புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை
நூலின் தகவல்கள் :
நூல் : புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை
ஆசிரியர்: சீனு ராமசாமி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: ரூ.315
நூலைப் பெற : 44 2433 2924
வலியை தேனாக்கும் கவிதைகள்!
அன்பு சகோதரர் டிஸ்கவரி வேடியப்பன் இயக்குநர் சீனு ராமசாமியின் கவிதை நூலை அனுப்பியிருந்தார். மாமனிதன் திரைப்படம் வந்தபோது உயிர் எழுத்தில் விமர்சனம் எழுதியிருந்தேன். அப்போது நன்றி தெரிவித்துப் பேசியிருந்தார்.
அவர் இயக்கியவற்றில், இரண்டு திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஒன்று உதயநிதி நடித்த ‘கண்ணே கலைமானே’. மற்றொன்று விஜய்சேதுபதி நடித்த ‘மாமனிதன்’. மாமனிதன் என்னை உலுக்கியிருந்தது.
அவரது ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ கவிதைத் தொகுப்பை இன்று வாசித்தேன். சீனு ராமசாமியை சிறந்த திரைப்பட இயக்குநராக அறிந்து வைத்திருந்தேன். தவிர அவரது கவிதை அழகியல் குறித்து அறிந்திலேன். 303 பக்கங்களைக் கொண்ட பெரிய தொகுப்பிது.
ஏதோ, திரைப்பட இயக்குநர். ஆர்வத்தில் முயன்று பார்க்கிறார். என்பதுபோல்தான் பிரித்தேன். படிக்கப் படிக்க இத்தனை நாள் இவரது கவிதைகளைப் படிக்காமல் போயிருக்கிறோமே! என ஆச்சரியப்பட்டேன்.
‘கலை என்பது விமர்சிக்காமல் பார்ப்பது!’ என்கிறார் எட்கர் ஆலன் போ. இத்தொகுப்பை நான் விமர்சிக்க விரும்பவில்லை . அனுபவிக்கவே விரும்புகிறேன்.
பெரிய தொகுப்பு. பரந்த வாழ்வனுபவம் மட்டும் அல்ல, தேர்ந்த மொழி அனுபவமும் செழித்தத் தொகுப்பு. உள்ளடக்கத்தில் செறிவு, வடிவத்தில் கச்சிதம், நேர்த்தி. காட்சி ஊடகத்தில் இயங்கும் ஆளுமை. சொற்களோடு மவுனத்தையும் கையாளத் தெரிந்திருக்கிறார்.
‘வரலாறு என்பது ஆண்களாலும் பெண்களாலும் உருவாக்கப்படுகிறது போலவே, அது உருவாக்கப்படாமலும், எப்போதும் பலவிதமான மௌனத்துடனும், துர்நாற்றத்துடனும், திணிக்கப்பட்ட வடிவங்களுடனும், சிதைவுகளை சகித்துக்கொள்ளக் கூடியதாகவும் இருக்கிறது’
எட்வர்ட் செய்ட் சொல்வதுபோல, சமகால வாழ்வின் மௌனத்தை, சிதைவை, துர்நாற்றத்தை கவிதைகளாக மாற்றியிருக்கிறார் சீனு ராமசாமி.
தாய் ஒருத்தி எனும் முதல் கவிதையே சீனு ராமசாமியை, இவர் நம் ஆள் எனப் பறைசாற்றுகிறது.
/கரையெலாம் பதறி ஓடிய
காலடித் தடங்களின் மேலே
பாதி பனை எழுந்த
பேரலையின் உயரம் பார்த்த/
இவர் எதைக் குறிப்பிடுகிறார்?
/பல லட்சம் உயிர் பருகிய
கோர அலைகள்/
சுனாமியைச் சொல்கிறாரா?
ஈழத்தை எழுதுகிறாரா?
/அவளின் கைத்தடியால்
இரக்கமற்ற அலையின்
தலையில்
அடித்துவிடுவாள்
என்ற அச்சத்தில்/
இந்தத் தாய் யார்?
தமிழ்த் தாயா?
கவிதையில் தெளிவின்மை அதிகரித்தால், இன்பம் அதிகரிக்கும் என்கிறார் மிலன் குந்த்ரோ.
சிறந்த கவிதைகள் வாழ்வின், வரலாற்றின், புதிர்களை வைத்திருப்பவை.
சந்தேகத்தை வெல்வதற்காக
நாம் கவிதை வாசிப்பதில்லை.
கவிதைகளை எளிமைப்படுத்தி
புரிந்து கொள்வதை விடவும்,
அதன் சிக்கல்களோடு சேர்ந்து இயங்குவதையே வாசிப்பனுவம் என்கிறோம்.
சீனு ராமசாமி ஒரு பொற்கொல்லரைப் போல், நுட்பமாகக் கவிதையை செதுக்கிறார். அதேவேளை, அதற்காக அவர் எடுத்துக் கொண்ட சிரத்தை கவிதையில் எங்கும் துருத்தி நிற்பதில்லை.
காலத்தை, மாதம், ஆண்டு, வாரம், மணி, நிமிடம், இத்தகைய அலகுகளால்தானே நாம் கூறுவோம். ஆனால் கவிஞனின் அலகும் மொழியும் வேறு.
/நாகத்தின்
மெலிந்த குட்டியொன்று
நீந்திக் கடக்கும்
சிறு ஓடையின்
காலம்தான்
உன்னோடு நானிருந்தது
உயிரே/
என்கிறார்.
இந்திய , தமிழ் மரபில் நாகம்
காதலின் காமத்தின் உருவகம்.
இதில் ஓடை யார்? நாகம் யார்?
இடேயே நழுவும் காலத்தை எவ்வளவு அழகாகக் குறிப்பிடுகிறார்.
இதே கவிதையில்…
/எனது அன்பை
ஒரு முகூர்த்தத்தில்
கொட்டி வேகவைத்தேன்/
என்கிறார். “Poetry is an orphan of silence” என்றவர் சார்லஸ் சிமிக். வார்த்தைகள் அவற்றின் பின்னால் இருக்கும் அனுபவத்திற்குச் சமமானது இல்லை! எனும் சிமிக் கூற்றோடு இணைந்து புரிந்து கொண்டால், சீனு ராமசாமியின் கவிதைகளையும் புரிந்து கொள்ள முடியும்.
‘பயங்கரமான ராட்சசர்கள் நம் உள்ளத்தில் பதுங்கி இருப்பவர்கள்’ எட்கர் ஆலன் போ
சொல்வதுபோல, எத்தனை எத்தனை ராட்சசர்கள் இந்த மனிதன் உள்ளே ஒளிந்திருக்கிறார்களோ?
‘கலையுணர்ச்சி’ என்றொரு கவிதை.
எந்த நேரத்திலும்
கவிதை சொல்வீர்
எந்த நேரத்திலும்
ஒரு சினிமாவை
உண்டு மகிழ்வீர்
எந்நேரத்திலும்
இசையின் மெட்டை
தீர்மானிப்பீர்
எந்த நேரத்திலும்
கதை சொல்வீர்
இப்படி அடிக்கிக் கொண்டே போகிறவர், திடீரென ஸ்டியரிங்கை வேறு பக்கம் திருப்புகிறார்.
எந்நேரத்திலும் இரண்டு இட்லிக்கு தேங்காய்ச் சட்னி வைத்துண்பீர்
எந்நேரத்திலும் களித்திருப்பீர்
எவ்விடத்தும் காலநேரமின்றி
எதற்கும் துணிந்தே இருப்பீர்
காதல் பெண்
உங்களைக் கைவிடும்போது
பெற்றவர்
உங்களைக் கைவிடும்போது
உற்றவர்
உங்களைக் கைவிடும்போது
குடும்பம்
உங்களைக் கைவிடும்போது
ஊர்
சமூகம்
குருநாதர்
உங்கள் வழித்தோன்றல்
அதிர்ஷ்டம்
உங்களைக் கைவிடும்போது..
எந்நேரத்திலும்
பிரசன்னத்தில் இருக்கும்
காலபைரவர் போல
அருள் பாலிப்பீர்/
(கவிதை சுருக்கியளிக்கப்பட்டுள்ளது)
இந்தக் கவிதை ஒரு நிமிடம் உறைய வைத்துவிடுகிறது . சீனு ராமசாமி ஓர் உன்மத்தன். ஓர் அதீதன். காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் கூறுகிறபடி, இவரது கவிதைகளை வாசிப்பது, உரைந்த கடலை வெட்டிப் பிளப்பதுபோல் இருக்கிறது.
அடர்ந்த காட்டுக்குள் வழியை தொலைத்துவிடுவதுபோல் இருக்கிறது. தற்கொலையின் விளிம்பில் நிற்க வைப்பதுபோலும் இருக்கிறது.
கவிதைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு சீமாட்டியைப்போல் விளங்குகிறது இக்கவிதைத் தொகுப்பு. மணி ஹெய்ஸ்ட் பார்த்திருக்கிறோம். இதை வாசிப்பதென்பது poetry heist அனுபவம்.
சீனு ராமசாமிக்கு கவிதைகள் எழுதமுடிவது, ஒரு வகையான கேடயமாக , துயரை மறைக்கும் வழியாக இருக்கிறது.
ஜான் அப்டைக் சொல்வதுதான். இவருக்கு வலியை உடனடியாக, தேனாக மாற்றும் வழி தெரிந்திருக்கிறது.
தமிழ்ச் சமூகம் சுவைக்கட்டும்!
நூல் அறிமுகம் எழுதியவர்:
கரிகாலன்
(கவிஞர் / எழுத்தாளர்)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.