எளிய மனிதர்களின் இன்னல்களையும் அவர்கள் படும் துயரங்களையும் கண்முன்னே காட்சியென விரித்துச் செல்லும் கதைகளின் தொகுப்பு புலன் கடவுள். இதில் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு சிறுகதைகளின் தலைப்பும் வாசிக்கும் நமக்குள் நெகிழ்ச்சியையும் தமிழ் மொழி மீதான பற்றையும் கதைகளுக்குள் நாம் கண்டெடுக்கும் பொருள்செறிவையும் உணர்த்துவதாக அமைந்து நூலை வாசிக்கத் தூண்டுகின்றன.
செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை
பெருகும் வாதையின் துயர நிழல்
மிதவை
சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று
உயிர் வேலி
தீய்மெய்
நெகிழ்நிலச்சுனை
புலன் கடவுள்
தவிப்பின் மலர்கள்
என ஒவ்வொரு தலைப்பும் கதையின் உள்ளடக்கத்தை நமக்குள் கடத்தி விடுகின்றன.
சாலையோர வியாபாரிகளின் அன்றாட வாழ்க்கைப்பாடுகளை விவரிப்பதிலாகட்டும் கையூட்டு எனப்படும் லஞ்சம் எப்படி எல்லாம் மனித மனங்களை ஆசையின் பேயென ஆட்டி வைக்கிறது என்பதையும் அது பாதிக்கப்பட்ட குடும்பத்தை எவ்விதமாக நிர்க்கதிக்கு உள்ளாக்குகிறது என்பதையும் இதில் உள்ள சிறுகதைகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. நோய்வாய்ப்படும் சிறுவனின் மனநிலையை அறிந்து அவனுக்கு ஆறுதலாக எது அமைகிறது என்பதைக் கண்டறிந்து தீர்த்து வைக்கும் மனிதன் பற்றிய ஒரு கதை மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.
ஊருக்குள் இருக்கும் ஒற்றைக் குளம் எல்லா மக்களுக்கான குடிநீர் வசதிக்கு மிகப்பெரிய கடவுளாக உதவி செய்து வரும் நிலையில் அதை தனி ஒருவன் சொந்தம் கொண்டாடி மக்களுக்கு இடையூறு விளைவிக்கையில் சமூக அக்கறை உள்ள மனிதன் அதை எவ்விதம் தடுத்து நிறுத்துகிறான் என்பதை அழகாக எடுத்துரைக்கிறது மற்றொரு சிறுகதை.
உயிர்கள் எனும் போது விலங்குகளின் மீதும் மனிதர்கள் கொள்ளும் நேசம் தான் வளர்த்த ஆடு தன் கையை விட்டுப் போகும்போது எவ்வளவு பெரிய துயரத்தை அதன் மீது அன்பு வைத்த மனம் அடைய நேரிடுகிறது என்பதையும் எளிமையான சொற்களைக் கொண்டும் வலிமையான காட்சி அமைப்பிலும் நமக்குள் கடத்துகிறது ஒரு சிறுகதை.
தனது கண் முன்னே தாய் மரணம் அடையும் சூழலைப் பார்க்கும் சிறுவனின் மனநிலை எப்படி சுற்று வட்டாரத்தில் அவனுக்கான இருப்பை அங்கீகரிக்க மறுக்கிறது என்பதை விவரிக்கிறது மற்றொரு சிறுகதை.
ஒரு மனிதன் ஏதேனும் ஒரு உணவின் மீது அடிமையாகும் சூழலுக்குத் தள்ளப்படுவான் அல்லது ஏதேனும் ஒரு உணவு வகை அவனுக்கு மிகவும் பிடித்ததாக அமைந்து விடக்கூடும். அப்படி ஒரு மனிதன் தேநீருக்கு அடிமையாகிறான். அதுவும் ஒரு குறிப்பிட்ட கடைத் தேநீருக்கு அவன் அடிமையோ அடிமை. சூழல் அவனை அந்த ஊரிலிருந்து வேறு ஊருக்கு இடம்பெயர்த்துகிறது. இத்தகு சூழலில் அவன் எப்படி தனது நிலையை உணருகிறான் அதிலிருந்து எவ்விதம் மீளுகிறான் என்பதைக் குறித்தான ஒரு கதையும் நம்முள் நமக்குத் தெரியாமலேயே ஒளிந்து கிடக்கும் சில பழக்க வழக்கங்களைப் பற்றி அறியத் தூண்டுகிறது.
இதில் உள்ள மிக முக்கியமான கதைகளில் ஒன்று செங்குத்தாய் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை. இன்றைய அரசு அலுவலகங்களில் தலைவிரித்தாடும் ஊழல் மிகப்பெரிய சாபக்கேடாக மாறி ஒவ்வொரு குடும்பத்தையும் எவ்விதமாக பாதிக்கிறது என்பதை நம் கண் முன்னே படம்பிடித்து காட்டுகிறது. ஊழல் செய்தும் லஞ்சம் பெற்றும் தனது அன்றாட வாழ்வை நகர்த்தும் பவுனரிசியின் வாழ்வில் ஒரு பிரியாணிப் பொட்டலம் எவ்விதமான மாற்றத்தை ஏற்படுத்துகிறது அதை பார்த்தவள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். எப்படி இந்த நிலைக்கு அவள் ஆளானாள் என்பதை அருமையான மொழி நடையிலும் எளிமையான சொற்கட்டுகளாலும் எழுதிச் செல்கிறார் உதாரணமாகக். அரசு வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு மனிதனும் இந்தச் சிறுகதையை வாசித்துப் பார்த்தால் நிச்சயமாக ஊழலை ஒழிக்க முடியும் என்பது திண்ணம்.
தான் பார்த்து வளர்த்து ஆளாக்கிய ஒரு மனிதன் உயர்ந்த நிலையில் இருக்கும் போது தனது மகனுக்கு அவனையே உதாரணமாகக் காட்டி அவனது வாழ்விலும் மேன்மையை கொண்டு வரத் துடிக்கும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு அவன் வளர்த்து ஆளாக்கியவன் என்ன பரிசு கொடுத்தான் அதனால் அவனுக்கு ஏற்பட்ட தர்ம சங்கடமான நிலை என்ன என்பதை சிறப்பாக விவரிக்கிறது சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று சிறுகதை. இச்சிறுகதையில் வரும் அப்பாவைப் போல ஒவ்வொரு மனிதர்களும் வைராக்கியத்தை தமக்குள் சூரியன் என கருக்கொள்ள வைத்தால் எல்லோரது சந்ததிகளும் சிறப்பானதொரு எதிர்காலத்தைக் கண்டடைய முடியும் என்பது உறுதி.
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எத்தகதொரு சூழலில் கிராமத்தில் தனது குழந்தைகளை தனியே வீட்டில் விட்டுவிட்டு வெளியே வந்திருக்கும் ஒரு பெண்மணிக்கு அப்படியானதொரு நிகழ்வு அரங்கேறுகிறது. தனது குழந்தைகளின் நிலை என்ன என்பதை அறியத் துடிக்கும் அவள் எவ்விதமெல்லாம் தனக்குள் உழன்று தன்னை உயிர்ப்பித்துக் கொண்டாள் என்பதை உயிர்வேலி சிறுகதை படம் பிடித்து காட்டுகிறது. தாய்மை எப்பொழுதும் தனது சந்ததியினரை வாழச் செய்வதற்காக தன்னையே மெழுகுவர்த்தியென உருக்கிக் கொள்ளும் என்பதை இந்த சிறுகதை வாசிக்கும் நமக்கு சிறப்பாக எடுத்துக்காட்டி நம் விழிகளில் நீரை வர வைக்கிறது.
ஒவ்வொரு சிறுகதைகளிலும் அவர் விவரித்துக் காட்டும் உவமைகள் அருமையாகவும் நல்லதொரு மொழியின் ஆளுமைப் பண்பையும் நமக்கு எடுத்துச் சொல்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் எளிய நடையில் எழுதப்பட்டு வாசிப்பவரை சிறப்பாக அணுக வைக்கிறது.
இவ்வளவு அருமையான ஒரு சிறுகதைத் தொகுப்பில் திருஷ்டிப்பொட்டு போல ஒரு சிறுகதையும் அமைந்திருப்பது வாசிக்கும் நமக்கும் வருத்தத்தை தருகிறது மாமிச வெப்பம் என்ற தலைப்பிலான சிறுகதை. பெண்ணின் உடல் அங்கங்களை அவ்வளவு நுட்பமாக விவரித்து இருக்க வேண்டுமா என்ற வினாவையும் நமக்குள் எழுப்புகிறது. இது போல் பல இடங்களில் நடந்திருக்கலாம் நடந்து கொண்டும் இருக்கலாம் ஆனால் அதை இலைமறை காயாக தமிழ் மொழியின் சிறப்பைக் கொண்டு எழுதிச் சென்றிருக்கலாம் ஆசிரியர்.
புலன் கடவுள் நூலின் வழியே எளிய மனிதர்களின் பேரன்பை உணர முடிகிறது கிராமத்து மனிதர்களின் சமூகப் பொறுப்பை அறிய முடிகிறது. இப்படியாக ஒவ்வொரு மனிதர்குள்ளும் ஒளிந்து கிடக்கும் மனிதத்தை வெளிக்கொணர்வதில் புலன் கடவுள் வெற்றியடைகிறது.
இளையவன் சிவா
நரசிங்காபுரம்
நூல் : புலன் கடவுள் [சிறுகதைத் தொகுப்பு]
ஆசிரியர் : மீனாசுந்தர்
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை
முதல் பதிப்பு : மே 2022
பக்கம் : 160
விலை: ரூ190
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.