பேராசிரியர் சி.டி.குரியன் – இடதுசாரி சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட ஆசிரியர்
பிரகாஷ் காரத்
தேசாபிமானி
தனது தொன்னூற்றி மூன்றாவது வயதில் காலமான பேராசிரியர் சி.டி.குரியன் மிகச் சிறந்த பொருளாதார நிபுணராக, ஆசிரியராகத் திகழ்ந்தவர். அவருடைய வாழ்வும், பணியும் முற்போக்கான சமூக மாற்றத்திற்கான ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருந்தன.
அவரது நண்பர்கள், அபிமானிகளால் சி.டி.கே என்று நன்கு அறியப்பட்ட சி.டி.குரியன் சென்னை தாம்பரத்தில் உள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் (எம்சிசி) பதினாறு ஆண்டு காலம் பொருளாதாரப் பாடம் கற்பித்து வந்தார். அங்கே பல ஆண்டு காலம் அவர் பொருளாதாரத் துறையின் பேராசிரியராக, தலைவராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தில் (மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ்) இணைந்து பணியாற்றத் துவங்கிய குரியன் அந்த நிறுவனத்தின் இயக்குநராக துடிப்பு மிக்க வளர்ச்சி ஆய்வு மையமாக அதனை மாற்றினார்.
மனிதாபிமான விழுமியங்களைக் கொண்ட கிறித்துவ-இடதுசாரி அறிவுஜீவியாக குரியன் திகழ்ந்தார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் பிராந்திய வளர்ச்சி குறித்து அவர் பல புத்தகங்களை எழுதியுள்ளார். ‘வளர்ச்சி என்பது மிகப்பரந்த பொருளில் மனித வளர்ச்சிக்கு வழிவகுக்கவில்லை என்றால் அது பொருளற்றதாகி விடும்… சமத்துவம் என்பது பொருளாதார சமத்துவத்திலிருந்தே தொடங்குகிறது’ என்ற சிந்தனையே அவரது புத்தகங்கள் அனைத்திற்கும் ஊடாக இழையோடியது.
1965 ஆம் ஆண்டு முதல் 1968 ஆம் ஆண்டு வரை சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் பயின்ற போது பேராசிரியர் குரியனின் மாணவனாக இருக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. எங்களிடையே இந்தியப் பொருளாதாரத்தின் பிரச்சனைகள், சமூகத்துடனான அதன் தொடர்பு குறித்த கருத்துகளைத் தூண்டி விட்ட பேராசிரியராக அவர் இருந்தார். பால் பரன், பால் ஸ்வீசி போன்ற மார்க்சியப் பொருளாதார நிபுணர்கள் எழுதிய ஏகபோக மூலதனம் என்ற புத்தகத்தை அவர்தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் என்பதை இங்கே நினைவுகூர விழைகிறேன்.
பல ஆண்டுகளாக நான் குரியன் உடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். தன்னுடைய பணி ஓய்விற்குப் பிறகு அவர் தங்கியிருந்த சென்னை, பெங்களூரில் அவரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். கடைசியாக அவரை எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் இல்லத்தில் நான் சந்தித்தேன். பொருளாதாரக் கொள்கைகளில் கட்சி என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது குறித்து அவர் தொடர்ந்து மிகச் சிறந்த ஆலோசனைகளை வழங்கி வந்தார். உறுதியான மதச்சார்பற்றவராக இருந்த குரியன் வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சி குறித்து அதிகம் கவலை கொண்டவராக இருந்தார்.
சி.டி.குரியனின் நினைவு சமத்துவம், நீதியின் அடிப்படையிலான சமுதாயத்தைக் காண விரும்புகின்ற அனைவராலும் போற்றப்படும்.
தமிழில்:
தா.சந்திரகுரு
இவர் எழுதி தமிழில் வெளிவந்த ‘செல்வச் செழிப்பும் மக்கள் நல ஒழிப்பும்‘ என்கிற நூல் நவீன முதலாளித்துவத்தின் பொருளாதாரத்தின் அடிப்படைகளை மிக எளிமையாக விளக்கும் ஒன்றாகும். பல பொருளாதார மேதைகளுக்கும் கை வராத கலை இது. இவருக்கு புக் டே மற்றும் பாரதி புத்தகாலயத்தின் அஞ்சலி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


Pingback: Prof . CT Kurien ' s Selva Selippum Makkal Nala Ozhippum