புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை - சீனு ராமசாமி | Filmmaker SeenuRamasamy ' s Pugar pettiyin meethu paduthurangum poonai (Poetry) - https://bookday.in/

புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை – நூல் அறிமுகம்

புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள்: 

புத்தகம்: புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை
ஆசிரியர்: சீனு ராமசாமி
பிரிவு: கவிதைத் தொகுப்பு
பதிப்பகம்: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
தொடர்புக்கு :  44 2433 2924
நூலை இணையதம் வழிப் பெற : thamizhbook.com

 

லார்க் பாஸ்கரனின் அழகான அட்டைப் படம். கவிஞர் சீனு ராமசாமி தோன்றும் யாவற்றையும் கவிதையாக எழுதி இருக்கிறார். அனைத்தையும் தொகுத்திருக்கிறார். 296 பக்கங்கள். பல நீண்ட கவிதைகள். பல குறுங்கவிதைகள் . கவிதைகளின் பாடுபொருள் காதல், பிரிவுத்துயர், சுய ஊக்கம், இயற்கை பாதுகாப்பு என பல தளங்களில் விரிகிறது.

நாள் என்னும் கவிதை இப்படி ஆரம்பிக்கிறது:

நாள் என்பது நாளல்ல
பின்பொரு சமயம்
ஏங்கித்தவிக்கும்
நினைவு

நாம் ஒவ்வொரு நாளும் என்ன விதைக்கிறோமோ, அது திரும்ப வரும் என்கிறது கவிதை. சிறப்பு.
நினைவு பூ, காதலன் கவிதைகள் – ஆளற்ற வீட்டின் பழைய நினைவுகள்.

கதையல்ல – வளர்ச்சியின் மறுபக்கம். இப்படி முடிகிறது கவிதை நெகிழ்வாக:

நிக்காம
தெரசா
போகுதய்யா காருங்க
கிழவி உழுத நிலத்துமேல
கிழவென் செத்த கிணத்துமேல

நினைவு தப்பல் – நினைவு தப்புதல் வரமென்கிறார் கவிஞர். கடைசி பத்திகள்:

யாவும்
மறக்கும் நல்லோர்
உலகில் நன்மை பேணியார்
முதிர்ந்த வயதில்
நினைவு தப்பிச் சாதல்
வரம்
அல்லாவிடில்
நினைவோ
ரணம்

ஜன்னலைத் திற – சுய ஊக்கம் தரும் தன்னம்பிக்கை கவிதை.

நோக்கம் கவிதையில் நிதர்சனமான சிறப்பான வரிகள்:

கவிதை
கதை
இலக்கியம்
அரசியல்

சினிமா என மீளமுடியாத்துறையின் பல்லுக்கு இளமையைத் தந்தவர்கள்

பசியின் வேதனையை அறியாமல் இப்படிப்பட்ட வரிகளை எழுத இயலாது:

அறிதலின் ஞானம் கவிதை –

உணவில்
கெட்டுப் போனது எது?
கெட்டுப்
போகாமல்
இருப்பது எது?
என்றே தெரியாது
பசியின் அறியாமையில் உண்ட
என் காலத்தை

விபூதி கவிதையில் வரும் ராமசாமி தாத்தா தைரியம் சொல்ல ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

சிறப்பான சுயமுன்னேற்றக்கவிதை ஆளுக்கொரு திசையுண்டு. பிடித்த சில வரிகள்:

உங்கள் பாதைதனில்
காட்டு யானை மறிக்கும் போது
அதன் கண்களை உற்றுப் பாருங்கள்
அது திரும்பிப் போகும் தன் திசையில்

மற்றும் ஒரு தன்னம்பிக்கை கவிதை பொறுத்தல் தலை. சில வரிகள்:

இருள் பொறு
இருள் நிறை

யானை மகள் இயற்கையின் இன்றைய நிலை. நெகிழ்வான கவிதை. கடைசி வரிகள்:

கானகத்தில் இனமாக
ஊர்வலம் போகாமல்
தனித்தலையும் வயது முதிர்ந்த
யானையொன்று
எத்தெய்வத்திடம் சென்று
முறையிடும்
காணாமல் போன
தன் மகள் லெஷ்மி
மாண்டதறியாமல்..

வாழவேண்டின் கவிதை மனசுக்குப் பூஸ்டர்:

வாழ்தல் கடினமானது
எளிதில் வந்துவிட்டால்
அதன் பெயர் சாவு
வாழ விருப்பமே
வாழ வைக்கும்
வாழ்வளிக்கும்
பகல் கவிதை பகடி-
இன்னும் வாடகை தராத இந்த பகலில்..

களம் கதை அல்ல கவிதை – கவியின் வாக்குமூலம்.

நான்
சாகக் குடித்தலைந்து
காலம் தப்பச் செய்த
நாட்டுநாய்…

மஞ்சள் பூ நண்பன் கவிதையில் வருவது போல் நமக்கெல்லாம் நண்பர்கள் வாய்க்க வேண்டும்:

ஒரு தோல்வி
உலகை வெறித்துப் பார்த்திட
செய்யும்
அக்குரங்கு சமாதானமின்றிக்
கிளையை உலுப்பும்
……..
பரிசுக்கல்ல
பங்கேற்பு,
போட்டி நமக்கில்லை
அவர்களுக்கு
கவிதை காரிகை கவிதை சில்க் ஸ்மிதாவுக்கு அஞ்சலி:
சில்க்
இன்னும் உயிரோடு இருக்கிறாள்
பாவம்
விஜயலெட்சுமிதான்
இறந்து விட்டாள்
மழை குடிக்கும் நகரம் ஒரு நாஸ்டால்ஜியா.

உறுதியோடும் கவிதை தன்னம்பிக்கையின் உச்சம். கண்டரின் கால் மேல் கால் போட்டு ஞாபகம் வருகிறது. ஆனால் இது வேறு:

மனதுக்கு உத்தரவிட்டு
ஒரு மகாராஜாவைப்போல்
கால் ஆட்டித் தூங்குங்கள்
….
திரும்ப வந்து
தூங்குங்கள்
அப்போதும்
கால் ஆட்டியபடி
இக்கணத்தில் முடிந்தால்
மெதுவாக உதடு குவித்து
விசில் ஊதுங்கள்
உங்களை வாழ விடாதவர்களுக்கு
அப்போது குளிரெடுக்கும்.

கலைவியாபாரம் கவிதை ஒரு திரைப்படம் வெற்றி பெற என்னவெல்லாம் தேவை என பகடியோடு‌ சொல்கிறது. இறதிவரி நெத்தியடி:

படம் கவனம் பெற
படமே பிரதானமாகும்.

தலைவன் கவிதை தலைமைப் பண்பு பற்றிப் பேசுகிறது :

தனித்திருப்பதே
கூட்டமாக இருப்பது
தனித்திருக்கும்
மரமே
பறவைகள் தாங்கும்
நிலமறி கவிதை புலம்பெயர் வாழ்வின் வலி.

பணயம் கவிதை சண்டைக்காட்சித் தொழிலாளியின் வாழ்வு.

சிறு கவிதைகளில் எனக்குப் பிடித்த கவிதை:
நீர்மூழ்கிச் செத்தாலும்
நதிக்கரை தேவைப்படுகிறது
தர்ப்பணம் செய்ய

நிலத்தவன் கவிதை யதார்த்தம்:

அவரவர்க்கு அவர்களது
மழை.

உந்து கவிதை ஒரு உந்து சக்தி:

நீந்திக் கரைசேர்
தேடல் கவிதை கன்னத்தில் அறைகிறது:

எதையும் தேடிப் போய்
தராதே
தேடுபவனுக்கு தா.
நவீன கிணறு கவிதை கைபேசி அடிமைத் தனத்தைப் பேசுகிறது.

வருகை மற்றும் திறந்திருக்கும் கதவுகள் கவிதைகள் துணை இயக்குநர்களை நினைவூட்டுகிறது.

கடக்காமலேயே கவிதை தனது வளர்ச்சிக்கு மனைவியின் திறமைகளை பலிகொடுக்கும் ஆண்களுக்கு.

மகள் பேச்சு கவிதை மகளதிகாரம்:
சொற்கள் உமிழ் நீரைச் போல
உருத்திரண்டு வரும்
அதிசயத்தின் முன்
அகதி கவிதை எல்லா அகதிகளுக்கும்.

கருணை கவிதை சிறப்பு:

கீரை தந்து
தொட்டு வணங்கும்
வயோதிகரை
அண்ணாந்து பார்த்தது
மார்க்கெட் பசு

காஞ்சிக் கவிஞன் கவிதை முத்துக்குமாருக்காக நெகிழ்வான கவிதை:

என் நேரமதில் விடைபெறும் நாளில்
நன்றியின் பெயர்களில்
அவன் பெயரும்
ஒலிப்பேன்.

வைராக்கியம் கவிதை மற்றும் ஒரு தன்னம்பிக்கை வைரம்:

எனக்கிருப்பது கால்கள் இல்லை
ஊடுருவிய
வேர்.

குரு அறிதல் கவிதை தலைப்பைத் தந்த தன்னை அறியும் ஒன்று:
வெறும்
ஆசைகள் நிரம்பியவன்
புகார் பெட்டியின் மீது
படுத்துறங்கும் பூனை
எவ்வளவு சத்தியமான வரிகள்.

இத்தொகுப்பை ஒவ்வொரு துணை இயக்குநரும் வாசிக்க வேண்டும்.

இந்த உயரத்தை எட்ட எவ்வளவு அவமானத்தை தாங்கியிருக்க வேண்டும்? ஆனாலும் ஒரு தன்னிரக்கக் கவிதை தேடினாலும் கிடைக்கவில்லை!

இது கவிஞரின் மூன்றாவது தொகுப்பு. தனக்குத் திருப்தி தராத கவிதைகள இரக்கமில்லாமல் நீக்கி இருக்கலாம். அல்லது வேறு கவிஞர்களிடம் எடிட்டிங் செய்யக் கொடுத்திருக்கலாம். அடுத்தடுத்த தொகுப்புகளில் செய்வாரென நம்புகிறேன்.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.

 

எழுதியவர்:

கண்ணன் விஸ்வகாந்தி

மேலும் படிக்க : புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *