புலவர் வி.நாகசுந்தரம் எழுதிய "தமிழர் ஆற்றுப்படை" தொகுதி 1 புத்தகம் | Pulavar V. Nagasundaram's Thamizhar Atrupadai - 1 Tamil Book Review | பேரா. எ.பாவலன் | www.bookday.in

புலவர் வி.நாகசுந்தரம் எழுதிய “தமிழர் ஆற்றுப்படை” தொகுதி 1 – நூல் அறிமுகம்

தமிழர் ஆற்றுப்படை: மரபும் பொருளும்

படைப்பின் நோக்கமும்

(தமிழர் ஆற்றுப்படை நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வுக் கட்டுரை)

தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியங்கள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளன. அக்காலத் தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, அரசியல், பொருளாதாரம், கலை, அறம், கொடை, இயற்கை உணர்வு ஆகியவற்றை அறிந்துகொள்வதற்குச் சங்க இலக்கியங்கள் முதன்மையான ஆதாரங்களாகத் திகழ்கின்றன. அவற்றுள் பத்துப்பாட்டு நூல்கள் பழந்தமிழரின் இலக்கியச் செழுமையையும் சமூக உறவுகளையும் வெளிப்படுத்தும் சிறப்புடையன. பத்துப்பாட்டு நூல்களில் இடம்பெறும் ஆற்றுப்படை இலக்கியங்கள், தமிழர்களின் வழிகாட்டும் பண்பையும் கலைஞர்களைப் போற்றும் மரபையும் புரிந்துகொள்வதற்கு உதவுகின்றன.

ஆற்றுப்படை என்பது ஒருவரை ஓர் இலக்கை நோக்கி வழிப்படுத்தும் இலக்கிய உத்தியாகும். தாம் அடைந்த நன்மையைப் பிறரும் அடைய வேண்டும் என்ற விருப்பம் இதன் அடிப்படையாக அமைகிறது. பரிசில் பெற்ற கலைஞர், தன்னைப் போன்ற மற்றொரு கலைஞனிடம், தாம் பரிசு பெற்ற வள்ளலின் பெருமையையும் அவர் வாழும் நாட்டின் வளத்தையும் எடுத்துரைத்து, அவனையும் அந்த வள்ளலிடம் செல்லுமாறு வழிகாட்டுகிறார். இவ்வாறு தனிமனித அனுபவம் பொதுநல நோக்கமாக மாறும் இலக்கிய வடிவமே ஆற்றுப்படை.

இந்த இலக்கிய மரபின் தொடர்ச்சியையும் நவீனத் தமிழ்ச் சிந்தனையின் விரிவையும் ஆராயும்போது, தமிழாற்றுப்படை என்ற கருத்தாக்கம் சிறப்பான கவனத்தைப் பெறுகிறது. சங்ககால ஆற்றுப்படைகளில் கலைஞர்கள் வள்ளல்களை நோக்கி வழிப்படுத்தப்பட்டனர். தமிழாற்றுப்படை என்ற நவீன இலக்கியக் கருத்தாக்கத்தில், தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் அறிஞர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் ஆகியவற்றின் பெருமையை எடுத்துரைத்து, அவற்றை நோக்கிப் புதிய தலைமுறையை வழிநடத்தும் முயற்சி முன்னிலைப்படுகிறது.

ஆற்றுப்படை என்ற சொல்லின் பொருள்

‘ஆற்றுப்படை’ என்ற சொல்லை ‘ஆறு’ மற்றும் ‘படை’ என்ற கூறுகளின் அடிப்படையில் பொருள்கொள்ளலாம். இங்கு ‘ஆறு’ என்பது வழி அல்லது நெறி என்ற பொருளில் அமைகிறது; ‘படைத்தல்’ என்பது வழிப்படுத்துதல் அல்லது செலுத்துதல் என்ற கருத்தை உணர்த்துகிறது. எனவே, ஆற்றுப்படை என்பது ஒருவருக்கு வழியைக் காட்டி, அவர் அடைய வேண்டிய இலக்கை நோக்கி வழிநடத்துதல் எனப் பொதுவாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

ஆனால் இலக்கிய வகையாக ஆற்றுப்படை என்பதை வெறுமனே வழிகாட்டுதல் என்று மட்டும் வரையறுக்க முடியாது. குறிப்பிட்ட அனுபவத்தைப் பெற்ற ஒருவர், தம்மைப் போன்ற தேவையுடைய மற்றொருவரிடம், தாம் அடைந்த பயனை விளக்கி, அந்தப் பயனைப் பெறுவதற்கான வழியையும் எடுத்துரைப்பதே அதன் தனிச்சிறப்பாகும்.

சங்ககாலத்தில் பாணர், கூத்தர், பொருநர், விறலியர் போன்ற கலைஞர்கள் தங்களது கலைத்திறனை வெளிப்படுத்தி, மன்னர்கள் அல்லது வள்ளல்களிடமிருந்து பரிசில்களைப் பெற்றனர். அவ்வாறு பரிசில் பெற்ற ஒருவர், பரிசில் பெறாத மற்றொரு கலைஞரைச் சந்திக்கும்போது, தமக்குப் பரிசளித்த தலைவனின் சிறப்புகளை எடுத்துரைத்து, அவரிடம் செல்லுமாறு கூறுவது ஆற்றுப்படை இலக்கியத்தின் அடிப்படை அமைப்பாக விளங்குகிறது.

இதில் மூன்று முக்கியமான கூறுகள் காணப்படுகின்றன:

  • அனுபவம் பெற்ற வழிகாட்டி: ஏற்கெனவே வள்ளலிடம் சென்று பரிசில் பெற்றவர்.
  • வழிகாட்டப்படுபவர்: பரிசில் அல்லது வாழ்வாதாரத்தை நாடிச் செல்ல வேண்டிய கலைஞர்.
  • இலக்காக அமையும் வள்ளல்: கலைஞருக்கு உதவக்கூடிய மன்னன் அல்லது கொடையாளர்.

இவற்றுடன் வழித்தட வருணனை, நாட்டின் இயற்கை வளம், மக்களின் வாழ்க்கை, வள்ளலின் ஆட்சிச் சிறப்பு, கொடைப் பண்பு ஆகியவை இணைந்து ஆற்றுப்படைப் பாடலுக்கு விரிவான இலக்கிய அமைப்பை வழங்குகின்றன.

ஆற்றுப்படை இலக்கியத்தின் அடிப்படை நோக்கம் தனிப்பட்ட அனுபவத்தைப் பிறருடன் பகிர்வது மட்டுமல்ல. பிறரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழியைக் காட்டுவதும், கலைஞர்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதும் அதன் சமூகப் பயன்களாகும். இதனால் ஆற்றுப்படை என்பது வழிகாட்டும் இலக்கியமாகவும், சமூக உறவுகளைப் பதிவு செய்யும் இலக்கியமாகவும், பழந்தமிழரின் கொடை மரபை வெளிப்படுத்தும் இலக்கியமாகவும் விளங்குகிறது.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்  (தொல். பு.இ. 88: 3-6)

இந்நூற்பா ஆற்றுப்படையின் இலக்கிய இலக்கணத்தையும் அதன் சமூகப் பின்னணியையும் விளக்குகிறது. கூத்தர், பாணர், பொருநர், விறலியர் ஆகியோர் பரிசில் பெற்றுப் பயனடைந்த நிலையில், அதே பயனைப் பெறாதவர்களுக்குத் தாம் அறிந்த வழியை எடுத்துரைக்கின்றனர். இங்கு ஆற்றுப்படை என்பது ஒரு செய்தியைத் தெரிவிப்பதோடு நின்றுவிடுவதில்லை; பிறரது வாழ்வில் நன்மை ஏற்படுவதற்கான செயல்முறை வழிகாட்டுதலாகவும் அமைகிறது.

தொல்காப்பியத்தின் இந்த இலக்கணக் குறிப்பு மூன்று முக்கியமான கருத்துகளை முன்வைக்கிறது.

முதலாவது, ஆற்றுப்படை ஒரு குறிப்பிட்ட சமூகச் சூழலிலிருந்து உருவான இலக்கிய வடிவமாகும். கலைஞர்கள் தங்களுடைய கலைத்திறனைக் கொண்டு வாழ்வாதாரத்தைப் பெற்ற காலத்தின் அனுபவங்கள் இதில் பதிவாகின்றன.

இரண்டாவது, ஆற்றுப்படையின் அடிப்படைத் தூண்டுதல் பரிவும் பகிர்வும் ஆகும். ஒருவர் தாம் அடைந்த நன்மையை மற்றவர்களும் அடைய வேண்டும் என விரும்புவது அதன் உள்ளார்ந்த பண்பாகும்.

மூன்றாவது, ஆற்றுப்படை தனிமனிதப் புகழை மட்டுமே மையப்படுத்துவதில்லை. வள்ளலின் கொடை, நாட்டின் வளம், பயணத்தின் இயல்பு, மக்களின் விருந்தோம்பல் போன்ற பல்வேறு கூறுகளையும் ஒருங்கிணைக்கிறது.

இவ்வகையில் தொல்காப்பியம் வழங்கும் இலக்கணம் ஆற்றுப்படையை ஒரு செய்யுள் வடிவமாக மட்டுமல்லாமல், பழந்தமிழ்ச் சமூகத்தின் கலைஞர் வாழ்வியலையும் பொருளாதார உறவுகளையும் வெளிப்படுத்தும் இலக்கிய அமைப்பாகவும் புரிந்துகொள்ள உதவுகிறது.

இங்கு புலவர் வி. நாகசுந்தரம் அவர்கள் எழுதிய தமிழர் ஆற்றுப்படை எனும் நூல் ஆற்றுப்படை இலக்கியத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வகையில் அவர் தமிழர் ஆற்றுப்படை எனும் தலைப்பில் மூன்று தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அவற்றை காணும் பொழுது தமிழ் மொழிக்கு அவர் செய்யும் கடமை என்று எண்ணததோன்றுகிறது. தமிழுக்கு ஏதாகிலும் செய்தால் நிச்சயம் தமிழ் அவர்களை என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறது என்பதற்கு சாட்சி தான் இந்த தமிழ் ஆற்றுப்படை நூல். முதலில் இந்த மூன்று தொகுதிகள் ஒன்றாக ஒரே தலைப்பின் கீழ் வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தலைப்புகளில் ஒவ்வொரு கட்டுரையாக எழுதப்பட்டு சராசரியாக 250 பக்கங்கள் கொண்ட ஒரு நல்ல கட்டமைப்புடன் விளங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு தலைப்பும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இது ஒரு பக்கம்… இன்னொரு பக்கம் இந்நூலுக்கு ஏன் தமிழர் ஆற்றுப்படை என்று பெயர் சூட்ட வேண்டும் என்ற வினாவும் என்னுள் தோன்றியது. அதற்கு விடை சொல்லும் தன்மையிலும் அமைந்திருப்பதனாலும் இந்த நூல் அத்துணை சிறப்பாக அமைந்ததை எண்ணி உள்ளபடியே மகிழ்கிறேன். வியக்கிறேன்.

பொதுவாக உலகில் எண்ணற்ற மொழிகள் பேசப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான மொழிகள் பேசப்படுவதாக வரலாற்று தரவு ஒன்று பதிவு செய்துள்ளது. அவற்றுள் எல்லா மொழிகளுக்கும் செம்மொழி தகுதி கிடைக்கவில்லை. அதேபோன்று உலகிலுள்ள செம்மொழி தகுதிப் பெற்ற மொழிகளும் தமிழைப் போன்று இன்றளவும் வாழும் வழியாகவும் வளரும் மொழியாகவும் இருக்கவில்லை. இது நிதர்சனமான உண்மை. மாற்றுக் கருத்து இல்லை. மறுக்கவும் முடியாது. சில மொழிகள் அழிந்ததையும்/ அழிவின் விளிம்பில் இருப்பதையும் காண முடியும். ஆனால் தமிழ் மொழி அப்படி அல்ல, என்பதற்கு இந்த நூல் சான்று.

சமகாலத்தில் தமிழ் மொழியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான படைப்புகள் தோன்றி வளர்ந்து வருகிறது. இதைக் கண்கூடாகக் காணமுடியும். இது ஓர் ஆரோக்கியமான சூழல்தான். என்றாலும் எல்லா படைப்புகளும் நிலைப்பதில்லை. சிலது காணாமல் போகிறது அல்லது காலாவதியாகிறது. எது வாழ வேண்டும் என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

தமிழர் ஆற்றுப்படையில் இடம் பெற்றுள்ள ஆராய்ச்சி கட்டுரைகள் பின்வருமாறு.

  1. அர்ச்சகர் பணி – விளக்கம்
  2. அன்பின் ஐந்திணை முல்லை
  3. முழங்கு கடல் முழவின் முசிறி
  4. குடமுழுக்கு கடவுள் மங்கலம்
  5. குண்டலகேசி
  6. கூத்தரும் பரணியம்
  7. சமண சமய இலக்கியம்
  8. சிற்றிலக்கியம் (96 வகை பிரபந்தங்கள்)
  9. ஞான தேடல் சிந்தனை மேடை தமிழ் ஆண்டுகள் 100
  10. திரைப்படங்களில் “தமிழ்”
  11. எந்நாட்டவருக்கும் இறைவன் சிவன்
  12. முத்தொள்ளாயிரம்
  13. முல்லைத் திணையும் மக்கள் வாழ்வும்
  14. வழகத் தமிழ்
  15. ஒட்டக்கூத்தர் வரலாறு
  16. வெள்ளிவீதியார்
  17. பட்டினப்பாலை

இவை அனைத்தும் முதல் தொகுதியில் இடம் பெற்றுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள். இதுபோன்று மொத்தம் மூன்று தொகுதிகளில் ஒவ்வொரு அற்புதமான ஆராய்ச்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஆசிரியரின் ஆராய்ச்சிக்கு சான்று பகரும் தன்மையில் அமைந்துள்ளன. சில கட்டுரைகள் விமர்சனத்துடன் சீர்தூக்கிப் பார்க்கும் எண்ணத்தையும் தருகிறது. ஆனாலும், புலவர் வி. நாகசுந்தரம் அவர்கள் தான் எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு விருப்பு வெறுப்பு இல்லாமல் ஆராய்ச்சி செய்ததையும் அறிய முடிகிறது. தன்னுடைய சமய நம்பிக்கைக்கு அப்பாற்பட்டு சமண சமய இலக்கியத்தை ஆராய்ச்சிச் செய்ததையும் அதில் ஆசிரியரின் கருத்தும் சுட்டத்தக்கது.

1) வைதீக சமயம் போல் இல்லாமல், பிறப்பினால் உயர்வு, தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை சமண சமயத்தில் இல்லை. சாதியே பாராட்டாத தமிழ்நாட்டில் சமணம் வளர்த்ததில் வியப்பேதுமில்லை

2) அஞ்சினான் புகலிடம் : பிறர் மீது அச்சங்கொண்டு, அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தால் ஆதரவற்ற நிலையில் அடைக்கலம் வேண்டி வந்தவர்களை ஆதரித்து, உண்ண உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து ஆதரிக்கும் அமைப்பான அஞ்சினான் புகலிடத்தை பண்டைத் தமிழகத்தில் பரவலாக சமண சமயம் அமைத்திருந்தது.

3) சமணர்களின் மடங்களில் நோயாளிகளுக்குக் கட்டணமில்லா மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டது.

4) ஆங்காங்கு கல்விக் கூடங்கள் நிறுவி, மக்களுக்குக் கல்வி கற்பித்தனர்.

5) உழவுத் தொழிலை இழிவான தொழிலாகக் கருதாது, மிகச் சிறந்த தொழில் செய்யும் ‘வேளாளர்கள்’ என்று போற்றப் பட்டனர்.

6) சமண சமயத் துறவிகள் சமயச் சொற்பொழிவு ஆற்றி, மக்களைச் சமணத்தின் பால் ஈர்த்தனர்.

7) வைதீகம் போல் அல்லாது மக்களின் தாய்மொழியிலேயே தமிழிலேயே அவர்களது சமயக் கருத்துக்களைக் கூறினார்கள்/எழுதினார்கள். மக்கள் அறியாதபடி வேறு மொழியில் மதக்கொள்கைகளை எழுதி, மறைத்து வைப்பது பெரும் குற்றம் என்று கருதினார்கள். இக்கோட்பாட்டால் தமிழ்மொழி அடைந்த நன்மைகள் பலவாகும்.

8) மிகவும் முதன்மையான காரணம் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்ன வென்றால், சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் (ஒரு சிலராயினும்!) சமணம் சார்ந்திருந்தமையால், மன்னன் எவ்வழி, மக்களும் அவ்வழி என்று சமண சமயத்தின் செல்வாக்குத் தமிழ்நாடெங்கும் பரவியது (பக்.93,94). எனும் கருத்தில் ஆழமான நம்பிக்கை கொண்டவராக உணரலாம். குறிப்பாக வளையாபதி நூலை அணுவணுவாக ஆராய்ச்சி செய்து அதன் முடிவை தான்மேற் சுட்டியதை காணமுடிகிறது.

அதேபோன்று வெள்ளிவீதியார் கட்டுரையில் வெள்ளிவீதியார் பெயர் காரணம், சங்ககாலத்தில் வெள்ளிவீதியார் பாடல்கள் உள்ளிட்ட துணைத் தலைப்புகளில் வெள்ளிவீதியாரைப் பற்றி செய்த ஆராய்ச்சி கவனிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. வெள்ளிவீதியார் பாடல்களில் இடம் பெற்றுள்ள சமூகச் சூழலையும் பின்புலத்தையும் ஆராய்ச்சி செய்தது போற்றுதலுக்குரியது. வரவேற்கத்தக்கது.  எனினும் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கையை 37 என்று குறிப்பிட்டுள்ளார்.  அதில் இறுதியாக வெள்ளிவீதியாரை குறிப்பிட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது. இதுவரை பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கையில் மாறுபட்ட கருத்து இன்றுவரை நிலவி வருகிறது. அதன் அடிப்படையில் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கையை பற்றி பதிவு செய்த வரலாற்றை பின்வருமாறு காணலாம்.

  1.  உ. வே. சாமிநாதையர் – 38
  2. எஸ். வையாபுரி பிள்ளை – 30
  3. ஔவை துரைசாமி பிள்ளை-  34
  4. கா. கோவிந்தன் – 27
  5. ஔவை நடராசன் – 41
  6. ந. சஞ்சீவி – 25
  7. தாயம்மாள் அரவாணன் – 45

இவ்வாறு தங்கள் ஆய்வின் முடிவுகளை வெளிக்கொணந்துள்ளனர் அதில் தாயம்மாள் அரவாணன் எழுதிய மகடடூஉ முன்னிலை எனும் ஆராய்ச்சி நூல் தமிழ்ச்சமூகத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோன்று கா. கோவிந்தன் எழுதிய சங்கப் புலவர் வரிசையில் அவ்வையார், வா. ஜெயாவின் சங்க பெண்பாற் புலவர்களின் மொழியும் கருத்தும், ந.சஞ்சீவியின் சங்க இலக்கிய ஆய்வும் பெண்பாற் புலவர்களும் இந்நூல்கள் பெண்பாற் புலவர்களைப் பற்றி ஆராய்ச்சிச் செய்த நூல்கள். இதில் தமிழர் ஆற்றுப்படையில் பெண்பாற் புலவர்களின் எண்ணிக்கை 37 என்று குறிப்பிடுவதும் அதற்கான பட்டியலை உருவாக்கி தந்ததையும் காணும் பொழுது ஆசிரியரின் சிந்தனையை வரவேற்கத்தக்க கருத்து என்றாலும் காலம் அதை படைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் புரிந்து கொள்வதற்குச் சான்றாக திகழும்.

தமிழர் ஆற்றுப்படை ஒட்டி இனி வரும் காலத்தில் ஆராய்ச்சி தொடரும் என்பதற்கு நூலில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் சாட்சியாக திகழும். தமிழில் அனைத்து உள்ளடக்கத்திலும் தன்னுடைய வேரை உறுதி செய்துள்ளார். குறிப்பாக தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள் தொடங்கி சமயங்களைப் பற்றி ஆராய்ச்சிச் செய்து எழுதியுள்ள ஒவ்வொரு தலைப்பும் கவனம் பெறும் தன்மையில் இருப்பதை மறுக்கமுடியாது. இது பழம் பெருமையைப் பேசுவதாக மட்டும் இல்லை. மாறாக வரலாற்றை நீதி தேவதையின் கரங்களில் இருக்கும் துலாக்கோல் போன்று சமன் செய்து சீர்தூக்கிப் பார்க்கும் அழகு போற்றத்தக்கது.

அனுபவம்தான் மிகப்பெரிய ஆசான். அனுபவத்தின் வாயிலாக கல்வி கற்பவனே மிகச்சிறந்த மனிதனாவான் என்பது முதுமொழி. அதற்கு சான்று பகர்கிறார் நாகசுந்தரம் ஐயா அவர்கள்.

எந்த ஒரு முன் முடிவுக்கும் வராமல் விருப்பு வெறுப்பின்றி படிப்பவருக்கு இந்த நூல் ஒரு வரலாற்று பெட்டகமாக திகழும். இப்படி இந்த நூலைக் குறித்து சிந்திக்கும் பொழுது மனோன்மணியம் எழுதிய பேராசிரியர் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெறும் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

பல்லுயிரும் பலவுலகம்
படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன்
இருந்தபடி இருப்பது போல்
கன்னடமும் களிதெலுங்கும்
கவின் மலையாளமும் துளுவும்
உன் உதிரத்து உதித்தெழுந்தே
ஒன்று பல ஆயினும்
ஆரியம்போல் உலக வழக்கு அழிந்தொழிந்து
சிதையாவுன் சீரிளமை திறம்வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே.

இன்றும் இந்த கவிதை வரிகளைத் தேடித்தேடி படித்து ஆராய்கிறோம். அதுபோன்று இனிவரும் காலங்களில் தமிழ் இலக்கிய வரலாற்றை நேர்மையுடன் எழுதுபவர்கள் புலவர் வி. நாகசுந்தரம் அவர்களின் தமிழர் ஆற்றுப்படை தவிர்த்து விட்டு இலக்கிய வரலாற்றை எழுத முடியாது.

இப்படிப்பட்ட ஒரு வரலாற்று பெட்டகத்தை தமிழ் மொழிக்கு தந்ததற்காக தமிழ்ச் சமூகம் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டுள்ளது. இந்த அற்புதமான படைப்பைத் தந்த ஐயாவின் கரங்களுக்கு என் அன்பு வணக்கம்.

அதேபோன்று இந்த சிறந்த படைப்பை வெளிக்கொணர உறுதுணையாக இருந்த அனைத்து சான்றோர்களுக்கும் எனதன்பு வாழ்த்துகள்.

இந்த நூலை அழகுற தொகுத்து வெளியிடும் கவியமுது பதிப்பகத்திற்கு என்னுடைய மகிழ்ச்சியையும் பேராதரவையும் நல்குகிறேன்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:தமிழர் ஆற்றுப்படை – தொகுதி 1 (Thamizhatrupadai Part 1)
தொகுப்பாசிரியர்:புலவர் வி.நாகசுந்தரம்
வெளியீடு:
விலை:₹.250
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 பேரா. எ.பாவலன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *