பாரதி புத்தகாலயம் – டிசம்பர் 2024ல் வெளியிட்டுள்ள திரு கு. செந்தமிழ்ச் செல்வன் அவர்களின் அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal) என்ற புத்தகத்தை படித்து முடித்தவுடன், இந்த புத்தகத்தை எல்லோரும் அவசியம் படித்தாக வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
திரு. கு. செந்தமிழ் செல்வன் அவர்கள், வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொடங்குவதற்கு முதல் விதையை விதைத்தவர். யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா வில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இன்றும், சமூக முன்னேற்றத்திற்கான பணிகளில் பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர்.
குறிப்பாக, இயற்கை வேளாண்மையில் மிகுந்த ஆர்வம் உடையவர். கீ.வ.குப்பம் ஒன்றியம் – லத்தேரி அடுத்த காளாம்பட்டு கிராமத்தில் “அறிவுத்தோட்டம்” என்ற தன்னுடைய நிலத்தை, இன்றைக்கு வேளாண் சுற்றுலா மையமாக உருவாக்கி, விவசாயிகளுக்கு மட்டுமல்ல, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தொண்டு நிறுவனங்கள், இப்படி பல தரப்பட்ட மக்களுக்கு, இயற்கை வேளாண்மை குறித்து பல்வேறு பயிற்சிகளை தொடர்ந்து அளித்து வருகிறார். அவருடைய பணி சிறக்க வாழ்த்துகள்.
இனி புத்தகத்துக்கு வருவோம், அறிவியல் தொழில்நுட்பம் ஒருபுறத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டு இருந்தாலும், இன்றைக்கு புத்தக வாசிப்பு என்பது குறைந்து கொண்டே வருகிறது. புத்தக வாசிப்பு என்பது இனிமையானது, சுகமானது.
எந்த அறிவியல் தொழில்நுட்பமும், புத்தகத்தை புரட்டும்போது, கொடுக்கும் சுகத்தையும், வாசிக்கும் போது பெறும் இன்பத்தையும் ஈடு செய்ய முடியாது என்பது புத்தக வாசிப்பாளர்கள் நன்கு அறிவார்கள். வாசிப்பது ஒரு புறம் இருக்கட்டும், வாசித்தவைகளை நாம் உள்வாங்குகிறோமா?….
அதில் உள்ள நல்ல கருத்துக்களை ,நம் வாழ்க்கையோடு இணைத்து பயணிக்கிறோமா? என்பதை நாம் எல்லோரும் எண்ணிப் பார்க்க வேண்டும். நீ படிச்சவன் தானே இப்படி செய்யலாமா? ….
படிச்சவன் இப்படி இருக்கானே? இப்படியான வாதங்களை நாம் எதிர்கொள்கிறோம் …
இதைத்தான் வள்ளுவரும் கற்றபின் நிற்க அதற்குத் தக என்றார். இன்றைக்கு படிப்பு என்பது மதிப்பெண்களுக்குள் அடங்கி விட்டது. வகுப்பில் தேர்ச்சி பெற்று விட்டால் படிப்பு முடிந்து விடுகிறது. கற்றல் என்பது அறிவை விசாலப்படுத்துவது, நம் வாழ்க்கைக்கானது என்பதை எல்லோரும் உணர வேண்டும் என்ற உணர்வை இந்த புத்தகம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது..
10 தலைப்புகளின் கட்டுரைத் தொகுப்பு தான் அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal) புத்தகம் ஒரு கருத்தின் மீதான நம் பார்வை, நம் விவாதம், இவைகள் தர்க்க ரீதியாக (Logic) அமைய வேண்டும் என்பதை இந்த புத்தகம் அழுத்தமாக சொல்கிறது…
ஆசிரியரும் இந்த புத்தகத்தில் தர்க்கம் (logic)என்ற வார்த்தையை தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். தர்க்கம் என்பது பகுத்தறிவு மற்றும் சரியான அனுமானத்தின் கொள்கைகள் பற்றிய ஆய்வு என்பதை தர்க்கம் என்பது என்ற தலைப்பில் விளக்கப்பட்டுள்ளது.

கணிதம் முழுவதும் தர்க்க நுண்ணறிவு தான் அல்லது தர்க்க நுண்ணறிவு தான் கணிதம் என்ற விளக்கத்தை எளிய உதாரணங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர். மூடநம்பிக்கைகள், காலம் காலமாக நம் சமூகத்தில் நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறது.
மூடநம்பிக்கைகள், பாரம்பரியத்திலிருந்து இயற்கையாக உருவானவை அல்ல. சமூக கட்டுப்பாட்டிற்காக வலிய நிலை நிறுத்தப்பட்டவை.
மூடநம்பிக்கைகளை எதிர்த்து போராடுவதற்கு, அறிவியல் பார்வையை மையப்படுத்திய கல்வி அவசியம் என்ற விமர்சனப் பார்வையை, மூடநம்பிக்கைகளும் தர்க நுண்ணறிவும் என்ற கட்டுரை விளக்குகிறது.
மன அமைப்பு (Mind set) என்ற தலைப்பு நம்முடைய பொது புத்தி எப்படியானது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
ஒரு விவசாயி என்றால் கடுமையான உழைப்பாளி, ஒரு டாக்டர் என்றால் திறமையானவர். ஒரு கடிகாரத்தை வரையச் சொன்னால்கூட, உடனே நாம் முதலில் ஒரு வட்டத்தை போடுவோம். இப்படியான நம்முடைய செயல்களோடு, நம்முடைய மன அமைப்பை விரிவாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர். மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சை முடிவுகள், மருத்துவ தரவுகள் இவைகளில், தர்க்க ரீதியான அணுகுமுறை குறித்த வாதங்களை, மருத்துவ பரிசோதனை எனும் கட்டுரை முன்வைக்கிறது. அதிர்ஷ்டம், மரபுகள், சாதி, மத அமைப்புகள், பகுத்தறிவற்ற நம்பிக்கைகள், இவைகள் தர்க்கத்திலிருந்து விலகி நிற்பதை, மதம் சடங்குகள் எனும் கட்டுரைகள் விவரிக்கிறது.
ஒவ்வொரு செயலிலும், வாதங்களிலும், காரணங்களை(Reasoning) அறிந்து கேள்விகள் மூலம் ஆராய்ந்து தர்க்கரீதியான பகுத்தறிவில், உண்மையான பார்வையை வெளிப்படுத்துவதே அர்த்தமுள்ள வாதங்களின் நோக்கமாகும்.
நவீன வாழ்க்கையில் தர்க்க ரீதியான விமர்சனம் என்பது அறிவியல் பார்வையை உள்ளடக்கியதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும், தர்க்க ரீதியான சிந்தனை என்பது அவசியம். சிந்தனைகள் தெளிவு பெற, வாதங்கள், அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal) தொடங்கட்டும் தொடரட்டும் ….
உலகை கேள்வி கேட்கும் வலிமை, உனக்குள் முறுக்கேற்றட்டும்.. புதிய சிந்தனை, புதிய உலகு, அறிவியலால் கட்டியமைக்கபடட்டும், தொடரட்டும் அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal) என்ற வரிகளோடு இந்தப் புத்தகம் முற்றுப்புள்ளி வைத்தாலும், நமக்கான சிந்தனைக்கு, தொடர் புள்ளியை வைத்திருக்கிறது
இந்த புத்தகம்.
எல்லோரும் படியுங்கள் . பயன்பெறுங்கள்.
நூலின் தகவல்கள் :
நூல்: அர்த்தமுள்ள வாதங்கள் (Arthamulla Vathangal)
ஆசிரியர் : கு. செந்தமிழ் செல்வன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை : ரூ.60/-
நூலைப் பெற : https://thamizhbooks.com/
நூல் அறிமுகம் செய்பவர் :
சா.குமரன்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
வேலூர் மாவட்டம்.
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

