சினிமாவில் புகழ்மிக்கவராக விளங்கும் சீனுராமசாமியின் 170 கவிதைகளடங்கிய புகார்பெட்டியின்மீது படுத்துறங்கும் பூனை என்ற தலைப்பில் பெரும்தொகுப்பாக வந்துள்ளது, முப்பதாண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தமுஎச குழுவில் பலமுறை நான் சந்தித்த இளைஞர் சீனு, அவரது தென்மேற்குப் பருவக்காற்றைவிட எனக்கென்னவோ இக்கவிதைத் தொகுப்பு இனிக்கிறது.
இதில் நீள்கவிதைகளும் குறுங்கவிதைகளுமாய் இலக்கிய வகைகளில் அனைத்து விதமான கவிதைகளும் உள்ளன. ரியலிசம் சர்ரியலிசம் நவீனத்துவம் முதல் பின்நவீனத்தவம் வரை உரசிப்பார்த்துள்ளார். மார்க்சீயம் கற்றவர் என்றமுறையில் எளிய கிராமப்புற மனிதர்களையும் அவர்களது அவல வாழ்வையும் புதுவிதமான முறையில் கவிதைகளாய் படைத்துள்ளார், நவீன வாழ்வில் உள்ள மனிதர்களின் வாழ்வையும் அவர்களது வாழ்வுச்சிக்கல்களையும் சேர்த்தே வடித்துள்ளார்.
உரிமையில் உணர்ச்சியில்
உள்ளத்தின் காதலை
நியாயத்தின் இடதுபக்கத்தில்
நின்றே பேசுங்கள் ****என்று தொடங்கி
உழுத கழனிக்குள் ஒரு மண்புழுதான்
தலைதுாக்கிப் பார்க்கவில்லை
ஏனோ என் ஜனமோ குனிந்தும் பார்ப்பதில்லை,
என்கிறார்.
மெல்ல நெருங்கிடும்போது
நீ துாரப்போகிறாய் என்றெழுதிய பின்
அவன்சிரிப்பில்
ஒரு புத்தர் தனது பாயைச் சுருட்டினார்—
இந்தவரிகளை வாசிக்கும்போது கவிஞர் பாஷோ நினைவுக்கு வருகிறார்.
பசித்தால் தானே உண்னும்
பசியாக்குழந்தையோ
ஊட்டினால் கக்கும்
ஊட்டிய விரலைக்கடிக்கும்,
பிறப்பின் பத்து வயதுக்குள்
பறக்கும் பலுான்களே
இறுதிவரை மகிழ்வின் மேகத்திரள்கள்—–என்று முடிகிறது.
வேம்பு பாகற்காயின் தந்தை–ஆனால் வேப்பம்பழங்கள் பழுத்தால் இனிக்கும், பழுத்தால்தான் எதுவும் இனிக்கும் என்பதில் முதிர்ச்சி தெரிகிறது.
எளிய கதாசிரியனுக்கு வறுமையில் மழைகூட சோதனைதான், அதை—
கதை நோட்டுகள் நனைந்துவிடாதபடி போர்வையில் சுருட்டி வைப்பேன்
ஒழுகும் அவ்வீட்டில் நான் பக்கத்து வீட்டில் சாதம்
கருணையின் ஆவியோடு இந்தத்தனியன் அறைக்கு
வர– வழித்துணையாக இருப்பாார் கடவுள், என்கிறார்,
கடவுள் நம்பிக்கை இல்லாதவரானாலும் சோத்துக்குள்ளிருக்கான் சொக்கப்பன் எனும் கிராம உணர்வு தலைதுாக்குகிறது, நீ வாரத்தைகளை ஆயுதக்கிடங்கிலிருந்து எடுப்பவன் என்ற வரிகள் புரட்சிக்கு வித்திடும் வரிகள்.
அன்பின் தேவை எங்கும் எதிரொலிக்கவேண்டும்,
உயரப்பறக்கும் கழுகைவிடவும்–அருகில் உண்மைபேசும் கிளிகள் அறிதல் அன்பின் தேவை
என்ற சிறந்த வரிகள்,,,,
புரட்சி என்ற கவிதை——–
பூர்வஜென்ம மோப்ப சக்தி ஏதுமற்ற தவளைகள்
எப்படி ஆதிகுடிகளின் நிலமீட்பு முற்றுகையென
சூழ்ந்திருந்து ஒருசேரக்குரல் எழுப்பி உறங்கவிடாது
ஸ்தம்பிக்கச் செய்கின்றன,–
மறைத்தும் பறித்தும் ஒடுக்கியும்
முடப்பட்ட பாதைகளின் வழியே திரண்டு ஒருநாள் அவ்வாறு புரட்சி உண்டாகப் போகிறது என்கிறார்,
இதில் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு ரகம்,
சராசரி வாசகனும் கவிதை எழுத விரும்புவோரும் கற்க வேண்டிய நுால் இது, புகார் பெட்டியின்மீது லஞ்சப்பூனைகள் படுத்துறங்கும் காலமிது,,
வாழ்த்துகிறேன் உன்னை சீனு,,,,
விலை ரு 330 தொடர்புக்கு;
டிஷ்கவரி பப்ளிகேஷன்ஷ்
சென்னை.