அவள் – பிரியா ஜெயகாந்த்அவள் முகம் நிலவல்ல
தேய்ந்தாலும் மீண்டும் வளர்வதில் அவள் நிலவு

அவள் புருவம் வில்லல்ல
சூழலுக்கேற்ப வளைந்து கொடுப்பதில் அவள் வில்

அவள் கண்கள் மீனல்ல
உவர்ப்பிலும் வாழப் பழகுவதில் அவள் மீன்

அவள் பார்வை அம்பல்ல
இலக்கை குறிவைத்து அடைவதில் அவள் அம்பு

அவள் குரல் புல்லாங்குழலல்ல
துளைத்தாலும் இசைப்பதில் அவள் புல்லாங்குழல்

அவள் கூந்தல் மேகமல்ல
தடைதனை இடியென தகர்ப்பதில் அவள் மேகம்

அவள் கழுத்து சங்கல்ல
உரிமைக்காக முழங்குவதில் அவள் சங்கு

அவள் கைகள் சந்தனமல்ல
வெட்டினாலும் நறுமணம் பரப்புவதில் அவள் சந்தனம்

அவள் இடை கொடியல்ல
இடரிலும் படர்வதில் அவள் கொடி

அவள் மென்மையில் மலரல்ல
வாடினாலும் வாசம் வீசுவதில் அவள் மலர்

அவள் நிறம் பொன்னல்ல
புடம் போட்டாலும் ஒளிர்வதில் அவள் பொன்

அவள் கால்கள் வாழையல்ல
வீழும்முன் வம்சத்தை விருத்தி செய்வதில் அவள் வாழை !!!

பிரியா ஜெயகாந்த்
மின்னஞ்சல்: [email protected]