மக்களின் வாழ்வைத் தன்னுள் பொதிந்து வைத்து வெளிக்காட்டும் பண்பு கவிதைகளின் பொதுக்குணம். ஆனால், ஒவ்வொரு மொழிக்குள்ளும் இருக்கும் ஓர் இசைமையும், ஒவ்வொரு மனிதனின் தன்மையும் வேறு வேறு என்பதுபோல ஒவ்வொரு கவிஞரின் வாழ்வும் அனுபவங்களும் பார்வைகளும் தனித்தவைதாம்.
மாறுபட்ட வாழ்வின் அனுபவங்களைக் கண்டுணரக் கவிதையே சிறந்த கருவி என்பார்கள். அப்படி பல்வேறு மனிதர்களுடைய அனுபவங்களின் தொகுப்பாக அமைந்திருக்கிறது சீனு ராமசாமியின், ‘புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை’ கவிதைத் தொகுப்பு. ‘காற்றால் நடந்தேன்’ தொகுப்பின் மூலம் கவிஞராகப் பெரிதும் கவனம் பெற்ற இயக்குநர் சீனு ராமசாமியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு இது. நவீனம், காதல், அரசியல் என்று அனைத்து வகைமைகளின் கலவையாகவே இந்தத் தொகுப்பின் கவிதைகள் அமைந்திருப்பது அயர்ச்சியின்றி உற்சாகமாக வாசிக்க உதவுகிறது.
தமிழ்நாடு முழுக்க சாலைகளை நிறைத்திருந்து, இன்று காணாமற்போன புளியமரங்கள் நம் வாழ்வில் எவ்வளவு பெரிய பங்காற்றியிருந்தன என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது ‘நடு இரவில்’ கவிதை. ‘தவசிகள் அதை நாடுவதில்லை / தியான விழிப்புக்கு உகந்த இடமில்லை / ஆயினும் கலப்பையைச் சாற்றிவிட்டு உறங்குபவனுக்கு / அடர் நிழல் தந்திருக்கிறது’ என்னும் வரிகள் சாமானியனை மட்டுமன்றி புத்தனையும் போதிமரத்தையும்கூட நினைவுபடுத்திவிடுகின்றன.
சூழலியலைக் குறியீடாகப் பேசும் கவிதை ‘மலைப்பேச்சு’. ‘இடறியவனின் கவனக்குறைவையும் / குதிப்பவனின் சுயநலத்தையும் அறவே வெறுக்கிறது மலை’ என்னும் கவிதை வரிகள் வாசகனைத் துணுக்குறச் செய்கிறது. ‘தர்மம்’ கவிதையில் ‘இரை தேடும் விலங்கெனில் உண்ணும் தர்மம் அறிதல் அவசியம் / விழுங்கினால் விக்கல் உண்டு / ஏப்பமில்லை எதற்கும்’ எனும் வரிகள் சமூக வாழ்வின் சலிப்பான முகத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது.
‘கயிறு திரிப்பவர்களுக்குக் காலம் ஒன்று இருந்ததில்லை / முழுக் கைநிறைய அள்ளி உண்டதில்லை / வாயில் திரிப்பவர்களுக்குத்தான் சுகவாழ்வு’ என, சில அரசியல் கவிதைகள் ஆங்காங்கே காணப்பட்டாலும், பெரும்பாலும் தனிமனித உணர்வுகளை மீட்டெடுக்கும் தருணங்களாகவே இத்தொகுப்பு நிறைந்துள்ளது.
எளிய வாழ்க்கையின் அழகியலையும் போதாமைகளையும் காட்சிப்படுத்தும் மொழிப்பதிவுகளாக இந்தத் தொகுப்பைக் குறிப்பிடலாம். இந்தக் கவிதைகள் புதுவிதத் தோற்றங்களைக் காட்டி வாசிப்பின் சுவாரஸ்யம் குறையாதபடிக்கு நூல் முழுமையும் நம்மைக் கரம்பிடித்து அழைத்துச் செல்கின்றன.
நூலின் தகவல்கள்
நூல் : புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை
ஆசிரியர் : சீனு ராமசாமி
வெளியீடு : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
9, 1080 5, ரோகிணி ப்ளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை – 600078
தொடர்புக்கு : 99404 46650
பக்கங்கள்: 304
விலை : ₹. 330
நன்றி ஆனந்த விகடன்
நூலறிமுகம் எழுதியவர்
சிவன்குமாரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Pingback: சீனு ராமசாமியின் கவிதைகள் - Book Day