பொதுமுடக்கம் : மோடி அரசாங்கத்தின் பொய்களும், தவறான வழிமுறைகளும் –  அஹான் பெங்கர் (தமிழில்: தா.சந்திரகுரு)

 

மார்ச் 24க்குப் பிறகு, புதிய கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நான்கு முறை நாடு தழுவிய பொதுமுடக்க அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்த போது, தங்களுடைய  கொள்கைகளை நியாயப்படுத்தவும், விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காகவும் அரசாங்கத்தின் பிரதிநிதிகளும், அமைச்சர்களும் அரைகுறை  உண்மைகளையும் வெளிப்படையான பொய்களையும் தொடர்ந்து வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தியுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளில் குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே இருந்த கடுமையான பசி மற்றும் பட்டினியை வெளிக்கொண்டு வந்த கள அறிக்கைகள், அதிகாரிகள் கூறிய பல கூற்றுக்களை பொய்யானவை என்று நிரூபித்துள்ளன. புலம் பெயர்ந்த தொழிலாளர்களைத் திருப்பி அனுப்புவதை தவறாக நிர்வகித்தது, அளவிட முடியாத உயிர் இழப்பு மற்றும் ஏழைகளுக்கு ஏற்பட்ட துன்பங்கள் ஆகியவற்றைப் புறக்கணித்து நாடு தழுவிய பொதுமுடக்கத்தை நியாயப்படுத்துகின்ற வகையிலேயே, இந்த பொய்களில் பெரும்பாலானவை பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.

தொற்றுநோயால் மக்களுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் அச்சுறுத்தலைப் புறக்கணித்து விட்டு, வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக காட்டிக் கொள்ளவே அதிகாரிகள் முயன்றனர். கடந்த மூன்று மாதங்களில் அரசு அதிகாரிகள் கூறிய பொய்களும்,  அவர்களின் மோசமான தவறான வழிநடத்துதல்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மே 16க்குப் பிறகு கோவிட்-19இன் புதிய பாதிப்பு இருக்காது

ஏப்ரல் 24 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ​​நிதி ஆயோக் உறுப்பினரும், கோவிட் -19க்கான தேசிய பணிக்குழுவின் தலைவருமான வினோத் பால், நழுவுபடம் ஒன்றை செய்தியாளர்களிடம் காட்டினார். கொரோனா வைரஸ் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் ஆயிரம் என்ற அளவிற்கு, மே 10க்குள் குறையும் என்று கூறிய அந்தப் படம், மே 16க்குப் பிறகு இந்தியாவில் புதிய நோயாளிகள் என்று யாருமே இருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்ததது.

தொற்றுநோய் குறித்து எதிர்வினையாற்றுவதற்காக, நரேந்திர மோடி அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக நாடு முழுவதும் இருந்து 21 முன்னணி அறிவியலாளர்களை உள்ளடக்கிய கோவிட்-19 தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டது. அந்த செய்தியாளர் மாநாட்டிற்குப் பிறகு, பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) ஒரு கணித முன்மாதிரியை ட்வீட் செய்தது. ’#கோவிட் நிகழ்வுகளில் மறைந்திருக்கும் உச்சத்தைப் பற்றி பயப்படத் தேவையில்லை, நோய் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது’ என்று பால் தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பாலின் முன்மாதிரியில், நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 1500 என்ற உச்சத்தில் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது. கோவிட்-19 எதிர்வினைக்காக ஆலோசனை வழங்குவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டிருந்த மற்றொரு அதிகாரம் பெற்ற குழுவின் உறுப்பினர்கள் பலரும் இந்த கூற்று தவறானது என்று சொல்லியிருந்தார்கள். அவர்கள் கூறியது மட்டுமல்லாமல், நோயாளிகளின் தொடர்ச்சியான எண்ணிக்கை உயர்வே, பால் கூறியதை பொய் என்று நிரூபித்தது. மே 16 அன்று, இந்தியாவில் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 5000 என்ற விகிதத்தில் அதிகரிக்க ஆரம்பித்து, ஜூன் 12க்குள், அது 10,000 என்ற அளவை எட்டியது.

இந்தியாவில் கோவிட்-19இன் சமூகப் பரவல் இல்லை

கோவிட்-19: தெரிந்த கேள்விகள் ...

மே 11 அன்று, சுகாதார அமைச்சகத்தின் இணை சுகாதாரச் செயலாளர் லாவ் அகர்வால், ’இந்த கட்டத்தில் பராமரிப்பது மட்டுமே முக்கியம், மேலும் கட்டுப்பாட்டு முயற்சிகளை அதிகரிப்பது, நாம் இன்னும் சமூகப் பரவல் கட்டத்திற்குச் செல்லவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது’ என்று கூறினார். இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை என்று அரசு பிரதிநிதிகள் அடிக்கடி மறுத்து வந்தனர் அல்லது அந்தக் கேள்வியை முற்றிலுமாகத் தவிர்த்தனர். முன்னதாக மார்ச் 14 அன்று, இந்தியாவிற்கான கோவிட்-19 எதிர்வினையை உருவாக்குகின்ற அமைப்பான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ஐசிஎம்ஆர்) டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவா, எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கையிடம், ’நம்மால் இன்னும் 30 நாட்களைச் சமாளிக்க முடிந்தால்,  அடுத்த 30 நாட்களில் சமூகப் பரவல் நடக்கவில்லை என்றால், நாம் நல்ல நிலைமையில் இருப்போம்’ என்று தெரிவித்திருந்தார். இந்தியாவில் ஏற்கனவே சமூகப் பரவல் இல்லை என்று அவர் சொல்வதையே  அது குறித்தது. ஜூன் 2 அன்று பத்திரிகையாளர் சந்திப்பில், சமூகப் பரவலைப் பற்றி ஐசிஎம்ஆரின் மூத்த அறிவியலாளரான நிவேதிதா குப்தாவிடம் கேட்டபோது, ​​அந்த கேள்வியைப் புறக்கணித்த அவர் ’சமூகப் பரவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பரவலின் அளவு குறித்து, பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் எங்கே நிற்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்’ என்றார். அண்மையில் ஜூன் 12ஆம் தேதி அன்றுகூட, இந்தியாவில் கோவிட்-19இன் சமூகப் பரவல் இல்லை என்று நம்புகிறோம் என்பதையே பார்கவா மீண்டும் வலியுறுத்தினார்,

சமூகப் பரவலை இந்திய அரசாங்கம் மறுப்பதற்கு, அந்த வார்த்தை குறித்த அவர்களின் சொந்த கண்டுபிடிப்பு வரையறையே காரணமாக இருக்கிறது. நிலைமை குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைகளில், ’வெளியிலிருந்து வந்த நோயாளிகள்’ மற்றும் ’உள்ளூர் பரவல்’ என்று நோயாளிகள் இரண்டு வகைகளாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். சமூகப் பரவல் இருப்பதாக  இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட வைரஸின் எந்தவொரு ஆபத்தான தீவிரம் கொண்ட பகுதியையும் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தவில்லை. ஏனெனில் அவையெல்லாம் உள்ளூர் பரவல் என்ற வகைப்பாட்டின் கீழேயே வருகின்றன. ஆனால் சமூகப் பரவல் என்ற வகையை உருவாக்கி, இந்தியாவில் கோவிட்-19 அந்தக் கட்டத்தை எட்டி விட்டதை மறுப்பதன் மூலமும், தொற்றுநோய்களின் அளவை மதிப்பிடுவதில், உலக சுகாதார நிறுவனத்தின் வகைப்படுத்தலுடன் மத்திய அரசு முற்றிலும் முரண்பட்டிருக்கிறது.

மார்ச் மாத இறுதியில், சத்தீஸ்கர் அரசாங்கம் அதிக அளவிலான பரிசோதனைக் கொள்கையை ஏற்றுக்கொண்டபோது, ​​உள்ளூர் பரவல் மற்றும் சமூகப் பரவல் ஆகிய இரண்டிற்குமான ஆதாரங்களைக் கண்டறிந்தனர். உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை உள்ளூர் பரவல்  கொண்டதாக மார்ச் 12 அன்றே வகைப்படுத்தியிருந்தது. மும்பையில் பொதுமுடக்கத்திற்கு முன்பாகவே சமூகப் பரவல் நன்றாகவே இருந்தது என்று இந்தியன் ஜர்னல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் என்ற கல்வி இதழ் நடத்திய ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்திய பொது சுகாதார சங்கம், இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவ சங்கம் மற்றும் தொற்றுநோயியல் நிபுணர்களின் சங்கம் போன்ற பொது சுகாதாரம் குறித்து செயல்படுகின்ற சங்கங்கள் இணைந்து மே 25 அன்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில், ’சமூகப் பரவல் ஏற்கனவே நாட்டில் பெரிய அளவிலான பிரிவினர் அல்லது மக்கள்தொகையிடம் நன்கு நிறுவப்பட்டுள்ள இந்த நிலையில், கோவிட் -19 தொற்றுநோயை உடனடியாக அகற்றிவிட முடியும் என்று எதிர்பார்ப்பது நம்பத்தகாதது’ என்று கூறப்பட்டிருந்தது. புதிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்துக்கு மேல் அதிகரித்து இருக்கும்போது, ​​இந்திய அரசு அடிக்கடி இவ்வாறு சமூகப் பரவலை மறுத்து வருவது அபத்தமானது.

கோவிட்-19ஐத் தடுக்க ஆயுர்வேதம், ஹோமியோபதி சிகிச்சை உதவும்

அறிவியல் பார்வையில் ஹோமியோபதி ...

ஜனவரி 29 அன்று, ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆயுஷ் அமைச்சகம், கோவிட்-19ஐத் தடுப்பதற்கும், அந்த நோயின் அறிகுறிகளைக் கையாள்வதற்கும் ஆயுர்வேதம், யுனானி மற்றும் ஹோமியோபதி மருந்துகளைப் பரிந்துரைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. துளசி இலைகளை வேகவைத்து குடிப்பது, தினமும் காலையில் இரண்டு துளி நல்லெண்ணெயை நாசிக்குள் ஊற்றுவது ஆகியவை அந்த அறிக்கையில் இருந்த சில உதவிக்குறிப்புகளுக்குள் அடங்கும்.

ஏப்ரல் 21 அன்று, ஹோமியோபதியை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நெறிமுறையுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கான சோதனைகளை ஆயுஷ் அமைச்சகம் தொடங்கியது. லைவ்மின்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள  தன்னாட்சி ஆராய்ச்சி அமைப்பான ஹோமியோபதி மத்திய ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரலான  அனில் குரானா, இரண்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். அறிகுறியற்ற நோயாளிகளை தாங்கள் பரிசோதித்து வரும் வேளையில், மிகவும் கடுமையான அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு பரிசோதனையை தொடங்கப் போவதாக அவர் அப்போது கூறினார்.

புதிய கொரோனா வைரஸிற்கான ஆயுர்வேத சிகிச்சைகள் அல்லது தடுப்பு மருந்துகளை மிகவும் ஆபத்தான வகையில், கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், உத்தரகண்ட், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநில அரசுகள் தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கைகள் கோவிட்-19ஐத் தடுப்பதற்கு எந்த வகையிலாவது உதவுகின்றனவா என்பது குறித்து இதுவரை எந்தவொரு முறையான மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வும் இல்லை. 225 ஆய்வுக் கட்டுரைகள் குறித்து விரிவான ஆய்வை நடத்திய ஆஸ்திரேலிய அரசாங்கம், ஹோமியோபதியின் செயல்திறனுக்கான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. ஹோமியோபதியை முற்றிலுமாக தடை செய்வதைக் கருத்தில் கொண்டு, ஹோமியோபதிக்கு நோய் தீர்க்கும் அல்லது தடுப்பு பண்புகள் இருப்பதாகக் கூறுவது தவறான விளம்பரம் என்று ஸ்பெயின் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. ஹோமியோபதியை ஒரு போலி அறிவியல் என்று அழைத்ததோடு, தேசிய சுகாதார சேவையில் ஹோமியோபதி மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதை 2010ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் தடைசெய்துள்ளது.

கோவிட்-19ஆல் ஏற்பட்ட தீங்கை பொதுமுடக்கத்தின் மூலமே தவிர்க்க முடிந்துள்ளது

6,000, 7,000, 8,000: How the final week of lockdown 4.0 saw spike ...

ஏப்ரல் 14 அன்று, நாடு தழுவிய பொதுமுடக்கத்தை மேலும் விரிவுபடுத்துவது  குறித்து நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியபோது, ​​’உலகளாவிய கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில், மிகுந்த வலிமையுடனும் உறுதியுடனும் இந்தியா முன்னேறி வருகிறது. உங்களுடைய கட்டுப்பாடு, தவம் மற்றும் தியாகத்தின் காரணமாக மட்டுமே, கொரோனாவால் ஏற்படுகின்ற தீங்குகளை இதுவரையிலும் இந்தியாவால் பெரிய அளவில் தவிர்க்க முடிந்துள்ளது’ என்று கூறினார். புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் பொதுமுடக்கம் வெற்றியடைந்துள்ளது என்று மோடியும் அரசின் பிற பிரதிநிதிகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

மே 22 அன்று, நிதி ஆயோக் உறுப்பினரும், கோவிட்-19க்கான தேசிய பணிக்குழுவின் தலைவருமான வினோத் பால், பிரதமரின் பொதுமுடக்கம் குறித்த முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதாகவும், நாடு அதை திறம்பட செயல்படுத்திய விதம், ஒரு சர்வதேச உதாரணமாக இருப்பதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார். ’ஏப்ரல் 4க்குப் பிறகு நோய் பரவலின் அதிகரிப்பில் மந்தநிலை இருப்பது தெளிவாக உள்ளது. அதற்குப் பின்னர் அது 5.5% ஆக நிலைபெற்றது. வைரஸ் பரவலின் அதிகரிப்பை நாடு நிறுத்தியுள்ளதையே அது காட்டுகிறது… ஒட்டுமொத்தமாக 14 முதல் 29 லட்சம் வரையிலான நோயாளிகளையும், 37,000 முதல் 71,000 வரையிலான இறப்புகளையும் நாங்கள் தவிர்த்திருக்கிறோம்’ என்று அவர் தொடர்ந்து கூறியிருந்தார்.

ஆனாலும் கோவிட்-19 பரவுவதைத் தடுப்பதில் பொதுமுடக்கத்தின் வெற்றி மிகவும் சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. பொதுமுடக்கம் குறித்த மூன்று கட்டங்களின் அறிவிப்பின் போது, பொதுமுடக்கத்தின் செயல்திறன் குறித்து அரசாங்கம் அமைத்திருந்த அறிவியல் பணிக்குழுவை அரசு நிர்வாகம் அணுகவே இல்லை. இந்தியாவின் பரிசோதனைத் திறன் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை அதிகரிப்பது போன்ற முக்கியமான இணைநடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கத் தவறியதால், பொதுமுடக்கம் அதன் நோக்கத்தை அடையத் தவறிவிட்டதாகவே பணிக்குழுவின் பல உறுப்பினர்களும் தெரிவித்திருந்தனர். 130 கோடி மக்களை பொதுமுடக்கத்தில் வைத்த பிறகும், இந்தியாவில் மூன்று லட்சம் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் பதிவாகியுள்ளனர். அறிவியலற்ற புரிதலை அடிப்படையாகக் கொண்டதாக,  நாடகத்தனத்தின் மீது அதிக கவனம் செலுத்திய பொதுமுடக்கங்கள் தோல்வியுற்றதாக பணிக்குழுவின் உறுப்பினர்கள் கூறினர்.

தரவு விஞ்ஞான நிபுணர்கள் சமூகமான டேட்டாமீட்டின் தலைவரான ஜி.என்,தேஜேஷ் பொதுமுடக்கத்தின் காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையைப் பதிவு செய்ய ’கோவிட்-19 வைரஸ் அல்லாத மரணங்கள்’ என்ற தலைப்பில் தரவுத்தளத்தை உருவாக்கினார். அவர்களின் கூற்றுப்படி, பட்டினி மற்றும் சோர்வு ஆகியவற்றின் நேரடி விளைவாக ஏற்பட்ட 178 இறப்புகள் உட்பட, வைரஸால் ஏற்படாத  742 இறப்புகள் நிகழ்ந்துள்ளன, பொதுமுடக்கத்தின் நேரடி விளைவாகவே இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

ஒருநபர் கூட பட்டினி கிடக்காமல் மூன்று மாதங்களை முழுமையாகக் கடந்து விட்டோம்

COVID-19 Update: Cases in India Reach 74,281; Lockdown 4.0 ...

மே 14 அன்று, டைம்ஸ் குழுமத்தின் பகுதியாக உள்ள பென்னெட் பல்கலைக்கழகத்தின் மேலாண்மைப் பள்ளி  ஏற்பாடு செய்த உலகளாவிய இணையவழி மாநாட்டில் முக்கிய உரையாற்றிய ரயில்வே மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ’ஒருநபர்கூட  பட்டினி கிடக்காமல், இந்த மூன்று மாதங்களை நாம்  முழுவதுமாக கடந்துள்ளோம். இது மத்திய அல்லது மாநில அரசாங்கங்களின் முயற்சிகளால் மட்டும் நடக்கவில்லை. 130 கோடி இந்தியர்களின் முயற்சியே அதற்கு காரணம்’ என்றார். ஆனால் பொது விநியோக முறையின் தோல்விகள், கடைகளுக்குச் செல்ல இயலாமை மற்றும் பயிர்களை அறுவடை செய்ய இயலாமை போன்ற காரணங்களால் பட்டினி நிலைமை ஏற்பட்டுள்ளதாக, நாடு முழுவதிலும் இருந்து கிடைத்திருக்கும் ஏராளமான அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களிலிருந்து, பொதுமுடக்கத்தின் முதல் சில வாரங்களில் கிடைத்த கள அறிக்கைகள், பட்டினியையும், பட்டினியால் இறந்த சம்பவங்களையும் தெரிவித்தன. தில்லியில் இருந்து வெளியேறிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்று நாடு தழுவிய பொதுமுடக்கத்தின் முதல் கட்டத்தின் போது செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். உணவு கிடைக்காத பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தங்களால் உணவளிக்க முடியாதது குறித்து தேசிய தலைநகரில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவளிப்பதற்காக பணியாற்றிய சமூக அமைப்புகளும் பேசின. கிராமப்புற உத்தரபிரதேசத்திலிருந்து வந்த செய்திகள், பொது விநியோகம் மற்றும் பணம் இல்லாததால் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருந்த குடும்பங்களைச் சுட்டிக் காட்டின. கோவிட்-19 வைரஸ் அல்லாத இறப்பு குறித்த கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, மே 14க்கு முன்னர் 23 பட்டினி இறப்புகள் பதிவாகியுள்ளன. உண்மையில், கோயலின் அமைச்சகத்தின் கீழ் இயங்கிய ரயில்களில் உணவு கிடைக்கவில்லை என்று புலம்பெயர்ந்து சென்ற பலரும் தெரிவித்தனர். மே 9 முதல் மே 27 வரை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் மட்டும் 80 இறப்புகள் பதிவாகியுள்ளன, அவற்றில் பலவற்றிற்கு பசி காரணமாக இருக்கலாம்.

ரயில்வே மூலம் உணவும், குடிநீரும் இலவசமாக வழங்கப்படுகிறது

ரயில்களில் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்து, மே 28 அன்று இந்திய தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, ’ரயில்வே மூலம் உணவும், குடிநீரும் இலவசமாக வழங்கப்படுகிறது. பயணத்தின் முதலாவது உணவை மாநில அரசு வழங்குகிறது. ரயில் பயணம் தொடங்கியதும், ரயில்வே அமைச்சகத்தால் உணவு வழங்கப்பட்டு வருகிறது. குறுகிய தூரப் பயணமாக இருந்தால் ஒரு முறை உணவும், நீண்ட பயணமாக இருந்தால் இரண்டு முறை உணவும் வழங்கப்படுகிறது’ என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்,

நீண்டதூரப் பயணங்களில்கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு ஒருமுறைக்கு மேல் வழங்கப்படவில்லை என்று பல தகவல்கள் வந்துள்ளன. தனிப்பட்ட முறையில் பணிபுரியும் நிருபரான சாஹில் முர்லி மெங்கனி, தனது ட்வீட்டில் ’78 மணி நேரத்திற்கும் மேலாக ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் பயணம் செய்த போதும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவே வழங்கப்படவில்லை, அவர்கள் ரயில் நிறுத்தப்பட்ட வயலில் சோளத்தை சமைத்து, அதன் மூலம் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது. ரயில்வே அமைச்சகத்தின் திட்டமிடல் மோசமாக இருந்தது. வழக்கமாக தங்கள் இலக்கை அடைய  ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் 12 மணிநேரம் கூடுதலாக எடுத்துக்கொண்டன, மேலும் சில நேரங்களில், அவை தவறான இடங்களைக்கூட சென்றடைந்தன. அதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு, தண்ணீர் அல்லது சுத்தமான கழிப்பறைகள் இல்லாமல் சிக்கித் தவித்தனர்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Covid-19: 80 migrants died on special trains between May 9 to May ...

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணித்த அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் உணவு மற்றும் தண்ணீருக்காக வேண்டுகோளை விடுத்தனர். ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில், தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் மறுக்கப்பட்டதால், உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் பல புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர். பசி மற்றும் தாகம் காரணமாக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களிலும் மரணங்கள் ஏற்பட்டதாகப் பதிவாகியுள்ளன.

முன்பே இருந்த உடல்நலக் குறைவாலேயே ரயில்களில் இறப்பு ஏற்பட்டது

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களைப் பற்றி, மே 29 அன்று ரயில்வே அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், ’இந்த சேவையைப் பெற்ற சிலருக்கு முன்பே மோசமான உடல்நலக் குறைவு இருந்ததைக் காணமுடிகிறது, கோவிட்-19இன் போது அவர்கள் எதிர்கொள்கின்ற ஆபத்தை, அது மேலும் மோசமாக்குகிறது. முன்பே இருந்த உடல்நலக் குறைவுகளாலேயே, பயணம் செய்த போது, சில துரதிர்ஷ்டவசமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன’ என்று கூறப்பட்டிருந்தது.

மே 27க்கு முன்னர், ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் 80 இறப்புகள் ஏற்பட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் வயது ஒரு மாதம் முதல் 85 வயது வரையிலும் இருந்தது. ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கின்ற, ரயில்வே பாதுகாப்புப் படை, மே 1 முதல் மே 8 வரை இறப்புகள் குறித்து எந்த விவரங்களையும் தரவில்லை. மே 8க்குப் பிறகு கிடைக்கிற தரவுகளைக் கொண்டே ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிடப்பட்டது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையால் மேற்கோள் காட்டப்பட்ட மண்டல ரயில்வே அதிகாரி ஒருவர், ’வெப்பம், சோர்வு மற்றும் தாகம் ஆகியவை, இந்த ரயில்களில் பயணிகள் எதிர்கொள்கின்ற முதன்மை பிரச்சினைகளாக இருக்கின்றன.  கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்ற பல பேரை நாங்கள் கண்டிருக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார். பரவலாக உணவு மற்றும் நீர் பற்றாக்குறை, பல ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் இருந்தது காணப்பட்டது.

உண்மை சரிபார்ப்பு இணையதளமான ஆல்ட்நியூஸ், டெல்லியில் இருந்து பாட்னாவுக்குச் சென்று கொண்டிருந்த ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் இறந்து போன நான்கு வயது குழந்தையின் தந்தை முகமது பிண்டுவுடன் பேசியது. மே 27 அன்று ரயிலில் ஏறுவதற்கு முன்னர் அவர்கள் அனைவரும் உடல்நலம் குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், பயணத்திற்கு முன்பாக எந்தவொரு உடல்நலக் குறைவும் தங்களுக்கு இல்லை என்றும் முகமது அப்போது கூறினார். பயணத்தின் போது ஒரு முறை மட்டுமே தங்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்தே தனது குழந்தை இறந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மே 27 அன்று இறந்து போன தன்னுடைய தாய் அர்வினா கட்டூனை எழுப்ப முயற்சிக்கும் குழந்தையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. அரசாங்கத்தால் நடத்தப்படும் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புத் துறை, அர்வினா ரயிலில் ஏறியபோதே, அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறியதுடன், அந்த தகவலை அவர்கள் குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியதாகவும் கூறியது. அர்வினாவின் சகோதரியுடன் ஆல்ட்நியூஸ் பேசியது. ரயிலில் ஏறிய போது அவருக்கு உடல்நிலை நன்றாகவே இருந்தது என்றும், அவர்  மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த சகோதரி கூறினார். பயணத்தின் போது அர்வினாவுக்கு தண்ணீர் கிடைக்காததையும் அர்வினாவின் சகோதரி கூறியுள்ளார். பெங்களூரைச் சேர்ந்த சமூக சுகாதார நிபுணரான சில்வியா கற்பகம் என்பவருடன் ஆல்ட்நியூஸ் பேசியது. ’உணவுப் பற்றாக்குறைக்கும் மேலாக, அதிக வெப்பமான காலநிலையில், நீண்டதூரப் பயணங்களால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. நீரை அருந்துவது உறுதி செய்யப்பட்டிருந்தால், அது பல இறப்புகளைத் தடுத்திருக்கக்கூடும். ஏற்கனவே நோய்வாய்ப்பட்ட அல்லது பட்டினி கிடந்த சில நோயாளிகளுக்கு தண்ணீர் நன்றாக கிடைத்திருந்தால், இன்னும் சிலர்  காப்பாற்றப்பட்டிருக்கலாம். பட்டினி கிடப்பதைவிட, நீரிழப்பு மிக விரைவில் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது’ என்று அவர் கூறினார்.

ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் கடுமையான வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக ஒரு மாதக் குழந்தை இறந்ததை டெலிகிராப்பில் வெளியான கட்டுரை தெரிவித்தது. எவ்வாறாயினும், ரயில்வே அமைச்சகத்தின் அறிக்கை வெளியான அதே நாளில், அதில் குறிப்பிட்டிருந்ததைப் போலவே, ரயில்வே வாரிய தலைவரான வி.கே.யாதவ் ’இறப்பு ஏற்பட்டால், உள்ளூர் ரயில்வே மண்டலங்கள் அதற்கான காரணத்தை விசாரிக்கும். விசாரணைகள் எதுவுமின்றி, உணவு பற்றாக்குறை இல்லாதபோது அவர்கள் பசியால் இறந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன’ என்று கூறினார். விசாரணைகள் எதையுமே மேற்கொள்ளாமல், முன்பே இருந்த உடல்நலக் குறைவாலேயே மரணங்கள் நிகழ்ந்தன, பட்டினியால் அல்ல என்று ரயில்வே அமைச்சகம் எவ்வாறு முடிவுக்கு வர முடியும் என்பது தங்களுக்குத் தெரியவில்லை என்று அந்த ரயில்களில் சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்வே அமைச்சகத்தின் மீது குறை கூறுகின்றனர்.

சாலைகளில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் இல்லை

Lockdown 4.0 Guidelines For Shops, Travel, Offices, Night Curfew ...

மார்ச் 31 அன்று, இந்திய தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில், ’இப்போது யாரும் சாலைகளில் இல்லை என்று கூறுமாறு எனக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியே இருந்த அனைவரும், கிடைக்கக்கூடிய தங்குமிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

இது மிகவும் பொய்யானது. மார்ச் 31 அன்றும், அதன்பிறகு வந்த வாரங்களிலும், நாடு முழுவதும் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்பிச் சென்றதாக செய்திகள் வெளியாகின. அவர் உச்சநீதிமன்றத்தில் கூறிய அதே நாளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை, நொய்டாவிலிருந்து ஜார்கண்டில் உள்ள பலாமு நோக்கி நடந்து சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குழுவைப் பேட்டி கண்டு வெளியிட்டது. அதே கட்டுரையில், பீகாரில் சமஸ்திபூருக்கு நடந்து சென்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மதுரா காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குழுக்கள் நிறுத்தப்படுவதையும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் பொய் சொன்ன அதே நாளில், மார்ச் 31 வரை ரயில்கள் இயங்காது என்று முன்னர் கூறியிருந்த அரசாங்கம், ஏப்ரல் 14 வரைக்கும் பயணிகள் ரயில்கள் நிறுத்தப்படும் என்று அறிவித்ததாலேயே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு நடந்து செல்வது தொடர்ந்து கொண்டிருந்தது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரயில்வே 85 சதவீதத்தையும், மாநில அரசுகள் 15 சதவீத கட்டணத்தையும் செலுத்துகின்றன

மே 4 அன்று, சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால், ’மாநிலங்களிடமிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில், குறிப்பிட்ட வகையினருக்கு சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்திய அரசாங்கமோ, ரயில்வேயோ, தொழிலாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது பற்றி நாங்கள் பேசவில்லை. போக்குவரத்து செலவில் எண்பத்தைந்து சதவீதம் ரயில்வேயால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அதே நேரத்தில் மாநிலங்கள் 15 சதவீத செலவை ஏற்க வேண்டும்’ என்று கூறினார்.

உண்மையில் அவரது வார்த்தைகள் தவறானவையல்ல என்றாலும், அது முழுமையாக ஒருவரைத் தவறாக வழிநடத்துகின்ற, மிக நேர்த்தியான வாதமாகும். டிக்கெட் விலையில், ரயில்வே அமைச்சகம் 85 சதவீதத்தையும், மீதமுள்ளவற்றை மாநில அரசும் செலுத்துவதன் மூலமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கட்டணம் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றே அனைவரும் கருதுவர். இணைய செய்தித்தளமான தி வயர் நடத்திய உண்மையறியும் சோதனை, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கான தங்களின் முழு டிக்கெட் கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருந்தது என்பதைக் காட்டியது.

Almost 80 Persons Have Died on Board Shramik Special Trains

ஒவ்வொரு ரயிலின் வழக்கமான இரு வழி பயணத்துடன் ஒப்பிட்டு ரயில்வே அமைச்சகத்தின் செலவைக் கணக்கிட்டு, ரயில்வே இழக்கும் பணத்தின் அளவுடன், ரயில்வே வழக்கமாக  ரயில்களுக்கு மானியம் வழங்கும் விகிதத்தையும் அகர்வால் சேர்த்துள்ளார். ஸ்லீப்பர் வகுப்பு பயணிகளுக்கு ரயில் மானியம் 47 சதவீதம் வழக்கமாகத் தரப்படுகிறது. ரயில்வே அமைச்சகம் புலம்பெயர்ந்தோருக்கான ரயில்களுக்கு 85 சதவீதம் மானியம் அளிக்கிறது என்று வாதிடுவதற்காக, சமூக இடைவெளி  நெறிமுறைகள் காரணமாக 1,200 பேரை மட்டுமே ஏற்றிச் செல்லும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் கூடுதல் செலவையும், காலியாகத் திரும்பும் ரயில்களுக்கான கட்டணத்தையும் அகர்வால் சேர்த்துள்ளார். மாநிலங்களும் மீதமுள்ள 15 சதவிகிதத்தை, அதாவது முழு டிக்கெட் விலையை, தங்கள் மாநிலக் கருவூலத்தில் இருந்து செலுத்த வேண்டியதில்லை என்பதால், அவை பெரும்பாலும் ரயில்வே அமைச்சகத்திற்கு பணத்தைச் செலுத்துவதற்கு முன்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்தே முழுத் தொகையையும் வசூலித்தன என்று குஜராத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. .

ரயில்வே அமைச்சின் துறைசார்ந்த கடிதம், உள்ளூர் மற்றும் மாநில அரசுகள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து கட்டணத்தை வசூலித்து மத்திய அரசிற்குத் திருப்பிச் செலுத்துமாறு அறிவுறுத்தியது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சுமையை ஏற்ற விரும்பாத மாநிலங்கள்,  மத்திய அரசின் எந்த உதவியும் இல்லாமல் முழு டிக்கெட் செலவையும் தாங்களே செலுத்த வேண்டும் என்று மகாராஷ்டிராவின் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உட்பட பல மாநிலங்களின் அரசு பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் அனைத்து பயணங்களுக்குமான கட்டணங்கள், வழக்கமான ஸ்லீப்பர் டிக்கெட்டுகளின் கட்டணத்தை விட கூடுதலாக 50 ரூபாய் இருந்தது என்று ஹிந்து பத்திரிக்கை தெரிவித்தது. இந்த கட்டணம் அனைத்துமே சிக்கித் தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களாலேயே செலுத்தப்பட்டன.

கோவிட் நிவாரணத்திற்காக 20 லட்சம் கோடி தொகுப்பை அரசு அறிவித்தது

Full text of PM Narendra Modi's speech on coronavirus lockdown ...

மே 13 அன்று பிரதமர் மோடி கூறுகையில், ’ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளவற்றுடன் இன்று அறிவிக்கப்படும் பொருளாதார தொகுப்பு சேர்க்கப்பட்டால், சுமார் ரூ.20 லட்சம் கோடி ஆகும். இந்த தொகுப்பு இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பத்து சதவிகிதம் ஆகும். இதன் மூலம் நாட்டின் பல்வேறு பிரிவினருக்கும், பொருளாதார அமைப்புடன் இணைந்துள்ளவர்களுக்கும் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிலான உதவியும், பலமும் கிடைக்கும்’ என்று கூறினார்.

செய்தி வலைத்தளமான ஹஃபிங்டன் போஸ்ட் வெளியிட்ட கட்டுரையில், மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரால் அறிவிக்கப்பட்ட பொருளாதார தொகுப்பில் உள்ள பல தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் ஏற்கனவே கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் நிலுவையில் இருந்த திட்டங்களாக  இருந்தன அல்லது உண்மையான பொருளாதார தூண்டுதலை உண்மையாக உருவாக்குவதில் அவை மிகச் சிறியவையாக இருந்தன.

உதாரணமாக, பிரதான் மந்த்ரி மத்ஸ்ய சம்பதா யோஜனா என்ற திட்டம், மீன்வளத்திற்காகவும், மீன்பிடி மதிப்பு சங்கிலியை உயர்த்துவதற்காகவும், ஏற்கனவே 2019 ஜூலையில் அறிவிக்கப்பட்ட பின்னர், கணிசமான காலத்திற்கு நிலுவையில் இருந்து வந்தது. கொரோனா வைரஸ் நிவாரணத்தில் அது எவ்வாறு வரும் என்பது தெளிவாக இல்லை. 13,343 கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்திற்கும் 2019 மே மாதம் அமைச்சரவை ஒப்புதல் அளித்து, செப்டம்பர் மாதம் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்த திட்டத்தின் நோக்கம் கால்நடைகள், எருமைகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகளுக்கு தடுப்பூசி போடுவதாகும்.

தேசிய கடன் உத்தரவாத அறங்காவலர் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து கடன்களைப் பெறுவதற்கான உத்தரவாதத்தை அளிப்பதற்காக ரூ.3 லட்சம் கோடி நிதியுதவியை சீதாராமன் அறிவித்தாலும், அந்த அறிவிப்பு கடன்களை முதன்மையாகக் கொண்டிருப்பதால், அதை ஒரு தூண்டுதல் தொகுப்பு என்று அழைப்பது கடினம். மேலும், முடக்கப்பட்ட நிலையில் மூடப்பட்டிருந்த சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்கான நிதி செலவினங்கள் எதுவும் இல்லை. எட்டு கோடி சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களில், நாற்பத்தைந்து முதல் ஐம்பது லட்சம் நிறுவனங்கள் மட்டுமே வங்கிகளில் கடன் வைத்திருப்பதாக ஹஃபிங்டன் போஸ்ட்டிடம் முன்னாள் மத்திய நிதி செயலாளர் சுபாஷ் கார்க் தெரிவித்தார். ’நான் இதை ஒரு தூண்டுதல் தொகுப்பு என்று அழைக்க மாட்டேன். ஏனெனில் அந்த நிறுவனங்களுக்கு மேலும் வளர்வதற்கான தூண்டுதல்கள் தேவையில்லை. உயிர்வாழ்வதற்கும், புத்துயிர் பெறுவதற்குமே அவர்களுக்கு ஆதரவு தேவைப்படுகிறது. இப்போது வந்திருக்கும் தொகுப்பு துரதிர்ஷ்டவசமாக, ஆதரவு அளிக்கின்ற தொகுப்பாக இல்லை’ என்று கார்க் கூறியிருந்தார்.

கூடுதலாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான ஊதியத்தை 20 ரூபாய் அதிகரிப்பதாக சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த அதிகரிப்பு ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டு முறை தலைமை தொழிலாளர் நலத்துறை ஆணையாளரால் செய்யப்படுகின்ற வழக்கமான திருத்தத்தின் ஒரு பகுதியாகும். பொருளாதார தூண்டுதல் தொகுப்பின் மொத்தத்தில் இதை உள்ளடக்குவது நகைப்பிற்குரியதாகும்.

தி கேரவான் இதழ், 13 ஜூன் 2020

https://caravanmagazine.in/politics/fact-check-the-modi-administrations-statements-on-the-lockdown-were-filled-with-misdirections-and-lies

நன்றி: தி கேரவான் இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு