“புடம் போட்டத் தங்கம்” சிறுகதை
– கு.மணி
. அரசு உயர்நிலைப் பள்ளியில் இரண்டாவது பாடவேளை முடிந்து 11 மணிக்கு இடைவேளை விடப்பட்டது. எட்டாம் வகுப்பு “ஆ “பிரிவு மாணவர்கள் நன்றி ஐயா! என்று கூற தமிழாசிரியர் பாட புத்தகம்: பாடக்குறிப்பு :நோட்டு போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஆசிரியர் ஓய்வறை நோக்கிப் புறப்பட்டார்.
. மாணவர்கள் தமிழாசிரியர் வெளியே சென்ற பிறகு சிலர் பள்ளியின் வாசலில் உள்ள கடைகளை நோக்கி ஓடினர். சிலர் ரெஸ்ட்ரூம் நோக்கிச் சென்றனர். சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்தனர்.
. 11.10இக்கு மூன்றாவது பாடவேளைகக்கான மணி அடிக்கப்பட்டது.கடையில் சிலர் திண்பண்டம் வாங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் கடைக்காரரிடம் வேகமாய் கொடுக்க பெல்அடிச்சாச்சு என கூச்சலிட்டனர் வாங்கிய பொருளை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஓடினர்.
. பி. இ. டி ஆசிரியரின் விசில் சத்தம் பறக்கவே மாணவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவரவர்கள் வகுப்பு நோக்கி ஓடினார். மூன்றாவது பாடவேளை எட்டாம் வகுப்பு “ஆ” பிரிவில் அறிவியல் ஆசிரியர் சந்திரமோகன் உள்ளே நுழைந்தார்.
. அனைவரும் எழுந்து நின்று “குட் மார்னிங் சார்” என்று சொல்ல பதிலுக்கு அவர் குட் மார்னிங் சொல்லிவிட்டு: என்னப்பா எல்லோரும் சயின்ஸ் நோட்ஸ்சுக்கு பணம் கொண்டு வந்திருக்கிறீர்களா ? பி. டி.ஏ பணம் ரூ.50 மொத்தம் 200 ரூபாய் கொண்டு வந்தவங்க எல்லாம் யாரு கையைத் தூக்குங்க.
. சில மாணவர்கள் மட்டும் கையை உயர்த்தினர். என்ன பத்து பேர் தான் கைய தூக்குறீங்க இன்னும் 20 பேர் என்னைக்கு தர போறீங்க. சார் நாளைக்கு கொண்டு வாரோம் சார். சிலர் அடுத்த வாரம் கொண்டு வாரோம் சார்.
. இதே வேலையா போச்சு நோட்ஸ் கொடுத்து ஒரு மாசம் ஆகுது பி டி ஏ பணம் கட்டனும்லே என சந்திரமோகன் ஆசிரியர் மாணவர்களை கடிந்து கொண்டார்.
. டேய் ராமு பணம் கொண்டிருந்தவங்க கிட்ட வாங்கி நோட்லே எழுதிக்கே.நான் கையெழுத்து போட்டு தாரேன் மாணவர் தலைவனுக்கு உத்தரவு.
. ராமு ஏற்கனவே மாணவர்களிடம் வசூல் செய்த நோட்டை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பெஞ்சாகச் சென்று பணம் கொடுக்கும் மாணவர்களின் பெயரை நோட்டில் எழுதிவிட்டு பணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தான்.
. சார் என் பணத்தை காணலே. ஆசிரியர் எழுந்தார். என்னடா சொல்றே. பையிலே நன்றாகத் தேடி பாரு.
. சார் நான் நல்லா தேடி பாத்துட்டேன் 200 ரூபாய் முழு நோட்டு சார்இ சாமென்ட்ரி பாக்ஸ்லே தான் வச்சிருந்தேன் ரீசஸ் பீரியடுக்கு வெளியே தான் சார் போயிட்டு வந்தேன் என்று சொல்லியவாரே அழ ஆரம்பித்தான் கண்ணன்..
. டேய் அழாதடா! டேய் பசங்களா! அவன் பையை நன்றாக பாருங்கடா. கண்ணன் பெஞ்சில் இருந்த மாணவர்கள் அவன் பையை சோதனையிட்டனர். ஒவ்வொரு புத்தகமாக: நோட்டு: :சாமென்ட்ரி பாக்ஸ் என தேடிப் பார்த்தனர் சார் பணம் எதுவும் இல்ல சார்.
. டேய் கண்ணா! பணம் கொண்டு வந்தாயா சத்தியமா கொண்டு வந்தேன் சார்.சரி சரி பதட்டப்படாதே.
. டேய்பசங்களா! எல்லோரோட பையவும் சோதனை போடுங்கடா மாணவிகள் பக்கம் மாணவிகளும் மாணவர்கள் பக்கம் மாணவர்களும் சோதனை போடுங்கடா.
. மாணவ மாணவியர்களில் சிலர் புலனாய்வுத்துறை அதிகாரி போல சோதனையிட ஆரம்பித்தனர்.பணம் கொண்டிருந்தவர்கள் ராமுவிடம் பணத்தை கொடுக்க பணம் கொண்டு வராதவர்கள் பையை நன்றாக சோதனை செய்யுங்கள் ஆசிரியரின் கட்டளை.
. பத்து பேர் கைதூக்கினேங்க.200 மட்டும் கொண்டு வந்தவங்க யாரு அதுக்கு மேல பணம் கொண்டு வந்தவங்க யாரு.இரண்டு மாணவர்கள் மட்டும் சார் நான் 200 ரூபாய் கொண்டு வந்ததேன். நான் 300 ரூபாய் கொண்டு வந்தேன்.
. எங்க பையைபார்த்துக்கோங்க சார் என்று எந்தவிதக் கள்ளம் கபடம் இல்லாமல் பையை திறந்து காட்டினர்.
. சோதனையில் ஈடுபட்ட மாணவர்கள் சார் இவங்க கிட்ட எந்தப் பணமும் இல்ல சார் .
. மாணவர்கள் ஒவ்வொரு பையையும் சோதனை செய்தபோது பாண்டி பையை சோதனை போட்டனர் புத்தகம் நோட்டு என சோதனை போட்ட போது அவன் பையில் இருந்து ஒரு 200 ரூபாய் நோட்டு கீழே விழுந்தது.
. திடுக்கிட்டான் பாண்டி.சார் பாண்டி பையில் இருந்து 200 ரூபாய்நோட்டு விழுந்து கிடக்கு சார். பாண்டி பதறினான். சார் இந்த பணம் என்னோட பையிக்கு எப்படி வந்ததுஎன்று எனக்குத் தெரியாது சார். நான் பணம் ஏதும் கொண்டு வரலே சார்.சத்தியமா நான் பணத்தை எடுக்கல சார்.
. பாண்டி இங்க வா பணம் கொண்டு வரலைன்னு சொல்றே அப்ப இந்த 200 ரூபாய் உன் பையிலே எப்படி வந்துடுச்சு?
. சார் எங்க அம்மா சத்தியமா எனக்கு தெரியாது சார். அவன் கண்களில் கண்ணீர் வெள்ளம் என பெருக்கெடுத்தது.
. பாண்டி தவறு செய்வது மனித இயல்பு அதைத் திருத்திக்கிடப் பார்க்கணும்.
. சார் ஆண்டவன் அறிய நான் பணத்தை எடுக்கலே சார்.
. பிறகு பணம் எப்படி உன்னோட பையில் இருந்து வந்தது.
. அதுதான் சார் எனக்கும் தெரியலே.
இங்க பாரு பாண்டி தப்புச்செய்யாதவங்க யாரும் கிடையாது என்கிட்ட பொய் சொல்லாதே.
. சார் நான் பொய் சொல்லல சார்.
விவாதம் நீண்டு கொண்டே சென்றது பாண்டி நான் பணத்தை எடுக்கவில்லை சார் என்று அழுது புலம்பினான்.
ஆசிரியருக்கு கோபம்வரவே பாண்டியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார்.
. பாண்டி மிரண்டு போய் நின்றான். டேய் இவனை ஹெட்மாஸ்டர் ரூமுக்கு கூட்டிட்டு போங்கடா நான் பின்னாடியே வாரேன்.
. இரண்டு மாணவர்கள் ஓடி வந்து பாண்டியை ஏதோகுற்றவாளி போல் கையில் பிடித்துக் கொண்டு தலைமை ஆசிரியர் அறைநோக்கி பாண்டியை இழுத்துக் கொண்டு சென்றனர்.
. சார் சார் நான் எந்த தப்பும் செய்யல சார். அழுது கொண்டே தலைமை ஆசிரியர் அறை நோக்கி சென்றான் பாண்டி.
. மாணவர்களிடம் பணத்தை வசூல் செய்து சந்திரமோகன் ஆசிரியரிடம் மாணவர் தலைவன் பணத்தை ஒப்படைத்தான்.
. பாண்டி எந்த ஊருடா? சார் கரட்டுப்பட்டி சார்.கரட்டுப்பட்டி பசங்க எந்திரிங்கடா. ஆறு பேர் எழுந்தனர் பாண்டியைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமாடா?
. ஆறு பேரில் 4 பேர் சார் நாங்க வேற தெருவு சார் எங்களுக்கு தெரியாது.
. எங்க தெரு தான் சார்.அவங்க அப்பாவே ஒரு களவாணி தான் சார். ஜெயிலுக்கு எல்லாம் போயிட்டு வந்திருக்காரு மணிகண்டனும் முத்துகிருஷ்ணனும் பாண்டியை பற்றி சில விஷயங்களை புட்டுப்புட்டு வைத்தனர்.
. சந்திரமோகனுக்கு சந்தேகம் வலுத்தது. சரி நீங்க போய் உட்காருங்கடா.ராமு அமைதியா வகுப்பை பார்த்துக்க நான் போய் என்னானு விசாரிச்சிட்டு வந்துடறேன் டேய் ஒருத்தன் போய் பி. இ. டி சாரை ஆபீஸ்க்கு வர சொல்லுங்கடா.
. இரண்டு மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஒருத்தன் மட்டும் போடா என்று சொல்லியவாறு தலைமை ஆசிரியர் அறைக்கு வந்தார் சந்திரமோகன். பி இ டி சாரும் வந்து சேர்ந்தார்.
. டேய் பசங்களா நீங்க வகுப்புக்கு போங்கடா. பாண்டி நீ இங்கே இரு.
. என்ன சார் என்ன பிரச்சனை?
சார் வகுப்பில் அடிக்கடி பணம் திருட்டு போகுதாம்..இன்னைக்கு கூட ஒரு பையனோட 200 ரூபாய் திருட்டு போயிடுச்சு. செக் பண்ணதுலே அந்த பணம் பாண்டியோட பையிலே இருந்தது. ஆனா நான் எடுக்கவே இல்லைன்னு சத்தியம் பண்றேன் சார்.
. தலைமை ஆசிரியர் பி இ.டி சார் என இருவரும் தங்களின் விசாரணையை அவரவர்கள் பாணியில் மேற்கொண்டனர்.
. பாண்டி நான் பணத்தை எடுக்கலே சார். நான் எந்த தப்பும் செய்யலே சார் எனப் பிடிவாதமாக அழுது கொண்டே இருந்தான்.
. சார் இது சரிப்பட்டு வராது. உடனே இவங்க பேரன்டை வரச் சொல்லுங்க.
. டேய் உங்க அப்பா எங்கடா இருக்காரு.
தெரியாது சார்.
. உங்க அப்பா போன் நம்பர் கொடு. அழுது கொண்டே பாண்டி போன் நம்பரை தர தலைமை ஆசிரியர் பாண்டியின் அப்பா மகாராசனுக்குப் போன் செய்தார்.
. யாரு மகாராசனுங்களா? ஆமாங்க சார். நான் ஸ்கூல்ல இருந்து ஹெட்மாஸ்டர் பேசுறேன்.உடனே கொஞ்சம் ஸ்கூல் வரைக்கும் வாங்க.
. என்னங்கையா ஏதாவது பிரச்சனையா?
. அதெல்லாம் ஒன்னும் இல்லை சும்மா கிளம்பி வாங்க.
. செய்து கொண்டிருந்த கொத்தனார் வேலையை விட்டுவிட்டு அரை மணி நேரத்தில் பள்ளிவந்து சேர்ந்தார் மகாராசன் .
. இதற்கிடையே பாண்டியிடம் விசாரணை நடந்து கொண்டிருந்தது. பாண்டியின் அப்பா மகாராசன் ஜெயிலுக்குப் போய் வந்த கதை எல்லாம் விவாதிக்கப்பட்டது.
. ஐயா! என்னங்கையா கூப்பிட்டீங்க. நான் பாண்டியோட அப்பா.
. முதல்லே உட்காருங்க.
பரவாயில்லைங்கய்யா என்ன பிரச்சனை?
. அது ஒன்னும் இல்லைங்கய்யா உங்க பையன் ஒரு பையனுடைய 200 ரூபாயை எடுத்துட்டானாம்.
. கேட்டவுடன் மகாராசன் பாண்டியன் கன்னத்தில் பளார் என்று அறைந்தார் ஐயா! பையனை அடிக்காதீங்க.
. அப்பா : அம்மா சத்தியமா நான் பணத்தை எடுக்கலே பணம் எப்படி என் பையிக்கு வந்தது என்று எனக்குத் தெரியாதுப்பா. உங்க மேல சத்தியமா சொல்றேன் நான் பணத்தை எடுக்கவேஇல்லை..
. என்ன அப்படியாப்பா நீங்க வளர்க்கிறேங்க.வாழ்க்கையிலே தப்பு மட்டும் குறிப்பா களவாடுவது பொய் சொல்றதுன்னு எப்பவுமே செய்யக்கூடாதுன்னு இறந்த அம்மாமேலே எத்தனை தடவை சத்தியம் வாங்கி இருக்கேங்கப்பா.
நான் திருடுவேனோ அப்பா. பொய் சொல்லுவேனாஅப்பா.
. பாண்டி அழுவதைப் பார்த்து மகாராசன் தேம்பித் தேம்பி அழுதார்.
. ஐயா!என்னோட மனைவி ரொம்ப உடம்புக்கு முடியாமல் இருந்தப்ப ஏதோ ஒருமுறை செயின் பறிப்பிலே ஈடுபட்டேன். அதுதான் என்னோட முதலும் கடைசியமான களவு. செயினை பறிச்சுக்கிட்டு ஓடினேன். விரட்டி பிடிச்சுட்டாங்க. போலீசில் பட்ட அடி ஜெயிலில் நான் பட்ட வேதனை.
ஜெயிலில் இருக்கும் போது என் மனைவி இறந்தது இதெல்லாம் என்னை மனுசனா மாத்திடுச்சு.
. என் பிள்ளை அனாதையா அவங்க பாட்டிவீட்டிலே தான் வளர்ந்தது. மூன்று வருடம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்து எங்கு போய் வேலை கேட்டாலும் ஜெயிலுக்கு போனவன் என்று சொல்லி உள்ளேயே நுழைய விட மாட்டாங்க. ஏன் சார் ஜெயிலுக்கு போனவங்க திருந்தவே மாட்டாங்களா?
. வெளியூர்ல போய் தான் கொத்தனார் வேலை பார்க்கிறேன் என் பையனும் திருட ஆரம்பிச்சுட்டானா. தேம்பித்தேம்பி மீண்டும் அழ ஆரம்பித்தார்.
. அப்போது ஒரு பையன் தலைமையாசிரியர் அறை நோக்கி ஓடிவந்தான். சார் இங்க வாங்க. என்னடா இங்க வாங்க. உங்ககிட்ட ஒன்னு சொல்லணும். எதுனாலும் சரி உள்ள வந்து சொல்லு.
. சார் பாண்டி பணத்தை எடுக்கல சார்.
உனக்கு எப்படிடா தெரியும்?
சார் மணிகண்டன் முத்துகிருஷ்ணன் பேசிகிட்டு இருந்தாங்க சார்.எப்படி பாண்டியை மாட்டிவிட்டோம்லேன்னு.
. என்னடா சொல்ற முதல்லே அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வாடா. பி. இ. டி சாரின் உத்தரவு.
. சார் நீங்களே போய் கூட்டிட்டு வாங்க தலைமை ஆசிரியர்.
. தம்பி என் கூட வந்துஅவங்க ரெண்டு பேரையும் காண்பிஇ அடுத்த பத்து நிமிடத்தில் பி. இ.டி சார் முத்துகிருஷ்ணனையும் மணிகண்டனையும் ஆஜர் படுத்தினார் தலைமை ஆசிரியர் முன்பு.
. பி. இ. டி. சாரின் அதட்டலால் மணிகண்டன் முத்துகிருஷ்ணன் இருவரும் சார் தெரியாம செய்திட்டோம். நாங்க ரெண்டு பேரும் பீடி குடிக்கிறதை ஊர்ல பாண்டி பார்த்துட்டான். எங்கே பள்ளிக்கூடத்துலே வாத்தியாரு பசங்க கிட்ட சொல்லிடுவானோன்னு பயந்து அவனை மாட்டி விட்டோம் சார். பணத்தை எடுத்து அவன் பையிலே வச்சது நாங்க தான் சார். எங்களை மன்னிச்சிடுங்க சார். அப்பப்ப பணத்தை எடுத்து நாங்க ரெண்டு பேரும் தான் சார் வாங்கித் திண்போம். தப்புதான் சார் எங்களை மன்னிச்சிடுங்க.எங்க அப்பா அம்மா கிட்ட சொல்லாதீங்க கதறி அழுதனர் முத்துகிருஷ்ணனும் மணிகண்டனும்.
. சார் இவங்க ரெண்டு பேர் பேரன்டையும் வரச் சொல்லுங்க இவங்களுக்கு டி.சி.யை கொடுத்துவிடுவோம்.டேய் உங்க அப்பா அம்மா போன் நம்பர் கொடுங்க. தப்புச் செய்துவிட்டு ஒரு அப்பாவியை மாட்டிவிட்டீர்களேடா.
. ஐயா! டி.சி எல்லாம் கொடுக்க வேண்டாம் ஐயா! செய்த தவறை ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேட்டாங்களே அதுவே போதும் ஐயா.
. கேட்டீங்களாடா தன் பையன் மேலே களவாணி பட்டம் சுமத்தியும் கூட அதையெல்லாம் மன்னிச்சு உங்களுக்கு டி சி கொடுக்க வேண்டாம் திருந்தி வாழ சந்தர்ப்பம் கொடுங்கன்னு சொல்றாரே அது மட்டுமல்ல: நீங்க பாண்டி மேல பழி போட்ட போது கூட நீங்கள் பீடி பிடித்ததை என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை .உண்மையிலேயே இவங்க இரண்டு பேரும் புடம் போட்டதங்கம் தாண்டா.
. ஐயா! இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க. அதற்கு எனக்குத் தகுதியே கிடையாது.
. ஐயா! எங்களை மன்னிச்சிடுங்க ஏதோ தெரியாம தவறு நடந்திருச்சு என்று தலைமை ஆசிரியர்: அறிவியலாசிரியர்: பி.இ.டி சார் என அனைவரும் மன்னிப்புக் கோரினர்.
. ஐயா!நீங்கள் எல்லாம் கற்றுத் தரக்கூடிய கடவுள்கள். குழந்தைகளை நல்வழிப்படுத்தி இந்த சமுதாயத்திலே குற்றவாளிகள் இல்லேன்னு உருவாக்கக்கூடிய காவல் தெய்வங்கள் நீங்க போய் என்னைப்போன்ற திருடனிடம் மன்னிப்புக் கேட்பதா?
. ஐயா!சிப்பிக்குள் முத்தாய் உங்க மகனை வளர்த்திருக்கீங்க.தான் தவறு செய்யவில்லை என்பதில் எவ்வளவு உறுதியாக இருந்தான் தெரியுமா உங்க மகன் பாண்டி.
. நான்தான் வாழ்வில் தவறிவிட்டேன்.என் மகன் வாழ்வில் எந்த தவறும் செய்து விடக்கூடாது அதற்கு உங்களைப் போன்ற ஆசிரியர்கள் தான் அவனை நல்வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று அழுதவாறு அனைவரின் காலில் விழுந்து வணங்கினார் மகராசன்.
. என்ன காரியம் செய்றீங்க இப்படி எல்லாம் செய்யக்கூடாது உங்க மகனின் மனம் என்ன பாடுபடும். தவறு செய்தவன் தன் தவறை உணர்ந்து திருந்திவிட்டால் அவன் கடவுளுக்குச் சமமாக கருதப்படுகிறான் தலைமை ஆசிரியரின் அறிவுரை.
. ஐயா! ரெண்டு பசங்களுக்கும் எந்த தண்டனையும் தராதீங்க. அவங்க அப்பா அம்மாவைக் கூட வரச் சொல்ல வேண்டாம் ஒரு அப்பாவா நான் உத்தரவாதத்தருகிறேன்.
. மணிகண்டனும் முத்துகிருஷ்ணனும் இவர்களின் உயரிய குணத்தைக் கண்டு தாங்களும் இனி வாழ்வில் எந்த தவறும் செய்யக்கூடாது என உறுதி கொண்டு பெருமூச்சு விட்டு அழுதனர் பாண்டியன் கையை பற்றி கொண்டு.
. ஐயா! ஸ்கூல் பீஸ் ஒரிரு நாள்லே கட்டிடுறேன்.
. நீங்க கட்ட வேண்டாம்.உங்க பையனுக்கு என்ன உதவி வேண்டுமோ அதை நான் செய்கிறேன்.அவனை நல்லா படிக்க வைக்க வேண்டியது என்னோட கடமை அறிவியல் ஆசிரியர் சந்திரமோகன்.
. சரிங்கப்பா நீங்க வகுப்புக்கு போங்க. ஐயா.நீங்களும் போய் வேலையை பாருங்க. சார் நீங்களும் வகுப்புக்கு போங்க.தலைமை ஆசிரியரின் அன்பான அன்பான உத்தரவு.
. பாண்டி முத்துகிருஷ்ணன் மணிகண்டன் மூவரும் தோளில் கையை போட்டுக் கொண்டு குழந்தை மனத்துடன் வகுப்பிற்கு புறப்பட்டுச் சென்றனர். மகாராசன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
எழுதியவர்:

✍🏻 – கு.மணி
த/பெ: குருசாமி
தெற்குப் புது தெரு
சக்கம்பட்டி-625512
ஆண்டிபட்டி வட்டம்
தேனி மாவட்டம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
