நூல் அறிமுகம்: பேரா. கயல் எழுதிய “ஆரண்யம்” – அன்பூ

நூல் அறிமுகம்: பேரா. கயல் எழுதிய “ஆரண்யம்” – அன்பூ

ஆரண்யம்
நிலம், மண், வயல், மரம், செடி, கொடி, பூ, காற்று, குருவி, மயில், யானையென்று காடும் காடு சார்ந்த உயிர்களுமாக… வனாந்திரத்தின்
வாசத்தில் உயிர்ப்பூத்துத் தளும்பி… வாசிக்கும் இதயங்களை…இயற்கையின் பேரன்பில் துவட்டியெடுத்துப் போகிறது… இந்த ஆரண்யம்.
//எதிர்ப்பட்ட பின்
கடப்பது கடினம்
காதல்
கடவுள்
காடு//….
என்ற கவிஞரின் வரிகளைப்  போலவே…
இந்த ஆரண்யத்தை வாசித்துக் கடப்பதும் …மீள்வதும் கூட…அத்தனை எளிதல்ல.
காதலும் கடவுளும் காடும்
ஒருவரின் வாழ்வில் எதிர்ப்படுவதென்பதே
பெரும் பேறெனும்போது…
அதனைக் கடந்து விடுவதென்பது அத்தனை எளிதான செயலாயென்ன…?!
எத்தனை பூக்கள்… எத்தனை .. மரங்கள்… எத்தனை ஊர்கள்.. அப்பப்பா… மண்ணில் பூக்கும் அத்தனையும் …நம் மனதில் பூக்கவைத்து விடுகிறது ஆரண்யம்.
புத்தகம் முழுக்க மண் மணத்துக் கிடக்கிறது. காடு மலர்ந்து மணக்கிறது. நதியும் நதியிலாடும் கூழாங்கற்களும், அருவியும்… குருவியுமாய் பண்ணிசைக்கும் பச்சையம் போர்த்திய பசுமைக் காடுகளுமாய்…
இந்த அடர்வனத்துக்குள் நுழைந்த மனம்…அகலமுடியாது அசைத்துப் பார்க்கிறது அகத்தை.
காடும் காடு சார்ந்த இடமுமாக முழுக்க முழுக்கக் காட்டின் மொழி பேசும் ஆரண்யத்திலிருந்து
சில ஆபரணங்கள்…
// வட்ட வட்டத் திருவோடாய்
 நிலத்தின் வெடிப்பு.
பட்டணத்தில் பெருமை
கள்ளுக்கு வழியற்றுச்
சாராயத்துக்குப் பழகிப்போன
எல்லைச்சாமிகள்//
❤️…வெடித்து வெறுமை பாரித்துக் கிடக்கும் விளைநிலம் விட்டு பிழைப்புக்காய் பட்டணத்தில் ஒட்டிக்கொண்டு..உயிர் வளர்க்கும் பரிதாபம்..சாமியையும் விட்டுவைக்காத துயரக்காடாய்…வரிகள்…
நெஞ்சைப் பிழிகின்றன.
//பூமியை வருடியபடி
மரத்தடியில் கிடக்கும்
மாம்பூக்கள், பவளமல்லி,
மரமல்லி, பூவரச மலர்களை
மிதிக்கத் துணியாமல்
தாண்டவும் இயலாமல்
தடுமாறும் கால்களில்
காணக் கிடைக்கிறது
காடுகள் வாழ்வதற்கான நம்பிக்கை//
//கொப்பும் குலையுமாகப்
பூக்கள் காய் கனிகளோடு
தாய்மை தளும்ப நிற்கும் ஒரு
மரத்தின் கீழமர்ந்து
அண்ணாந்து பார்த்தால்
எம் மனிதனும் புத்தன்.
எந்த மரமும் போதி//
// எல்லாமிழந்தது தானா
நம் அடுக்குமாடிக் குடியிருப்பாக இருக்கவேண்டும்
மிக அருகில் மிக அருகில்
என்ற கூவல் எப்போதும் மருத்துவமனை அருகேயுள்ள
இடுகாட்டில் இருந்து//
❤️….. இருக்கின்ற மிச்சசொச்ச காடுகளையும் ஈவிரக்கமின்றி அழித்தொழித்து…அத்தனையும் கான்க்ரீட் காடுகளாக்கி நகரத்து வாழ்வாதாரத்தில் வெறுமைக்குப் பறிகொடுத்த நாட்களோடு
வறுமையைக் கட்டியழும்
துன்பியலும்…
இயற்கையை அழிப்பதால்
இழுத்துப் போர்த்திக் கொள்ளும் இழிநிலைகளுமாக…
தன் இதயம் வடிக்கும் இரத்தக் கண்ணீரை வார்த்தைகளில் வடித்திருக்கிறார்.
//கோடிச் சுடரென நீர் தெறிக்க
புனலாடிக் குளித்திருந்த யானை புரியாமல் பார்க்கிறது
நகர் வந்த நாளாய்ப்
பாகன் தன்னை நீராட்டும்
ஓரங்கள் நசுங்கிய வாளியை//
//பரணி பாடிய புலவன்
தனிமையில்
எப்படியெல்லாம் கதறியிருப்பான் யானைகளை நினைத்து//
// மாதங்கம் களபம் கரிமா களிறு என யானைச் சொற்கள் அறுபதுண்டு
தும்பிக்கை நீட்டி
சில்லறைக்காசு பெறும் யானைக்கு என்ன பெயர் வைக்கலாம்?//
//தன்னை அண்ணாந்து
பார்க்கும் சிறுமி
தவறவிட்ட தன் குட்டியை
நினைவூட்ட
சுரக்கும் பால்மடி கனக்கத்
தள்ளாடியபடி ஆசீர்வதிக்கும் கோயில் யானை//
ஆரண்யம்: Aranyam (Tamil Edition) eBook: Kayal, கயல்: Amazon.in: Kindle Store
❤️…வானளாவிய வனத்துக்குள்
தன் எண்ணம்போல் குளியலாடிக் களித்த யானைகள்…வாளிகளில் மோந்தெடுத்தத் தண்ணீரில் உடல் நனைத்துக் கொள்ளும் நகரத்துக் கொடுமைகளில் சிக்குண்ட யானையின் பரிதாபம்…
ஒரு சிறுமியைப் பார்த்துத் தாய்மடி சுரக்கத் தன் குட்டியை நினைவூறும் யானை…
தன் பெருமைகளுக்கேற்ப அறுபது நாமங்களைத் தாங்கி நின்றாலும்
சில்லைறைக்குக் கையேந்தும் யானைக்கு என்ன பெயர் வைக்கவென்று…
யானைகளின் பெருமைகளையும்..
சில மனிதமற்ற அரகர்களால்
துன்பியல் சுமக்கும் யானைகளின்
துயரக்காடாகிப் போன பிறவிப்பயன்களையும் கண்டு சினம் கொண்ட வரிகள்…வாசிப்போரின் நெஞ்சைப் பிளக்கின்றன.
// அத்தியூர் அரசம்பட்டி ஆலந்க்குளம் விளாத்திகுளம் வேப்பங்குளம்
தாண்டிக்குடி தாழையூத்து என
மரத்தின் பெயரால் ஊர்களை அழைத்தவர்கள் நாம்.
இன்றும் ஊர்ப்பெயர்களில்
மரங்கள் இருக்கிறது தானே/
// செவி சொக்கும் பண்ணெழுப்பும்
கருப்பு வெள்ளைக் குருவி
“நீ வண்ணமற்றக் குருவியெனும் பெயர் மருவி வண்ணாத்திக் குருவியானாயோ?”
என்றேன்.
விசும்பும் பறவை,
“இன்னும் போகவில்லையே உங்கள் நிறவெறி” என்றது//
// மனிதனிடமிருந்து காட்டைக் காக்க அவனைவிடக் கொடிய உருவாய் எதைத் தேர்வதென
இன்றுவரை புரியவேயில்லை பறவைகட்கு//
// சிறு கூடு கட்ட
செத்த மரத்தை மட்டுமே
சிதைக்கும் மரங்கொத்தி.
பச்சை மரத்தை வெட்டிப் பல பறவைகள் கூடழிக்கும்
‘மனித’ அறிவற்று//
// என்ன பயங்கரக் கனவு கண்டு
அலறுகிறது இந்தக் காடு//….
❤️…மரங்களின் பெயர்களில் ஊர்களின் பெயர்கள் மணத்துக்கிடந்த காலங்கள் ஒழிந்து…இப்போது ஊபெயரில் மட்டுமே மரங்களின் பெயர்கள் தங்கியிருக்கும் கொடுமையைச் சொல்லும் வரிகளில் காடறுந்துபோன ஆதங்கத்தின்
கண்ணீராய் வழிகிறது.
கனவில் மனிதனைக் கண்டு காடு அலறுவதும்…
மனிதனிடமிருந்து காட்டினைக் காக்க அவனை விடக் கொடிய மிருகமாய் எதைத் தேர்வு செய்வதென மயங்கும் பறவையும்…
மனம் நொறுங்குகிறது.
ஒரு மரங்கொத்தி கூட தன் கூடமைக்க செத்த மரத்தைத் தான் தேர்வு செய்யும். பச்சை மரத்தை வெட்டிச் சாய்க்கும் மனிதப்பயலின்
அறிவு அதற்கில்லை என்கிறார்.
எவ்வளவு கொஞ்சியும் தான் வாழ்ந்த வனத்தையே வழிநெடுகத் தேடும் முயல்குட்டி, கூழாங்கற்களிடம் தீராக் கதை பேசியபடி நீரிலாடிக் களிக்கும் பசுமரத்து வேர், பனித்துளி பிரதிபலிக்கும் பூவைப் பார்த்து எதில் தேனெடுப்பதெனத் தடுமாறும் சாமந்திப் பூ இலையிலமர்ந்த வண்ணத்துப்பூச்சி….
வண்ணமற்ற குருவிதான் வண்ணாத்திக் குருவியானதோ…
என்று வரிக்கு வரி…இயற்கையின் பெருமையும் வளமையும்
அவசியமுமாக…இயற்கையைப் போற்றுதலின் இன்றியமையாத் தேவைகளையும் எடுத்தாண்டிருக்கும் விதத்தில்
சமூக நலனில் தனக்குள்ள கோபங்களையும் குமுறல்களையும்
அக்கறையையும் ஆதங்கத்தையும்
பளிச்சிட்டுக் காட்டுகிறார்..ஆசிரியர் கயல்.
எல்லோரும் மிக மிக அவசியமாக வாசிக்க வேண்டிய…சிந்தனையைச் செப்பனிடும் அற்புதமானதொரு கவிதைத் தொகுப்பு இது.
அன்பூ
நூல்: ஆரண்யம்
ஆசிரியர்: பேரா. கயல்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *