பிரியமெனும் மை தொட்டு…
தூறலாய் விசிறிடும்
அன்பை வரைய
தீண்டும் உணர்வுகளின்
நேசம் பொழிய
சிறகாய் விரியும்
இன்பம் சொரிய
சொர்க்கத்தின் கனிகளை
சொந்தம் கொள்ள
கனிவான பார்வைகளின்
கவியெழுத
காதலின் கருவறையில்
ஒட்டிப் பிறக்க
ஆறுதல் நொடிகளின்
அர்த்தங்கள் அறிய
இதயத்துடிப்பின்
இம்சை தெரிய
முடிவிலி ஊடலின்
உறுதவம் உணர
மனதின் கொஞ்சல்களில்
வண்ணம் பூச
சுவாசப்பூக்களின்
சுகந்தம் நுகர
நிசப்த மௌனங்களில்
விழிகளால் உறவாட
கொலுசொலி பாஷையையும்
ஆசையாய் மொழிபெயர்க்க
குறையாத பிரியம்
கொட்டித் தீர்க்க
நானுன் தூரிகை ஆவேன்
கண்மணி…
உன் பேரன்பின் வானப்பெருவெளியில்
பிரியமெனும் மை தொட்டு
இவையெல்லாம்
அற்புத ஓவியங்களாய்த்
தீட்டு…
Dr. ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.