கல்வி ஓர் அரசியல் – நூல் அறிமுகம்
தமிழக கல்வி குறித்தான ஒரு பரந்துபட்ட பார்வையை சமீபத்தில் மறைந்த ஓர் எழுச்சிமிக்க பெண்ணின் மனதை வாசித்தது போல் இருந்தது இவ்வாசிப்பு.
ஆரம்பக் கல்வி ஆரம்பித்து பல்கலைக்கழக நடைமுறைக் கல்வி உரித்தான பல விடயங்களை அலசி , தொன்றுதொட்டு நம் நாட்டின் கல்வி நிலையை…
சாமானிய மனிதனின் பார்வையை உள்வாங்கி எவ்வகையான மாற்றங்களை எல்லாம் கல்வியில் புகுத்தலாம் என்பதை ஒரு ஆய்வு போல வெவ்வேறு தளங்களில் பேசியவற்றின் தொகுப்பு எனலாம் இப்புத்தகத்தை.
இன்றைய உலகில் கல்வி எனும் களத்தில்தான் மிகப்பெரிய வர்க்கப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் பெருமளவு மாற்றத்தை கொண்டு வர முடியாவிட்டாலும் மாபெரும் சக்தி வாய்ந்த ஒரு பிடி விதைகளை எங்கள் சிறிய கரங்களில் எடுத்து இந்த உபகண்டத்தின் மீது வீசியுள்ளோம். அவை எங்கு முளைத்தாலும் முளைக்கும். அப்பொழுது ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்கிறார் ஆசிரியர்.
மனிதனை மனிதன் விழுங்கும் போட்டி உலகில் “குழந்தைகள்” தான் பலியாடுகள். Politics is the art of making the impossible possible . ஆனால் இன்றைய உலகை கார்ப்பரேட் முதலாளித்துவம் கையில் கொடுத்து தனது தேவைக்கேற்ற கல்வியை உருவாக்குவதில் மிக கவனமாக இருக்கிறது. இந்த கட்டமைப்பிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் பொதுப்பள்ளிகளை ஏற்படுத்தவும் , அது குறித்தான நடைமுறைப்படுத்துதலில் அரசின் அக்கறையும் மிகுந்த தேவை. அப்படி ஒரு நிலையை நம் தமிழகம் எட்டுமா என்பது எப்பொழுதும் கேள்விக்குறியே..! காரணம், கல்வி ஓர் அரசியலாக்கப்பட்டது என்பதுதான்.
இலவசம் என்று எது அறிவிக்கப்பட்டாலும் முண்டியடித்துக் கொண்டு வரிசைகக்கட்டி நிற்கும் நம் மக்கள் இலவசமாக கிடைக்கும் கல்வியை விட்டுவிட்டு ஏன் தனியார் பள்ளிகள் நோக்கி போகிறார்கள் என்ற வினாவுக்கான விடை தான் அதற்கும் காரணம். ஒரு குறிப்பிட்ட இன மக்களே அரசு பள்ளிகளில் கற்கும் மாணவர்களின் பெரும் பகுதியாக இருக்கின்றனர் என்பதை ஆணித்தரமாக சொல்கிறார்.
“நோய் முதல் தெரிந்தும் , சிகிச்சை எது என்று நிரூபிக்கப்பட்ட பின்னும், கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் நோய் முற்றட்டும் என்ற அதிகார ஆணவம் தான் “, என்ற சாட்டையடி கேள்விகளை கேட்பதற்கு சற்றும் தயங்காத ஒரு ஆசிரியரை இப்புத்தகத்தின் வாயிலாக கண்டு பிரம்மிக்கின்றேன். கல்வி எப்பொழுது பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்றப்பட்டதோ அப்போதே மத்திய அரசு மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து வருகிறது என்பதை ஒரு ஆசிரியராக என்னால் உணர முடிகிறது.
The purpose of education is the inclusion of the excluded . உண்மையில் இதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று யுனெஸ்கோவின் செக்ரட்டரி ஜெனரல் ஒருவர் கூறுகிறார். ஆனால் இங்கு வசதிக்கேற்ற பள்ளி மட்டங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கொடுக்கும் விலைக்கேற்ப கிடைக்கும் கடை சரக்கு என்கிறார் ஆசிரியர்.
70களில் தமிழ்நாட்டின் பள்ளிகள் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கவில்லை. 80 களிலும் 90 களிலும் தனியார் பள்ளிகளின் அசுர வளர்ச்சியை காணும் பொழுது இதற்கு காரணம், கேரளா போன்ற மாநிலங்களிலும் பள்ளிக் கல்வி உள்ளாட்சிகளின் பொறுப்பில் இருப்பதும் நம் மாநிலத்தில் அதுபோல் இல்லாததும் என்பதே என்பது புலப்படும்.
தேவையெனக் கருதினால் மத்திய அரசு பலவகையில் புதிய / கூடுதல் நிதி ஒதுக்கீடுகளை ஆசிய விளையாட்டிற்காகவும் கூடுதல் ராணுவ தளவாடங்களுக்காகவும் பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வாங்குவதற்காகவும் ஒதுக்கீடு செய்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் கல்விக்கு என்று ஒதுக்கும் மசோதாவில் மட்டும் பாரபட்சம் பார்ப்பது ஏன் என்று தெரியவில்லை.
விவசாய கல்லூரி நுழைவுத் தேர்வில் நிலத்தில் இறங்கி வேலை செய்யும் செய்முறை பயிற்சிக்கும் ஏன் மதிப்பெண்கள் வழங்கக்கூடாது..? என்ற வினா மற்றும் இன்றைய விவசாய கல்லூரிக்கான நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் மண்வாடையே படாதவர்கள் ; வசதி படைத்த நகர்ப்புற பள்ளிகளில் பயின்றவர்கள் என்பதும் எத்தனை முரணாக இருக்கிறது .
“உண்மையான கல்வி விடுதலை அளிப்பது . புத்தியுள்ள எந்த அரசும் அதை அனுமதிக்காது”, என்ற டால்ஸ்டாயின் கூற்று இந்த இடத்தில் சரியாக பொருந்துகிறது.
தமிழ் மொழி வழி கல்வியை பற்றி கூறும் பொழுது ஆங்கிலம் என்று முக்கியமான வர்க்கக் குறியீடாக மாறி இருக்கிறது என்று ஆதிக்க இனத்தை உருவாக்குவதில் ஆங்கிலத்திற்கு முக்கிய பங்கு உண்டு என்கிறார்.
துவேஷம் வளர்த்த வரலாறு என்ற தலைப்பில் முஸ்லிம் மன்னர்கள் மத வெறியின் காரணமாக ஆயிரக்கணக்கான இந்து கோயில்களை இடித்தார்கள் என்று மக்களால் நம்பப்படுகிறது. இதில் ஓரளவு உண்மை இருந்தாலும் பல முஸ்லிம் மன்னர்களால் இந்து கோவில்கள் ஆதரவையும் பெற்றுள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார். இறுதியாக எல்லோரையும் ஊக்குவித்தது மதவெறி அல்ல அதிகார , ஆக்கிரமிப்பு வெறியே ஆகும் என்கிறார்.
ஆரம்பப் பள்ளிகளில் செயல்முறை வழி கல்வி பின்பற்றி வந்ததை பல கட்டுரைகளில் ஆசிரியர் ஆதரித்ததை காண முடிகிறது. ஆனால் சில நடைமுறை சிக்கல்களாலும் , மேலும் அரசின் சமச்சீர் கல்விக் கொள்கையாலும் அது கைவிடப்பட்டது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பேரவை குழு அமைய வேண்டும் என்பதில் ஆசிரியரின் தீரா ஆசையைக் காண முடிகிறது.
இந்தியாவில் அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய ஆரம்பக் கல்வி கொடுப்பதும் அதனை அருகமைப் பள்ளிகளில் வழங்குவதும் பல்வேறு கமிஷன்களாலும் கரிசனை கொண்ட கல்வியாளர்களாலும் வலியுறுத்தப்பட்டது தான். ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை சல்லி சல்லியாக கூறு போட்டு இருக்கிறார். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்வதில் சுதந்திரத்தைவிட அவர்களின் வசதி தான் பிள்ளைகளின் படிக்க வேண்டிய பள்ளியை தேர்வு செய்கிறது என்பதே நிதர்சனம்.
வளர்ந்த நாடுகள் அனைத்துமே அரசு நடத்துகின்ற அல்லது அரசு உதவி பெற்ற பொதுக் கல்வி முறை மூலமாகத்தான் இன்று இருக்கும் வளர்ச்சியடைந்த நிலையை அடைந்திருக்கின்றன என்று அறைகூவலிட்டு கூறும் இவர்…
முதலாளித்துவ பாதையை மூர்க்கத்தனமாக பின்பற்றும் இந்தியா அந்த பயணத்தின் வெற்றிக்கு அடிகோலிய கல்விமுறையை மட்டும் மறுதலிக்க இயலாது என்கிறார். சுருங்கச் சொன்னால் கல்வியின் ஒவ்வொரு நூல் நிலையிலும் பாகுபாடு பின்னப்பட்டிருக்கிறது பாகுபடுத்தும் கலையில் நம்மை விஞ்சியவர் அதாவது நம் நாட்டை விஞ்சியவர்கள் எவரும் இல்லை. சாதிய ஏணியில் எத்தனை படிகள் இருக்கின்றனவோ அத்தனை படிகளும் கல்வி ஏணியிலும் இருக்கின்றது என்கிறார்.
இது போன்ற கருத்துக்களை இவர் பட்டியல் இடுவதற்கு இவரது அனுபவம் மட்டுமே போதுமானதல்ல. பல்வேறு கல்விக் கொள்கைகள், கமிஷன் அறிக்கைகள், நீதிமன்ற தீர்ப்புகள் , சட்டங்கள் திட்டங்கள் , கல்வி தொடர்பான போராட்டங்கள் என அவை குறித்த விரிவான அறிதலும் புரிதலும் இந்நூலின் ஆசிரியரான பேராசிரியர் வசந்தி தேவி பெற்றிருக்கிறார் என்பதே அதற்கு ஆதாரம்.
குறிப்பாக ஆசிரியர்கள் அனைவரும் தோழர் வசந்தி தேவி அவர்கள் எழுதிய கல்வி பற்றிய இந்த விரிவான அலசலை ஒரு புரிதலுக்காக வேண்டியாவது வாசிக்க வேண்டும் என்பது என் கருத்து.
நூலின் விவரங்கள்:
நூல்: கல்வி ஓர் அரசியல்
ஆசிரியர்: முனைவர் வே.வசந்தி தேவி
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 256
விலை: ரூ.240
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
எழுதியவர் :

✍🏻 – பா.விமலா தேவி
பட்டுக்கோட்டை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
