பேரா.சோ.மோகனா எழுதிய "புன்னகையின் மொழி ஒன்றே" பல் மருத்துவம் வரலாறு நவீன தொழில் நுட்பம் புத்தகம் | Prof. So.Mohana's Punnaikaiyin Mozhi Ondre Tamil Book Review | இளையவன் சிவா | www.bookday.in

பேரா.சோ.மோகனா எழுதிய “புன்னகையின் மொழி ஒன்றே” பல் மருத்துவம் வரலாறு நவீன தொழில் நுட்பம் – நூல் அறிமுகம்

“புன்னகையின் மொழி ஒன்றே” பல் மருத்துவம் வரலாறு நவீன தொழில் நுட்பம் – நூல் அறிமுகம்

புன்னகையின் பின்னே பளிச்சிடும் பற்கள்…

எளிய மக்களுக்கான போராட்டக் களமாகட்டும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக அறிவியல் இயக்கச் செயல்பாடுகளாகட்டும் இடைவிடாது மக்களுக்காக இயங்கிவரும் பேரா.சோ.மோகனா அவர்களின் இந்தப் புத்தகம் பற்களின் வரலாறு தொடங்கி நவீன மருத்துவத்தில் பற்களின் புன்னகை வரை அடையாளமிட்டுச் செல்கிறது.

ஒருவரின் புன்னகையை வெளிப்படுத்த, வாயை அழகு படுத்த, உணவை அரைத்துக் கொடுக்க, மொழியை அழகாகப் பேச, முகத்திற்கு வடிவம் கொடுத்து அழகாக்கப் பற்கள் உதவுகின்றன. ஓராயிரம் வார்த்தைகள் சொல்லும் அனுபவத்தை விட ஒற்றைப் புன்னகை அத்தனை செய்திகளைச் சொல்லிவிடும். புன்னகையில் மையத்தில் ஒளி வீசும் பற்களின் அழகையும் ஆரோக்கியத்தையும் பராமரிப்பதன் அவசியத்தையும் இந்த நூல் எடுத்துரைக்கிறது

பற்களின் வகைகள் விலங்குகளின் பற்களின் விநோதங்கள் பற்சீரமைப்பின் வரலாறு பற்சிகிச்சை மருத்துவத்தில் பெண்களின் நுழைவும் அவர்கள் சந்தித்த எதிர்ப்பும் பல் சிகிச்சை யின் நவீன முறைகள் என பல்துறை பற்றிய பல்வேறு தகவல்களை கவிதையாகவும் கதையாகவும் எளிய மொழியில் விளக்குகிறது நூல்.

*புன்னகையின் மொழி ஒன்றே,

*தங்கப் பல்லின் கதை,

*பல் பல்லா பூத்திருக்கு,

*பற்காரை பொய் சொல்வதில்லை,

*தேசிய பல் வலி தினம்,

*பல் மருத்துவம் நவீன எதிர்காலச் சிகிச்சை முறைகள்

*புன்னகை என்ன விலை

இப்படியான 13 தலைப்புகளில் விரிகின்றன கட்டுரைகள்.

உணவிற்குத் தகுந்த மாதிரித்தான் பற்களின் அமைப்பு இருக்கும். 19ஆம் நூற்றாண்டில் போரில் இறந்த சிப்பாய்களின் பற்களைக் கொண்டு கட்டிடம் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கட்டுக் கதை, மண்டையோடுகள் எலும்புகள் கொண்டு கட்டப்பட்ட கட்டிடங்களில் காணப்படும் அமைப்புகள் அழகுக்காகப் பயன்படுத்தப்பட்ட தகவல்கள், எலும்புக் கோவில், ராசா வீட்டுப் பல் கதை, இளவரசனின் பல்லை எடுத்துக் கொண்டு பதிலாகப் பரிசை வைத்துப் போகும் ரட்டோன்சிட்டோ பெரேஸ் என்கிற எலியை உருவாக்கிய பாதிரியார் லூயிஸ் கொலோம்போ கதைகளில் காணப்படும் விநோதங்கள் , முதன்முதலில் விழும் குழந்தையின் பற்களை எந்தெந்த நாடுகளில் என்னென்ன செய்வார்கள்? அது தொடர்பான தகவல்கள், பற்கள் தொடர்பான நம்பிக்கைகள் ,கதைகள்,டூத் ஃபேரி,பல் தேவதை. என் நூல் முழுக்க விவரமழை கொட்டுகிறது. வாசிக்க வாசிக்க பற்களின் பளிச்சிடும் அழகை மெச்சிக்கொள்ள நாமே நம்மை அறிவூட்டிக்கொள்கிறோம்.

பல் மருத்துவம் என்பது கிமு 7000 ஆண்டு முதலே நடைமுறையில் இருந்ததற்கான சான்றுகள், அரிப்பை எதிர்த்து இயற்கை பற்களின் கடினத்தன்மையை நெருக்கமாக பிரதிபலிப்பதால் தங்கம் பல் மருத்துவத்திற்கு ஏற்றது என்று 4525 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் தங்கப் பல் கட்டியிருக்கிறான், ஆர்ட்னே புச்லைன் என்ற பல் மருத்துவம் பற்றி முதலில் அச்சிடப்பட்ட புத்தகம்(1530), சௌம்ப்ஸ் என்கிற தங்க எனாமல் பச்சை குத்தல்கள் குறைந்தது 20 முதல் 40 ஆண்டுகள் வரை வைத்திருக்க முடியும், தங்கப்பல்18 காரட் தங்கத்தால் செய்யப்படுகிறது, பல்லில் உள்ள நரம்பு பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான பற்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மரபணுத் தகவல்களை பாதுகாக்கிறது, முதன்முதலாக முடி திருத்துபவர்கள்தான் பற்களைப் பிடுங்குவதையும், சுத்தம் செய்வதையும் செய்திருக்கிறார்கள், பண்டைய சீனர்கள் வலி மிகுந்த பற்களைச் சுற்றி சிறிய காகிதத்தால் ஆன துண்டுகளை சுற்றி இருந்தனர் அனைத்திலும் பல் குணமாவதற்காக எழுதப்பட்ட பிரார்த்தனைகள் மந்திரங்கள் இருந்தன, பல்வலி குணமாக ஆதிகால மக்கள் மண்புழுவை எண்ணெயில் கொதிக்க வைத்து வேக வைத்து அந்த எண்ணெயைப் பல்லில் ஊற்றுவது, நவீன பல் மருத்துவத்தின் தந்தை பியர்ரி பாச்சர்ட், 1873 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட முதல் பற்பசையின் பெயர் கோல்கேட், 1903ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட புரோகைன், அதிக விலைக்கு ( சுமார் 30 லட்சம் ) விற்கப்பட்ட ஐசக் நியூட்டனின் பல், இலங்கையில், கோவிலில் பாதுகாக்கப்படும் புத்தரின் பல்( அது தொடர்பான கட்டுக் கதைகளும் ), பல் வியாதிகளுக்கும் மற்ற உடல் வியாதிகளுக்கும் உள்ள தொடர்பு, விலங்குகளின் பற்கள், பாசில்களைப் போல் உதவும் பற் காரைகள், பல்வேறு தேசங்களின் புராண இதிகாசக் கதைகளில் பற்களைப் பற்றிய பல் கதைகள், பிப்ரவரி 9,தேசிய பல் வலி,பல் சொத்தை தினம், அக்டோபர் மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமை கொண்டாடப்படுகிற உலக புன்னகை தினம், மெம்மோத் என்கிற ஆர்டிக் துருவ யானையின் தந்தங்கள் எலும்புகளால் ஆன வீடு இப்படி ஏராளமான ஆச்சர்யமான தகவல்கள் நிறைந்து ததும்புகிற புத்தகம்.

பழங்காலத்தில் மருந்தகங்களில் பணி செய்வோம் முடி திருத்துபவர்கள் முடித்து இருக்கும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொல்லர்கள் ரத்தப்போக்கு சரி செய்பவர்கள் மருந்து வியாபாரிகள் மூலச் சதை நறுக்குபவர்கள் பொற்கொல்லர்கள் சிகை அலங்கார நிபுணர்கள் நகைக்கடைக்காரர்கள் வாசனை திரவியங்கள் தயாரிப்பவர்கள் பொம்மைகள் குடை தயாரிப்பாளர்கள் கடிகாரம் தயாரிப்பவர்கள் என பல தொழில் செய்தவர்கள் பல் மருத்துவராக பல்லை பிடுங்கினர்.

ஜப்பானில் மரப்பற்கள் பயன்படுத்தப்பட்டன பிற்காலத்தில் இயற்கையான மனிதப்பற்கள் செதுக்கப்பட்ட யானையின் தந்தம் விலங்குகளின் கொம்புகள் அவற்றின் பற்கள் போன்றவை செயற்கை பற்களாக பயன்படுத்தப்பட்டன.

அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி வாஷிங்டன் பதவி ஏற்ற போது அவரது பல் தொகுப்பு நீர்யானை, யானை தந்ததால் செதுக்கப்பட்டு தங்க நீரூற்றுகளுடன் இணைக்கப்பட்டது.

பற்கள் சுயமாக தங்களை சரி செய்ய முடியாது. மனிதப் பற்கள் 90 கிலோ வரை கடிக்கும் சக்தியை கொண்டுள்ளது. ஒரு சுறா மீனின் வாழ்நாளில் சுமார் 20,000 பற்கள் உருவாகும். ஒரு குதிரையின் பற்கள் அதன் மூளையை விட பெரிதாகவும் எடை அதிகமாகவும் இருக்கும். உலகிலேயே அதிகமான பற்கள் கொண்ட விலங்கு நத்தை இதன் நாக்கில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுண்ணிய பற்கள் உள்ளன. .

புத்தகத்தை வாசிக்கையில், ஒரு பல் மருத்துவர் சொல்லக்கூடிய ஏராளமான தகவல்களை பேராசிரியராக இவரால் எப்படி மிக எளிமையாகவும் தொடர்ச்சியாக வாசிக்கும் இயல்புடனும் எழுத முடிகிறது என்ற வியப்பு மேலோங்குகிறது. இத்தனை தகவல்களைத் திரட்ட ,எத்தனை எத்தனை புத்தகங்களை வாசித்திருப்பார்?எப்படியெல்லாம் தகவல்களைத் திரட்டியிருப்பார் அவற்றை ஒழுங்குபடுத்தி நிரல் படுத்தி கதைகளின் வாயிலாகவும் கவிதையின் வாயிலாகவும் புன்னகைக்க வைக்கும் எழுத்தின் வாயிலாகவும் எழுதிச் செல்ல முடியும் என்ற ஆச்சரியத்தில் இருந்து வெளிவர நெடுநேரம் ஆகிறது.

விழுந்த பல்லை எந்தெந்த நாடுகளில் என்னென்ன செய்வார்கள் என்பதை வாசிக்கையில்,யாரும் பார்க்காதபடி விழுந்த பல்லை சாணியில் மறைத்தும் சிங்கப்பல்லைப் போல நமக்கும் வளரவேண்டும் என்று விரல்களில் குறியை செய்து காட்டியும் ஓட்டின் மேல் எறிந்தது நினைவில் வருகிறது.. ஆனால் புத்தகம் சொல்லும் செய்திகளோ இன்னும் பல பல விதமான தகவல்களை ஆச்சரியங்களாக நமக்குள் புகுத்துகிறது.

பல் மருத்துவத்தில் பெண்கள் அன்றும் இன்றும் என்கிற கட்டுரை, மிக முக்கியமான கட்டுரை. இதில் பெண்கள் மருத்துவம் படிப்பதற்கு எதிர்கொண்ட சிக்கல்களையும் அதற்குப் பிறகு அவர்கள் பல் மருத்துவத்தில் ஈடுபட முடியாத சூழலை எதிர்கொண்டதையும் முழுமையாக பேசிச் செல்கிறது.

“பல் மருத்துவம் நவீன எதிர்கால சிகிச்சை முறைகள்” என்ற தலைப்பிலான கட்டுரையை இந்த நூலின் அடிப்படைக் கருத்தாக எழுதப்படுகிறது. ஆனால் அதை மட்டுமே சொல்லும் போது இது வெறும் மருத்துவ நூலாகவோ வெறும் மருத்துவ குறிப்பாகவோ நின்றுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்த ஆசிரியர் தகவல்களாக மட்டுமே இல்லாமல், சின்னச் சின்னக் கதைகள், பாடல்கள், கவிதைகளின் வழி சுவாரஸ்யமாகச் சொல்லியிருப்பதால் வாசிக்க இனிமையாயிருக்கிறது. நூல் சொல்லும் கருத்துக்களை நம்மால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவும் முடிகிறது.

பல் மருத்துவத்தின் ஆரம்ப காலகட்டத்தின் சவால்களையும் அதன் அறிவியல் வளர்ச்சியையும், சமுக கலாச்சார அடையாளங்களில் மக்கள் பற்களை பயன்படுத்திக் கொண்ட சூழலையும் ஒருங்கிணைத்து ஒரு விழிப்புணர்வுப் பயணமாக நமக்கு முன்னே விரிகிறது. பல் மருத்துவத்தின் எதிர்காலம் மனிதர்களுக்கு மிக எளிமையாகவும் குறைந்த நேரத்திலும் ரோபோட்டுகள் என சொல்லப்படும் எந்திரங்களின் வழியே பற்சிகிச்சையை மேற்கொள்ளும் என்பதை கதைகளின் வாயிலாக எதிர்கால பயணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லவும் இந்த நூல் குறிப்பு வரைந்திருக்கிறது.

உடல் ஆரோக்கியத்தையும் உடல் உறுப்புகளின் மீதான மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் இந்த விழிப்புணர்வு நூல் எழுத ஆசிரியரின் கடும் உழைப்பும் விடாமுயற்சியும் தகவல்களை திரட்டும் ஆர்வமும் மிகச் சிறப்பான கட்டுரைகளாக வெளிப்படுகின்றன. நீங்கள் எவ்வித சுணக்கமும் இல்லாமல் சோர்வும் இல்லாமல் அழகான ஒரு புன்னகையில் உலகத்தை கவர்வதற்கு பற்கள் உங்களுக்கு துணை நிற்கின்றன என்பதை “புன்னகையின் மொழி ஒன்றே” வழிமொழிகிறது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“புன்னகையின் மொழி ஒன்றே” பல் மருத்துவம் வரலாறு நவீன தொழில் நுட்பம்
ஆசிரியர்:
பேரா.சோ.மோகனா
வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
விலை:₹.150 (10% சலுகை விலையில் ரூ.135 மட்டுமே)
அறிமுகம் எழுதியவர்:  
✍🏻 இளையவன் சிவா

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *