Pugazh (புகழ்) Short Story Muththi Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day is Branch of Bharathi Puthakalayam



கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

 புகழின் சிறுகதைகள் படைப்பு இலக்கியத்தில் பேச்சுத் தமிழின் இடத்தையும் செயல்பாட்டையும் குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்தியிருக்கிறது.

முத்தி

புகழ்

எட்டடிக்கு எட்டடி காரக் கட்டம்.  அதெச் சுத்திலும் பத்துப் பதினஞ்ச கொடிக் கம்பங்க.  ஒவ்வொண்ணுலேயும் கலர் கலராக் கட்சிக் கொடிங்க  – சாயம் போயும் புத்தம் புதுசாவும்.  வாசப்பக்கமாக ஒரச்சாக்குல தாருசு எறக்கி சைக்கிள்கட வைச்சிருந்தாரு மாடுமாத்தி.  நாலஞ்சு பழய சைக்கிள் நிக்கும் வாடகைக்கு விடறதுக்காக.  அந்த ஊரோட பஞ்சாயத்து போர்டு அந்தக் கடதான்.

கடவீதிலே டவுன் பஸ் வந்து நின்னுச்சு.  வெள்ள வேட்டி வெள்ள சட்டைல கழுத்துலே கருப்புத் துண்ட நாலா மடிச்சுப் போட்டுகிட்டு வலது கைல இருந்த பேப்பர எடது கைக்கு மாத்தி எறங்கினாரு காக்கா.  அடிக்கடி மூக்க மேப்பக்கமாக சொறிஞ்சுகிட்டே இருப்பாரு.  அதுனாலே மூக்கு மட்டும் கருப்பா காக்கா கலர்ல இருந்ததாலே ஊருலே  அவரக் காக்கா காக்கான்னே கூப்டப் போயி அது பேராகிப் போச்சு.

மாவிலங்குலருந்து காக்கா வந்தாலே கலகம் உண்டுன்னு உறுதியா சொல்லலாம்.   எதயாவது பேசிகிட்டே போயி வில்லங்கமாகி அடிதடில போயி முடியும்.  எதப்பத்தியும் விளக்கமா விவரமா சொல்ற அவருக்கு டீயோட ரெண்டு சிசர் சிகரெட் வாங்கிக் குடுத்தாலே போதும்.   கல்யாணம்கூட பண்ணிக்காமயே இருந்துட்டாரு.

சைக்கிள் கடைல மொதலாளியக் காணம்.   பையன் மட்டும் பஞ்சர் பாத்துகிட்டுருந்தான். காக்கா வந்து மணைப் பலகையை எடுத்துப் போடடு ஒக்காந்தாரு.  அவரப் பாத்ததும் வழக்கமா பேப்பர் படிக்கறக் கூட்டம் கூடுச்சு.   காக்காவுக்கு குஷி வந்தது.  “பஞ்சாயத்து பிரசென்ட்டுக்கு முத்தி நிக்றாளாம்லே?  கமிசனர்தான் சொன்னாரு”ன்னு ஒரு குண்டத் தூக்கிப் போட்டாரு.  அங்கிருந்த எல்லாருக்கும் பீய அள்ளி மூஞ்சிலே பூசன மாதிரியாயிடுச்சு.

பத்து வருசத்துக்கப்பறமா இப்பதான் பஞ்சாயத்து போர்டுக்கு எலக்சன் வந்துருக்கு.  வழக்கமா சாவடிக்கு மேக்க ஒருத்தரும், கிழக்க ஒருத்தரும்தான் நிப்பாங்க.  கடுமையான போட்டியா இருக்கும்.   மைக் செட் கட்றதுல ஒரு தடவ போட்டி வந்து ஊர்ல உள்ள அத்தன  செட்டையும் கட்டியும், பத்தாம வெளியூர்லே போயி வெலைக்கு வாங்கிட்டுகூட சந்துக்கு சந்து கட்டி சத்தம் காதப் பொளந்தது. புடலங்கா செட்டிதான் போயி போலீஸ்ல சொல்லிட்டு வந்தாரு.  போலீஸ் ஊரை சல்லடையா சலிச்சுது.  ஊரு ஆம்பிளங்க எல்லாம் பத்து பதினஞ்சு நாளு கேஸ்ல உள்ள போயிட்டாங்க.  அப்ப முத்தி ஒரு காரியம் பண்ணுனா.   எல்லாரோட பொண்டாட்டி புள்ளைகள டிராக்டர்ல ஸ்டேஷனுக்கு கூட்டிப் போய் ஒப்பாரி வச்சாங்க.  எழவு வீடு கணக்கா மாறிப் போச்சு.  அப்பறம் வெள்ளப் பேப்பர்ல கையெழுத்து வாங்கிண்டு எல்லாரையும் அனுப்பி  வச்சுட்டாரு.



இருவது வருசத்துக்கு முந்தி, முத்திய தெரணிலருந்து சினிமாக் கொட்டாயிலே படம் ஓட்றவருதான் ரெண்டாந்தரமா கூட்டியாந்து குடிவச்சாரு.  மாநிறம், உயரமா தாட்டியான ஒடம்பு, வட்டமான மொகத்துலே மஞ்ச பூசி பெரிய குங்குமப் பொட்டு, கொலுசுப் போட்டு நடந்தான்னா சொக்கி விழாத ஆளு கிடையாது.   “சீமப்பசு கணக்குல இருக்றாப்பா. அரேபிக் குதிரை மாதிரி நடக்றாப்பா” என்று கேலி பேசுவாங்க.  எதையும் காதுலே போட்டுக்கமாட்டா.  

புதுசா எட்டு மணிவாக்குல பஸ்ல வந்து கட வீதில இறங்குவாளுங்க.  ஆரம்பத்துல எதுவுமே புரியல.  போகப் போக இவளுக தொழிலுக்கு வந்திருக்காளுகன்னு தெரிஞ்சு பசங்களும் போக ஆரம்பிச்சுட்டானுக. 

ஒரு அமாவாச இருட்டு. மொத ஆளாப் போன உக்கானி கெழவன் ரொம்ப நேரமாயும் வரல. வயசுப்பசங்க என்ன நடக்குது எட்டிப் பாக்க இவங்க கத பேசிகிட்டிருந்திருக்காரு.  பசங்களுக்கு பொறுமையில்லை.  இருட்டுலே மொளக்குச்சிய உருவிகிட்டுப் போயி கண்ணு மண்ணு தெரியாம அடிச்சிருக்கானுக.  அன்னிக்கி போனவளுகதான். அதுக்கப்பறம் அந்த ஊர்ப்பக்கமே தலவச்சுப் படுக்கல.   தனக்குப் போட்டியா வந்துட்டாளுகன்னு முத்திதான் ஆளு வச்சு அடிச்சுத் தொரத்திட்டான்னு பேசிகிட்டாங்க.  

குடிவந்த ரெண்டு மூணு வருஷத்துலயே பொண்ணும் ஆணுமா முத்தி ரெண்டு புள்ளைகளுக்குத் தாயாயிட்டா.  புருஷங்காரன் காசு பணத்த எல்லாம் வுட்டுட்டு ஓட்டாண்டியா பூட்டான்.   அப்பறம் வரேன்னு சொல்லிப் போனவன் போனவன்தான்.  

கொஞ்சநாள் முத்தி பொலம்பினா.  அப்புறமாக மீன் வித்தா. கத்தாள வெட்டியாந்து நார் உரிச்சு சந்தையிலே வித்தா. அப்பதான் கொறவன் ஒருத்தன் அவ வூட்டுக்குப் போக வர இருந்தான். அதுக்கப்றமாக அந்த வூட்டிலேய தங்கிட்டான். புதுசா ஊர்ல புரோட்டாக் கடடை ஒண்ணப் போட்டான் கொறவன்.   ஊர்ல இருந்த அப்பனையும் ஆயியையும் தன்கூடவே தங்கவச்சிக்கிட்டா முத்தி.  அந்த வருசம் பஞ்சம் வந்துச்சு.  பஞ்சம்னா பஞ்சம் அப்டியொரு பஞ்சம்.  குடியானவனே குச்சி  வள்ளிக் கிழங்க அவிச்சுத் திங்கற நெலம.   கொறவன் இதுகள வச்சு எப்படிக் காப்பத்தறதுன்னு தெரியமா துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடிப் போனான்.  முத்தி என்ன பண்ணுவா அவளும் மாறிப் போனா.

பங்காளிக மாமன் மச்சான் உறவு முறை எல்லாத்தையும் கூப்ட்டு வச்சு பனாதி சின்னாளு  ஆலோசனை கேட்டாரு.  ஓட்டுப் போடற அண்ணைக்கி ஊத்திவுடறதுக்கு பள்ளனுககிட்ட சொல்லிப் பத்துப் பானைகளை ஊறப் போடச் சொல்ல ஏற்பாடு நடந்தது.

செங்குந்தர் மன்றத்திலே சாதில ஓட்டு இருக்கும் போது வெளியாளுக்கு பதிலாக கீரப்புட்டான் வடிவேலுவை நிறுத்துவதை கூட்டம் ஆமோதிச்சுது.

உக்கானி கெழவனக் கூட்டிக்கிட்டு வெள்ளக்குட்டி பள்ளு பற சக்கிலிக் குடி அத்தனைக்கும் போய் சொத்தே அழிஞ்சாலும் பரவாயில்ல நான் செயிச்சாகணும்னு பேசிகிட்டிருந்தாரு,

முத்தியும் நிக்கறதால நாலு முனப் போட்டியா மாறிடிச்சு.  அவகிட்ட பணம் ஏது செலவழிக்க.  பணம் இல்லாம செயிக்கறதுங்கறது பசயில்லாம போஸ்டர் ஒட்டறது மாதிரினு எல்லாரும் சிரிச்சாங்க.



முத்தி வீடு சின்னக்குடிசைதான்.  வாசலோரமா திண்ண.  அதை மறச்சு ஒரு வெத்தல பாக்குக்கடய முத்தியே வச்சிருந்தா.  வெளியூர்க்காரனுங்க தைரியமா உள்ளே போயிருவானுங்க.  உள்ளூர்காரங்க சிகரெட் வாங்கற மாதிரி வந்து வூட்டுக்குள்ளார வர வசதியா கடை இருந்தது.

இருவது வருசத்திலே இப்டி ஒரு கூட்டத்த அந்த ஊர் கண்டது இல்ல.  எல்லோருமே நாமதான் செயிப்போம்னு பட்டாசு எல்லாம் கூட வாங்கிட்டுப் போயிட்டாங்க.  சாம்பசிவ வாத்தி மக அங்க கிளார்க்கா வேலை பார்த்தது வசதியாப் போச்சு.   காக்காதான் ஓடிப்போய் ஓட்டு வெவரத்தக் கேட்டுகிட்டு சொல்லிகிட்டிருந்தாரு.

நாலாவது ரவுண்ட் எண்ணி முடிச்சப்ப கீரப்புட்டான் நின்ன திராட்சை சின்னம் முன்னூறு ஓட்டு முன்னணியிலே இருந்துச்சு.  பட்டாசு கொளுத்த ஆரம்பிச்சுட்டானுக.  மொத்தம் பத்து ரவுண்டும் எண்ணி முடிச்சு பஞ்சாயத்து மைக் செட்ல முடிவச் சொன்னப்ப எல்லாருக்கும் மயக்கமே வந்துருச்சு. முப்பது ஓட்டு வித்தியாசத்துல முத்தி செயித்திருந்தா.

“அட பணம் போனா மசிராப் போச்சு மாப்ளே உக்கானி கெழவன் பேச்சக் கேட்டு மானமும் இல்ல சேந்து போச்சு”ன்னு வெள்ளக்குட்டி வருத்தப்பட்டாரு.

முத்தி எப்படி செயிச்சிருப்பான்னு யாருக்கும் எதுவும் விளங்கல. காக்காயக் கூப்ட்டு வெசாரிச்சாங்க. எலக்சன்ல எப்படி செயிக்கறதுன்னு முத்தி காக்கா கிட்ட கேட்டிருக்கா.  அதுக்கு காக்கா “ஒன் வூட்டுக்கு வந்து போறவங்ககிட்டல்லாம் எலக்சன்ல தோத்துட்டா ஊரக் காலி பண்ணிட்டுப் போகலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்னு சொல்லு போதும்” ன்னு சும்மா சொல்லியிருக்காரு.  அவ்வளவுதான்.

இந்தியா டுடே 1999

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *