இந்திய நியூட்ரினோ- சிதைவு பரிசோதனைகளின் முன்னோடி பேராசிரியர் நாபா குமார் மொண்டல் (Naba Kumar Mondal)
தொடர் : 32 இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100
பேராசிரியர் நபா குமார் டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இந்தியாவினுடைய நியூட்ரினோ பற்றிய ஆய்வுகளில் மிக சிறந்த இடத்தை அவர் பிடித்துள்ளார். கல்கத்தாவிலுள்ள சாஹா இன்ஸ்ட்டிட்யூட் ஆப் நியூக்ளியர் ஃபிசிக்ஸ் என்னும் நிறுவனத்தில் நபா குமார் ஒரு முக்கிய விஞ்ஞானியாக தொடர்கிறார். உலக அளவில் பிரசித்தி பெற்ற CERN தொடர்புடைய LARGE HADRON COLLIDER ஹிக்ஸ் போஸான்ங்களை கண்டுபிடித்த ஆய்வில் நம் நாட்டின் சார்பாக பங்கேற்ற முக்கிய விஞ்ஞானி நபா குமார் ஆவார்.
இந்தியாவின் நியூட்ரினோ ஆய்வு கனவுகளை சுமக்கும் அற்புத மாமனிதர் நபா குமார். இவர் 1985 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு அமெரிக்காவின் ஆர்கோன் நேஷனல் ஆய்வகத்தில் வருகைதரும் விஞ்ஞானியாக பணியாற்றிய பொழுது இரண்டாம் தலைமுறை நியூகிளீயோன் சிதைவை கண்டறியும் கருவியை வடிவமைத்தார். இந்த கருவியின் பெயர் தான் SOUDAN 2 என்பது. அமெரிக்காவின் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்திற்கு நீண்ட பயணமாக சென்ற பொழுது பேராசிரியர் நபா குமார் அங்கே பெர்மி ஆய்வகத்தில் COLLOIDER டிடக்டர் வசதிக்காக CDF துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செலுத்தினார். இந்த சோதனைக்கான முன்னோக்கி கண்காணிப்பு அறையில் வடிவமைப்பு மற்றும் புனரமைப்பு முழுவதுமே அவருடைய சொந்த முயற்சி ஆகும். இயற்பியல் பகுப்பாய்வில் ஒப்பற்ற உலக அளவிலான விஞ்ஞானியாக அவர் இன்று போற்றப்படுகிறார்.
1991 ஆம் ஆண்டு அவர் D 0 அல்லது D ZERO என்று அழைக்கப்படும் டெவட்ரான் (Tevatron) மோதியை பெர்மி ஆய்வகத்தில் உருவாக்கி இயற்பியலின் துகள் இயல் சார்ந்த பொது மாதிரியை – STANDARD MODEL – ஆய்வுக்கு உட்படுத்துவதில் உலக அளவில் பங்காற்றினார். 1995 ஆம் ஆண்டு அதே பெர்மி ஆய்வகத்தில் குவார்க்கு என்று அழைக்கப்படும் அணுவின் துகள் உறுப்புகளை கண்டுபிடித்த மிகப்பெரிய விஞ்ஞானிகளின் குழுக்களில் ஒருவராக இடம் பெற்றிருந்தார். ஹாட்ரான் (Hadron) கேலரி மீட்டர் என்கிற கருவியை கண்டுபிடித்து அதோடு அதை சரியாக கையாளவும் நபா குமார் பெரிய அளவில் CERN ஆய்வகத்திற்கு உதவினார். ஹிக்ஸ் போஸான்ங்கள் குறித்த 2012 ஆண்டே கண்டுபிடிப்பில் இந்தியாவிலிருந்து வழங்கப்பட்ட ஒரே விஞ்ஞானியின் பெயர் நபா குமார் என்பது இங்கு பதிவு செய்யத்தக்கது. அதன் பிறகு அவர் இந்தியாவினுடைய நியூட்ரினோ சம்பந்தப்பட்ட ஆய்வுகளில் ஈடுபட நம் நாட்டிற்கு வந்து பெரிய மிக அவசியமான ஆய்வக அறிவுடன் பணியாற்றத் தொடங்கினார்.
நியூட்ரினோ என்றால் என்ன? அதில் நபா குமாரின் பங்களிப்பு என்ன? நியூட்ரினோ என்பது ஒரு பெர்மியன் துகள் ஆகும். நிறை பூச்சியம் கொண்ட ஒரு அடிப்படைத் துகள் ஆக நியூட்ரினோ வர்ணிக்கப்படுகிறது. பலவீனமான தொடர்பு மற்றும் ஈர்ப்பு விசை மூலம் மட்டுமே இதை தொடர்பு கொள்ள முடியும். நியூட்ரினோ மின்னியல் நடுநிலையாக இருப்பதாலும் அதன் ஓய்வு நிறை மிகவும் சிறியதாக இருப்பதாலும் பூச்சியமாக இருக்கும் நிறை உடைய நியூட்ரினோவை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல…
நியூட்ரினோவின் எஞ்சிய நிறை மற்ற அறியப்பட்ட அடிப்படை துகள்களை காட்டிலும் மிகவும் பலவீனமாக உள்ள நிறையில்லாத துகள்களை எப்படி நாம் அடையாளம் காண்பது இந்த நிறைவேற்ற துகள்களை துரத்திக் கொண்டு போய் நபா குமார் வெற்றி பெற்றிருக்கிறார். நியூட்ரினோவினுடைய சரியான சிறிய நிறை மற்றும் ஈர்ப்பு மற்றும் அது மற்ற துகள்களுடன் வைத்திருக்கும் தொடர்பு ஆகியவற்றை கண்டறிய முடியுமென்றால் நாம ஒரு அணுவுக்கு உள்ளே நடக்கும் ஆக சிறந்த கடவுளின் ரகசியத்தை கண்டுபிடித்துவர்கள் ஆவோம் என்பதுதான் விஞ்ஞானிகளின் தற்போதைய நிலைப்பாடு.
நியூட்ரினோக்கள் மூன்று வகையாக பெயரிடப்படுகின்றன. முதலாவதாக எலக்ட்ரான் நியூட்ரினோக்கள் இரண்டாவது மியுன் நியூட்ரினோக்கள் மூன்றாவதாக டவ் நியூட்ரினோக்கள். ஒவ்வொரு வகை நியூட்ரினோவும் அதற்கேற்ப பெயரிடப்பட்ட சார்ஜ் லைப் அணு துகளுடன் தான் உடன் தொடர்புடையது ஆகும். நீண்ட காலமாக நியூட்ரினோக்கள் என்பவை இருப்பதற்கு சாத்தியமில்லை என்று கருதப்பட்டது. மதிப்புகளைக் கொண்ட மூன்று தனித்த நியூட்ரினோ நிறைகள் உள்ளன என்பது நபா குமாரின் கண்டுபிடிப்பாகும். ஆனால் தனித்தன்மையுடன் ஒத்துப் போகாத இந்த மூன்று வகை நியூட்ரினோக்களை மேலும் ஆராய வேண்டியுள்ளது. வேறு சில நடுநிலை நியூட்ரினோக்களும் இருக்கலாம் என்பது நபா குமாரின் சந்தேகம். பீட்டா சிதைவு எதிர் வினையாக்கம் என்கின்ற முக்கியமான ஆய்வை மேற்கொள்ளும் பொழுது தான் நியூட்ரினோக்கள் பற்றிய உண்மையான ரகசியங்கள் வெளிவர முடியும்.
ஒரு நியூட்ரினோவிற்கும் அதன் எதிர் துகளான அண்ட் டி நியூட்ரினோ எனப்படும் எதிர்த்துகளுக்குமான சுழர்ச்சி எதிர் எதிர் திசைகளில் நடப்பதாக நபா குமார் கண்டுபிடித்திருக்கிறார்… இந்த இரண்டிற்குமே லைப் மாஸ் நம்பர் என்று சொல்லப்படும் ஒரு இயற்பியலின் அடிப்படை எண்ணை மாறிலியாக வழங்குகிறார்கள் எலக்ட்ரான் நியூட்ரினோக்கள் பாசிட்ரான்ங்கள் அல்லது எலெக்ட்ரான் எதிர் நியூட்ரினோ எனப்படும் அண்ட்டி நியூட்ரினோக்கள் உடன் மட்டுமே தோன்றுகின்றன.
நபா குமாரின் ஏனைய கண்டுபிடிப்புகள் மிகவும் சுவாரஸ்யமானவை இந்த நியூட்ரினோக்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன. நியூட்ரினோக்கள் பல்வேறு கதிரியக்கச் சிதைவுகளால் உருவாக்கப்படுகின்றன. அணுக்கருக்கள் அல்லது பீட்டா சிதைவு ஏற்படும் பொழுது நியூட்ரினோக்கள் வெளியேறுகின்றன. ஒரு நட்சத்திரத்தின் மையப்பகுதியில் நடப்பது போன்ற இயற்கை அணுக்கரு எதிர்வினைகள் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்யும் அல்லது நாம் இன்று பார்க்கும் அணு உலைகள் யுத்தங்களின் போது பயன்படுத்தப்படும் அணுகுண்டுகள் அல்லது துகள் முடுக்கிங்களில் செயற்கை அணு எதிர்வினைகள் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நியூட்ரினோக்கள் வெளியேறும். வானில் ஒரு சூப்பர் நோவா வெடித்து சிதறும் பொழுது நியூட்ரினோக்கள் வெளியேறுகின்றன. அதை தவிர நபா குமாரின் கூற்றுப்படி காஸ்மிக் கதிர்கள் அல்லது முடிக்கப்பட்ட துகள் கற்றைகள் இவை காற்றில் உள்ள அணுக்களை தாக்கும் பொழுது நியூட்ரினோக்கள் உருவாக்கப்படுகின்றன. பூமியின் உட்புறத்தில் நியூட்ரினோக்களை டோமோகிராபிக் ஆய்வுகள் செய்ய நாம் பயன்படுத்தலாம்.
செயற்கை முறையில் நியூட்ரினோக்களை உருவாக்கி அவற்றை ஆய்வு செய்வதுதான் நபா குமாரின் நோக்கமாகும். 2018 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கேட்டின் பரிசோதனை சில தரவுகளை அனுப்பத் தொடங்கியது. அந்த தரவுகளை உலக அளவில் புரிந்துகொள்ள அவர்களுக்கு நபா குமார் தேவைப்பட்டார் என்னுமளவிற்கு உலக பிரசித்திபெற்ற நியூட்ரினோ விஞ்ஞானியாக இவர் அறியப்படுகிறார். பூமிக்கு அடியில் ஒரு கிலோமீட்டர் ஆழத்தில் பாறைகளால் சூழப்பட்ட இடத்தில் காஸ்மிக் அலைகளை கதிர்வீச்சு அடிப்படையில் மிக வேகமாக செலுத்தி நியூட்ரினோக்கள் எப்படி நடந்துகொள்கின்றன என்பதை ஆய்வு செய்தால் இந்த பிரபஞ்சம் தோன்றிய அந்த பெரு வெடி காலத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதற்கான ரகசியத்தை கண்டுபிடிக்க முடியும்.
வானில் இருந்து எப்போதும் மில்லியன் கணக்கான நியூட்ரினோக்கள் நம் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.. சூரியன் பில்லியன் கணக்கான நியூட்ரினோக்களை ஒவ்வொரு நொடியும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இவைகளுக்கு சூரிய நியூட்ரினோக்கள் என்ற பெயர். இந்த நியூட்ரினோக்களை நாள்தோறும் ஆய்வு செய்வதுதான் நபா குமார் போன்றவர்களின் முக்கியமான வேலை. இப்படியான ஆய்வுகளில் ஈடுபடும் பொழுது இந்தியாவினுடைய நியூட்ரினோ ஆய்வகம் என்பது ஒரு பிரம்மாண்டமான திட்டமாக உருவாகி இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முதலில் கோலார் தங்க வயல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கோலார் தங்க வயலில் நடத்தப்பட்ட மிக முக்கியமான ஆய்வுகளின்போது நபா குமார் புரோட்டான் சிதைவு குறித்த ஆய்வை மேற்கொண்டு உலக அளவில் பிரசித்தி பெற்றார். உலகங்களும் நியூட்ரினோ ஆய்வகங்களை அமைக்க தற்போது ஒரு வல்லுனராக நபா குமார் அழைக்கப்படுகிறார். நம்முடைய தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிபாகத்தில் பொட்டிபுரம் என்கிற ஒரு கிராமத்தை தேர்வு செய்து அங்கே நியூட்ரினோ ஆய்வகத்தை அமைக்க நபா குமார் முயற்சி செய்தார். இந்த ஆய்வகத்திற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வலுக்கவே தற்போது இந்த ஆய்வகம் மீண்டும் கோலார் தங்க வயல்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் தரமான பிரம்மாண்ட அறிவியல் சோதனைகளை நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும் அதற்கு பொதுமக்களும் ஆதரவு தரவேண்டும் என்பது நபா குமார் மொண்டலின் மிக முக்கிய வேண்டுகோளாகும். நபா குமார் மேற்கு வங்காளத்தில் பிறந்தவர். டாடா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் மும்பையில் இருந்து முனைவர் பட்டம் பெற்றவர். கொல்கத்தாவிலுள்ள சாஹா இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் நியூக்ளியர் ஃபிசிக்ஸ் என்னும் நிறுவனத்தில் இருந்து முனைவர் பட்டத்துக்குப் பிறகான ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி பெற்றார். கொல்கத்தாவிலுள்ள மிகப் பிரபலமான கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பு படிப்பதற்கு இயற்பியலையும் அதே கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் பட்டத்தையும் பெற்ற அவர் இன்று உலகம் அறிந்த இயற்பியலாளராக இருப்பது நம் அனைவருக்கும் பெருமை.
கட்டுரையாளர் :
தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்: உலகறிந்த இந்திய பாலிமர் வேதியியலாளர் சுப்ரமணியம் ராமகிருஷ்ணன் (Subramaniam Ramakrishnan)
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய நூல்களைப் பெற கிளிக் செய்யவும்: thamizhbooks.com
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: Indian physical chemist Kalya Jagannath Rao @ K. J. Rao
Pingback: International Solar Nuclear Scientist Sejal Shah
நியூட்ரினோ பற்றியும் அதில் இவர் மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் பற்றியும் அறிந்த பொழுது ஆச்சரியமடைந்தேன். ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் அறிவியல் கட்டுரைகளாக இல்லாமல் அவர்கள் ஆராய்ச்சியை அறிமுகப்படுத்தும் கட்டுரைகளாகவும் இவை இருப்பது உங்கள் எழுத்தின் சிறப்பு