ஒரு நாள் செலவு

கீதாவும், எட்டாம் வகுப்பு படிக்கும் அவள் மகள் பூஜாவும் நீண்ட நேரமாக ஆட்டோ பிடிக்க காத்திருந்தனர். மணி இரவு பத்தை நெருங்கிவிட்டிருந்தது. எந்த ஆட்டோவும் கிடைக்கவில்லை.

“சீக்கரமா செலக்ட் பண்ணுனு சொன்னா கேட்டியா இப்ப பார் ஆட்டோவே கெடைக்கல. வீட்டுக்கு எப்ப போய் சேரப்போறோம்னு தெரியல” என்று தன் கோபத்தை மகளிடம் காட்டியபடியே எதிரில் வந்த ஆட்டோவைப் பார்த்து கை அசைத்தாள்.

“கே கே நகர் போகனும் வரீங்களா” என்று கேட்டாள்.

“கே. கே. நகர்ல எங்கக்கா?”

“அம்மன் கோயில் பக்கத்துல.”

“முன்னூறுபா குடுக்கா”

“என்னது டி நகர்ல இருந்து கே. கே. நகருக்கு முன்னூறுபாவா. நான் வரும்போது எறநூறு தான் குடுத்தேன். வேனும்னா எறநூத்தம்பது வாங்கிக்கோ” என்றாள்.
அதற்கு அவன் “முன்னூறு குடு இல்லனா வேற ஆட்டோ பாத்துக்கோ” என்றான்.

இரவு நேரமானதால் வேறு வழி இல்லாமல், “இப்பிடி அடாவடியா கேட்டா என்ன அர்த்தம் கொஞ்சமாவது நியாயமா கேக்க மாட்டீங்களா? என்று கடிந்துக் கொண்டே ஆட்டோவில் ஏறி அமர்ந்தாள்.

“லேடீஸ் தனியா வந்தா இப்பிடிதான் கறாரா பேசுவானுங்க” என்று மனதிற்குள் முனுமுனுத்தாள்.

“அம்மா நான் கேட்ட டிரஸ் ரெண்டு நாள்ல ஸ்டாக் வந்துரும்னு கடைல சொன்னாங்கல நம்ம எப்ப போய் வாங்கலாம்” என்று பூஜா கேட்டாள் “அப்புறம் டிசைட் பண்ணிக்கலாம்” என்று, ஆட்டோ ஓட்டுனர் மீதிருந்த கோபத்தை மகளிடம் காட்டினாள்.



வீடு வந்ததும் முன்னூறு ரூபாயை எடுத்து குடுத்தாள். அதைப் பெற்றுக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர் தயங்கியபடியே, “அக்கா தப்பா நெனைக்கலனா பாப்பாவோட பழய துணி ஏதாவது இருந்தா குடுக்கா, என் பொண்ணு பெரியவளாயிட்டா நல்ல மாத்து துணி இல்லக்கா” என்றான்.

கீதா யோசித்துக்கொண்டிருக்கும் போதே.

“வீட்டோட விசேஷம் பண்ணணும். ஒரு ஆயிரம் இருந்தா பண்ணிருவேன். காலைல இருந்து சவாரியே இல்லக்கா. வீடு அம்பத்தூர். வெறும் கையோட வீட்டுக்கு எப்பிடி போறதுனு தெரில. அதான் கொஞ்சம் அதிகமா காசு கேட்டேன் தப்பா எடுத்துக்காதக்கா” என்று அவன் கூறக் கூற கீதாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியாமல் பர்ஸில் இருந்து ஆயிரம் ரூபாய் எடுத்து கொடுத்தாள்.

“பணம்லாம் வேணாம்க்கா. துணி மட்டும் குடு” என்று பணத்தை வாங்க மறுத்தான்.

“சரி வெயிட் பண்ணுங்க வந்துடறேன்” என்று கூறியவள் வீட்டிற்குள் சென்று தான் புதிதாக வாங்கிவந்த புடவையை எடுத்து ஒரு கவரில் போட்டு, பூஜாவின் பழைய டிரஸ்ஸும் போட்டு அவனிடம் கொடுத்தாள்.

“இந்தா இந்த காச வெச்சி நல்லபடியா உன் பொண்ணுக்கு விசேஷம் பண்ணுங்க” என்று ஆயிரம் ரூபாய் எடுத்து அவன் கையில் திணித்தாள்.
கண்கள் கலங்க இரு கைகளையும் எடுத்து கும்பிட்டுவிட்டு சென்றான்.

“ஏன்மா, அந்த அங்கிள் பழைய டிரஸ் தானே கேட்டார். முன்னூறுபா கேட்டதுக்கு அவ்வளவு கோவப்பட்ட, எதுக்கு உன்னோட புது சாரீயும் குடுத்து காசும் குடுத்த?” என்று பூஜா கேட்டதும்,

“நமக்கு அது ஒருநாள் செலவு. அவங்களுக்கு அது வாழ்நாள் சந்தோஷம்.” என்றாள்.

பிரியா ஜெயகாந்த்
மின்னஞ்சல்: priyajayakanth78@gmail. com



2 thoughts on “சிறுகதை: *ஒரு நாள் செலவு* – பிரியா ஜெயகாந்த்”
  1. மனிதத்திற்கு தேவையான பெரிய கருத்தை சொல்லும் சிறுகதை. கடைசி வரிகள் அருமை. வாழ்த்துக்கள் தோழர்

  2. பலரின் ஒரு நாள் செலவு பலரின் வாழ்க்கைக்கு வாழ் நாள் ஆதாரமாக உள்ளது என்ற மனிதநேயத்தை சிறுகதை வழியே அழகாக படம் பிடித்து காட்டுகிறது. சிறப்பு. வாழ்த்துகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *