாய பயன்பாட்டின் மூலம் தொழிலாளர்களின் தனியுரிமை மீறப்படுவது குறித்து தீவிரமான கவலையை வெளிப்படுத்துகின்ற வகையில், இங்கே  கையொப்பமிட்டுள்ள அமைப்புகள், கூட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உங்களுக்கு இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். கோவிட்-19 நெருக்கடியின் தீவிரம் நாட்டை இறுகப் பிடித்திருப்பதை ஏற்றுக் கொள்கின்ற அதே வேளையில், அத்தியாவசியப் பணிகளில் இருக்கின்ற முன்னணி தொழிலாளர்களின் தனியுரிமையும் கண்ணியமும் பாதுகாக்கப்படுவது இதுபோன்ற பொது சுகாதார அவசர காலங்களில் உறுதி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகின்றோம்.

தற்போதைய கோவிட்-19 நெருக்கடியின் போது, ​​சுகாதார கண்காணிப்புக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்ட அரசாங்கம்,  2020 ஏப்ரல் 02 அன்று சுயமதிப்பீடு மற்றும் தொடர்பு தடமறிதலுக்காக ஆரோக்ய சேது என்ற மொபைல் செயலிபை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் ஆரோக்ய சேது செயலியின் பயன்பாடு முற்றிலும் தன்விருப்பத்துடன் செயல்படுத்தப்படுவதாக இருக்கும் என்றே அரசாங்கம் கூறியது.

பின்னர் விரைவிலேயே அனைத்து மத்திய ஆயுத காவல்துறையினர் மற்றும் பிரச்சார் பாரதியின் ஊழியர்களுக்கு அந்த செயலியைப் பதிவிறக்குவது கட்டாயமாக்கப்பட்டது. இருப்பினும், தரவு பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் அலுவலக வளாகங்கள், செயல்பாட்டுப் பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் ஆரோக்ய சேது செயலியைப் பயன்படுத்த வேண்டாம் என்று ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்தித்தாள்களில் வெளியாகியிருக்கின்ற அறிக்கைகளிலிருந்து தெரிய வருகிறது.

அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது, ஜொமட்டோ மற்றும் அர்பன் கம்பெனி (முன்னர் அர்பன் கிளாப் என்று அழைக்கப்பட்ட) போன்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்களும் இப்போது ஆரோக்ய சேது செயலியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுகாதாரம் மற்றும் இருப்பிடம் குறித்த தரவு போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களை அரசாங்கத்துடன், போதுமான தனியுரிமை பாதுகாப்புகள் இல்லாமல் அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். ​​

ஆரோக்ய சேது செயலி தற்போது சட்டப்பூர்வமானதாக இருக்கவில்லை. அதன் தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள் நோக்க வரம்பு, தரவு குறைத்தல், சேமிப்பு வரம்பு, துல்லியம், நேர்மை, ரகசியத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயலாக்குதலில் நேர்மை போன்ற தரவு பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு அவற்றுடன் இணக்கமாக இருக்கவில்லை.

இதுவரையிலும், தங்களுடைய விநியோகம் செய்கின்ற தொழிலாளர்கள் ஆரோக்ய சேதுவைப் பயன்படுத்த வேண்டும் என்று சில நிறுவனங்கள், குறிப்பாக ஜொமட்டோ மற்றும் அர்பன் நிறுவனம் போன்றவை கட்டாயப்படுத்தியுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, பிற உணவு விநியோக சேவைகள், ஈ-காமர்ஸ் இயங்குதளங்கள் மற்றும் ரைடு ஹெயிலிங் செயலிகள் மீண்டும் செயல்படத் தொடங்குவதால், அவர்களும் தங்கள் தொழிலாளர்களுக்கு ஆரோக்ய சேதுவைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குவதற்கான முடிவை  எடுக்கலாம். எதிர்காலத்தில், ஆரோக்ய சேதுவின் கட்டாயப் பயன்பாடு கிக் பொருளாதாரத்திற்கு அப்பாலும் நீண்டு, தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள் போன்ற பாரம்பரிய பொருளாதாரத்திற்குள் இருக்கின்ற தொழிலாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் குறைமதிப்பிற்கு  உட்படுத்தி விடக்கூடும்.

வழக்கமான வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக விநியோகப் பணியாளர்கள் பலரும், ஓட்டுநர்களும்  தங்கள் நிறுவனங்களுடன் இருப்பிடத் தரவைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​  ஆரோக்ய சேது செயலியில், இரண்டு காரணங்களுக்காக தனியுரிமை அபாயங்கள் மிக அதிகமாக இருக்கின்றன.  முதலில், ஆரோக்ய சேது பயன்பாடு இருப்பிடத் தரவுகள் மட்டுமல்லாது, கூடுதலாக முக்கியமான சுகாதாரத் தரவையும் சேகரிக்கும்.

இரண்டாவதாக, இருப்பிடத் தரவு முன்னர் அவர்களின் முதலாளியுடன் மட்டுமே பகிரப்பட்டிருந்தாலும், இப்போது ஆரோக்ய சேது செயலியின் மூலம் அரசு நிறுவனங்களுக்கும் அந்த தரவு கிடைக்கும். எனவே, கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்களின் தனியுரிமை மீதான ஊடுருவல் சாதாரண பணியிடக் கண்காணிப்பைக் காட்டிலும் கணிசமாக அதிகரிக்கும். ஏற்கனவே தொழிலாளர்களின் இருப்பிடம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான தொடர்புகள் பற்றிய தரவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுவனங்களால் அணுக முடியும். ஆரோக்ய சேது செயலி இல்லாமல் கூட தொடர்பு தடமறிதல் சாத்தியமானதாகும்.

Aarogya Setu App: What is it, its benefits, how to download and more

ஆரோக்ய சேதுவைப் பயன்படுத்துவது குறித்து தனியார் நிறுவனங்களை மத்திய அரசு கட்டாயப்படுத்தவில்லை என்பதையும், அது ஒரு தன்விருப்ப நடவடிக்கையாகவே உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இருப்பினும், இது போன்ற நிறுவனங்களால் செயலியைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. 2020 ஏப்ரல் 19 அன்று எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையில், ‘வரைவு இ-காம் எஸ்ஓபி: விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடிப்பதற்கு சிஓஓ பொறுப்பானவர்கள், ஆரோக்ய சேது செயலியை ஊழியர்கள் பதிவிறக்க வேண்டும்’ என்ற தலைப்பில் வெளியான செய்தி, மின் வணிகத்திற்கான வரைவு தரநிலை இயக்க நடைமுறையை அரசாங்கம் தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளதாகக் கூறுகிறது.

அந்த வரைவு அனைத்து தொழிலாளர்களும் ஆரோக்ய சேதுவைப் பயன்படுத்துவதைக் கட்டாயப்படுத்துகிறது. வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கத் தவறும் போது, நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியை இந்த வரைவு தரநிலை இயக்க நடைமுறை பொறுப்பாக்குகிறது. ஆகையால், ஆரோக்ய சேது செயலியைக் கட்டாயப்படுத்துவது தனியார் நிறுவனங்களின் மூலம் பொறுப்பைக் குறைக்கும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.  இந்த செயலியைக் கட்டாயப்படுத்தப் போவதில்லை என்று குடிமக்களுக்கு பகிரங்கமாக உறுதியளித்த பின்னர், செயலியைப் பயன்படுத்துவதை அரசாங்கம் இவ்வாறு மறைமுகமாகக் கட்டாயப்படுத்துகிறது.

கே.எஸ்.புட்டஸவாமி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா (2017 10 எஸ்.சி.சி 1). வழக்கின் முக்கிய தீர்ப்பில் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரவு பாதுகாப்புக் கொள்கைகளை ஆரோக்ய சேது செயலி பின்பற்றத் தவறியிருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. புட்டசாமி (தனியுரிமை) வழக்கில், தனியுரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்று நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

பெரிய தரவுகளுக்கான இந்தக் காலத்தில், தனிநபர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்தல் மற்றும் செயலாக்குதல் மூலம், அவர்களுடைய  வாழ்க்கை முறை, தேர்வுகள் மற்றும்  விருப்பங்கள் பற்றி ஏராளமானவற்றை வெளிப்படுத்த முடியும் என்று நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டிருந்தது. நியாயமான இலக்கை அரசாங்கம் அடைய விரும்பினால், சில சூழ்நிலைகளில், அத்தகைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தலாம் என்று நீதிமன்றம் ஒப்புக் கொண்டது. இருப்பினும், அத்தகைய சூழ்நிலைகளில் கூட, இந்த தொழில்நுட்பங்கள் தேவையான அளவில், விகிதாசார முறையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியது.

புட்டசாமி (தனியுரிமை) வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விகிதாசார தரத்தில் இருப்பதற்கு, தனியுரிமையை மீறுவதாக உள்ள தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஐந்து அளவுகோல்களை நிறைவேற்ற வேண்டும். முதலில், அதற்கு சட்ட அடிப்படை இருக்க வேண்டும். இரண்டாவதாக, நியாயமான நோக்கத்தை அது கொண்டிருக்க வேண்டும். மூன்றாவதாக, நோக்கத்திற்கான இலக்கை அடைய அறிவார்ந்த முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். நான்காவதாக, நோக்கத்திற்கான இலக்கை அடைய கட்டுப்பாட்டுகள் குறைவான மாற்று வழிகள் இருக்கக்கூடாது. இறுதியாக, உரிமை கொண்டிருப்பவருக்கு ஏற்படும் நன்மைகள் தீங்கை விட அதிகமாக இருக்க வேண்டும். தற்போதைய வழக்கில், இந்த விகிதாசார தரத்தின் முதல் பகுதியிலேயே ஆரோக்ய சேது தோல்வியடைந்து விடுகிறது.

ஏனெனில் இந்த செயலி, தன்னுடைய செயல்பாட்டை நிர்வகிப்பதற்கும், போதுமான நடைமுறை பாதுகாப்புகளை உறுதி செய்வதற்குமான சட்டப்பூர்வமான கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை. காலக்கெடு குறிப்பிடப்பட்ட சட்டப்பூர்வமான உத்தரவாதம் இல்லாத நிலையில், ஆரோக்ய சேது பயன்பாட்டின் மூலம் சேகரிக்கப்படும் கிக் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் இயக்கம் பற்றிய முக்கியமான தனிப்பட்ட தகவல்கள் கோவிட்-19 முடிந்த பிறகும் விவரக்குறிப்பு தயாரிப்பிற்கும், பரந்த அளவிலான கண்காணிப்பிற்கும் தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

சுகாதாரத் தரவு குறித்த குறிப்பிட்ட சூழலில், தங்களுடைய  சுகாதார நிலையின் அடிப்படையில் தனிநபர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதற்காக தனிப்பட்ட தரவு பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தரவு பாதுகாப்பு சட்டம் இருக்க வேண்டியதன் அவசியத்தை புட்டசாமி (தனியுரிமை) தீர்ப்பு வலியுறுத்தியது. ஆனாலும் தொற்றுநோய்களின் போது பொருத்தமான கொள்கை தலையீடுகளை வடிவமைப்பதற்காக, தனிநபர்களின் சுகாதாரத் தரவை அரசாங்கம் சேகரித்து செயலாக்கலாம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது, ஆனால் அத்தகைய தரவு  பெயர் குறிப்பிடாது இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திருந்தது.

2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 43 ஏ இன் கீழ் வெளியிடப்பட்ட, 2011ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் (நியாயமான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் மற்றும் பாதுகாப்பற்ற  தனிப்பட்ட தரவு அல்லது தகவல்) விதிகள்,  சுகாதாரத் தரவை இதேபோன்று பாதுகாப்பற்ற தனிப்பட்ட தரவு என்று வகைப்படுத்துகிறது. மேலும் சுகாதாரத் தரவை தனிநபரின் சம்மதத்துடன் சடப்பூர்வமான அமைப்புகள் மட்டுமே சேகரித்து செயலாக்க முடியும் என்றும் குறிப்பிடுகிறது [விதி 5 (1)].  நோக்க வரம்பு [விதி 5 (2) மற்றும் 5 (5)], அறிவிப்பு [விதி 5 (3)], சேமிப்பு வரம்பு [விதி 5 (4)], அணுகல் மற்றும் திருத்தம் தொடர்பாக உள்ள விதிகள் விதி 5 (6)] மற்றும் விலகுவதற்கான உரிமை [விதி 5 (7)] என்று இந்த சடப்பூர்வமான அமைப்புகளுக்கான பல்வேறு கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Aarogya Setu App- Why You Should Download This? | Chirpy Brains

டிஜிட்டல் சுகாதார தரவு மற்றும் அதனுடன் தொடர்புடைய தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்களின் ரகசியத்தன்மையை பாதுகாப்பதற்கான கடுமையான பாதுகாப்பு அம்சங்களை, டிஜிட்டல் தகவல் பாதுகாப்பு குறித்து முன்மொழியப்பட்டுள்ள சுகாதார பராமரிப்புச் சட்டம் வகுத்து தந்திருக்கிறது. தங்களிடமிருந்து சுகாதாரத் தரவைச் சேகரிப்பதற்கும், பகிர்வதற்கும் தனிநபர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை வரைவு சட்டம் அங்கீகரிக்கிறது.

மேலும் இது பல்வேறு நிறுவனங்களால் சுகாதாரத் தரவைப் பயன்படுத்துவதற்கான குறிப்பிட்ட நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டுகிறது. தொற்றுநோய்க் கட்டுப்பாட்டிற்கு பெயர் நீக்கம் செய்த பிறகோ அல்லது அடையாளம் அழிக்கப்பட்ட பின்னரே டிஜிட்டல் சுகாதாரத் தரவைப் பயன்படுத்த வேண்டும் என்று முன்மொழியப்பட்ட சட்டம் அனுமதிக்கிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் தொழிலாளர்களின் சுகாதாரத் தரவை முதலாளிகள் அணுகுவதை அது தடை செய்கிறது. எனவே, தற்போது இந்தியாவில் விரிவான தரவு பாதுகாப்பு சட்டம் இல்லை என்றாலும், தனிநபர்களின் சுகாதாரத் தரவைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நீதித்துறையும் அரசாங்கமும் ஏற்கனவே அங்கீகரித்துள்ளன. .

சட்டத்தின் அடிப்படையில் இல்லாததைத் தவிர, தொடர்பு தடமறிதல் பயன்பாடுகளுக்கான சர்வதேச நடைமுறைகளிலிருந்து ஆரோக்ய சேது செயலி விலகி, பின்வரும் காரணங்களுக்காக தரவு பாதுகாப்பு தரங்களுடன் இணங்கத் தவறியிருக்கிறது:

அ). ஒப்புதல் இல்லாமை:

விநியோக ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ஆரோக்ய சேது செயலியை இனி தன்விருப்பு கொண்டு பயன்படுத்தப்படுவதாகக் கருத முடியாது. விநியோகத் தொழிலாளர்கள்  தங்களுடைய சம்மதத்தைத் தர மறுக்கவோ அல்லது விலகி இருக்கவோ வாய்ப்பில்லை.

ஆ) தரவு குறைத்தல் இல்லாமை:

ஆரோக்ய சேது செயலிக்கான பதிவிற்கு பெயர், தொலைபேசி எண், வயது, பாலினம், தொழில், கடந்த 30 நாட்களில் பார்வையிட்ட நாடுகள் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் என்று அதிக அளவு தனிப்பட்ட தரவைப் பகிர வேண்டியுள்ளது. இது குறைவான தரவுக் கொள்கைக்கு முரணானது.

இ) வெளிப்படைத்தன்மை இல்லாமை:

ஆரோக்ய சேது சேகரித்த தனிப்பட்ட தரவு ஒருங்கிணைக்கப்பட்டு பெயர் குறிப்பிடப்படாது இருக்கும் என்று கூறப்பட்டாலும், தகவல் திரட்டுதல் மற்றும் பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு என்ன செயல்முறைகள் மற்றும் நுட்பங்கள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்து பொதுவில் கிடைக்கக்கூடிய தகவல்கள் எதுவும் இல்லை. தனிப்பட்ட தரவில் சரியாக பெயர் நீக்கம் செய்யப்படாவிட்டால், மீண்டும் அடையாளம் காண்பதற்கான ஆபத்து  அதிகம் இருக்கின்றது. எனவே, அரசாங்கம் மற்றும் சுயாதீன நிறுவனங்களால், இந்த செயலி முழுமையான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஈ) வழிமுறைகள் குறித்த பொறுப்பேற்பு இன்மை:

ஒரு நபரின் கோவிட்-19 நிலையைத் தவறாக அடையாளம் காண்பதால் விளைகின்ற விளைவுகளுக்கான எந்தவொரு பொறுப்பிலிருந்தும், ஆரோக்ய சேதுவிற்கான  சேவை  விதிமுறைகள் அரசாங்கத்திற்கு விலக்கு அளிக்கின்றன. ஆகையால், ஆபத்து மதிப்பீட்டைச் செய்யும் தெளிவற்ற வழிமுறைகளின் தயவில் தனிநபர்கள் விடப்படுகிறார்கள். தவறு நேர்கையில் எந்தவொரு தீர்வும் இருக்கப் போவதில்லை. கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்கள், ஆரோக்ய சேதுவின் வழிமுறையால் அதிக ஆபத்துள்ள நபர்களாக தவறாக அடையாளம் காணப்பட்டால், அவர்கள் சுயமாக தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள  வேண்டும். வருமானத்தையும், இயங்கும் சுதந்திரத்தையும் அவர்கள் இழக்க வேண்டும்.

உ. அங்கீகரிக்கப்படாத தரவு பகிர்வு மற்றும் வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஆபத்து:

ஆரோக்ய சேது செயலியின் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை மூன்றாம் தரப்பினருடன் பகிர்வதற்கு எந்த தடையும் இல்லை. இந்த தனிப்பட்ட தகவல்களை, தேவையான மருத்துவ மற்றும் நிர்வாகத் தேவைகளுக்காக, தேவையான மற்றும் பொருத்தமான நபர்களுடன் பகிர்ந்து கொள்ள அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. எந்த அரசாங்கத் துறை இந்த செயலியின் மூலம் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவைப் பெறும் என்பதை ஆரோக்ய சேதுவிற்கான தனியுரிமைக் கொள்கை குறிப்பிடத் தவறிவிட்டது. எனவே, தொடர்பு தடம் அறிவதற்காக சேகரிக்கப்பட்ட முக்கியமான தனிப்பட்ட தரவுகள், தண்டனை வழங்கும் வகையில் சட்ட அமலாக்க நிறுவனங்களால் பயன்படுத்தப்படக் கூடும்.

Analysis of Aarogya Setu Mobile Application – HasGeek

ஊ. வெளிப்புற பரிமாற்றம் மற்றும் பிற தரவுத்தளங்களுடன் ஒருங்கிணைப்படும் ஆபத்து:

ஆரோக்ய சேது  மூலமாகச் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவு வெளிப்புற மேகக்கணிமை சார்ந்த சேவையகத்திற்கு மாற்றப்படலாம். மேலும் தனிநபரின் சாதனத்தில் மட்டுமே இது சேமிக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆரோக்ய சேது சேகரித்த தகவல்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தால் பராமரிக்கப்படும் பிற தரவுத்தளங்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கவலை தருவதாக இருக்கிறது. இதுபோன்ற ஒருங்கிணைந்த தரவுத்தொகுப்புகளையும், இரண்டாம் நிலை அனுமானங்களையும் பின்னர் ஒரு கட்டத்தில் நீக்குவது கடினமாக இருக்கும்.

சுயாதீன ஒப்பந்தகாரர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களைப் போல வருமானத்தையோ அல்லது வேலை பாதுகாப்பையோ அனுபவிப்பதில்லை. அவை இந்த கோவிட்-19 நெருக்கடியின் போது, அதிகம் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றன. மாற்று வேலைவாய்ப்பைக் கண்டுபிடிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. அவர்களிடம் நிறுவனங்கள் அல்லது அரசாங்கத்திடம் பேரம் பேசும் சக்தியும் இருப்பதில்லை. எனவே, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்பு எதுவும் இல்லாத ஆரோக்ய சேது செயலியை தற்போதைய வடிவத்தில்  பதிவிறக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

தொழிலாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பொருந்தக்கூடிய தொழிலாளர் தரநிலைகள் குறித்த 2020 மார்ச் 23 நாளிட்ட சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வழிகாட்டுதலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பாரபட்சமான நோக்கங்களுக்காகவோ அல்லது வேறு எந்த வகையிலும் தொழிலாளர்களின் நலன்களுக்கு பாதகமாகவோ சுகாதார கண்காணிப்பு பயன்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசாங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியுரிமை குறித்த இந்த அக்கறைகளுக்கு கூடுதலாக, ஊரடங்கின் போது வேலை செய்ய இயலாத அல்லது குறைந்த தேவை காரணமாக அவர்களின் வருவாயில் கணிசமான வீழ்ச்சியைக் கண்ட கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்களுக்கு வருமானப் பாதுகாப்பை வழங்க அரசாங்க தலையீடும் தேவைப்படுகிறது. ஒரு விநியோகத்திற்கு இவ்வளவு ஊதியம் என்று பெறுபவர்களாக கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு நிலையான வருமானத்திற்கான உத்தரவாதம் இருப்பதில்லை. இதன் விளைவாக, இந்த கடினமான காலகட்டத்தில், நீண்ட நேரம் உழைத்தாலும், போதுமான விநியோகங்கள் கிடைக்காததால்  கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்கள் அனைவரும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறுவதற்குப் போராடி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் பல வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வதால், கோவிட்-19 தொற்று ஏற்படும் அபாயத்தில் இருக்கின்ற கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கப்பட வேண்டும்.

கிக் தொழிலாளர்களின் சமூக-பொருளாதார நல்வாழ்வையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்காக கிக் தொழிலாளர் சங்கங்களுடன் இணைந்து, டான்டெம் ரிசர்ச் மற்றும் இன்டர்நெட் & சொசைட்டி மையம் கோவிட் -19 நிவாரண நடவடிக்கைகளுக்கான விரிவான பரிந்துரைகளை உருவாக்கியுள்ளது நிதி நிவாரணம் மற்றும் தொழில்சார் சுகாதார பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கவும் உங்கள் அமைச்சகத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

ஆரோக்ய சேது செயலி மற்றும் கோவிட்-19 ஊரடங்கு ஆகியவை தொழிலாளர்களின் தனியுரிமை, தன்னாட்சி, கௌரவம் ஆகியவற்றின் மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தை கருத்தில் கொண்டு, கீழே குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை தனியார் துறையுடன் இணைந்து மேற்கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

அ) ஆரோக்ய சேதுவுடன் தொடர்புடைய தனியுரிமை குறித்த கவலைகளை அறிந்து கொண்டு, கிக் பொருளாதாரத்தில் உள்ள தொழிலாளர்களுக்கும், பாரம்பரிய பொருளாதாரத்தில் உள்ளவர்களுக்கும் செயலியின் பயன்பாடு கட்டாயமாக்கப்படக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகின்ற ஆலோசனையை வழங்க வேண்டும். .

ஆ) கோவிட்-19 தொற்றுநோய்களின் போது  தொடர்ந்து பணியாற்றி வருகின்ற அனைத்து கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்களுக்கும் அதிக பாதுகாப்பை உறுதிசெய்ய, (அ)வில் குறிப்பிடப்பட்டதுடன் கூடுதலாக, நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி, தினசரி உடல்வெப்பநிலை சோதனைகளைச் செய்வது, தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவது போன்ற ஆபத்து குறைப்பு முறைகளைச் சார்ந்து இருப்பது ஆகியவை மேற்கொள்ளபப்ட வேண்டும்.

Aarogya Setu app primed to take lead in COVID-19 war - The ...

இ) ஊரடங்கின் போது கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்கள் தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதையும், தங்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்காக  கோவிட்-19 இன் அறிகுறிகளைக் கொண்டவர்கள் வேலை செய்ய  நிர்பந்திக்கப்படுவதில்லை என்பதையும் உறுதிப்படுத்த நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் என்று இருவருக்கும் சரியான கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும். ஊரடங்கின் போது வேலை செய்ய முடியாத அல்லது குறைந்த தேவைகளின் காரணமாக வருவாயில் கணிசமான குறைவைக் கண்ட அனைத்து கிக் மற்றும் இயங்குதளத் தொழிலாளர்களுக்கும் தரப்பட வேண்டிய மருத்துவ காப்பீடு மற்றும் நிதி நிவாரணத்திற்கான ஏற்பாடுகளும் இதில் அடங்கும்.

அன்புடன்,

Access Now, ADF India, All India Central Council of Trade Unions, All India Union of Forest Working People, Amnesty India, Asia Dalit Rights Forum, Association for Progressive Communications, Association for Protection of Democratic Rights, Bachchao Project, Chennai Metropolitan Construction and Unorganised Workers Union, Common Cause, Delhi Solidarity Group, Digital Empowerment Foundation, Feminism in India Forum Against Oppression of Women, Bombay Foundation for Media Professionals, Free Software Community of India, Human Rights Law Network, Indian Delivery Lions Organization, Indian Federation of App Transport Workers, Indian Journalists Union, Indian Social Action Forum, Indic Project, Internet Democracy Project, Jan Swasthya Abhiyan, Mumbai Jharkhand Nagrik Prayas, LABIA – A Queer Feminist LBT Collective, Medianama, Metacept Mazdoor Kisan Shakti Sangathan, National Alliance of People’s Movements, National Adivasi Alliance, National Fishworkers’ Forum, Pakistan-India Peoples’ Forum for Peace & Democracy, India Chapter Point of View, Pothe Ebar Namo Sathi, Project Constitutionalism, People’s Union of Civil Libertie, People’s Union for Democratic Rights, Red Dot Foundation, Socialist Party of India, Swathanthra Malayalam Computing, Tandem Research and United Christian Forum.

நாள்: 2020 மே 2

பொருள்: ஆரோக்ய சேது கட்டாயமாக நிறுவப்படுவதற்கு எதிராக விடுக்கப்பட்ட கூட்டு வேண்டுகோளுக்கான முகப்பு கடிதம்

அன்புள்ள ஐயா,

இணைய சுதந்திரத்திற்கான  அறக்கட்டளை (இன்டர்நெட் ஃப்ரீடம் ஃபவுண்டேஷன் – IFF) என்பது ஒரு டிஜிட்டல் சுதந்திர அமைப்பாகும். இந்தியாவில் இணைய பயனர்களின் அடிப்படை உரிமைகளை தொழில்நுட்பம் மதிக்கின்றது, மேம்படுத்துகிறது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ள இது ஒரு பொது தொண்டு அறக்கட்டளையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சுதந்திரமான பேச்சு, மின்னணு கண்காணிப்பு, தரவு பாதுகாப்பு, வலை நடுநிலைமை மற்றும் புதுமை ஆகியவற்றில் நிபுணத்துவத்துடன் நாங்கள் பரந்த அளவிலான பிரச்சனைகள் குறித்து பணியாற்றி வருகின்றோம். குறிப்பாக, தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கல் திறனில் நம்பிக்கை கொண்டுள்ள நாங்கள், அனைத்து இந்தியருக்கும் இலவச மற்றும் திறந்த இணைய அணுகல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.

ஆரோக்ய சேது செயலி பிரச்சினையில் 44 அமைப்புகள் மற்றும் 104 நபர்கள் கையெழுத்திட்ட 2020 மே 1 நாளிட்ட கூட்டு வேண்டுகோளின் நகலுடன் இந்த முகப்பு கடிதத்தை நாங்கள் எழுதுகிறோம். ஆரோக்ய சேது செயலியை நிறுவுதல் மூலம் நாடு முழுவதும் உள்ள சாதாரண தொழிலாளர்கள் மீது எதிர்மறையான தாக்கம் ஏற்படுத்தப்படுவதை தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் மூலம் நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். தொழிற்சங்கங்கள், மக்கள் இயக்கங்கள், டிஜிட்டல் உரிமை அமைப்புகள், பொது சுகாதார வல்லுநர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், ஆர்வலர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களிடமிருந்து இந்த வேண்டுகோளுக்கான ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டு வேண்டுகோளைத் தொடர்ந்து, 2020 மே 1 அன்று மாலை 6:00 மணியளவில் உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 40-3/2020-டி.எம்-ஐ(ஏ) உத்தரவில் ஆரோக்ய சேதுவை கட்டாயமாக நிறுவ வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முகப்பு கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள கூட்டு வேண்டுகோளின் முக்கிய கோரிக்கைகளுக்கு எதிராக அந்த உத்தரவு  இருக்கிறது. 2020 மே 1 நாளிட்ட அந்த கூட்டு வேண்டுகோளின் தொடர்ச்சியாக, உத்தரவு எண் 40-3/2020-டி.எம்-ஐ(ஏ) குறித்து மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை  இந்த முகப்பு கடிதத்தின் மூலம் நாங்கள் முன்வைக்கிறோம்.

2005ஆம் ஆண்டு பேரழிவு மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 10(2)(I)இன் கீழ் வழங்கப்பட்ட  ஆணை எண் 40-3/2020- டி.எம்-ஐ(ஏ), இரண்டு குறிப்பிட்ட வகையில் ஆரோக்ய சேதுவை கட்டாயமாக நிறுவி செயல்படுத்துவதற்கான வழிகளை வழங்கியிருக்கிறது.

Implement Aarogya Setu, but only through law - The Hindu

அ. முதலாவதாக, மாவட்டங்களை மூன்று மண்டலங்களாக வகைப்படுத்திய பின்னர், சிவப்பு (ஹாட்ஸ்பாட்கள்) மண்டலங்களில், கட்டுப்பாட்டு மண்டலங்கள் எனும் துணை வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிப்பவர்களிடையே ஆரோக்ய சேது செயலியை 100% உறுதி செய்ய வேண்டும் என்று பிரிவு 3(iii) இன் கீழ் உள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆ. இரண்டாவதாக, பாரா 15(i) இல், பொது இடங்கள்  மற்றும் பணியிடங்களில்,  இணைப்பு I இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஊரடங்கு நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நீதிபதிகளும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மூன்று மண்டலங்களுக்கும்  பொருந்துவதாக இருக்கிறது.

மேலும் ‘ஆரோக்ய சேது செயலின் பயன்பாடு அனைத்து தனியார் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் கட்டாயமாக்கப்படும். ஊழியர்களிடையே இந்த பயன்பாட்டின் 100% பாதுகாப்பை உறுதி செய்வது அந்தந்த அமைப்புகளின் தலைவரின் பொறுப்பாகும்’ இணைப்பு Iஇல் உள்ள அலகு எண் 15 கூறுகிறது.

இந்த உத்தரவுகளில் விதிவிலக்குகள் அல்லது நிபந்தனைகள் எதுவும் இல்லை என்பதை தயவுசெய்து கவனிக்க வேண்டுகிறோம். இது 100% பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதன் பொருள் நாடு முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஆரோக்ய  சேது மொத்தமாக, முழுமையாக  கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதே ஆகும்.

ஆணை எண் 40-3/2020-டி.எம்-ஐ(ஏ) பத்தி எண் 16இல், ’ஊரடங்கு  நடவடிக்கைகளையும், கோவிட்-19 நிர்வாகத்திற்கான தேசிய உத்தரவுகளையும் மீறும் எந்தவொரு நபர் மீதும், ஐபிசியின் பிரிவு 188 இன் கீழ் சட்ட நடவடிக்கை மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்ட விதிகளுடன், 2005ஆம் ஆண்டு பேரிடர்  மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 51 முதல் 60 வரை குறிப்பிடப்பட்டுள்ள விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’ என்று உத்தரவிற்கு இணங்காததற்காக குற்றவியல் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது என்பதை நாங்கள் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

2005ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதற்கான விதியாக பிரிவு 51 (பி) இருக்கிறது. இது கீழ்ப்படியாமைக்கு அதிகபட்சம் 1 வருடம் வரை தண்டனையை அளிக்கிறது. மேலும் இதுபோன்ற செயல்கள் உயிர் இழப்புக்கு வழிவகுக்கும் என்றால் தண்டனை 2 ஆண்டுகள் ஆகும். ஐபிசியின் பிரிவு 188 மூலம் 6 மாதம் வரை சிறைத்தண்டனை நீட்டிக்கப்படுகிறது.

இந்த முகப்பு கடிதத்தின் மூலம், பரவலான அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் விடுத்துள்ள கோரிக்கைகளில்,  ஆரோக்ய சேது கட்டாயமாகத் திணிக்கப்படுவதால் ஏற்படுகின்ற தீங்குகள்  தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை, ஐஎஃப்எஃப் சார்பில் நாங்கள் வலியுறுத்துகிறோம். ஸ்மார்ட்போன் செயலியை கட்டாயமாக நிறுவுவதற்கு மாறாக, இந்த நேரத்தில் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் உரிமைகளில்  அரசியலமைப்பு  சார்ந்த கடமை மற்றும் குறிக்கோள்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

உத்தரவிற்கு இணங்காமல் இருப்பது குற்றவியல் சார்ந்த தண்டனையை வழங்குவது இதில் இன்னும் மோசமான விஷயமாக இருக்கிறது. இதன் மூலம், வாழ்வாதாரத்திற்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஊக்கம் மற்றும் நம்பிக்கை என்ற முன்மாதிரியை ஒதுக்கி விட்டு, வற்புறுத்தல் மற்றும் நிர்ப்பந்தம் ஆகியவற்றைக் கொண்டு வருகின்ற மாற்றத்தையே இது குறிக்கிறது. தயவுசெய்து நீங்கள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்

ஆரோக்ய சேதுவின் தாக்கம் குறித்து 44 அமைப்புகளும் 104 நபர்களும் ஒப்புதல் அளித்திருக்கும் கூட்டு வேண்டுகோளில் இருக்கின்ற கூடுதல் விரிவான காரணங்களை தயவுசெய்து உங்கள் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முன்குறிப்பிட்டிருக்கும் கோரிக்கைகளில் கண்டவாறு, பகுத்தறிவு மற்றும் நியாயங்களுக்குட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்சம் ஆரோக்ய சேது (அதன் மீதுள்ள அக்கறைகளுக்கு எந்தவித பாரபட்சமும் இல்லாமல்) முற்றிலும் தன்விருப்ப நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்று உங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் குறிப்பாக, இந்த கூட்டு வேண்டுகோளின் ஆன்மா மற்றும் உரையைக் கருத்தில் கொண்டு ஆணை எண் 40-3/2020-டி.எம்-ஐ(ஏ)இல் குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தி வயர் இணைய இதழ், 2020 மே 03

https://thewire.in/rights/aarogya-setu-privacy-woes-letter

தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு

Dr.T.Chandraguru

Virudhunagar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *