நூல் விமர்சனத்திற்கு என்று தனக்கென தனியானதொரு பாதையை அமைத்துக் கொண்டிருக்கும் பேராசிரியர் அவர்கள் ஒவ்வொரு நூலைத் தேர்வு செய்வதிலும் ஒரு தனித்துவத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார். சுற்றுச்சூழல் சிதைப்பு கல்விப் பிரச்சினை நிற இன மொழி சாதி பாலியல் பிரச்சனைகள் போன்ற சமூகக் கேடுகளை விவரிக்கும் நூல்களை மக்களுக்கு அறிமுகம் செய்து அதன் வழியே மக்களுக்குள் சிறிதளவாவது சிந்தனையைத் தட்டி எழுப்பும் வண்ணம் எண்ணத்தில் இவரது விமர்சனங்கள் முன்னேறுகின்றன.

இந்த நூலிலும் உலகெங்கிலும் புகழ்பெற்ற பல்வேறு புனைக்கதை எழுத்தாளர்களின் நாவல்கள் நாடகங்கள் என 16 நூல்கள் பற்றிய மதிப்புரை இடம் பெற்றுள்ளது. உலகத்தில் நடந்த வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் புனைவிலக்கியத்தை வாசிப்போருக்கு வரலாற்றின் வழியாகவும் எழுதப்பட்ட தருணத்தின் வழியாகவும் நமக்கு எடுத்தியம்புகிறது நூல்.

இயற்கை நதியில் நீராடுகையில் தேகத்தின் மாசுகள் நீக்கப்பட்டு தூய்மையாக்கப்படும். இலக்கிய நதியில் நீராடுகையில் மனங்களின் மாசுகள் கழுவப்பட்டு மாண்புகள் சேர்க்கப்படலாம். எழுத்தின் வழியே விளைந்திடும் புத்தக நதிகள் புறப்படும் இடம் தொடங்கி சென்றடையும் கரங்கள் வரை ஏந்திடும் எல்லோருக்குள்ளும் சிந்தனை முத்துக்களை எண்ண வைரங்களை என ஆனந்தப் புதையல்களை அள்ளி வழங்கியபடியே நகரும். பருவங்களின் மாறுதல்களால் பகலவனின் நெருப்பு கணைகளால் வற்றிப் போகாத புத்தக நதிகள் வாசிப்பவருக்குள்ளும் வற்றாத எண்ணங்களின் வழியே ஈரத்தை சுரக்க வைத்தே நகர்கின்றன.

புவியின் நகர்தலில் இயற்கையின் காலக்கணக்குகள் இம்மியளவும் பிசகாது பழுதில்லாமல் பயணத்தை தொடர்கையில் மனிதர்கள் மனங்களுக்குள் நொடிக்கு ஒரு தரம் மாறும் சிந்தனையின் ஓட்டங்கள். அவையே அன்பை விதைக்கும் கருணைகளாக மாறலாம் ஆயுதம் வளர்க்கும் வன்முறையை விதைக்கலாம் அடிமையாய் சக உயிர்களை மாற்றி ஆணவத்தில் ஆடலாம் மதச் சங்கிலிக்குள் தன்னை பிணைத்தபடியே மனிதர்களை எரித்தும் விளையாடலாம் தீவிரவாதத்தின் பிள்ளை என தேசத்தை துண்டாடலாம் அறியாமை மனங்களுக்குள் அறிவெனும் ஒளியை ஏற்றியும் காட்டலாம்.

இலக்கியங்கள் பிறந்திடும் பொழுதினில் எழுதுபவனுக்குள் ஒளிவிடும் ஏதோ ஓர் கருத்தும் பார்வையும் சமூகத்தின் இழிவுகளைப் போக்கிடவோ சமூகத்தை உயர் பாதையை நோக்கி நகர்த்திடும் கனவினை விதைத்திடவோ தூண்டிலிடும் சுடர்களாக மின்னத் தொடங்கும். தனக்கான மொழி வடிவில் தன்னள் உணர்ந்தவற்றையும் கண்முன் நடந்தேறிய கசப்பும் இனிப்புமான வாழ்வின் ஊஞ்சலாட்டத் தருணங்களையும் கதையாகவோ கவிதையாகவோ நாவலாகவோ பிரசவித்து இளைப்பாறிக் கொள்கிறது பேரன்பின் மனம்.

சமூகத்தை தனது எழுத்து ஓரடியாவது முன்னோக்கி நகர்த்தி விடும் என்ற பேராசையே எழுதுபவனின் இதயத்தில் புகுந்து கொண்டு அவனை எழுத்தின் வழியே கரம் பிடித்து இழுத்துச் செல்கிறது. உலகத்தில் எங்கெல்லாம் ஒடுக்குமுறை நிலவினாலும் அடிமைத்தனமும் ஆணாதிக்கமும் அத்து மீறினாலும் சமத்துவம் குலைந்து இனமும் மதமும் மனிதனை இன்னலுக்குள் தள்ளினாலும் நிலம் பிளந்து வானை முட்டும் நீரைப் போல சட்டென வெடிக்கும் எரிமலையின் வேகத்தை போல புத்தகங்கள் பிறந்தே வினாக்களை எழுப்பத் தொடங்கி விடும்.

ஒற்றை நூலுக்குள் உலகின் ஓராயிரம் வரலாறுகளை உணர்த்தியும் சமூகத்தின் போக்கில் நிலவிடும் சங்கடங்களை விளக்கியும் கொடுமைகளின் நீள்கரங்கள் நசுக்கிடும் வறுமையின் வாழ்வை உணர்த்தியும் எழுதப்பட்டு இருக்கும் புனைவிலக்கிய நதியில் நீந்திட நூல் சகலவித படைப்புகளின் விமர்சனம் என நின்று நம்மை வேறு தளத்திற்கு அழைத்துச் செல்கிறது.

சிறுகதைகள் மொழிபெயர்ப்புகள் கதைகள் நாவல் நாடகம் பயணக்கட்டுரை என இலக்கியத்தின் பன்முக வகைமைகளுக்குள் புகுந்து கொண்டு பலவித மொழிகளின் புலமைகளுக்குள் தம்மை மூழ்கடித்தபடி இலக்கியங்கள் பகிரும் புதையல்களை நமக்காக அள்ளித் தந்திருக்கும் நூலாசிரியரின் பரந்து விரிந்த வாசிப்பு அனுபவம் சிறப்பானதொரு நூலாக ஒளி வீசிட உதவுகிறது.

பெண் மீதான மயக்கம் ஆணுக்குள் உருவாக்கும் வன்முறைகளை பாலியல் சீண்டல்களை அடிமையாய் வைத்து அடித்து உதைப்பதை தனிமைச் சிறைக்குள் தள்ளி தத்தளிக்க வைப்பதை என பல்வேறு தீயவற்றை உண்டாக்கி தருகிறது. உலகின் எல்லா மொழிகளிலும் நடைபெறும் இந்த அடிமைத்தனத்தை எழுத்தாளர்கள் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். கல்வியின் மலர்கள் பெண்களை மகிழ்வித்தாலும் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ஈர மனதில் ஆசைகளை விதைத்தே ஆண்கள் தமக்கான பகடைக்காய்களை உருட்டிக் கொள்ளும் அவலம் இன்னும் தீர்ந்த பாடு இல்லை.

போர்களும் வன்முறையும் தொற்று நோய்களும் மனித வாழ்வில் நீங்காத துயர்கள் என்பதை இன்னும் அறிந்து கொள்ளாமலேயே ஓடிக் கொண்டிருக்கும் மக்களின் அறியாமைக்குள் மதமும் அரசியலும் மேலும் மேலும் விஷ விதைகளைத் தூவி விடுகின்றன. பிஞ்சுகளின் மனதில் உலகத்தை காட்டும் கல்வியின் பயனாக அறிவும் உழைப்பும் மலர்வதை உறுதி செய்யும் அதே நேரம் சக மனிதர்கள் மீதான அன்பையும் கருணையையும் அவர்களின் மனங்களில் ஊன்றுவதை கல்வி இன்னும் கண்டு கொள்வதில்லை.

இயற்கையின் அற்புத எல்லை மீறி தன்னைத்தானே உலகின் கடவுளென கொண்டாடியபடி மனிதன் செய்யும் ஈவு இரக்கமற்ற அழிவின் தடங்கள் மக்களை உயிர்களை விலங்குகளை காவு கொடுத்து நகர்கிறது. இயற்கையை காத்திட பழங்குடியினரும் எளிய மனிதர்களும் படும் பாட்டையும் அவர்களை நசுக்கும் அரசின் ஒடுக்கு முறைகளும் இன்னும் மாறாமல் தொடரும் அவலத்தை எதைக் கொண்டு முற்றுப்புள்ளி வைப்பது.?

அரசு அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்கள் தனக்கு கீழான மனிதர்களை அணுகும் விதத்தை விவரிக்கும் நாவல்கள் வழியில் மனித மனங்களில் கசடுகளும் அவற்றின் மீதான பேராசையும் அவனைத் தோலுரித்துக் காட்டுவதை நூல்களின் வழியே விவரிக்கும் ஆசிரியர் நம்மை வாசிப்பதன் அடுத்த நிலைக்கு இழுத்துச் செல்கிறார்.

அன்பையும் கருணையையும் நட்பெனக் கொண்டு சக மனிதர்களுக்காக நடமாடி மகிழும் இனத்தை மறந்து மனிதத்தைப் பற்றிக் கொண்ட மனிதர்களுக்குள் மதப்பித்து பிடித்த பின் மிருகத்தை விட கேவலமாக நடந்திடும் போக்கும் மனப்பான்மையும் உருவாவதை எப்படி தாங்கிக் கொள்வது? தேசத்தின் பிரிவினையில் ஏதுமறியா குழந்தைகளும் பெண்களும் இலக்காக மாறி எரிந்தும் கொலையுண்டும் பாலியல் வன்கொடுமைக்குள் சிக்குண்டும் சிதறிப் போனதை கண்கூடாக காட்டும் நூல்களை வாசிக்கையில் மனித மனத்தின் போக்கை அறியாமல் நமக்குள்ளேயே துடிக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகிறோம்.

ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் தனக்கு ஏற்படும் துயரங்களை எல்லாம் பொறுமை எளிமை அன்பு போன்ற அரிய குணங்களால் எதிர்கொண்டு சொல்ல முடியாத துயரத்தையும் இன்பமாக மாற்றிக் காட்டும் பெண்களின் அன்பையும் அமைதியையும் மட்டுமே விதைக்கும் நாவலாக மலர்கிறது தி கலர் பர்ப்பிள். அலிஸ் வாக்கர் எழுதிய இந்த நாவல் கடிதங்களின் மூலம் சொல்லப்படும் புதிய இலக்கிய வகைமைகளில் ஒன்று. நாவலில் இருக்கும் 90 கடிதங்களில் 50 கடிதங்கள் நாவலின் நாயகி கடவுளுக்கு எழுதும் கடிதங்கள் மீதி 40 கடிதங்கள் அவளின் பாசமிகு தங்கைக்கு எழுதும் கடிதங்கள்.

தொடர்ந்து வரும் போர்களும் தொற்று நோய்களும் மனித வாழ்வு எவ்வளவு அர்த்தமற்றது என்பதன் அடையாளங்கள். நிச்சயமற்ற நிரந்தரமற்ற இவ்வுலகில் மனிதர்கள் அன்புடனும் ஆதரவுடனும் வாழ்ந்திட வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கிறது ஆல்பர்ட் காம்யூ எழுதிய தி பிளேக் நாவல்.

கல்வியைக் கற்றுணர இயற்கையும் பரந்த வெளியும் உதவி செய்யலாம். கட்டிடங்களுக்குள்ளும் வகுப்பறைக்குள்ளும் கரும்பலகையிலும் கற்றுக் கொள்ளப்படுவது மட்டுமல்ல கல்வி சிதைந்து போன ரயில் பெட்டிகளையும் கல்வி நிலையமாக மாற்றி குழந்தைகளின் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பார்க்கும் இயற்கையோடு இணைந்த கல்வியை கற்றுக் கொடுத்த மாமனிதர் கோப்பயாசி நிறுவிய டோமோயி பள்ளி பற்றிய நாவல் போட்டோ சாங் கல்வியின் மூலம் குழந்தைகளுக்கு எவ்விதமான கற்றலை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதை சிறப்பாக எடுத்துரைக்கிறது.

அந்நியர் ஆட்சிக்கு எதிராக மட்டுமின்றி சமகால நில பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராகவும் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் சோட்டா நாக்பூர் பகுதியில் போராடிய பிர்ஷா முண்டாவின் தலைமையிலான வீர வரலாற்றை வங்க எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவி எழுதிய நூல் ஆரண்யெர் அதிகார். இது காட்டில் உரிமை என்ற தலைப்பில் சு. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நூலின் வழியே பழங்குடியினர் இயற்கையை காப்பதற்காக தமது இன்னுயிரையும் கொடுப்பதற்கு தயாராக இருந்த தியாகத்தை நம்மால் உணர முடிகிறது.

ரஷ்ய எழுத்தாளர் கோகால் அவர்கள் எழுதிய நாவல் ஓவர் கோட். அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தை நம் கண் முன்னே காட்சிப்படுத்துகிறது.

சாதி வெறி ஆணாதிக்கம் பாலியல் வன்முறைகள் மொழி இனம் மதம் கடந்து பெண்களின் துயரத்தை அதிகமாக்குகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது பிரியா விஜயராகவன் எழுதிய அற்றவைகளால் நிரம்பியவள் நாவல்.

பணத்தின் பின்னே பேயென அலையும் மனிதர்களின் பேராசைகளால் ஒளி வீசும் கற்களின் தேடல் எப்படியெல்லாம் மனிதர்களை நோய்வாய்ப்படுத்துகிறது என்பதையும் கண்ணகியின் மாணிக்கப் பரல் நடந்த பாதையின் வழியாக எழுதிச் சென்று இரு வேறு பயணங்களை இணைக்கும் புள்ளி என சிலப்பதிகாரத்தை நிறுத்திய மிளிர்கல் நூலின் வழியே அழகானதொரு புனைவிலக்கியத்தை எழுதியிருக்கும் இரா முருகவேள் அவர்களின் நூல் பற்றிய விமர்சனத்தின் வழியே பணத்தின் பின்னால் அலையும் மனிதர்கள் தங்களின் தேவைக்காக எதை வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராகிறார்கள் என்பதை அறிய முடிகிறது..

சமூக செயல்பாட்டாளராக அனுதினமும் மக்களிடையே அறிவையும் கல்வியையும் விதைத்திடும் பேராசிரியர் அவர்களின் இந்த நூல் ஒரே சமயத்தில் 16 இலக்கியங்களை அவை கூறும் வரலாறுகளை அந்த வரலாற்றின் வழியே உலகில் நிலவும் வன்கொடுமைகளை சமூக பின்னடைவுகளை நம்மால் உணர்ந்து கொள்வதற்கு சிறப்பானதொரு கட்டமைப்பாகத் திகழ்கிறது. இந்த நூல் தான் சொல்ல வந்த கருத்துக்களை தெள்ளத் தெளிவாக வரையறுத்துச் சொல்லி தனது பார்வையின் வழியே வாசகனின் நெஞ்சுக்குள் குறி தவறாது அம்பு எய்தி அதன் வழியே சிந்தனை இலக்கை அடைகிறது.

நூலின் தகவல்கள்:- 

நூல் : “புனைவிலக்கிய நதியில் நீந்தி” – நூல் மதிப்புரை கட்டுரைத் தொகுப்பு

நூலாசிரியர் : பேராசிரியர் பெ. விஜயகுமார்

வெளியீடு : கருத்து – பட்டறை மதுரை, 98 42 26 58 84

விலை : ரூ. 170/-

பக்கங்கள் : 152

நூலறிமுகம் எழுதியவர்:- 

இளையவன் சிவா @ கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர். பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள் (1999) தூரிகையில் விரியும் காடு (நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு)  (2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) (தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *