பொதுத்தறை நிறுவனங்கள் தனியார்மயம் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் சூறையாடல் – பீப்பிள்ஸ்  டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)  மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரைவார்த்திடும் கொள்கை அறிவிக்கப்பட்டிருப்பது, கார்ப்பரேட் ஊடகங்களாலும் வலதுசாரிப் பொருளாதாரவாதிகளாலும் பரவசத்துடன் பாராட்டப்பட்டிருக்கிறது. “மோடி மாறியிருக்கிறார்” என்றும், “அதீதமான அளவில் துணிச்சல்மிக்கவர்” என்றும் “கடைசியில் உண்மையான சீர்திருத்தம் வந்திருக்கிறது” என்றும் இவர்கள் கூப்பாடு போட்டுக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

பெரும் வர்த்தகர்களும், ஊக வணிகர்களும் இப்படி உற்சாகம் அடைவதற்கான காரணங்கள் என்ன? இவ்வாறாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவற்றை செயல்படுத்துவதற்காக, இப்போது “சுய பாரதத்திற்கான புதிய பொதுத்துறை நிறுவனக் கொள்கை” (“New Public Sector Enterprise(PSE) policy for Atma Nirbhar Bharat”) என்ற பெயரில் மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் முதலீட்டுத் துறை மற்றும் பொது சொத்து மேலாண்மை (Department of Investment and Public Asset Management) என்பவை அமைக்கப்பட்டிருக்கின்றன.  பொதுத்துறை நிறுவனங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை (strategic) என்றும், முக்கியத்துவம் அல்லாதவை (non-strategic) என்றும் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் என்பவை வருமாறு: 1.அணு எரிசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு 2. போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு 3. மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி 4. வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் நிதிச் சேவைகள்.

மேற்கண்ட நான்கு துறைகளிலும், இப்போது இருந்துவரும் பொதுத்துறை நிறுவனங்களில் “மிகமிகக் குறைவானவை” (“bare minimum presence”) மட்டும் வைத்துக்கொள்ளப்பட்டு, மற்றவை தனியாரிடம் தரப்பட்டுவிடும், அல்லது தனியாருடன் இணைக்கப்பட்டுவிடும் அல்லது மூடப்பட்டுவிடும்.

முக்கியத்துவம் அல்லாத பொதுத்துறை நிறுவனங்களைப் பொறுத்தவரை, இந்தக் கொள்கையின்படி, அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களுமே தனியாரிடம் தாரை வார்ப்பதற்காக, அல்லது, வேறுவிதத்தில் சொல்வதென்றால் மூடிவிடுவதற்காகப் பரிசீலனைகள் மேற்கொள்ளப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களை இவ்வாறாக மிகவும் மோசமான முறையில் ஒழித்துக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுதான், இந்திய மற்றும் அந்நிய பெரும் கார்ப்பரேட்டுகளின் மத்தியில் அளவுக்கு அதிகமாகவே கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

நரசிம்மராவ் அரசாங்கத்தின் காலத்திலிருந்தே, தனியார்மயத்தை நோக்கி எடுக்கப்படும் நடவடிக்கைகள் “பங்குகள் விற்பனை” (“disinvestment”) என்ற பெயரில் மூடிமறைக்கப்பட்டு வந்திருக்கிறது. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில்தான், வெளிப்படையாகவே தனியார்மயத்தை நோக்கி, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை வெகுவாக விற்பது  தொடங்கியது.  இப்போது, மோடியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில்,  பொதுத்துறை நிறுவனங்களை உண்மையாகவே கைகழுவும் புதிய கொள்கை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில், மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டுவந்த நான்கு பொதுத்துறைகளும், பொது மக்களின் பணத்துடன் மதிப்புமிக்க பொதுச் சொத்துக்களை உருவாக்கி மிகவும் லாபகரமாகவே இயங்கி வந்தபோதிலும், விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

பொதுத்துறை நிறுவனங்களில் பல, தனியார்மயத்தை நோக்கித் தள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே, அரசாங்கத்தால் வேண்டுமென்றே நலிவடையச் செய்திடும் நடவடிக்கைகளுக்கு ஆளாயின. ஓஎன்ஜிசி(ONGC), பிஎச்இஎல்(BHEL), பிஎஸ்என்எல்(BSNL) முதலான நிறுவனங்கள் இவ்வாறான அரசாங்கத்தின் அணுகுமுறையின் காரணமாகப் பலியாகி இருக்கின்றன.

நவீன தாராளமய அரசாங்கங்களுக்கு, தங்களுடைய நிதி நெருக்கடித் தீவிரமாயிருப்பதால், அவை தனியாரைச் சார்ந்திருப்பது அதிகரித்திருக்கிறது. மத்தியப் பட்ஜெட், அரசுக்கு வரவேண்டிய வருவாய் ரசீதுகளில் கூர்மையான வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காட்டுகிறது. இதுதான், லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் விற்க வேண்டும் என்று அதனைக் கோர வைத்திருக்கிறது.

மத்திய பட்ஜெட், பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் மூலமாக 1.75 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டிட முடிவு செய்திருக்கிறது. இது, 2020-21 பட்ஜெட்டின்போது, இவ்வாறு பொதுத்துறை பங்குகளை விற்பதன்மூலம் 2.10 லட்சம் கோடி ஈட்டிட முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த அளவிற்கு பொதுத்துறையின் பங்குகளை விற்க முடியாததிலிருந்து, அரசாங்கம் எவ்விதமான படிப்பினையையும் பெற்றுக்கொள்ளாததால், இப்போது தனியாரிடம் தாரை வார்க்கும் அதே பாதையில் மேலும் வெறித்தனமாக இறங்கி இருக்கிறது.

இப்போது பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீள முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும்போது, சொத்துக்களின் விலை மதிப்புகள் மிகவும் கீழ் நிலையிலேயே இருக்கின்றன. எனவே, அரசாங்கம் இந்த சொத்துக்களை அடிமாட்டு விலைக்குத்தான் விற்க வேண்டியிருக்கும். இது இந்திய மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு செல்வச் செழிப்பினை அளித்திடும்.

நிதித்துறையையே தனியாரிடம் தாரை வார்த்திடும் எண்ணம் இப்போதுதான் வெளிப்படையாக வெளி வந்திருக்கிறது. பட்ஜெட்டில், முதன்முதலாக, இரு பொதுத்துறை வங்கிகளையும், ஒரு பொது இன்சூரன்ஸ் கம்பெனியையும் தனியாரிடம்  தாரை வார்க்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஆயுள் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனின் பங்குகளையும் விற்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. தனியாரிடம் தாரை வார்ப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இரு வங்கிகளும் லாபத்தில் இயங்கி வருபவை என்பது வெளிப்படையானவையாகும்.  வங்கித்துறைக்குள் கார்ப்பரேட்டுகள் நுழைவதற்கான முன்னோடியாக இது அமைந்திருக்கிறது. இவ்வாறு நிதித்துறை நிறுவனங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டால்,   மூலதனத்தின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஒட்டுமொத்த பொருளாதாரமும் வடுப்படும்.

சர்வதேச நிதி மூலதனம் இந்த அரசாங்கத்திற்குக் கட்டளை பிறப்பிக்கும் நிலையில் இருந்திடும். லாபம் ஈட்டிவரும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகர லாபம் 1.6 லட்சம் கோடி ரூபாய்களாகவும், அவற்றினுடைய டிவிடெண்ட் பங்குத்தொகை 77 ஆயிரம் கோடி ரூபாய்களாகவும் இருக்கின்றன. இவ்வாறான சொத்துக்களை விற்பது என்பதே இந்த அரசாங்கத்தின் இப்போதைய மற்றும் வருங்கால நடவடிக்கைகளாக அமைந்திடும். இவை அனைத்தையும் இந்த அரசாங்கமானது ‘சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிறது. என்னே கொடூரமான ஏமாற்றுவேலை!

நாட்டில் உள்ள பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பிபிசில் (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்), தற்போது விற்கப்பட இருக்கிறது. இதன் பிரம்மாண்டமான அளவைப் பார்க்கும் போது, அநேகமாக இது ஒரு அந்நிய எண்ணெய் நிறுவனத்திற்குத்தான் விற்கப்படும். இது கேந்திரமான எரிசக்தி விநியோகத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்திடுவதன்காரணமாக, நாட்டின் இறையாண்மையைப் பலவீனப்படுத்திடும்.

பாதுகாப்புத்துறையில், தனியார்மயம் என்பது ஆயுதங்களை உற்பத்தி செய்திடும் அந்நிய நாடுகளுடன் உடன்பாடு செய்துகொண்டுள்ள இந்தியக் கார்ப்பரேட்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவிற்கே செல்லும். இந்தியா, அமெரிக்காவுடனான ராணுவக் கூட்டணி வளர்ந்துகொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு உற்பத்தியில் கேந்திரமான பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான அபாயகரமான சாத்தியக்கூறுகள் உண்டு. இவற்றால் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் ஆபத்துக்கள் உண்டு.

நாட்டின் கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் தனியாரிடம் தாரைவார்த்திட மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், அரசமைப்புச் சட்டத்தின் 39(பி) பிரிவிற்கு எதிரானதாகும். அரசமைப்புச் சட்டத்தின் 39(பி) பிரிவு, “நாட்டின் பொருளியல் வளங்கள் சமூகத்திற்குப் பொதுவாக நலம் பயக்கும் விதத்தில் அமைவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்,” என்கிறது. இவை தனியாரிடம் தாரைவார்க்கப்பட்டால் என்ன நடக்கும்? சாமானிய மக்களுக்கு நலம் பயப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக,  நாட்டின் இயற்கை வளங்கள் தனியார் நிறுவனங்களால் சூறையாடப்படும்.

இவ்வாறு பொருளாதாரம் சம்பந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாமல் கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் போன்ற துறைகளும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது, கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை சேவைகள் மீது மக்களுக்கு இருந்துவரும் உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும்.

இத்தகைய இந்த அரசாங்கத்தின் தனியார்மய நடவடிக்கைகள், மக்களின் அனைத்தப் பிரிவு மக்களையும் விரிவான அளவில் அணிதிரட்டி எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியவைகளாகும். ஏற்கனவே, விசாகப்பட்டினம் உருக்குத் தொழிற்சாலையின் 100 சதவீதப் பங்குகளும் தனியாருக்கு விற்கப்படும் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே, அதற்கெதிராக ஆந்திரப் பிரதேசம் முழுவதும் மக்கள் மத்தியில் கோபாவேசம் எழுந்து, அதற்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இரு வங்கிகளைத் தனியாரிடம் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதற்கு எதிராக, அனைத்து வங்கி சங்கங்களின் அமைப்பு மார்ச் 15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களுக்கு வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இன்சூரன்ஸ் ஊழியர்களும் நீண்ட நெடிய போராட்டத்திற்குத் தயாரிப்பு வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். அனைத்துப் பொதுத்துறைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்கள் ஒன்றுபட்டு நின்று, ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டியது அவசியமாகும். தொழிற்சங்கங்களும், இடதுசாரி சக்திகளும் பொதுத்தறைக்கு எதிராக ஏவப்பட்டுள்ள இந்தப் போரை எதிர்த்து முறியடிக்கும் விதத்தில், மக்களின் அனைத்துப் பிரிவினரையும் அணிதிரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டிட வேண்டும்.

(பிப்ரவரி 24, 2021)