ஒளி ஓவியமும் சொல்லோவியமும்
பாவண்ணன்
மனித உருவத்தை வரையும் பழக்கம் குகைகளில் மனிதர்கள் வசித்த காலத்திலேயே தொடங்கியிருந்தாலும், அது பல நூற்றாண்டுகள் வரைக்கும் தோராயமான ஒரு வடிவமாகவே இருந்தது. அதற்குப் பிறகான காலகட்டத்தில்தான், நேருக்கு நேர் ஒரு மனிதரைப் பார்த்து அவரைப்போலவே ஓவியமாகத் தீட்டிவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. பல ஓவியர்கள் தமக்குப் பிடித்த காடுகள், மலைகள், ஆறுகள், பாலைவனங்கள், கோட்டைகள், அரண்மனைகள், கடைத்தெருக்கள் என பல இடங்களில் சுற்றியலைந்து தமக்குப் பிடித்த காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டினார்கள். பிற்காலத்தில் அவை பல தொகைநூல்களாக வெளிவந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நைஸ்ஃபோர் நீட்ஸ் என்பவரால் புகைப்படக்கருவி கண்டுபிடிக்கப்பட்டதும், ஓவியர்களின் பாதையில் புகைப்படக்கலைஞர்களும் பயணத்தைத் தொடங்கினர். பிடித்த மலைகள், பிடித்த விலங்குகள், பிடித்த பறவைகள், ஆற்றங்கரைகள், கடற்கரைகள் என எண்ணற்ற இடங்களுக்குச் சென்று பிடித்த காட்சிகளைப் படங்களாக எடுத்து வெளியிட்டனர்.
எல்லாப் புகைப்படக்கலைஞர்களுடைய ஆர்வமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் கோவில் சிற்பங்களை மட்டுமே தேடித்தேடிப் படம் எடுப்பவர்களாக இருப்பார்கள். சிலர் கோவிலுக்கு வெளியே அலைந்து திரியும் விதம்விதமான ஆண்களையும் பெண்களையும் படம் எடுப்பவர்களாக இருப்பார்கள். சிலர் நகரத்துக்காட்சிகளையும் பரபரப்பான சாலைகளையும் படம் எடுப்பார்கள். சிலர் கிராமத்துக்காட்சிகளையும் அமைதியான குளத்தங்கரைகளையும் படம் எடுப்பார்கள். எதுவாக இருந்தாலும், அந்தப் படங்கள்தாம் அவர்களுடைய அடையாளம். அந்தப் படங்கள் வழியாக உலகத்தார் நினைவுகளில் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். ரகுராய் எடுத்த தாஜ்மகால் படங்கள், தாஜ்மகாலைப்போலவே புகழ் பெற்றவை.
சமீபத்தில் எரிக் ஹஸ்கின் என்றொரு புகைப்படக்காரரைப் பற்றிப் படித்தேன். அவர் காடுகளில் நள்ளிரவுகளில் அலைந்து திரிந்து ஆந்தைகளைப் படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டவர். ஆந்தைகளின் படங்கள் மட்டுமே கொண்ட அவருடைய தொகுப்பு உலகப்புகழ் பெற்றது. ஒருமுறை ஓர் ஆந்தையைப் படம் எடுப்பதற்காகக் காத்திருந்தபோது, எதிர்பாராத விதமாக புகைப்படக் கருவியிலிருந்து கசிந்த வெளிச்சத்தின் காரணமாக அவரை நோக்கி சீற்றத்துடன் பறந்துவந்த ஆந்தை அவருடைய கண்ணைக் கொத்திவிட்டு பறந்தோடிவிட்டது. கண நேரத்தில் எல்லாம் நிகழ்ந்துவிட்டது. அவர் தன் கண்ணையே இழந்துவிட்டார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் அவர் ஆந்தைகளைப் படம் எடுப்பதை நிறுத்தவில்லை. அந்த அளவுக்கு ஆந்தைப்பிரியராக இருந்தார். தன்னுடைய தன்வரலாற்று நூலுக்கு அவர் AN EYE FOR A BIRD என்றே பெயர் சூட்டியிருக்கிறார்.
நல்ல இலக்கிய வாசகரும் புகைப்படக்கலைஞருமான இளவேனிலை தமிழுலகம் நன்கறியும். ”எழுத்தாளர் கி.ரா. என்ற கி.ராஜநாராயணன் ஆகிய நான் சுயநினைவுடன் சொல்வது என்னவென்றால் எனது எழுத்துகள், படைப்புகள் எல்லாம் இன்றுமுதல் சங்கர் என்கிற புதுச்சேரி இளவேனில், எனது மூத்த மகன் திவாகரன், எனது இளைய மகன் பிரபி என்கிற பிரபாகரன் ஆகிய மூன்று பேரையே சாரும் இதை நான் முழு மனத்துடன் எனது வாசகர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் தெரிவிக்கிறேன்” என கி.ரா. தன் மறைவுக்கு முன்பாக இந்து தமிழ் திசை நாளேட்டில் எழுதியிருந்த குறிப்பை அனைவரும் படித்திருப்பார்கள். அன்பின் அடிப்படையில் தன் மூத்த பிள்ளையாக கி.ரா. கருதிய இளவேனிலும் புகைப்படக்கலைஞரான இளவேனிலும் ஒருவரே.
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக அவர் தொடர்ச்சியாக தமிழ் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் படம் எடுத்து வருகிறார். அவர் எடுத்த படங்கள் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி ஆகியோரை அவர் எடுத்த புகைப்படங்களை மட்டுமே கொண்ட கண்காட்சிகள் புதுச்சேரியிலும் சென்னையிலும் நடைபெற்றதுண்டு. அந்தப் படங்கள் அவருக்கு ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கி அளித்தன.
சுபமங்களா வெளிவந்த காலத்தில் ஒவ்வொரு இதழிலும் ஒரு எழுத்தாளரின் நீண்ட நேர்காணலும் ஆறேழு புகைப்படங்களும் இடம்பெற்று ஒரு தனித்த கவனத்தைக் கோருவதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஒருவகையில் எழுத்தாளர்களின் முக்கியத்துவத்தை உலகத்துக்குப் பறைசாற்றுபவையாக அப்படங்கள் இருக்கும். இரண்டு அங்குலத்துக்கு மூன்று அங்குலம் அளவுள்ள எழுத்தாளர்களின் படங்களையே வழக்கமாகக் கண்ட கண்களுக்கு அந்த வண்ணப் படங்கள் விருந்தாக இருந்தன. அந்த விருந்தை இன்னும் பெரிய அளவிலான விருந்தாக மாற்றியவர் புதுவை இளவேனில் (Puduvai Ilavenil).
ஒரு படத்தில் நடுநாயகமாக உருவம் திகழ்ந்தால் நன்றாக இருக்கும் என்னும் இலக்கணத்துக்கு அப்பால் சென்று புகைப்படச்சட்டகத்தில் உருவத்தை எந்த மூலையிலும் அமைக்கும் சுதந்திரத்தோடு படங்களை எடுப்பவர் இளவேனில். உருவத்துக்கு நிகராக, உருவத்துக்குப் பின்னணியாக அவர் தேர்ந்தெடுக்கும் நிலக்காட்சியின்மீதும் வெளிச்சத்தின் மீதும் கவனம் கொண்டவர். அனைத்து புறப்பொருட்களின் இணைப்பில் அந்த உருவம் கொள்ளும் வசீகரத்தின் மீதான ஈர்ப்புதான் அவருடைய கலை. அதற்கு அவர் எடுத்திருக்கும் ஒவ்வொரு படமும் சாட்சி. ஒருபோதும் கண்டிராத சிரிப்பு, குறும்பு, நடை, உடை, பாவனை எல்லாம் அவருடைய படங்களில் அப்படித்தான் அமைகின்றன.
இலக்கியம், இசை, ஓவியம் என்னும் மூன்று துறை சார்ந்த இருபத்தோரு கலைஞர்களின் ஒளிஓவியங்களை ‘நிச்சலனத்தின் நிகழ்வெளி’ என்னும் தலைப்பில் ஒரு புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார் புதுவை இளவேனில் (Puduvai Ilavenil). சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், வண்ணதாசன், நாஞ்சில்நாடன், விக்ரமாதித்யன், பிரபஞ்சன், பெருமாள் முருகன் உள்ளிட்ட முக்கியமான எழுத்தாளர்களும் ஆதிமூலம், மருது போன்ற ஓவியர்களும் டி.கே.பட்டம்மாள், சஞ்சய், டி.எம்.கிருஷ்ணா போன்ற இசைக்கலைஞர்களும் இப்பட்டியலில் அடங்குவர். இலக்கியத்தின் மீது அதிக நாட்டம் கொண்டவர் என்பதாலேயே இலக்கியம் சார்ந்த கலைஞர்களின் எண்ணிக்கை கூடுதலாகவும் பிற துறை சார்ந்த கலைஞர்களின் எண்ணிக்கை குறைந்தும் உள்ளன.
ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு அத்தியாயம் என்கிற வகையில் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. படங்களுக்கிடையில், அந்தக் கலைஞர் சார்ந்த சுருக்கமான குறிப்பை எழுதியிருக்கிறார் இளவேனில். குறிப்பிட்ட படங்களில் இடம்பெற்றிருக்கும் கலைஞரின் அறிமுகம் முதன்முதலில் தனக்கு எப்படி ஏற்பட்டது என்கிற புள்ளியிலிருந்து அவர் தொடங்குகிறார். பிறகு அடுத்தடுத்து அவருடைய படைப்புகளை உள்வாங்கிக்கொண்ட விதம், தன் வாசிப்பு அனுபவத்தைக் கொண்டு உருவாக்கிக்கொள்ளும் மதிப்பீடு அனைத்தையும் குறைவான சொற்களில் குறிப்பிட்டபடி தாவித்தாவிச் செல்கிறார். அத்தியாயத்தைப் படித்து முடிக்கும் கணத்தில் படங்களைப் பார்த்த அனுபவமும் குறிப்பிட்ட ஆளுமையைப்பற்றித் தெரிந்துகொண்ட நிறைவும் ஒருசேர ஏற்படுகின்றன.
சுந்தர ராமசாமியைப் படம் எடுத்த அனுபவத்தை அவர் குறிப்பிட்டிருக்கும் விதமே ஒரு சிறுகதையைப் படிப்பதுபோல இருக்கிறது. இருவருமே ஒருவருக்கொருவர் அறிமுகம் அற்றவர்கள். சுந்தர ராமசாமியின் படைப்புகளை ஓரளவு மட்டுமே படித்திருந்த பின்னணியில் ரவிக்குமாரின் வழியாக புகைப்படம் எடுப்பதற்கான அனுமதியைப் பெற்று அவருடைய வீட்டுக்குச் சென்றுவிடுகிறார். பத்து நாட்கள் அவருடைய வீட்டில் தங்கி வீட்டிலும் வெளியிலுமாக ஏராளமான படங்களை எடுத்திருக்கிறார். தன் பதில்கள் மூலம் தன்னை வாசித்தறிந்த சுந்தர ராமசாமியின் நுட்பமான திறமையை அவர் புரிந்துகொள்கிறார். ஒரு கணம் கூட அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து பேசிப் பழகிய அவருடைய மேன்மையான குணம் அவர் மீது இன்னும் கூடுதலான நாட்டத்தை ஏற்படுத்துகிறது.
அப்போது சு.ரா., நெய்தல் கிருஷ்ணன் என்னும் நண்பரை அழைத்து எல்லாத் தருணங்களிலும் கூடவே இருக்கும்படி செய்துகொள்கிறார். கிருஷ்ணனுடைய இருப்பு இருவருக்குமே உதவியாக இருந்ததாகவும் கிட்டத்தட்ட ஒரு மொழிபெயர்ப்பாளர்போல அவர் துணை செய்ததாகவும் குறிப்பிடுகிறார் இளவேனில்.
சுந்தர ராமசாமியுடைய புகைப்படங்களை மட்டுமே கொண்ட கண்காட்சி ஒருவார காலம் சென்னையில் நடைபெற்றது. சென்னைவாழ் ஓவியர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என ஏராளமானவர்கள் தினந்தோறும் வந்து பார்வையிட்ட அந்தக் கண்காட்சிதான் பொதுவெளியில் ஒரு கலைஞனாக தனக்குக் கிடைத்த கெளரவம் என்று குறிப்பிடுகிறார் இளவேனில். சு.ரா.வின் வீட்டில் தங்கியிருந்த பத்து நாட்களும் ஒரு குருகுலத்தில் தங்கியிருந்த அனுபவத்துக்கு நிகரானவை என்றும் வாழ்வுக்கான திட்டமிடல்களைக் குறித்த எண்ணங்கள் உருவாக அவரே காரணமாக இருந்தார் என்றும் பதிவு செய்திருக்கிறார் புதுவை இளவேனில் (Puduvai Ilavenil).
கி.ராஜநாராயணன் பற்றிய அத்தியாயத்தில் ஒரு சிறுவனாக கி.ரா. தன் அன்னையோடு எடுத்துக்கொண்ட ஒரு பழைய படத்தை தன் பாதுகாப்புப் பெட்டகத்திலிருந்து எடுத்துக் காட்டிய தருணத்தை நினைவு கூர்கிறார் இளவேனில். அந்தப் படத்தை எடுப்பதற்காக வீட்டுக்கு வந்த புகைப்படக்காரர் புகைப்படக்கருவியை நகரத்திலிருந்து தன் தலையில் சுமந்துவந்தார் என்றும் நல்ல வெயிலில் நிற்கவைத்து படங்களை எடுத்தார் என்றும் பகிர்ந்துகொள்ளும் குறிப்புகள் சற்றேறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் முந்தைய சூழலை அறிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு படத்தை எடுக்கமுடியக்கூடிய சூழலில் வசிக்கும் நமக்கு, இந்த விவரணை ஏதோ ஒரு புராணக்கதைபோல தோன்றுகிறது. கி.ரா..வை முன்வைக்கும் படத்தொகுப்பில், ஒன்றோடு ஒன்று தொட்டுக்கொண்ட நிலையில் அமைந்திருக்கும் கி.ரா.வின் பாதங்களை மட்டுமே கொண்ட படம் இத்தொகுதியில் மிகமுக்கியமான படம்.
’இருந்து என்ன ஆகப் போகிறது, செத்துத் தொலைக்கலாம். செத்து என்ன ஆகப் போகிறது இருந்து தொலையலாம்’ என்ற கவிதையைத் தற்செயலாகப் படித்த கணத்திலிருந்து கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் எழுதிய கவிதைகள் மீது உருவான ஈர்ப்பை அழகாகச் சுட்டிக் காட்டுவதன் வழியாக கல்யாண்ஜி பற்றிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார் இளவேனில். நிலா பார்த்தல் என்னும் கவிதைத்தொகுதி அவரைப் பெரிதும் கவர்கிறது. கி.ரா.வைச் சந்திக்க வந்த கல்யாண்ஜியைப் பார்த்து உரையாடி நட்பைப் பெற்று படம் எடுத்ததையும் பத்து ஆண்டுகள் கழித்து கலாப்ரியாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக புதுச்சேரிக்கு வந்த கல்யாண்ஜியை மீண்டும் சந்தித்து படம் எடுத்ததையும் இனிய நினைவுகளாகப் பதிவு செய்திருக்கிறார் இளவேனில்.
நாஞ்சில் நாடனைப் படம் எடுப்பதற்காகச் சென்றபோது கிடைத்த அவருக்குக் கிடைத்த அனுபவம் மிகமுக்கியமானது. ஒரு கற்கோவிலுக்கு அழைத்துச் சென்று, அதன் பிராகாரத்தில் படம் எடுக்க வேண்டும் என்பது இளவேனிலுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் கோவிலுக்குச் சென்ற பிறகுதான், அந்த வளாகத்தில் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்பது தெரிகிறது. பையிலிருந்து எடுத்த கேமிராவை மீண்டும் உள்ளேயே வைத்துவிட்டு, நிர்வாக அதிகாரியைச் சந்திக்கச் செல்கிறார். அந்த அதிகாரி ஒரு குற்றவாளியைப் பார்ப்பதுபோல அவரைப் பார்த்து, அனுமதி மறுத்து அனுப்பிவைக்கிறார். தேசிய விருது பெற்றவர், தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர் என எவ்வளவோ எடுத்துரைத்தும் எதுவும் அந்த அதிகாரியின் முன் எடுபடவில்லை. அலட்சியத்தோடு நடந்துகொள்கிறார்.
அதே ஊரில் உள்ள வேறொரு கோவிலுக்கு இருவரும் செல்கிறார்கள். அங்கு வாசலில் நின்றிருக்கும் பூசாரியிடம் புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் இளவேனில். பூசாரி சம்மதித்ததும் படங்களை எடுக்கத் தொடங்குகிறார். அங்கு ஒரு சிலைக்காப்பகம் இருக்கிறது. அதன் அருகில் ஒரு பெண் காவலர் நின்றிருக்கிறார். நாஞ்சில் நாடனைப் படம் எடுக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டதும், ஓடோடி வந்து அவரை வணங்கி அவருடைய வாசகி என தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார் அந்தக் காவலர். எளிய காவலராக இருக்கும் ஒருவருக்கு உள்ள இலக்கிய அறிமுகம் கூட உதவி ஆணையர் தகுதியில் இருக்கும் ஒரு அதிகாரிக்கு இல்லையே என ஆற்றாமையுடன் அந்த அத்தியாயத்தை முடிக்கிறார் புதுவை இளவேனில் (Puduvai Ilavenil).
இப்படி ஒவ்வொரு ஆளுமையைப்பற்றிய அத்தியாயத்திலும் படமெடுத்த சூழலில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வாசிப்பு அனுபவங்களையும் இணைத்து முன்வைத்திருக்கிறார் இளவேனில். அந்த இணைப்பு அளிக்கக்கூடிய வாசிப்பு அனுபவம் நிறைவளிப்பதால், எடுத்த வேகத்தில் புத்தகத்தை ஒரே மூச்சில் படித்துவிட முடிவதாக அமைந்துள்ளது. எழுத்தாளர் சுதேசமித்திரனின் முன்னுரை இளவேனிலைப்பற்றிய சொற்சித்திரமாக அமைந்துள்ளது. வழவழப்பான தாட்களோடும் கெட்டி அட்டையோடும் மிகச்சிறப்பான முறையில் இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கும் டிஸ்கவரி பதிப்பகம் பாராட்டுக்குரியது. ஒருவகையில் இப்புகைப்படப்புத்தகம் இன்றைய காலகட்டத்தின் ஆவணம்.
நூலின் விவரம்:
நூல்: நிச்சலனத்தின் நிகழ்வெளி
ஆசிரியர்: புதுவை இளவேனில் (Puduvai Ilavenil)
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்,
9, பிளாட் எண் 1080ஏ, ரோகிணி பிளாட்ஸ்,
முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை -78.
விலை: ரூ.600
நூல் அறிமுகம் எழுதியவர்:
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.