வணக்கம்,
இந்த கோவிட்-19தில் கோவிடை விடவும் அதிகம் பேசு பொருளாய் மாறி இருக்கும் ஆன்லைன் வகுப்புகள் பற்றி ஆசிரியராய் எனக்கிருக்கும் சிற்சில ஆதங்கங்கள் இவை.

குழந்தை இவ்வளவு நேரம் மொபைல் பார்க்கிறானே, ஃபீஸ் கேட்கிறார்களே என்கிற சத்தம் அதிகமாய் கேட்கிறது. பெற்றவரை விடவும் குழந்தைகளை அதிகம் பார்த்தவர்கள் நாங்கள். தனியார் ஆசிரியர் என்பதால் யார் கேட்க்கும் நேரத்திலும் உடனடியாக அவனை பற்றிய அத்தனை விவரமும் சொல்லக்கூடிய அளவுக்குப் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.

பெற்றவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி இருக்கிறது. இத்தனை புலம்பும், பெற்றோர்களில் எத்தனை பேர் என் பிள்ளை ஆன்லைனில் படிக்க அனுமதிக்க மாட்டோம், கண் முக்கியம், மன நலம் முக்கியம் என பள்ளிக்கு சொல்லி இருக்கிறார்கள்.?
கூக்குரல் எல்லாம் இவ்வசதியைப் பயன்படுத்த முடியாதவர்களிடம் இருந்து தான். எளியவன் எவனோ அவனின் குரல் ஓங்கி ஒலிக்கும். ஆனால் யாருக்கும் கேட்காது. அதுவே நடக்கிறது. பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளை எங்கேஜ் செய்ய இதை ஒரு ஆயுதமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். படிப்பு போகும் என்பதெல்லாம் சும்மா பேச்சு. ஆன்லைன் க்ளாஸ் வசதியை பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு நிச்சயம் யூ ட்யூப் கல்வி தொடர்பான வீடியோக்களை பற்றி தெரிந்திருக்கும். ஆனால் முயற்சிக்க மாட்டர்கள். அதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். போலவே மற்ற தளங்களிலிருந்து பிள்ளைகளையும் காப்பாற்றிக் கொள்ள ஆன்லைன் ஓர் ஆயுதம்.

சரி விடுங்கள். ஓர் ஆசிரியரின் வேலை என்ன? பாடம் எடுப்பது மட்டுமா? இத்தனை நாள் இதே புத்தகத்தைக் கரைத்துத் தான் பிள்ளைகளின் காதில் ஊற்றிக் கொண்டிருந்தோமா? சில வகுப்புகளில் எத்தனை கதைகள், எத்தனை குறைகள், எத்தனை அனுபவங்களைக் கடந்திருப்போம்? நாலு வரி படிப்பதற்குள் அபத்தமாய் ஒரு கம்ப்ளைண்ட் வகுப்பு நடுவிலிருந்து ஒலிக்கும். அதைப் பற்றி 4,5 குழந்தைகள் லெக்ச்சர் எடுக்கும். எல்லாம் சரியாய் இருக்கும் வகுப்புகளிலே பிள்ளைகளின் கவனம் 10 நிமிடம் கூட பாடத்தில் இருக்காது. அப்படி இருக்க ஆன்லைனில், கொஞ்சம் கூட படிக்கும் அட்மாஸ்பியருக்கு பொருத்தமில்லாத ஓர் இடத்தில் பிள்ளைகளின் கவனம் எங்கிருக்கும்?

Delhi govt starts online lessons for Class 12 but only a handful ...

அனுபவத்தில், பாடம் எடுக்கிற வகுப்பில் நன்றாகப் படிக்கின்ற மாணவரிடமிருந்து மட்டும் தான் வீட்டுப்பாடங்கள் பதில் வருகின்றன. எவனுக்கு உண்மையில் கவனம் தேவையோ அவன் கவனிக்கப்படாமலே இருக்கிறான். நார்மல் வகுப்புகளில் குரல்  கொடுக்க தயங்கும் குழந்தைகள் விர்ட்சுவல் பள்ளியில் முகம் கூட காண்பிப்பதில்லை. மருத்துவன், கண் எதிரே உயிர் பிரிதலை ஏற்பானா.? ஆசிரியர்களுக்குக் குற்ற உணர்வு மிகாதா? பணம் வாங்குபவன் ஒருவன். கொடுப்பவன் ஒருவன். நடுவில் நைந்து தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்காகவும் சேர்ந்து குரல் எழுப்புங்கள்.

1. எத்தனை எத்தனை முயற்சி எடுத்தாலும் ஒருகாலும் வகுப்பறைக்கு ஆன்லைன் ஈடு இல்லை.

2. அப்படியே இந்த பெரும் கல்வியாளர்கள் (!) அதற்கு ஒரு முறைமை வகுத்தாலும் அது மொபைல், டேப்லெட்களின் வழி குழந்தைகளைப் போய்ச் சேர்வது சரி இல்லை. மனமும், உடலும் சோர்வடையும். செயல் திறனும் குறையும்.

3. பொதுவான TV/ லோக்கல் Tv வழி ஏதேனும் முயற்சிக்கலாம். அதை பள்ளிகள் மானிட்டர் செய்யலாம்.

4. பல பள்ளிகளில் குறைந்த ஆசிரியர்களை வைத்துக்கொண்டு பல வகுப்புகளுக்கு க்ளாஸ் எடுப்பது நடக்கிறது. அதாவது மொத்த பள்ளிக்கும் ஒரே தமிழ் ஆசிரியர், ஒரே ஆங்கில ஆசிரியர் என்பது போல. மும்மடங்கு வேலை. ஊதியமும் பாதி.

5. தொடர்ந்தால் நிச்சயம் எங்கோ ஒரு தனியார் ஆசிரியர் மன உளைச்சலில் மரணிக்க வாய்ப்புண்டு. மிகுதியாகச் சொல்லவில்லை. இது தான் லட்சணமா, இப்படி தான் பள்ளியிலுமசெய்யுங்கள்.கலாய்க்கும் வீடியோக்கள் என எத்தனையோ பார்க்கிறோம். ஒரு வீடியோவிற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகிறது. ஏனெனில் இது எங்களுக்கும் கூட புதியது. எனக்கு மொத்தம் 7 வகுப்புகள். குடும்பம் எல்லாம் உறங்கிய பின்பு உழைக்க வேண்டி இருக்கிறது. ஊருக்கு முன் எழ வேண்டி இருக்கிறது. பெற்றோர்களின் கேள்விகளுக்கும், மேலாளர்களின் அழுத்தத்திற்கும் நாங்கள் தான் பதில் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏன் இத்தனை பணம் வாங்குகிறாய் என்ற அம்பை ஆசிரியர் பக்கம் எய்வதில் என்ன தர்மம் என்பது இன்று வரை விளங்கிக்கொள்ள இயலவில்லை. போலவே இந்த பக்கம் ஏன் அந்த மாணவன் கட்டணம் செலுத்தவில்லை..  இதௌ நான் கேட்க எதற்கு ஆசிரியர் பணி? மார்க்கெட்டிங் பக்கம் ஒதுங்கி இருக்கலாம். ஒரு நாளும் பள்ளியின் லாபத்தில் ஆசிரியனுக்குப் பங்கு இல்லை. நஷ்டத்தைத் தலையில் ஏற்றி சுமந்தலைகிறோம்.

6. சரி இதெல்லாம் விட்டு விடுவோம். முடிவில் எப்படி மதிப்பிடுவீர்கள்? தனியார்ப் பள்ளி மாணவன்/ ஆன்லைன் வகுப்பு பங்கேற்றவன் எல்லாம் அடுத்த வகுப்பிற்கு. அரசுப் பள்ளி மாணவன்/கட்டணம் கட்டாதவன்/ஆன்லைனில் உட்கார பிடிக்காதவன்/முடியாதவன் எல்லாம் அதே வகுப்பிற்கு என்றா?

7. சமச்சீர்க் கல்வி என்று இத்தனை வருடம் கூவிக் கூவி ஏமாற்றி இருக்கிறோம். நீட் எல்லாரும் எளிதாய் எழுத முடியும். அப்படி இப்படி என்று பூ சுற்றி இருக்கிறோம். அ, ஆவிற்கே துட்டு வேண்டும் என்கிற உண்மை காரி உமிழ்கிறது. முகத்தில் ஈரம் காய்ந்து நாற்றம் எடுக்கும் முன் சுத்தம் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *