இந்தியப் பெண் விஞ்ஞானிகள் -பேரா.சோ. மோகனா ( india pen vingnaigal - Prof.Mohana)

பேராசிரியர் சோ மோகனா அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் அறிவியல் வானவியல் என பல தளங்களில் பயணிப்பவர் 38 ஆண்டுகளாக விலங்கியல் துறைப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பொறுப்பு முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருபவர் தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் மாநில செயற்குழு உறுப்பினர் இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில குழு உறுப்பினர் வானவியலில் சிறந்த செயல்பாட்டாளர் தற்போதும் தினமும் 100 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்காக உழைத்துக் கொண்டே இருப்பவர் அவர் எழுதிய இந்தியப் பெண் விஞ்ஞானிகள் 10 பேரில் வாழ்க்கை வரலாற்றை அடக்கிய நூல் இது.

ஆணும் பெண்ணும் சமம் என்றாக்கினால் அறிவினில் ஓங்கி இவ்வையம் தழைத்திடும் என்ற பாரதியின் வரிகளும் ஆண் பெண் சமத்துவமே அறிவுக்கண்ணைத் திறந்திடும் குடும்ப விளக்கு என்ற பாரதிதாசனின் சிந்தனையும் சமூகத்தில் எதிரொலித்திடத் துவங்கியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அறிவியலின் துணை இன்றி வாழ்வின் நகர்தல் சத்தியமற்றுப் போய்விடுகிறது.

உலகெங்கிலும் கொண்டாடப்படும் விஞ்ஞானிகளைப் பற்றி வாசிக்கையில் நம் தேசத்திலும் அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் முளைத்திடாதா உலகம் அவர்கள் பெயரை உச்சரித்து மகிழ்ந்திடாதா என ஏங்கித் தவிக்கும் மனநிலைக்கு நாம் ஆட்பட்டு விடும் சூழலில் நிற்கிறோம்.

நமக்கு அறிவினைப் புகட்டி உலகத்தைப் பற்றி வெளிச்சமிட்டுக் காட்டி நம்மை உயர்ந்த தளத்தில் நிற்க வைக்கும் கல்வி முறைகளும் நம் தேசத்தின் விஞ்ஞானிகள் பற்றிய வரலாற்றை இடம்பெற்று வாசிக்க வைக்கின்றனவா என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியம்.

நம் நாட்டிலும் அறிவியல் துறையின் சிறப்பான ஆய்வுகள் மேற்கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி தேசத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் அன்றாட வாழ்வின் மேம்பாட்டிற்கும் சுகாதாரத்தின் மேன்மைக்கும் உதவி செய்யும் விஞ்ஞானிகள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

தேசம் விடுதலைக்குப் பிறகான நாட்களில் போடப்பட்ட திட்டங்களும் செயல்பாடுகளும் மக்களின் வறுமை நிலையை மேம்படுத்தி பொருளாதார ரீதியிலும் கட்டமைப்பு ரீதியிலும் முன்னேற்றிக் கொண்டு வரும் நிலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவமான நிலை என்பது முற்றிலுமாக முன்னேறவில்லை. இன்றைய காலகட்டத்திலும் பெண்ணுக்கான உரிமைகள் முழுவதுமாக கிடைக்காமலும் தனது கனவுகளும் ஆசைகளும் லட்சியங்களும் ஈடேற அவர்கள் குடும்பத்திற்குள்ளும் சமூகத்திலும் போராடி தமக்கான தடைக்கற்களைத் தாண்டி வெளிவர வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆணாதிக்கத்தின் நீளும் கொடுங்கரங்களில் இருந்து விடுபட்டு வெளியேற கல்வியும் தன்னம்பிக்கையும் பெண்களுக்கு அணி சேர்ந்து உதவுகின்றன.

விடுதலைக்கு முன்பான 1900 களில் மக்களின் நிலையை எண்ணுகையில் ஒரு பக்கம் வறுமையின் பிடி அவர்களை வாழ விடாமல் இறுக்கிப்பிடிக்க மறுபுறம் அடிமைத்தனமும் விடுதலை வேட்கையும் அவர்களின் அன்றாட நகர்வை நசுக்கப் பார்க்க கல்வியின் தடங்களை அறிய முடியாமலேயே காலத்தை நகர்த்தி விட்ட கொடுமையில் வளர்ந்தது தேசம். அத்தக சூழலில் கல்வியின் வழியே போராடி தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த கிடைத்திட்ட நல்வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு புறவெளியில் பறந்தே படித்திட்ட பெண்களைப் பற்றியும் அவர்களின் முயற்சிகளுக்காக அவர்கள் சந்தித்த இடர்கள் பற்றியும் இளைய தலைமுறைகளுக்கு எடுத்துக்காட்டும் நூலாக மலர்ந்திருக்கிறது இந்தியப் பெண் விஞ்ஞானிகள் நூல்.

ஆண்களுக்கு இணையாக அறிவிலும் கண்டுபிடிப்புகளிலும் பெண்களாலும் முடியும் என்பதை வாய்ப்புகள் கிடைக்காத தருணங்களிலும் முட்டி மோதி நிரூபித்திருக்கும் பத்து இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் கண்டுபிடிப்புகளின் பட்டியலையும் வாழ்வின் நிகழ்வாக்கித் தந்திருக்கிறார் பேராசிரியர் சோ மோகனா.

100 வருடங்களுக்கு முன் பெண்கள் குடும்பத்தை விட்டு நகர்ந்து கல்வி மருத்துவம் அறிவியல் படிக்கவும் ஆராய்ச்சிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் வெளியிடங்களில் பணிபுரியவும் நிறைய சமூகத் தடைகளை எதிர்கொண்டு இருப்பர். அவற்றைத் துறந்து லட்சியத்தை நோக்கி உழைப்பே பெரிது என்று சாதனை புரிந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளையும் அதற்கான தேவைகளையும் இளைய தலைமுறையினர் உணர வேண்டும். அதன் வழியே தமக்கான கனவுகளை கட்டமைத்துக் கொள்ளவும் லட்சியங்களின் வழி தேசத்தின் வளர்ச்சிக்கு உதவவும் முயற்சிக்க வேண்டும். பாடத்திட்டங்களில் அரசுகள் தேசத்தின் பெண் விஞ்ஞானிகளின் வரலாற்றை இடம்பெறச் செய்து எல்லோருக்கும் கொண்டு செலுத்த வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணமே இந்த நூலை உருவாக்கிட உந்துதலை கொடுத்துள்ளது

நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானியிடமா காணப்பட்ட ஆண் பெண் பேதம் எப்படி பெண்ணை வேலைக்கு சேர்க்காமல் நீக்கியது என்பதையும் அதை அப்பெண் சத்தியாகிரகம் என்னும் காந்தியின் அகிம்சை போராட்டம் மூலம் 10 நாட்கள் மௌன விரதம் இருந்து எதிர் கொண்டு வெற்றி பெற்றார் என்பதையும் விளக்கும் நிகழ்வை வாசிக்கையில் படித்தவர்களிடமும் மனதில் பசை போல ஒட்டிக்கொண்ட பெண் அடிமைத்தனம் வெளிச்சத்திற்கு வருகிறது.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக விளங்கிட தனது குழந்தையின் இறப்பே வழிகாட்டியாக அமைந்ததைக் கொண்டு 19 வயதில் மருத்துவராக பணி ஏற்கிறார் ஆனந்திபாய் ஜோஷி. ஆனால் அவரது ஆஸ்துமா நோய் அவரை 22 வயதிலேயே மறைய வைக்கிறது.

இந்தியாவின் சர்க்கரைப் பெண் என புகழ்பெற்ற விஞ்ஞானி ஜானகி அம்மாள் சாதிப்பிரச்சனைக்கு ஆட்பட்டு அவமானம் அடைகிறார். அவர் உட்கார்ந்த இடத்தை தண்ணீர் விட்டுக் கழுவிய பின்பே மற்றவர்கள் பயன்படுத்தினர் என்பதை வாசிக்கையில் விஞ்ஞானிக்கும் தீண்டாமையின் விளைவுகள் நெருக்கடியை கொடுத்து இருக்கின்றன.

இப்படியாக நூலில் உள்ள 10 விஞ்ஞானிகளும் தமது வாழ்வில் பற்பல தடைகளையும் சோதனைகளையும் சந்தித்து தனது லட்சியத்தை அடைகின்றனர் விடாமுயற்சி தன்னம்பிக்கை எடுத்த செயல்கள் சிறப்படையும் வரை தொடர்ச்சியாக முயற்சியில் ஈடுபடுதல் குடும்பத்தையும் நல்ல முறையில் பேணிப் பாதுகாத்தல் என பன்முகத் திறன்களைக் கொண்டே தம்மை உலகில் நிலை நிறுத்திக் கொண்டுள்ளனர்

எதிர்வரும் தலைமுறையினரிடம் காணப்படும் வேகமும் சகிப்புத்தன்மையின்மையும் பொறுமையற்ற நிலையம் அவர்களின் எதிர்காலத்திற்கான பாதைக்கு இடையூறுகளை ஏற்படுத்த கூடும். அத்தகு நிலையில் இது போன்ற நூல்களின் வழியே அவர்கள் தங்களின் திறமைகளை உணர்ந்து கொண்டு காலத்தைச் சிறப்பாக கைக்கொண்டு லட்சியங்களை அடைய வேண்டும் என்ற நூலாசிரியரின் எண்ணம் வாசிப்போரிடையே நல்லதொரு மாற்றத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

நூலின் தகவல்கள் 

நூல் : இந்தியப் பெண் விஞ்ஞானிகள்

நூலாசிரியர் :பேரா.சோ. மோகனா

வெளியீடு :  பாரதி புத்தகாலயம்

முதல் பதிப்பு : டிசம்பர் 2023

விலை : ரூபாய் 130

தொடர்பு எண் :44 2433 2924

நூலறிமுகம் எழுதியவர் 


இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *