முனைவர் கா.ராஜன் எழுதிய “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” புத்தகம் | Prof K Rajan's Tholliyal Nokkil Sangakalam Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

முனைவர் கா.ராஜன் எழுதிய “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” நூல் அறிமுகம்

“தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” என்கிற நூலை முனைவர் கா.ராஜன் அவர்கள் 2004ஆம் ஆண்டில் எழுதியுள்ளார். இந்த நூல் இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது, தற்போது புதிய ஆதாரங்கள் தரவுகள் கிடைத்துள்ளன என்பது உண்மைதான், இருந்தாலும் முன்பு கிடைத்த ஆதாரங்கள் தரவுகள் அடிப்படையில் எழுதியது இன்றும் படித்து அறிய வேண்டியதாகவே உள்ளது. அதனால்தான், இந்த நூல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2024-ஆம் ஆண்டில் மறுபதிப்பு  கொண்டு வந்துள்ளது.

சங்கக் காலம் பற்றிய ஆய்வை சங்க இலக்கியத்தைக் கொண்டுமட்டும் ஆய்வு செய்திட முடியாது. கல்வெட்டியல், நாணயம், தொல்லியல், வெளிநாட்டார் குறிப்புகள் ஆகியவற்றையும் கொண்டே  ஆய்வு செய்ய வேண்டும். சங்க இலக்கியத்தில் கிடைக்காத தகவல்கள் இதில் கிடைக்கிறது, அதுமட்டுமல்லாது சங்க இலக்கியம் என்பது ஒரு வரலாற்று ஆவணம் என்பதை இந்தப் பல்துறை ஆய்வின் மூலம் நிறுவப்படுகிறது. அதனால் சங்கக் காலம் பற்றிய ஆய்வில் பல்துறைகள் இணைந்தே காணப்படுகிறது.

முனைவர் கா.ராஜன் அவர்கள் இந்த நூலில் தொல்லியல் ஆதாரத்துடன் சங்க இலக்கியத்தை ஆராய்ந்துள்ளார். இந்த நூல் 150 பக்கங்களைக் கொண்ட சிறிய நூல் என்றாலும் நிறைந்த தகவல்களைக் கொண்டதாக இருக்கிறது. இந்த நூல் நான்கு இயல்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 1.பெருங்கற்படைக்காலம், 2.எழுத்தறிவு, 3.வணிகம், 4.தொழில்நுட்பம்.  இந்த நான்கு இயல்களில் எது விளக்கப்பட்டுள்ளது என்பதை நன்றியுரையில் நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“சங்கக் காலம் உருவாவதற்கு உரிய காரணிகளையும் அக்காலத்தில் நிலவிய பண்பாட்டு சூழலையும், தொழில் நுட்பத்தின் மேன்மையையும், வணிகத்தின் வளர்ச்சியையும், தமிழர்களின் எழுத்தறிவினையும் விளக்கும் வகையில் அண்மையில் வெளிப்பட்ட தொல்லியல் சான்றுகளின்’ அடிப்படையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நூலில் கூறப்பட்டுள்ள கருத்துகளை அறிஞர்கள் விவாதித்து இதன் நிறை குறைகளை வெளிப்படுத்த வேண்டுகின்றேன். இவை எதிர்கால ஆய்விற்குப் பெரிய உந்து சக்தியாக அமையும் என நம்புகிறேன்.” 

இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்லியல், வெளிநாட்டவர் குறிப்புகள் ஆகியவை சங்கக் காலத்தை அறிவதற்கு முதன்மைச் சான்றாக இருக்கிறது. இதில் இலக்கியமே அதிகமான தரவுகளையும் சான்றுகளையும் கொடுக்கிறது, என்றாலும் இதை மட்டும் கொண்டு சங்கக் காலத்தை முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை என்கிறார் நூலாசிரியர்.

சங்கக் காலத்தில் சமணர் இருந்தது பற்றியும், அன்றைய மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் பற்றியும், அன்றைய தமிழர்கள் செய்து வந்த வாணிகம் பற்றியும் அறிந்து கொள்வதற்குச் சங்க இலக்கியம் மட்டும் போதுமானதாக இல்லை. கல்வெட்டு, தொல்லியல், வெளிநாட்டவர் குறிப்பு ஆகியவற்றை இணைத்துப் பார்த்தால்தான் உண்மையான நிலைமையைக் கொண்டுவர முடிகிறது.

அண்மையில் எகிப்து நாட்டில் கிடைத்த கல்வெட்டில் சிகை கொற்றன், கோபன், சாத்தன், கீரன் போன்ற தமிழ் வணிகர்கள் எகிப்துக்குச் சென்று வாணிகம் செய்ததற்குச் சான்றாக இருக்கிறது. பல்துறை சான்றுகளை ஆதாரமாகக் கொண்டே சங்கக் கால மக்களை ஆராய வேண்டும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

சங்க இலக்கியம் தொகுக்கப்பட்ட காலத்துச் சிந்தனையினையும்  உரையாசிரியர்களின் கருத்தையும் பார்க்கும் போது சங்கக் காலத்தில் சைவம் தழைத்தோங்கி இருந்தாகக் காட்டப்படுகிறது. ஆனால் இந்த நூல் குறிப்பிடுவதைப் போல, அன்றைய கல்வெட்டுகளின் மூலம் சமணச் சமயம் இருப்பதையும், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்ற புத்தச் சமயம் சார்ந்த எச்சங்களைக் காணும் போது புத்தச் சமயம் இருந்ததையும் அறிந்து கொள்ள முடிகிறது.

சங்கக் காலச் சமூகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால், அது திடீரென்று உருவானது கிடையாது, சங்கக் கால வளர்ச்சிக்குப் பெருங்கற்கால மக்கள் காரணமாக இருக்கிறார்கள்.

பெருங்கற்கால மக்களைப் பற்றி, பெருங்கற்படைக்காலம் என்கிற இயலில் நூலாசிரியர் விவரிக்கிறார்.

இன்று திராவிட மக்களிடம் காணப்படும் நீத்தார் வழிபாடு, பெருங்கற்படைக் காலத்தில் காணப்பட்ட வழிபாட்டின் தொடர்ச்சியே ஆகும். பெருங்கற்படை வழிபாடு என்பது, கல்வட்டம், நெடுங்கல், கல்திட்டை, குடைக்கல், பதுக்கை என்கிற வழியில் வளர்ச்சி பெற்றது. இதில் முதுமக்கள் தாழியினையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிஞ்சி, முல்லை ஆகிய நிலப்பகுதிகளில் கற்களால் செய்யப்பட்ட நினைவு சின்னங்கள் காணப்படுகிறது. அதே நேரத்தில் மருதம் நிலப்பகுதிகளில் முதுமக்கள் தாழிகள், அதாவது மண்குடங்களால் செய்யப்பட்டது காணப்படுகிறது. இதற்குக் காரணம் மலையைச் சார்ந்த, அல்லது கற்கள் கிடைக்கிற பகுதிகளில் கற்களால் செய்யப்பட்ட சின்னங்களும், கற்கள் கிடைக்காத பகுதியில் பானையினால் செய்யப்பட்ட சின்னங்களும் உருவானதாக அறிய முடிகிறது.

பெருங்கற்படைக் காலத்தை கற்களின் சின்னத்தைக் கொண்டு காலத்தைக் கணக்கிடமுடியாது. பெருங்கற்கால நினைவு சின்னங்கள் உருவாவதற்கு முன்பாகவே முதுமக்கள் தாழிகளைத் தமிழர்கள் பயன்படுத்தியதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். 

சங்க இலக்கியங்கள் காலவரிசையில் தொகுக்கப்படவில்லை, தொகுப்பில்  காலத்தால் பிற்பட்டவை தொடக்கத்திலும் காலத்தால் முற்பட்டவை தொகுப்பின் பிற்பகுதியிலும் எனக் கலந்துகிடக்கிறது. உண்மையில் முன்பின்னாக,  பின்முன்பாக என இடை இடையே கலந்து காணப்படுகிறது. கால வரிசையில் புரிந்து கொண்டால்தான் வரலாற்றின் தொடரை அறிந்து கொள்ள முடியும். இதற்கு நூலாசிரியர் காட்டுவதை வழிகாட்டுதலாக்கக் கொண்டால் ஓரளவுக்குக் கால வரிசையினைச் செய்து கொள்ளலாம்.

சங்க இலக்கியங்களை ஆழ்ந்து நுணுகிப் பார்க்கின்றபொழுது இச்சின்னங்களின் தோற்றத்தில் ஏற்பட்ட படிநிலை வளர்ச்சியையும் மறைமுகமாகச் சங்கப் பாடல்களின் தொன்மையையும் அறிந்துகொள்ள முடிகிறது என்பதால் இப்பண்பாட்டின் கூறுகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது.” (பக்கம்-19)

இரும்பின் கண்டுபிடிப்பும் அதன் பயன்பாடும் பண்பாட்டு வளர்ச்சியினை விரைவுபடுத்தியது. இதுமட்டுமல்லாது இரும்பின் பயன்பாடு படிநிலை வளர்ச்சியில் விரைவுபடுத்தியது அல்லது தாண்டியது என்று கூறும்படியான வளர்ச்சி தமிழகத்தில் நடைபெற்றதை நூலாசிரியர் சுட்டுகிறார்

வட தமிழகம் புதிய கற்காலத்தில் இருந்து இரும்பின் பயன்பாட்டினால் பெருங்கற்படைப் பண்பாட்டுக்கு மாறியது, ஆனால் தென் தமிழகம் அப்போது நுண்கற்கருவிக் காலப் பண்பாட்டில்தான் இருந்தது ஆனால் இரும்பின் கண்டுபிடிப்பும் பயன்பாடும், புதிய கற்காலத்தைக் கடந்து, தென் தமிழகத்தைப் பெருங்கற்படைப் பண்பாட்டை அடைந்தது.

இரும்பு கண்டுபிடிப்பு மனிதயின வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளது. நாகரிக வளர்ச்சிக்கு இரும்பு பயன்பாடு முதல்நிலை பெறுகிறது. தமிழகத்தில் காணப்பட்ட ஏற்ற இறக்கமான வளர்ச்சியினை ஒருங்கிணைந்து முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கு இரும்பின் பயன்பாடு முதன்மைக் காரணமாக இருந்தது. பழங்குடிகளின் மறைவும் நாகரிகத்தின் நுழைவும் இதன் மூலம் நிகழ்ந்ததை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமிழகம் தமது இயற்கைச்சூழலின் காரணமாகவும், கனிமவளத்தின் காரணமாகவும் இரும்பின் பயன்பாட்டிற்கு அறிமுகமாகும் வரை பல்வேறுபட்ட பண்பாட்டு வளர்ச்சி நிலைகளில் இருந்துள்ளது. எனவே, ஒட்டு மொத்தத் தமிழகமும் ஒரே பண்பாட்டு கூற்றினைக் கொண்டிருந்தது எனக் கருத இயலாது. அங்ஙனம் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இருப்பினும் இரும்பின் பயன்பாடு தமிழகத்தில் புகுத்தப்பட்டபொழுது அக்கனிமம் பரவலாகத் தமிழகத்தில் கிடைப்பதால் அதன் பயன்பாட்டின் மூலம் பெற்ற உற்பத்திப் பெருக்கம் தமிழகம் ஒருமுகப்பண்பாட்டினை நோக்கி அடியெடுத்து வைக்க உதவியது. இந்நிலைப்பாடு தமிழகத்தில் கி.மு ஆயிரத்தில் தொடங்கிவிட்டது எனலாம். இரும்பின் பயன்பாட்டினால் ஏற்பட்ட உற்பத்திப் பெருக்கம் மற்றும் உபரி உற்பத்தி சமூகத்தின் பல்வேறு வளர்ச்சி சென்றது. இது சமூகத்தின் கட்டமைப்பில் பல்வேறு குழுக்களின் நிலைக்கு எடுத்துத் தோற்ற எழுச்சியையும் மன்னர், வேளிர், வேந்தர் போன்ற அரசு உருவாக்கத்திற்கும் அடிகோலியது.” (பக்கம் -21)

தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு கி.மு. 1000 என்று இந்நூல் கூறுகிறது, ஆனால் அண்மைய கதிரியக்கக் காலக்கணக்கீடுகளின் மூலம் செய்யப்பட்ட ஆய்வுகள் தமிழகத்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருக்கிப் பயன்படுத்தக் கற்றுக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2025யில் வெளியிட்ட “இரும்பின் தொன்மை” என்கிற நூலின் முக்கிய ஆசிரியராக இந்த நூலாசிரியர் இருந்துள்ளார். பழைய நூல்களைப் படிக்கும் போது இத்தகைய புதிய தரவுகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தில் கிடைக்கப்பட்ட பழைமையான எழுத்து வடிவம் என்றால் அது சிந்துவெளி நாகரிகக் காலத்தில் கிடைத்ததே ஆகும். ஆனால் அந்த எழுத்தை இதுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் படித்து உணரமுடியவில்லை. அதே போல அங்கே காணப்படும் குறியீடுகளும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் படித்தறியபடவில்லை

அடுத்துக் கிடைப்பது பிராமி வரிவடிவம், ஆனால் இந்த வரிவடிவம் எதிலிருந்து தோன்றியது என்பது முடிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் கிடைக்கிற வரிவடிவம் தமிழ் பிராமி என்று அழைக்கப்படுகிறது. வட இந்தியாவில் கிடைத்த பிராமி வரிவடிவத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.

நம்நாட்டில் கிடைக்கும் குறியீடுகளில் 75 விழுக்காடு தமிழகத்திலேயே கிடைக்கிறது. அதனால் இந்தக் குறியீடுகளை முன்வைத்து எழுத்து வரிவடிவம் வளர்ச்சி பெற்றுள்ளதைப் பற்றிய ஆய்வு செய்வது தேவையானதாக இருக்கிறது.

சங்க இலக்கியத் தொடர்புடைய ஊர்களில் இத்தகைய குறியீடுகள் தனித்தோ, தமிழ்ப் பிராமி எழுத்துகளுடனோ காணப்படுகிறது. குறிப்பாகத் திருகாம்புலியூர், உறையூர், கரூர், கொடுமணல், அழகன்குளம், மாங்குளம், தேரிருவேலி, பேரூர், வல்லம், சானுர், ஆதிச்சநல்லூர், கொற்கை போன்ற இடங்களில் கிடைக்கின்ற குறியீடுகள் ஒத்தத் தன்மையுடையனவாக இருக்கின்றன. இதனை முன்வைத்து இந்நூலாசிரியர் கூறுவது கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

இக் குறியீடுகளிலிருந்து பிராமி வரிவடிவம் தோன்றியிருந்தால் இவ்வரிவடிவ உருவாக்கத்திற்குச் சொந்தக்காரர்கள் உரிமை உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டு கொள்ளவும் குறியீடுகளின் ஆய்வு பெரிதும் பயன்படும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.” (பக்கம் – 47)

வல்லம் என்னும் இடத்தில் நடைபெற்ற அகழாய்வில் நிலத்துக்குக் கீழ் அடுக்குகளில் குறியீடுகளும் அதற்கு மேல் அடுக்குகளில் தமிழ்ப் பிராமி  எழுத்துகளும் கிடைத்துள்ளது. தமிழ்ப் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடுகள் கிடைக்கின்ற இடங்களில் குறியீடுகள் பொறித்த பானை ஓடுகள் எண்ணிக்கையில் குறைந்து போயின. இதனைப் பார்க்கும் போது தமிழ்ப் பிராமி எழுத்து குறியீடுகளில் இருந்து வளர்ச்சி பெற்றதா? என்கிற கேள்வி எழுவதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார். மேலும், தகவல் பரிமாற்றத்திற்குக் குறியீட்டினைவிடச் சிறந்த கருவியாகத் தமிழ்ப் பிராமி வரிவடிவம் உருவானதால் குறியீடுகள் வழக்கில் இருந்து மங்கி விட்டனவா? என்கிற கேள்வியினை எழுப்புகிறார். இது ஒரு முக்கியமான முதன்மையான கேள்வி ஆகும்.

குறியீடுகளை ஆய்வு செய்யும் போது அதனிடையே காணப்படும் வடிவமாற்றங்களைக் கொண்டு கால மாற்றத்தில் ஏற்பட்ட வளர்ச்சியாகப் புரிந்து கொள்ளலாம். குறிப்பாகக் கொற்கையில் கிடைத்துள்ள குறியீடுகளைக் காணும் போது ‘’ என்கிற எழுத்து வரிவடிவத்தைப் பெறுவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

பண்டைய நூல்களில் பிராமி எழுத்துகளைக் குறிப்பிடுகிற இடங்களில் தமிழி என்கிற வரிவடிவம் தென்னகத்தில் வழக்கில் இருந்ததைக் குறிப்பிடுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கிடைக்கிற குறியீடுகளின் வளர்ச்சியில் தமிழி எழுத்து தோன்றியிருக்கலாம் என்கிற கருத்து உருவாகிறது. இந்தப் பார்வையினை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாது. அதனால் இத்தகைய ஆய்வு அவசியமானதாக இருக்கிறது. இதனை இந்நூலாசிரியர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

“மேற்கூறிய கருத்துகளின் அடிப்படையிலும், குறியீடுகளின் தன்மை, அளவு, வடிவம் ஆகியவற்றின் அடிப்படையிலும், இக்குறியீடுகள் தென்னகம் முழுவதும் பரவி இருப்பதாலும், குறிப்பாகத் தமிழகத்தில் அகழாய்வு செய்யப்பட்ட அனைத்து இடங்களிலும் இவை கிடைப்பதாலும், தமிழ்ப் பிராமி வரிவடிவங்களைப் போன்றே  இவையும் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளதாலும், தமிழ்ப் பிராமி வரிவடிவத்திற்குரிய முக்கியத்துவத்தை இக்குறியீடுகளும் பெற்றுத் திகழ்வதாலும், குறிப்பிட்ட சில குறியீடுகள் மட்டும் ஈமச்சின்னங்களில் கிடைப்பதாலும், அத்தகைய ஈமச் சின்னங்களில் எண்ணற்ற மதிப்புமிக்க தொல்பொருட்கள் கிடைப்பதாலும், தமிழ்ப் பிராமி வரிவடிவம் வழக்கில் வந்தவுடன் இக்குறியீடுகளின் பயன்பாடு குறைந்துவிடுவதாலும், பானை ஓடுகள், நாணயங்கள், கல்வெட்டுகள் மற்றும் மோதிரங்கள் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாக இவை வெளிப்படுவதாலும், சங்கக் காலத்திற்கு முன்பிருந்தே அதாவது சிந்து சமவெளிப் பண்பாடு தொட்டுச் சில வடிவ மாற்றங்களுடன் தொடர்ந்து இவை இருந்துவந்துள்ளதாலும் இக்குறியீடுகளைச் சாதாரணக் கீறல்கள் என எந்தவொரு ஆய்வாளராலும் ஒதுக்கிவிட இயலாது. எனவே, தமிழ்ப் பிராமி வரிவடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாகவே இக்குறியீடுகளும் சமகால மக்களின் எண்ணம் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என இதை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. தமிழகத்தில் இக்குறியீடுகள் பரவலாகக் கிடைப்பதால் இந்நிலையை இவை அடையப் பல்லாண்டு காலம் ஆகியிருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது.” (பக்கம் – 55-56)

ஐராவதம் மகாதேவன் தமிழ்ப் பிராமி கல்வெட்டுகளின் வரிவடிவத்தில் காணப்படுகின்ற ஒலிக் குறியீட்டின் அடிப்படையில் மெய்யெழுத்திற்கு இடப்படும் ‘புள்ளி’ புழக்கத்தில் வந்த காலத்தைக் கணக்கில் கொண்டு தமிழ்ப் பிராமி I, தமிழ்ப் பிராமி II, தமிழ்ப் பிராமி III எனப் பகுத்துள்ளார். ஐராவதம் மகாதேவன் ஆய்வுகளை முன்வைத்து இந்நூலாசிரியர் தொடக்கக் கால எழுத்து வடிவமான தமிழ்ப் பிராமி I தமிழகத்தில் மட்டும் காணப்படுவதாகக் குறிப்பிடுகிறார். இந்த ஆய்வை அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிட முடியாத வகையில் இருக்கிறது.

“புள்ளியியல் அடிப்படையில் ஆய்வினை மேற்கொண்ட ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழ்ப் பிராமி I கி.மு. 2ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் அதிகமாகவும் பின்னர்க் குறைந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வழக்கில் இருந்து மறைந்து விடுவதாகவும், தமிழ்ப் பிராமி II கி.மு. முதலாம் நூற்றாண்டுத் தொட்டுக் கிடைப்பதாகவும், மெய்யிற்குப் புள்ளியிடும் தமிழ்ப் பிராமி III முறை கி.பி.2ஆம் நூற்றாண்டில் வழக்கிற்கு வந்ததாகவும் கணித்துள்ளார் (Mahadevan 2003:232-233).

மேற்கூறிய முதல் இரண்டு வகை எழுத்துமுறையும் இணையாக இருந்த போதிலும் அசோகர் காலக் கல்வெட்டுகளில் II வகையாகவே காணப்படுகின்றன. அசோகர்-பிராமியிலிருந்து தமிழ்ப் பிராமி எழுத்து வரிவடிவம் தோன்றியது என்றால் நேரடியாக எளிதான தமிழ்ப் பிராமி II வரிவடிவமே தமிழகத்தில் புழக்கத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாகப் புதியதொரு சிக்கலான எழுத்து வரிவடிவமுறையை இங்குப் பயன்படுத்தவேண்டிய தேவையில்லை. மேலும் அசோகர்-பிராமியில் வழக்கத்தில் இரண்டாம் இல்லாத தமிழ்ப் பிராமி  எழுத்துமுறை கி.மு. நூற்றாண்டிலும், அசோகர்-பிராமி முறையில் காணப்படும் தமிழ்ப் பிராமி II கி.மு. முதலாம் நூற்றாண்டிலும் எவ்வாறு வந்தன என்பதற்கான வழிமுறைகள் கூறப்படவில்லை. அசோகர்- பிராமியிலிருந்து தமிழ்ப் பிராமி II வந்திருந்தால் தமிழ்ப் பிராமி I எங்கிருந்து வந்தது என்பதை நாம் குறிப்பிட வேண்டும்.” (பக்கம் 62-63)

இத்தகைய பல்வேறு விளக்கங்களின் இறுதியில் இந்நூலாசிரியர், தமிழகத்தில் கிடைக்கும் பழந்தமிழ் வரிவடிவங்களான தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகள் அசோகர் காலத்திற்கும் முற்பட்டவை என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என்கிறார். இந்த ஆய்வுகளின் அடிப்படையில் “தொன்மைத் தமிழ் எழுத்தியல்” (குறியீடுகளிலிருந்து தமிழ்-பிராமியை (தமிழி) நோக்கிய பயணம்) என்கிற நூலை 2018 ஆம் ஆண்டில் இந்நூலாசிரியர் எழுதி வெளியிட்டுள்ளார்.

இறுதி இயல்களான, வணிகம், தொழில்நுட்பம் ஆகியவைகளையும் நூலாசிரியர் தொல்லியல் அடிப்படையில் விவரித்து நிறுவியுள்ளார். சங்கக் காலத் தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கும் வணிகத்துக்கும் அன்றைத் தொழில்நுட்பமே காரணமாகும். இக்காரணத்தை இறுதி இயல் விளக்குகிறது. அன்றைய பொருளாதார வளர்ச்சியைப் பற்றி நூலாசிரியர் கூறுவது கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

“ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது அந்நாட்டில் கிடைக்கும் இயற்கை வளங்களை உயர்ந்த தொழில் நுட்பத்தின் மூலம் உற்பத்திப் பொருட்களாக மாற்றி அவற்றை உள்நாட்டின் பயன்பாட்டிற்கும், வெளிநாட்டின் தேவைக்கும் அளித்து அதன் மூலம் பெறப்படும் உபரி வருவாயை ஒட்டு மொத்தச் சமூக வளர்ச்சிக்குப் பயன்படுத்துவதே ஆகும். இதில் மனிதச் சக்தியை முறையாகப் பயன்படுத்துதல் என்பது இன்றியமையாததாகும்.”

எத்தகைய ஆதாரங்கள், தரவுகள் இன்று புதியதாக வந்தாலும் இந்நூல் தனித்துச் சிறப்பிடம் பெற்றுள்ளது. இன்றைய ஆய்வுகள் இந்நூல் அடிப்படையில் தொடர வேண்டியுள்ளது, அதனால் இந்த நூல் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தாலும் இன்றும் படித்து உணர வேண்டியதாக இருக்கிறது. குறிப்பாகத் தமிழி எழுத்து பற்றிய ஆய்வை இந்த நூல் அடிப்படையில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிறைவு செய்ய வேண்டும். இந்தப் பணி இன்று அவசிய, அவசரமானது. தமிழகத்தில் இரும்பின் தொன்மையினை வெளிப்படுத்தியது போல, தமிழி எழுத்தின் தொன்மையினை வெளிக்கொணர வேண்டும். இந்தப் பணிக்காக அனைத்துத் துறைசார்ந்தவர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்:  தொல்லியல் நோக்கில் சங்ககாலம்
ஆசிரியர்:  முனைவர் கா.ராஜன்
வெளியீடு:  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் /  2024
விலை:  ₹.125/-
அறிமுகம் எழுதியவர்:    அ.கா.ஈஸ்வரன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *