பொது அறம் [Public Morality] மற்றும் அரசியலமைப்பு அறம் [Constitutional Morality] - ஓர் அறிமுகம் | க.அ.சிவராமன் | www.bookday.in

பொது அறம் [Public Morality] மற்றும் அரசியலமைப்பு அறம் [Constitutional Morality] – ஓர் அறிமுகம்

பொது அறம் [Public Morality] மற்றும் அரசியலமைப்பு அறம் [Constitutional Morality] – ஓர் அறிமுகம்

ஒரு சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் தங்களுக்கென சில கலாச்சாரங்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் அறநெறிகளை பின்பற்றுகின்றனர் அதேபோன்று அந்த நாட்டின் சட்டத்தினால் ஆன அறநெறிகளையும் பின்பற்றுகின்றனர். இவை இரண்டும் சிலவேளைகளில் ஒன்றுக்கொன்று மோதுகின்ற ஒரு சூழ்நிலை உருவாகின்றது. அப்போது மக்களால் பின்பற்றப்படுகின்ற பொது அறம் ஒரு புறமும், சட்டத்தினால் ஆன சட்ட அறம் மறுபுறமும், என நேர் எதிராக நிற்கின்றது. இது மிக முக்கிய ஒரு பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் இம்மாதிரியான பிரச்சனைகள் எழுகின்ற பொழுது நீதித்துறையானது பொது அறத்தை கருத்தில் கொள்ள வேண்டுமா இல்லை சட்டத்திலான சட்ட அறத்தை கருத்தில் கொள்ள வேண்டுமா என்றொரு நிலை உருவாகிறது. இதை நீதித்துறையானது மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடன் கையாள வேண்டும். இல்லையென்றால் இதை சமுதாயத்தில் பெரிய அளவிலான தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தி விடக்கூடும். இந்தியாவைப் பொறுத்தளவில் பொது அறம் Vs.சட்ட அறம் என்று வருகின்ற பொழுது இந்த சட்டத்தின் அறம் என்பது ‘அரசமைப்பு ‘ அறமாகவே கருதப்படுகின்றது. இந்த மக்கள் அறம் மற்றும் அரசியலமைப்பு அறம் இவை அடிக்கடி மோதிக்கொள்ளக்கூடிய ஒன்றாக உள்ளது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் எழுந்திருக்கின்றன.இந்திய நீதித்துறையில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த பொது அறம் மற்றும் அரசியலமைப்பு அறம் என இரண்டும் மிக முக்கியமானவை. இதனை இந்திய குடிமக்கள் அனைவரும் கட்டாயமாக அறிந்து வைத்திருக்கக் வேண்டிய ஒன்றாகும். ஏனென்றால் இதன் மூலமாகத்தான் இந்திய அரசியலமைப்பு கூறுகின்ற சமத்துவம், ஜனநாயகம், சகோதரத்துவம், சமூக நீதி போன்றவற்றை அடைவதற்கான ஒரு வழியை உருவாக்கித் தரும்.

பொது அறம் [public morality] :-

ஒரு நாட்டில் வாழுகின்ற மக்கள் பல்வேறு வகையான கலாச்சாரங்கள் பழக்க வழக்கங்கள் மரபுகளை கொண்டிருப்பார். இந்தியாவைப் பொறுத்தளவில் இனம் மொழி சமயம் சாதி என பலதரப்பட்ட மக்கள் குழுக்கள் இருக்கின்றன. இவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான கலாச்சாரங்களையும் மரபுகளையும் பண்பாடுகளையும் கொண்டுள்ளனர். இதை மாறக் கூடிய ஒன்றாகும். இந்த கலாச்சார பழக்க வழக்கங்கள் அவர்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றது அந்த வாழ்க்கை முறையே சரி எது தவறு எது என்பதையும் தீர்மானிக்கின்றது. ஒரு சமூகத்தில் பெரும்பான்மை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கலாச்சாரங்கள் பழக்க வழக்கம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களே பொது அறம் ஆகும். ஏதேனும் ஒன்றைப் பற்றிய பெரும்பான்மை மக்களுடைய சரி அல்லது தவறு என்ற நிலைப்பாடே பொது அறம் ஆகும்.

உதாரணமாக, தன் பாலின உறவு (homo sexuality) என்பது பெரும்பான்மை மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தவறான ஒன்றாகும்.

அரசியலமைப்பு அறம் [constitutional morality] :-

ஒரு நாட்டில் வாழுகின்ற மக்கள் அந்த நாட்டின் சட்டங்களை மீறி செயல்பட முடியாது அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டாக வேண்டும். அதேபோன்று இந்தியாவில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விழுமியங்களை (values) அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்திய அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையில் கூறியுள்ள நீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் அடிப்படை உரிமைகளான பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம், தனிமனித மரியாதை ஆகியவற்றின் அடிப்படையே அரசியலமைப்பு அறம் ஆகும். அரசமைப்பு அறம் என்பது இந்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதிகளின் அடிப்படையில் சரி தவறு என்ற நிலைப்பாடே ஆகும். இது நிலையானதாகவும் பெரும்பான்மை வாத கருத்துக்களுக்கு அப்பாற் பட்டதாகும். உதாரணமாக, தன்பாலின உறவு என்பது பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையில் தவறு என்றாலும் கூட அரசியலமைப்பு அறத்தின் படி அது தவறான ஒன்றல்ல மாறாக, அது தனிமனித சுதந்திரம் (right to privacy)ஆகும் என்பது அரசியலமைப்பு அறமாகும்.

பொது அறம் vs. அரசியலமைப்பு அறம் :-

இவை இரண்டும் முரண்பாடுகளைக் கொண்ட அடிக்கடி மோதிக்கொள்ளக்கூடிய ஒரு கருத்தாக்கங்களாக உள்ளது. சமூகத்தில் சரி என்று கருதப்படுகின்ற கருத்து ஒன்று சட்டத்தின் அடிப்படையில் தவறான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் இவை இரண்டும் மோதிக் கொள்கின்றன. உதாரணமாக, தீண்டாமை என்பது வர்ணாசிரம தர்மத்தின் அடிப்படையில் சரியான ஒன்று ஆனால் அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் தீண்டாமை என்பது ஒரு பெரும் குற்றமாகும். இப்படியாக பல்வேறு வகையான கருத்துக்கள் இந்த வகையில் பொது அறம் மற்றும் அரசியலமைப்பு அறம் இவை இரண்டும் எதிரும் புதிருமாக நிற்கின்றது. இப்படி முரண்பாடுகள் ஏற்படுகின்ற வேளையில் நீதித்துறை ஆனது அரசியலமைப்பு அறத்தையே கருத்தில் எடுத்துக் கொள்ளும் பொது அறத்தை எடுத்துக் கொள்ளாது. ஏனென்றால் பொது அறமானது அடிக்கடி மாறக்கூடிய ஒன்றாகும் ஆனால் அரசியலமைப்பு அறம் என்பது மாறாத நிலையான ஒன்றாக இருக்கும் . டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார் பொது அறத்தின் பெரும்பான்மையின் காரணமாக அடக்குமுறை ஏற்படக்கூடும். அதுவே அரசமைப்பு அறம் என்றால் தனி மனித மரியாதை சமத்துவம் ஆகியவை நிலை நாட்டப்படும்.பெரும்பான்மை மக்களின் அறம் தனி மனிதனின் சுதந்திரத்தில் குறுக்கிட்டாள் அதனை அரசியலமைப்பு அறம் தடை செய்யும். எனவே பொது அறமா இல்லை அரசியலமைப்பு அறமாக என்று வருகின்ற பட்சத்தில் அரசியலமைப்பு அறமே ஓங்கி நிற்கும். இப்பிரச்சினை தொடர்பாக பல வழக்குகள் எழுந்துள்ளனர்.

*நாஸ் அறக்கட்டளை வழக்கு :-*

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாஸ் என்ற அறக்கட்டளையானது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 377 இயற்கைக்கு மாறான உறவு என்று தன்பாலின உறவை (homo sexuality) குற்றம் என்று சொல்லப்பட்டுள்ளது. இது தன்பாலின உறவினர்களின் குழுக்களை தனிமைப்படுத்தி வஞ்சிக்கும் வகையில் உள்ளது அது மட்டும் அல்லாமல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறக் கூடியதாக ஒன்றாகவும் உள்ளது என்று வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் ஏ.பி.சா மற்றும் எஸ்.முரளிதர் அவர்கள் பிரிவு 377 சிலர் திருத்தங்களை கொண்டு வந்தனர். அதாவது 18 வயதிற்கு மேற்பட்ட தன் பாலின உறவிற்கு இது பொருந்தாது என்றும் மாறாக குழந்தைகள் மற்றும் பொது இடங்களில் நடைபெறக் கூடியவைகளுக்கு இந்த பிரிவானது பொருந்தும் என்று மாற்றம் செய்தனர். சமூகத்தின் பார்வையில் இருந்து பார்க்கின்ற பொழுது தன்பாலின உறவுகள் என்பது தவறானதாகவும் இயற்கைக்கு மாறானதாகவும் தோன்றும். இவ்வாறு பொது அறத்தின் அடிப்படையில் தவறானது என்றாலும் கூட தன்பாலின உறவானது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 21-ன் ஒரு பகுதியான தனிநபர் தனியுரிமை மற்றும் மனித மரியாதையின் அடிப்படையில் இவை ஒரு குற்றம் அல்ல. அது மட்டுமல்லாமல் ஒரு குறிப்பிட்ட குழுவை மட்டும் பாகுபாடு காட்டுவது என்பது சரத்து 14-ன் சமத்துவத்திற்கு எதிரான ஒன்றாகும். அரசியலமைப்பு என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு கருவி பழைய சமூக ஒழுக்கம் அரசியலமைப்பிற்கு ஏற்றவாறு மாற வேண்டும் என்ற கருத்தை முன் வைத்தனர். இந்த வழக்கில் பொது அறம் (public morality) vs. அரசியலமைப்பு அறம் (constitution morality) என்ற மோதல் உருவானபோது நீதிமன்றமானது தெளிவாக constitutional morality க்கு முன்னுரிமை அளித்தது.

எழுத்தாளர்.பெருமாள் முருகன் வழக்கு :-

பெருமாள் முருகன் சிறுகதை ஆசிரியர் மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய மாதொருபாகன் என்ற நாவல் 2010 இல் வெளியானது. இந்த நாவலின் சில பகுதிகள் சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்த நாவலில் குழந்தை இல்லாத தம்பதியினர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருவிழாவில் பழமையான ஒரு சம்பிரதாயம் (குழந்தை பெறுவதற்காக பெண் ஒரு அந்நியருடன் உறவு கொள்ளும் வழக்கம்) பின்பற்றப்படுகிறது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. இது இந்து மதத்தையும் கோயில் மற்றும் திருவிழா போன்ற இழிவுபடுத்தும் வகையிலும் அப்பகுதி பெண்களை அவதூறான வகையில் சித்தரித்து எழுதப்பட்டுள்ளது என்று திருச்செங்கோடு பகுதியில் உள்ள இந்து முன்னணி, உள்ளூர் வணிகர்கள் மற்றும் சாதி சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் நாவலை எரித்தனர் மற்றும் ஆசிரியருக்கு கொலை மிரட்டல் போராட்டங்கள் போன்றவற்றை முன்னெடுத்தனர். இதன் காரணமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைதி கூட்டம் என்கிற பெயரில் போலீஸ் மற்றும் நிர்வாகம் அமைத்த ஒரு கூட்டத்தில் பெருமாள் முருகன் மன்னிப்பு கடிதம் எழுதி நாவலை திரும்ப பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் பின்னர் நான் இனிமேல் எழுதப்போவதில்லை பெருமாள் முருகன் இறந்து விட்டான் என்று ஒரு அறிக்கையை வெளியிட்டார் எழுத்தாளர் பெருமாள் முருகன்.

பின்னர் எழுத்தாளர் தோழர். ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மனு ஒன்றளித்தார். அதில், எழுத்தாளர் பெருமாள் முருகன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் புஷ்பா சத்திய நாராயணன் அவர்கள் மாவட்ட அலுவலகத்தில் கூடிய அமைதி கூட்டத்தில் கையெழுத்தான ஒப்பந்தமானது செல்லாது என்றும் நாவலை ஒருபோதும் தடை செய்ய முடியாது என்றும் கூறியது. அது போக முழு நாவலையும் நீதிமன்றம் ஆனது படித்த பிறகு இதனை இலக்கிய படைப்பு என்று அங்கீகரித்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 19(1)(a) எழுத்தாளர்களுக்கு கருத்துரிமையை வழங்குகிறது. இலக்கியம் என்பது சமூக விமர்சனம் செய்ய உரிமை கொண்டது என்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு என்கின்ற பெயரில் சமூக குழுக்கள் தரும் அழுத்தத்திற்கு அடி பணிந்து எழுத்தாளரை தியாகம் செய்ய கூடாது. அரசானது எழுத்தாளர்களை பாதுகாக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திருச்செங்கோடு பகுதி மக்களின் எதிர்ப்பை (public morality) காட்டிலும் ஒரு எழுத்தாளனின் அடிப்படை உரிமை ( constitutional morality) ஆனது இங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கருதியது.

சபரிமலை வழக்கு :-

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாரம்பரியமாக ஒரு பழக்க வழக்கம் பின்பற்றப்படுகிறது. அது என்னவென்றால் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை ஏனென்றால் இக்கோயிலில் ஐயப்பன் பிரம்மச்சாரி சொரூபமாக இருப்பதால் பெண்களின் தூய்மை காரணமாக அவர்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த பாரம்பரிய வழக்கத்தை கேரள இந்து பொது வழிபாட்டு தல சட்டம் விதி 3(b) ஆனது பெண்கள் நுழைவதற்கான தடையை அங்கீகரித்தது.இந்திய இளம் வழக்கறிஞர் சங்கம் 2006 இல் இந்த வழக்கம் அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்றும் இந்திய அரசியலமைப்பு சரத்து 32 இன் கீழ் பெண்களுக்கு சம உரிமை வழங்க கோரி‌ மனு அளித்தனர். இதனை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வானது விசாரித்தது.

10 வயது முதல் 50 வரையிலான பெண்கள் கோயிலுக்குள் நுழைவதற்கான தடை என்பது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது. கேரள இந்து பொது வழிபாட்டு தல சட்டம் விதி 3(b) ஆனது செல்லாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 சமத்துவம், சரத்து 15 பாலின பாகுபாடு, சரத்து 17 தீண்டாமை, சரத்து 15 மத சுதந்திரம் ஆகியவற்றை இந்தப் பாரம்பரிய நடைமுறையானது மீறுகின்றது. மாதவிடாய் என்ற இயற்கை காரணத்தால் பெண்களை ஒதுக்கி வைத்தல் என்பது ஒரு தீண்டாமை குற்றம் ஆகும். மனித மரியாதை (dignity) சம உரிமை அடிப்படையில் பெண்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு முழு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் நான்கு நீதிபதிகள் ஒருமித்த கருத்தாக இத்தீர்ப்பை வழங்கினர். ஒரே ஒரு நீதிபதி மட்டும் நீதிமன்றமானது மத நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று தன்னுடைய கருத்தை முன் வைத்தார். இறுதியில் 4:1 இன்று பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பானது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கில் அரசியலமைப்பு அறமே மேலோங்கி இருக்க வேண்டும் சரத்து 25 உள்ள [morality] வார்த்தை ஆனது [public morality] யாக இல்லாமல் “[constitutional morality]” யாகவே கருதப்பட வேண்டும் . பொது உணர்வு மற்றும் சமூக ஒழுக்கத்தை காரணமாக கொண்டு அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்றும் அரசியலமைப்பு விழுமியங்கள் என்றைக்கும் மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு மேலோங்கி நிற்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். இந்த தீர்ப்பானது 2018 ஆம் ஆண்டு வெளிவந்தது. பின்னர் கலவரங்கள் போராட்டங்கள் போன்றவை நடைபெற்றது கோயிலுக்குள் பெண்கள் நுழைவதை பக்தர்கள் தடை செய்தனர்.அதன் பின்னர் இத்தீர்ப்பானது [constitutional morality] யை சவால் செய்கின்ற விதத்தில் மறு ஆய்விற்கு ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த மறு ஆய்வானது தற்போது (2026) விசாரணையில் உள்ளது. இவ் வழக்கில் விசாரணை முடிந்து வெளி வருகின்ற தீர்ப்பானது இந்திய நீதி துறையிலும் சமூகத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக அமையும்.

இறுதியாக :-

இந்தியச் சமூகத்தில் இந்த பொது அறம் மற்றும் அரசியலமைப்பு அறம் அடிக்கடி மோதிக் கொள்கின்ற ஒன்றாக உள்ளது. சமூகத்தில் பெரும்பான்மை மக்களின் கலாச்சாரத்தின் அடிப்படையில் தனிமனித உரிமைகள் பாதிக்கப்படுகின்ற வேளையில் அரசியலமைப்பு அறமானது இந்த பொது அறத்தில் குறுக்கிட்டு அதனை தடை செய்கின்றது. அதுமட்டுமல்லாமல் இவ்வாறாக முரண்பாடுகளைக் கொண்டு மோதுகின்ற வேளையில் அரசியலமைப்பு அறமே வெல்ல வேண்டும் என்பது ஜனநாயகத்தின் ஒரு விதியாகும். சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்பு அறம் என்பது இயல்பான ஒரு உணர்வு அல்ல.அதை நாம் அனைவரும் வளர்த்தெடுக்க வேண்டும்.நமது மக்கள் இன்னும் இதனை கற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்து நாம் அதனை வளர்த்தெடுக்க வேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் கூறியதைப் போல அரசியலமைப்பு என்பது வெறும் காகிதமாக மட்டும் இருக்கக் கூடாது. அதனை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். அதற்காக அரசியலமைப்பு அறத்தை மேலோங்கி நிற்க செய்ய வேண்டும். அதுபோல ஜனநாயகம் வெறும் அரசியல் ஜனநாயகமாக மட்டும் இருக்கக் கூடாது. அது சமூக ஜனநாயகமாக மாற வேண்டும் இதற்காக அரசியலமைப்பு அறத்தை வளர்த்தெடுக்க வேண்டும். அம்பேத்கர் அவர்கள் பொது அறம் என்பது பெரும்பான்மையின் காரணமாக அடக்குமுறைகளை நியாயப்படுத்த கூடும். அதுவே அரசியலமைப்பு அறம் என்றால் அது தனி நபர்களின் சுதந்திரம், மரியாதை, தனிஉரிமை மற்றும் சமத்துவம் ஆகிவற்றை நிலை பெறச் செய்யும். அரசியலமைப்பு அறம் என்பது பொது அறத்தை முற்றிலுமாக நிராகரிக்கப்படவில்லை ஆனால் அவை அரசியல் அமைப்பின் விழுமியங்களுக்கு ஏற்ப சீர்திருத்த வேண்டும் என்கிறார்.ஏனென்றால் இந்தியா போன்ற பன்முக சமுதாய அமைப்பை கொண்ட ஒரு நாட்டில் தனி நபர்களின் உரிமையை பாதுகாப்பது என்பது மிகவும் அவசியமானதாகும்..

📚 எழுதியவர்:

✍🏻 க.அ.சிவராமன்
சட்டக்கல்லூரி மாணவர்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தாலுகா பொருளாளர்
விளாத்திக்குளம்
தூத்துக்குடி மாவட்டம்.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *