நூல் அறிமுகம்: ‘பூஜ்ஜிய நேரம்’ – கடந்துபோக இயலவில்லை… – இரா.பானு

 

என் ஊரடங்கு நாட்களின் பெரும்பகுதி நேரத்தைத் திருடிக்கொண்டது மு.ஆனந்தனின் “பூஜ்ஜிய நேரம்”. கவிஞர், கட்டுரையாளர், வழக்கறிஞர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர்… இவ்வாறுதான் உங்களைப் போன்றே நானும் தோழர் மு.ஆனந்தன் அவர்களை அறிந்திருந்தேன். ஆனால் அந்த அற்புத மனிதருள்ளே ஒரு மகத்தான மனிதம் வேரூன்றியிருப்பதை அவரின் இந்த “பூஜ்ஜிய நேரம்” என்ற கட்டுரைத் தொகுப்பின் வாயிலாகவே அறிந்து கொண்டேன்.

எத்தனையோ நூல்களை நாம் வாசித்து கடந்துபோய்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் ஓரிரு நாட்கள் மட்டுமே நம்மை யோசிக்கவைக்கின்றன. ஆனால்… தோழர் மு. ஆனந்தன் அவர்களின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு மனதின் மையத்திலே உட்கார்ந்து கொண்டு நம்மை பிசைந்துகொண்டே இருக்கிறது. கடந்துபோக இயலவில்லை. பதினான்கு கட்டுரைகள். ஒவ்வொன்றும் சமூக அநீதிக்கான சவுக்கடி. சம்பந்தபட்டவர்களை மட்டுமல்ல, வாசகனையும் நிலைகுலையச்செய்கிறது. நாம் யோசிக்க மறந்த பல்வேறு விஷயங்களை அதிலுள்ள அநீதிகளை பிட்டு பிட்டு வைக்கிறது. முதலிரு கட்டுரைகள். திருநங்கைகள் மீதான வன்கொடுமைகளையும் அவர்கள் படும் வேதனைகளையும் ஆழமாக பதிவு செய்திருக்கிறது.

Image

கொடைக்கானல் யுனிலிவர் தொழிற்சாலையின் பாதிப்புகளை மனஅழுத்தத்தோடு பதிவிட்டிருக்கிறார். ‘நீட்’ தேர்வின் தொடர் தற்கொலைகள், அதன் அதிர்வுகள் இன்னும் அடங்கவில்லை. இந்த கட்டுரைத் தொகுப்பினையே உயிரிழந்த அந்த மருத்துவக் கனவு மாணவிகளுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

இது மட்டுமா? கொலை செய்ய விரும்பும் அரசு, சும்மா இருக்கிற மனைவிக்கு திருமணச் சொத்தில் பங்கு வேண்டுமா?. இலவசங்களின் அரசியல், எய்ட்ஸ் பாதிப்பாளர்கள் மீதான வன்முறை, இப்படியாக வேறுபட்ட மாறுபட்ட தலைப்புகளில் வழக்கறிஞர் என்ற வகையில் தனது வாதங்களை முன் வைத்து நியாயம் கேட்கிறார். இதில் பதிமூன்றாவது கட்டுரையான ‘வாக்குப்பெட்டியில் வழியும் குற்றக்கறை’ நிறைய புள்ளிவிபரங்களோடு பாராளுமன்றமும் சட்டமன்றங்களும் கிரிமினல்களால் நிறைந்து வழிவது குறித்து தீவிரமாகப் பேசுகிறது. ஒவ்வொரு கட்டுரையும் பல நாட்கள் நம்மை யோசிக்கவைக்கிறது. ச.தமிழ்செல்வன் அவர்களும் பேராசிரியர் அருணன் அவர்களும் வாழ்த்துரை வழங்கியுள்ளது கூடுதல் சிறப்பு. மு.ஆனந்தன் அவர்களை நெகிழ்வோடு பாராட்டுகிறேன்.

பாரதி புத்தகாலயம் வெளியீடு. முதற்பதிப்பு – 2019, பக்கங்கள் 160 – விலை ரூ 150/-

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/boojiya-neram_anandham/

– இரா.பானு
கிணத்துக்கடவு.