pudhu-kavithaiyin-thotramum-valarchiyum-book-review-by-c-tamilraj

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – நூல் அறிமுகம்

புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – நூல் அறிமுகம்

இலக்கணச் செங்கோல் ஏந்தி அரியணையில் வீற்றிருந்த தமிழை, அதன் கிரீடங்களை கழற்றி வைத்து சாமானியர்களின் எழுதுகோலை கையில் தந்து, சுதந்திர சிந்தனையுடன் எந்தத் தளைகளற்று, தன்னைத் தானே எழுதிப் பார்க்க பணித்தது காலம். அந்தக் காலத்தின் கைப்பிடித்து மொழியாடிய வேட்கையின் நடனம்தான் புதுக்கவிதைகள்.

இன்று ஊரில் தடுக்கி விழுவோரெல்லாம் கவிதைகள் எழுதிக் களிக்கலாம். அன்று புதுக்கவிதைகள் எழுதத் துவங்கப்பட்ட காலத்தில் அது சந்தித்த எதிர்வினைகள் வடிவக்கேலிகள். உள்ளடக்க உள்குத்தல்கள் ஏராளம். 5000 வருட ஆதித் தாய்க் கிழவிக்கு ஒரு வரலாறு இருப்பது போல, 100 வருட புதுக்கவிதை மங்கைக்கும் ஒரு வரலாறு வேண்டும் அல்லவா? அதைத்தான் 1914 இல் தொடங்கி 1975 வரைக்குமான புதுக்கவிதையின் பிதாமகர்களையும் அதைத் தொடர்கிற வாரிசுகளையும் பட்டியலிட்டு தந்துள்ளார் எழுத்தாளர் வல்லிக் கண்ணன் அவர்கள்.

எழுத்து, சரஸ்வதி, கசடதபற, நடை, தாமரை, கிராம ஊழியன் என சிற்றிதழ்களில் கால வரிசைப்படி எழுதப்பட்ட கவிதைகள், கவிஞர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். காட்சிகள் எனும் கவிதையை எழுதிய பாரதி தொடங்கி ந.பிச்சமூர்த்தி, குபரா, கநாசு, புதுமைப்பித்தன், சி. மணி, நகுலன், ஆத்மநாம், தேவதேவன் என ஒரு பெரிய பட்டியலே இடம்பெறுகிறது. இறுதியில் வானம்பாடிக் கவிஞர்களும் அந்த வரிசையில் வந்து நிற்கிறார்கள்.

காலத்தின் தரவுகள் நீண்ட தேடல்கள் வரிசைப்படுத்துதல் என அயராத முயற்சிதான் மிகவும் மெனக்கெட்டு புதுக்கவிதையின் காலத்தை தக்க வைத்திருக்கிறார். கவிதை எழுதுவோரும் கவிஞர் என்று சொல்லிக் கொள்வோரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஆவணம்தான். ஆனால் தலைமுறை இடைவெளியென்பது எழுத்திற்கும் நேர்வது வருத்தத்திற்கு உரியது தான். புதிய தலைமுறைகள் வாசிப்பதில் அயர்ச்சியைத் தருகிறது.

விமர்சனமாக பார்த்தால் ஒரு சார்புத் தன்மை இந்நூலில் பட்டியலிடப்பட்டுள்ள நூல்களும் கவிஞர்களும் ஏற்படுத்துகிறார்கள். ஒரு வேளை நூலணிந்த நூலாலர்கள் ஆக இருக்குமோ? என்ற எண்ணம் எழாமல் இல்லை. நாம் கவிஞர்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த பெரும்பாலான கவிஞர்கள் இப் புத்தக பட்டியலில் இல்லை. அவர்கள் கவிஞர்கள் இல்லையென்றால் அவர்களின் தமிழ் இலக்கிய சேவைக்கு என்ன பெயர். மரபிலிருந்து வெளியேறிய தமிழ் மொழி புதுக்கவிதைக்கும் விதியை யார் வடிவமைத்தது.

சமகாலத்தில் கவிதை வாசிக்கும் ஒருவர் இப்புத்தகத்தை வாசிக்க நேர்ந்தால் பாதிக்கிணறு தாண்டியவராய் விழித்து நிற்பார். ஒரு துறையின் வரலாற்றை எழுத நேர்ந்தால் அந்த காலகட்டத்தில் உள்ள சகல விதமான கவிதைப் போக்குகளையும் எழுத வேண்டும். தனக்கு கிடைத்த தரவுகளிலிருந்து வரைய ஆரம்பித்தால் ஒரு வித சாய்வுத்தன்மை இயல்பாக ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில் இந்தப் புத்தகத்தின் நேர்மை சந்தேகத்திற்கு உட்பட்டதாக மாறிவிடுகிறது.

கவிதைக்கு இவர்கள் கொடுக்கும் வரையறைகள் எல்லாம் பார்த்தால் புதிதாக கவிதை எழுத வருகிறவர்கள் எல்லாம் தலை தெறிக்க ஒடி விடுவார்கள் போல, இன்றைய காலம் வரை நடுநிலையான ஒருவரால் எந்தவித மன மாச்சரியத்திற்கும் ஆட்படாத ஒருவர் அயராத முயற்சி செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

இந்தப் புத்தகத்தில் மொத்தம் 38 கட்டுரைகள் அதில் 6 கட்டுரைகள் ந.பிச்சமூர்த்தியின் பெருமை பாடுகின்றன. இன்றைய மொழிக் கலப்பைப் பற்றி கவலைப்படுவோர் இந்த புத்தகத்தின் பிறமொழிக் கலப்பை பார்த்தால் நவீனம் புகுந்த இக்காலம் பரவாயில்லையோ என்று எண்ணத் தோன்றுவார் அத்தனை வடமொழிச் சொற்கள்.

புதுக்கவிதையும் தோற்றமும் நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய நூலாக இருப்பினும் ஆய்வு செய்ய வேண்டிய நூலாகவும் இருக்கிறது. காலத்தின் பின்னோக்கி ஓடிச்சென்று ஆதாரங்களை திரட்டும் தகவலாளிகளுக்கு மட்டுமே அது சாத்தியம். அப்படி ஒரு நூலும் வர வேண்டும். அதுதான் புதுக்கவிதை உலகத்தை சமநிலைப்படுத்தும் வல்லிக் கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நூலின் தகவல்கள் :  

நூல் : புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
ஆசிரியர் : வல்லிக்கண்ணன்
ஆண்டு :  1977
பக்கம் : 252
விலை : 250
வெளியீடு: அன்னம் பதிப்பகம்

நூல் அறிமுகம் எழுதியவர் : 

செ. தமிழ் ராஜ்
வண்டியூர்
மதுரை

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *