தேடுங்கள் கிடைக்கும், தட்டுங்கள் திறக்கும் என்பது உண்மைதான். தமது தொழில் சார்ந்த அனுபவப்பதிவுகள் இல்லை, இல்லை என்று புலம்புவதை விடுத்து,  அத்தகைய புத்தகங்களைத் தேடும் போது கிடைக்கத்தான் செய்கின்றன. இப்படியான ஒரு தேடலில் கிடைத்த அற்புதமான புத்தகம் வால்மிக் தாப்பார் எழுதிய Living with Tigers.  வனவிலங்கு ஆர்வலரான வால்மிக் தாப்பர் புலி ஆர்வலராக மாறி, புலிகளுடன் அவர் கழித்த சுமார் 40 ஆண்டுகளின் கதை. இந்தியாவில் புலிகளின் பாதுகாப்பு பற்றிய பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திய மனிதர். 

ஒரு படத்தில் கஞ்சா கருப்பு தங்கர் பச்சன் அமிதாப் பச்சனுக்கு உறவா என்று கேட்பது போல் எனக்கும் வால்மிக் தாப்பர் ரொமிலா தாப்பருக்கு உறவா என்ற சந்தேகம் வந்தது. ஆமாம்.  ரொமிலா தாப்பர் வால்மிக்கின் சொந்த அத்தை. அப்பாவின் சகோதரி. அப்பா புகழ்பெற்ற பத்திரிகையாளரும், இடதுசாரியுமான ரொமேஷ் தாப்பர். வால்மிக்கின் மனைவி நடிகர் சசிகபூரின் மகள் சஞ்சனா கபூர். எனினும், வால்மிக்கின் புகழ் இந்த பெரிய, செல்வாக்கான குடும்பப் பின்னணி காரணமாக வந்ததல்ல. புலிகள் மீதான அவரது தீராத காதலால் வந்தது. புலிகள் பற்றி இதுவரை 14 புத்தகங்கள் எழுதியுள்ளார் இந்தப் புலிக் காதலர்.

அவர் முதன்முதலாக புலிகளின்மீது ஈடுபாடு கொண்டு  ரான்தம்போர் செல்லும் போது (1976ல்) அந்த ஊர் அடர்ந்த காடும், பழைய சிதிலமடைந்த கோட்டைகளும், அரண்மனைகளும் கொண்ட ஒரு திகில் பிரதேசமாகவே இருந்தது. வால்மிக்கின் முயற்சி, அப்போதைய வன அதிகாரி ஃபதே சிங் ரதோரின்  கடுமையான, பிரதிபலன் பார்க்காத பணி ஆகியவை காரணமாக ரான்தம்போர் இன்று உலக அளவில் மிகப் புகழ் பெற்ற புலிகள் காப்பகமாக மாறியுள்ளது.  இன்று அது புலிகள் உலகின் தலைநகரம். உள்ளூர் பொருளாதாரத்தில் ஆண்டுக்கு சுமார் 400 கோடி புழங்குகிறது. அதன் தனிப்பட்ட  புலிகள் கூட,  அவற்றைப் பற்றி ஆவணப்படங்கள் எடுக்கும் அளவிற்குப் புகழ் பெற்றன. அந்தக் கதைதான் இந்த நூல்.

வால்மிக் தனது 40 ஆண்டு கால அனுபவத்தில் கிட்டத்தட்ட 250 புலிகளை நேரடியாக ஆண்டுக்கணக்காக ஆய்வு செய்திருக்கிறார். ரான்தம்போரில் கிட்டத்தட்ட 123 புலிகளை நீண்ட காலத்திற்கு அவற்றின் அன்றாட நடவடிக்கைகளை நேரில் பார்த்துப் பதிவு செய்திருக்கிறார். புலிகள் பற்றி இன்று விலங்கியல் உலகில் அறியப்படும் பல தரவுகள் வால்மிக்கின் ஆய்வுகள் மூலம் தெரிய வந்தவைதான்.

எனக்குத் தான் அதில் எத்தனை தகவல்கள் !  அதுவும் ஒவ்வொரு புலியின் அற்புதமான இண்டியன் இங்க் ஓவியத்தோடு !புலியின் நாக்கு சீப்பு போல் இருக்குமாம். இரையின் ரோமங்கள், அதன் மேல் உள்ள புழுதியை நீக்கும் வகையில்… புலியின் எச்சில் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. தனது எல்லா காயங்களையும் நக்கி நக்கியே சரி செய்து கொள்ளும். நாக்கு எட்டாத இடங்களில் காயம் என்றால், பாதத்தில் எச்சிலைத் துப்பி, அதை காயத்தில் தொட்டு வைத்துக் கொள்ளும் ! ஏழு நாட்களுக்குக் கூட சாப்பிடாமல் இருக்கும். ஓரே மூச்சில்  35 கிலோ கறியைத் தின்றுவிடும்.

மிகக் குறுகிய நேரத்தில் மணிக்கு 95 கிமீ என்ற வேகத்தில் ஓடும். 10 -12 அடி உயரம் வரை எளிதாகத் தாவிக் குதிக்கும். மனிதக் கண்களுக்குத் தேவைப்படும் ஒளியில் ஆறில் ஒரு பங்கு ஒளி இருந்தால் போதும், புலிக்கு கண் தெளிவாகத் தெரியும்.  புலிக்கு மரம் ஏறத் தெரியும். ஆனால், அதன் எடையில் மரக்கிளைகள் முறிந்து விடும் என்பதால் ஏறாது !

ஒவ்வொரு புலிக்கும் பத்மினி, லட்சுமி, நூன், அக்பர், ஓட்டைப் பல்லன் என்றெல்லாம் பெயர் வைத்து அவற்றின் ஒவ்வொரு நாள் நடவடிக்கைகளையும் கவனித்து, அவற்றைப் பதிவு செய்து  வைத்திருக்கும் அவரது அசாத்தியமான உழைப்பு, புலிகள் மீதான் காதல் பிரமிக்க வைக்கிறது. வால்மிக்கின் குறிப்புகளை வைத்துதான் புலிகளின் குடும்ப வாழ்க்கை பற்றிய பல தரவுகள் உலகிற்குத் தெரிய வந்தன. 

உலகெங்கிலும் புலி நிபுணர்கள் தந்தைப் புலி தன் குழந்தைப் புலிகளைக் கொன்று தின்றுவிடும், அதை தன் போட்டியாளனாக நினைக்கும் என்று கருதி வந்தனர். ஆனால். தாயை இழந்த குட்டிப் புலிகளுக்கு தந்தைப் புலி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இரை தேடித் தந்து காப்பாற்றி, வேட்டையாடச் சொல்லித் தருவதை வால்மிக் ஆவணபூர்வமாகப் படம் பிடித்துக் காட்டினார்.  ஏதோ ஒரு புலி இப்படிச் செய்யவில்லை. இரண்டு, மூன்று புலிகள் இப்படிச் செய்திருக்கின்றன.

இந்த நூலில் வால்மிக் சொல்லும் இரு விஷயங்கள் மிக முக்கியமானவை. எந்த வனவிலங்கு ஆய்வாளரும் சொல்லாதவை.  முதலாவது, ஆண் புலிகள் தம் தாயுடன் உறவு கொள்வதில்லை. 19- 20 மாதங்களில் முழு வளர்ச்சி பெற்று, தனியே வேட்டையாடும் திறன் வந்ததும், ஆண்புலிகள் தம் தாயின் பகுதியிலிருந்து 2.5 – 3 கிமீ தள்ளி தமக்கான ஒரு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. பிறகு, தன் தாய், சகோதரிகள் வாழும், தான் பிறந்த பகுதிக்கு வருவதே இல்லை. வியப்பூட்டும் இந்தத் தகவலை தனது 40 ஆண்டு ஆய்வின் மூலம் வால்மிக் நிரூபித்துள்ளார். உலகெங்கும் உள்ள புலி ஆய்வாளர்களுக்கு முற்றிலும் புதிய தகவல் இது.

இரண்டாவது, வனவிலங்குகளைப் பாதுகாப்பது தொடர்பானது. வனவிலங்கு பாதுகாப்பு என்பது வனவிலங்கு சுதந்திரமாக வாழ வனப்பகுதியைப் பாதுகாப்பதுதானே தவிர, தனிப்பட்ட ஒவ்வொரு விலங்கையும் பாதுகாப்பது அல்ல என்பது வால்மிக்கின் கருத்து. இன்று வனவிலங்கு பாதுகாப்பு என்ற பெயரில் வன அதிகாரிகள் அதீதமாகச் செயல்படுகிறார்கள். பற்கள் உடைந்து, கண் பார்வை மங்கி வேட்டையாடும் திறன் குறைந்த புலிக்கு தினமும் அதன் எதிரே ஒரு ஆட்டையோ, மாட்டையோ கட்டி வைக்கிறார்கள். அந்தப் புலி ஆடு ருசியில் பக்கத்து கிராமங்களின் ஆடுகளைத் திருடித் தின்ன ஆரம்பிக்கிறது. 

இரண்டு நாள் மலம் கழிக்காத புலிக்கு மயக்க மருந்து கொடுத்துப் பிடித்து இனிமா கொடுத்தார்களாம். இரண்டு மூன்று முறை இவ்வாறு ஆனதாம். மயக்க மருந்தின் தாக்கத்தில் அந்தப் புலி மனிதர்களைக் கொல்ல ஆரம்பித்துவிட்டதாம். காட்டைக் காப்பாற்றுங்கள். விலங்குகள் வாழும். சாகும். குட்டி போடும். போடாமல் இருக்கும். கானகத்தின் விதி  அந்த விலங்குகளை வழிநடத்தும். அப்படிப்பட்ட கானகத்தைக் காப்பது தான் நமது கடமையே தவிர, புலிக்கு இனிமா தருவதும், காடராக்ட் ஆபரேஷன் செய்வதும் நமது வேலையல்ல என்கிறார்.  அவரது வார்த்தைகளை அப்படியே தருகிறேன்.

Let them be free- some will live long, others will not – that is nature and it is not man’s job to play God to them. Let our wilderness be really wild and not manipulated by man.

வழக்கம் போல இந்திய அதிகார வர்க்கம் இதையெல்லாம் கேட்காமல், தனக்குத் தெரிந்ததைச் செய்து கொண்டிருக்கிறது என்று புலம்புகிறார்.

நாற்பது, ஐம்பது புலிகளுடன் அடர்ந்த காட்டில் வருடக் கணக்காக வாழ்ந்த ஒரு உணர்வைத் தரும் அற்புதமான நூல். படிக்க வாய்ப்பில்லாத நண்பர்கள் யூட்யூபில் ரான்தம்போரின் புலிகள் பற்றிய ஏராளமான காணொளிகளைக் கண்டு ரசியுங்கள் என்று பரிந்துரைக்கிறேன்.

 

LIVING WITH TIGERS

VALMIK THAPAR

ALEPH BOOK COMPANY

PAGES 174  PRICE  RS 410

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *