களங்கள் பல, காட்சிகள் பல ஆனால் மனிதம் ஒன்றே
14 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு
1.கனவு ராஜ்யம்
இந்த தொகுப்பில் முதல் கதையும் முதன்மையான கதையுமாகிறது. தன் எதிர்காலம் எழுதப்பட்டதாக நினைத்து காலடி எடுத்து வைத்த சிங்கபூரில், சகலமும் இழந்து, மீண்டுமாய் தன்னையும் தன் நாணயத்தையும ஊன்றக்கட்டி எழுப்பும் ஒரு வியாபாரியின் கதை. சேற்று மரங்களிலிருந்து செங்கல் அறுத்து, காட்டு மரங்களிலிருந்து மரக்கலன்கள் செய்து படிப்படியாக முன்னேறி, பின் ஒரே நாளின் இரவில் சகலத்தையும நெருப்பில் எரியக் கொடுக்கிறான். வாங்கிய கடனை அடைக்க திரும்பவும் முதலிலிருந்து ஆரம்பித்து கடனை அடைத்து பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முன்னதாக கேட்டிருந்த பண உதவியும் வந்து சேர்கிறது.
ஒரு எளிய மனிதனின் நம்பிக்கைகள், நேர்மை அதை எந்த சூழலிலும் கைவிடாத வைராக்கியம் இந்தக் கதையின் உன்னதமான வெளிப்பாடு.
படிக்கும் பல பேர் தங்கள் வாழ்வில் நேர்ந்தவற்றோடு அடையாளப் படுத்திக் கொள்ள முடியும்.
பழையன புகுதலும்
அப்பழுக்கில்லாத சுத்தத்தை எப்போதும் பேணிக்காக்கும் ஒரு மனிதனின் கேலிக்கு ஆளாகும் பழக்க வழக்கங்களை பற்றிய கதை. ஊரை சுத்தமாகவும் தங்களை (நம் பார்வையில்) அசுத்தமாகவும் பராமரிக்கும் அமெரிக்காவோ அதற்கு எதிரிடையான இந்தியாவோ (Indian eat in Private but ease in Public என்று சொல்வதுண்டே) எல்லோருமே பெருந்தொற்று காலத்தில் ஒரே வழி முறைகளை பின்பற்ற நேர்ந்ததை பற்றிய பகடி.
தனி மனித ஒழுக்கத்தில் முழு சுதந்திரம் கேட்கும் அமெரிக்கர்கள் தான் பொது வாழ்வில் உள்ளவர்களிடம் அதற்கு எதிரான அளவுகோல்களை வைத்திருக்கிறார்கள், நாம் இதிலும் அவர்களுக்கு முரணானவர்கள். ஆனால் தலைமுறை தாண்டி தாத்தாவுக்கும் பேத்திக்கும் இடையே ஏற்படும் இணக்கத்தையும் உறவையும் கோடி காட்டுகிறது இந்தச் சிறுகதை.
3.சந்தான லஷ்மி
கதையின் கரு முற்றிலும் புதிது, உடல் உறுப்பு தானம் பற்றியது. ஜப்பான் நாட்டு மலை கிராமத்தினை பின் புலமாகக் கொண்டது. அகால மரணத்தில் மகனை பறி கொடுத்த அன்னை உடல் தானத்தின் மூலம் தன்குழந்தையின் இதயத்துடிப்பை மீண்டும் கேட்டு துயறுரும் கதை. மிகை உணர்ச்சிகள் இல்லாமல் எழுதப்பட்டாலும் கதையின் கனம் மட்டும் படிப்பவர்க்கு வந்து சேருகிறது.
4.இருபது வருடங்கள்
கால ஓட்டம் எல்லாவற்றையும் மாற்றிப் போடுகிற கதை, இருபது வருடங்களில் தெருவெல்லாம் மாறி விடுகிறது, உறவெல்லாம் மாறி விடுகிறது. ஆனால் கடன் கேட்கும் வெட்டி மனிதர் மட்டும் மாறாதவராய் இருப்பதை மெல்லிய நகைச்சுவையோடு சொல்லும் கதை.
நேற்றும் இன்றும் என்றும் மாறாத காப்பியின் சுவையையும் கலந்து தந்திருக்கிறார் ஆசிரியர்.
5.கனவு
அலுவலகத்தில் தன் உழைப்பைத் திருடும், அதைப்பற்றிய எந்த கூச்சமும் குற்ற உணர்வும் அற்ற மனிதனை பழி வாங்கும் விதமாக (அதே போல் ஜெயாவுக்கும் நடக்கிறது அது யார் மனைவியா, தோழியா, சகோதரியா) சம்பந்தமே இல்லாமல் ஒரு மழை நாளில் யாரையோ தவிக்கவிட்டு குடை திருடுகிறான் ஒருவன். பின் மனசாட்சி வாதிக்க அதை திரும்பத்தரவும் முடியாமல் தொலைக்கவும் இயலாமல் படுகிற அவஸ்தைகள் தான் இந்த சிறுகதை.
உடல் உழைப்பை சுரண்டும் பணபலம் படைத்த அதிகார வர்க்கம் அறிவாற்றலையும திருடும். ஆனால் இரண்டையுமே எதிர்க்க முடியாது “ஏனெனில் திருடர்களை வணங்குகிறோம் அவர்கள்தான் நம் அரசியல் வாதிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று சமூகம் கொண்டாடுகிறது என்ற ஆசிரியரின் அறச்சீற்றம் வெளிப்படும் கதை.
6.அசலும் நகலும்
சிறுகச்சிறுக ஆசை ஆசையாய் காசு சேர்த்து கழுத்துக்கு சங்கிலி வாங்கும் பெண் அதை கணவனின் மருத்துவ செலவுக்காக எந்த மனத்தாங்கலும் இல்லாமல் விற்று விடுகிறாள். ஆனால் ஊர்த்திருவிழாவில் அவள் அணிந்து வரும் நகலை அசல் என்றே நம்புகிறார்கள். மனித மனங்களின் முரண்களையும் மாறு பாடுகளையும் முன்வைக்கிற கதை.
7. அந்தரத்தில் கண்ணாடி துடைப்பவர்
சீனாவில் நடக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளியின் கதை. நம் நினைவுகளுக்கு மாறாக அங்கேயும் ஏழைகள், புலம் பெயர் தொழிலாளிகள், அந்தரத்தில் தொங்கிக் கொண்டு வானுயர்ந்த கட்டிடங்களின் வெளிப்புறம் படியும் பனியை துடைத்து கூலி வேலை செய்யும் ஒருவர் ஒருநாள் கால் வழுக்கி கீழே விழுந்து இறந்து போகிறார்.
பெருந்தொற்று காலத்தில் நம் நாட்டில் புலம் பெயர் தொழிலாளிகள் பல காதம் நடந்தே சென்ற அவலமும் பட்ட பாடுகளும் நாம் மறந்திருக்க முடியாது.
”உலகமெங்கும் ஓடித்திரிகின்றன ஓய்வின்றி மாயமான்கள்” என்கிற கவித்துவமான ஒரே வரியில் ஆசிரியர் முழு சத்தியத்தையும் வெளிக் கொணர்ந்துள்ளார்.
8.புலி வேட்டை
பெரிதும் விசாலமுமான பொருளாதாரக் கதவுகளைத் திறந்த உலகமயமாக்கல் பற்றிய கதை.
ஒருமுறை உலகமயமாக்கல் பற்றி பேசிய சசிதருர் M.P. இவ்வாறு கூறினார், உலகமே துயறுற்ற இளவரசி டயானாவின் மரணத்தைப்பற்றி இப்படி விவரிக்கிறார்.
”வேல்ஸ் இளவரசியான டயானா, தனது எகிப்து நண்பருடன் பாரிஸ் நகரில், டச்சு என்ஜின் கொண்ட ஜெர்மன் காரில் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஸ்காட்டிஷ் விஸ்கியை அதிகமாய் அருந்தியிருந்த ஓட்டுநருடன் பயணம் செய்தார். ஜப்பானிய பைக்குகளில் பயணம் செய்த இத்தாலிய புகைப்படக்காரர்களால் துரத்தப்பட்டு விபத்துக்குள்ளானார்.
அமெரிக்க மருத்துவர்களால் பிரேசில் நாட்டு மருந்துகள் அளிக்கப்பட்டும் பயனின்றி மரணமடைந்தார். இந்த நிகழ்வை பாஸ்டனிலிருந்து இந்தியாவின் திருவனந்தபுரம் M.P. ஆகிய நான் உங்களிடம் சொல்கிறேன்”.
கூண்டிலிருந்து வெளியேறிய புலி அடித்துத்தின்றது அந்தந்த பிரதேசத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் சிறு தொழில்கள். இனி இந்தப் புலியை சுட்டுப் பொசுக்குவது கூடாத காரியம்.
9. அம்மாவின் கிரீடம்
ஒரு குடிக்காரக் கணவனை எதிர்த்து, வீட்டை விட்டு வெளியேறி தன் மகளை ஒரு தடகள வீராங்கனையாக உருவாக்கி அதன் முலம் தன்னை நிருபித்துக் கொள்ளும் ஒரு அம்மாவின் கதை. ஆனால் அந்த உயர்வை தன் காலில் பூட்டிய விலங்காக மகள் நினைக்கிறாள். காலில் சிறு வளையங்கள் பூட்டப்படுகிற அன்னங்கள் தவழும் தேம்ஸ் நதிக்கரையின் பக்கிம்ஹாம்ஷயரில் நடைபெறும் தடகளப் போட்டியில் வெல்லும் அன்னம் தலையில் கிரீடமும் காலில் வளையமுமாக தான் இருப்பதாக உணருகிறாள்.
தங்களின் நிறைவேறாத ஆசைகள் கனவுகளை தங்கள் பிள்ளைகள் மீது சுமத்தும் பெற்றோர் பற்றிய கதை. ஆனால் யார் எந்த இலக்கை அடையமுற்பட்டாலும் அது பல தியாகங்களைக் கோரி பல ஆசைகளை நிராசையாகத்தானே செய்யும். எந்த இலக்கையும் அடைய நினையாமல் வாழ்வை பார்வையாளராக கடக்க நினைப்பவர்க்கே அந்த சுதந்திரம் வாய்க்கும்.
10.மாற்று
சிங்கபூரின் ஒழுங்கும் நறுவிசும் ஏன் என் தாய்த்திரு நாட்டில் இல்லை என்கிற கேள்விக்கு பதில் உறுதியான தலைவர்கள் அவர்களின் அணுகுமுறைகள் என்று நம்புகிறார் ராஜமாணிக்கம். மாற்றம் என்பது மாற்று அல்ல. மாற்றங்களுக்கு தர்க்க ரீதியான காரணங்கள் வேண்டும் என்கிறார். ஆனால் உடையிலிருந்து அரசியல் வரை, மனம் விரும்புவதேயன்றி மாற்ற வலுவான காரணங்கள் இருப்பதில்லையே, மாற்று வளர்ச்சியை நோக்கியதென்றால் மாற்றுவதும் நல்லதுதானே.
11. அதுவும்
கட்டின பெண்டாட்டியை துவைப்பவன் தெருவோர நாயின் அனாதை ரட்சகன்.
அரசியல் பின்புலம் கொண்ட ரௌடி ஒருவன் கைது செய்யப்பட, அவனால் மிதிக்கப்படும் அவன் மனைவி அவனை ஜாமீனில் வெளியே கொண்டு வருகிறாள். சாராயம் தவிர்த்தால் அவன் நல்லவன்தான் என்கிறாள். பொதுவாய் பெண் மனதின் இயங்கு தளம் இதுதானே. மன்னிக்கும் அடிமை.
12.சரஸ்வதி
சிறந்த தாய், சிறந்த நதி, சிறந்த தேவியாகிய சரஸ்வதி பின் ஒருநாள் பாலையில் இறங்கி காணாமல் போகிறாள். அதுபோல பெண்கள் திருமணத்துக்குப் பின்பு தங்கள் சுயம் இழந்து போகிறார்களோ என்று கவலை கொள்கிறது கதை.
ஆனால் அடிநாதமாக அந்த நீரோட்டம் பெரும்பான்மை பெண்கள் வாழ்வில் ஒரு கால கட்டத்தில் பீரிட்டு எழுந்து தன் சுயத்தை வடிவமைத்துக் கொள்கிறதே. மெல்லிய தீயை காற்று அழித்துவிடும். ஆனால் வலிய தீயை காற்று வளர்க்கும் எனவே உள்ளத்தை உறுதி செய்வோம்.
13.வடு
சந்தானலஷ்மி கதை பிள்ளையை இழந்த ஒரு தாயின் பரிதவிப்பைச் சொல்கிறதென்றால் இந்தக்கதை கணவனுடன் வாழாத பெண்ணைப் பெற்ற தகப்பனின் தவிப்பை சொல்கிறது.
விபத்தில் இறந்தது தன் மருமகன் தானா என்கிற நிச்சயம் இல்லாத நிலையில் தன் பெண்ணின் போக்கில் ஏற்படும் மாறுதல்களை கொள்ளவும் முடியாமல் தள்ளவும் முடியாமல் தவிக்கிறார். மிகப்பெரிய இழப்பு என்ற கருதப்படும் மருமகனின் சந்தேகத்திற்கிடமான மரணம் கால ஓட்டத்தில் அது அப்படியே இருக்க வேண்டுமே என்று நினைக்க வைக்கிறது. மாறும் மனித மனப்போக்குகளை விவரிக்கும் கதை.
14.சந்தனமரம்
சந்தனமரம் என்றதும் இழைக்க இழைக்கப் பெருகும் அதன் நறுமணம் தானே நினைவு வரும். ஆனால் இங்கே அது ஒரு ஒட்டுண்ணித்தாவரம் என்கிற விஞ்ஞான உண்மை முன் வைக்கப்படுகிறது. அயல் நாட்டுக்கு அழைக்கப்படும் ஒரு தமிழ் எழுத்தாளர், அழைத்தவரை உருவ உரிந்துவிடும் சுயநலம் புரிந்தும், விருந்தோம்பல் பண்பினால் அதையெல்லாம் சகித்து, தன் தாயின் அவசரத் தேவைகளையும் தள்ளிவைத்து, அவரது ஆசைகளை நிறைவேற்றி வழி அனுப்புகிறான் ஒரு இலக்கிய விரும்பி. இலக்கியம் மனங்களை சிந்திக்கத் தூண்டி பாதைக்கு தீபமாகும் என்று எழுத்தாளர்கள் மீது பெருமதிப்பு வைப்பவரை இந்தக்கதை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அவலட்சமான ஆதாயங்களுக்காக அயல் நாடு செல்லும், சுயப் பிரதாபங்களை பறை கொட்டிக் கொள்ளும் இத்தகைய காகிதப் புலிகளிடம் எச்சரிக்கை தேவை என்று உணர்த்தும் கதை.
கதைக்களன்கள், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, லண்டன், சீனா, அமெரிக்கா என்று பல தேசங்களைச் சுற்றி அதனதன் சூழ்நிலைகளை எழுதப்பட்டாலும் அடிப்படையாக மனித மனங்கள் அவற்றின் சஞ்சலங்கள் ப்ரசனைகள் தீர்வுகள் என்று உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் என்று நினைக்கத் தோன்றுகிறது.
உரைநடையே கவிதையாகும் மாலனுடைய மொழிச் சிறப்பு காணக்கிடைக்கும் சாட்சிகள் கீழே :
பனிக்கூழின் செர்ரிப் பழங்கள் அல்லது மாலன் மயமான வர்ணனைகள்
“இந்த தீவில் தான் உன் எதிர்காலம் எழுதப்பட்டிருக்கிறது“
“இவன் பயம் காட்டறானா, தெம்பூட்டறானா புதை சேத்துக்கு புலிக்கதையே தேவலாம்“
“வழி கேட்டு வந்தால் கதை கேட்கச் சொல்கிறார் துரை“
“தறியில் துணியறுத்து முழம் போட்டு விற்கிறவனை கல்லறுத்து காசு பார்க்கும் படி கடைக்கண் காட்டியவள் மகமாயி“
“பனிபெய்து குடம் நிறையுமா“
“வியாபாரத்தில் சம்பாதிக்க வேண்டியது காசு மட்டுமல்ல நாணயமும் தான்“
“அது அவர் போட்ட உத்தரவல்ல ஆத்தா போட்ட உத்தரவு“
“(வரும் வழியெல்லாம்) ஒரு பக்கமாக சிறு ஓடை ஒன்று ஓடிவந்தது“
“ருசிகண்ட நாக்கைப்போல உள்ளிருந்தே தாக்கும் எதிரி இன்னொன்றில்லை“
“சரத்தை பார்த்தால் கடையில் வாங்கியது போலில்லை நெருக்கமாக நார் தெரியாமல் கட்டியிருந்தது“
“இரும்பு கதவுகள் இழுக்கக் கடினமாயிருந்தது. காலத்தைத் தின்று கதவுகள் கடினமாயிருந்தது “
“தோழமையான விரல் தோளில் தட்டுவதைப்போல வானிலிருந்து வந்தமர்ந்தது மழைத்துளி“
“மழையின் கரங்களால் மாநகரின் இயக்கத்தை நெரித்துவிட முடியவில்லை“
“உலகெங்கும் பரவிக் கிடப்பவை வசிகரமான அரசியல் பொய்களும், வசதியற்ற ஏழைகளும்“
“உலகமெங்கும் ஒடித்திரிகின்றன ஒய்வின்றி மாயமான்கள்“
“கட்டின பெண்டாட்டியை துவைப்பவன் தெருவோர நாயின் அனாதை ரட்சகன்“
“சூடிக்கொள்ளப்படும் கிரீடம் எல்லாம் யாரோ எவரையோ வருத்தப் பெற்றவைதான்“
“ஒரு நாள் உப்புமா பண்ணினால் அதற்கு இத்தனை அலப்பறையா“
“தாத்தா என்பதும் அப்பா என்பதும் வயதைக் குறிக்கும் சொற்களா அவை உறவை குறிக்கும் சொற்கள் அல்லவோ“
“விடியற்காலை வெயில் அனுமதி ஏதும் கேட்காமல் அதுவாக படியேறி வீடு முழுக்க பரவி விடுவதைப்போல அவள் வாழ்வில் படர்ந்தாள்“
“புதுப்புடவையும் பூச்சூடியதலையுமாய் அனு கிளம்பிப்போனாள் புன்சிரிப்பும் சூடிப்போனதாகத்தான் தோன்றியது“
“(அவரை) பூமாதிரியா இருக்கு, பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சியா உக்காந்திருக்கு“
இன்னும் எழுதலாம் ஆனால் முழுப்புத்தகத்தையும் எழுதும்படி ஆகிவிடும்.
உஷா
வகைமை – சிறுகதைத் தொகுப்பு
தலைப்பு – புலி வேட்டை
ஆசிரியர் – மாலன்
பதிப்பகம் – கவிதா பப்ளிகேஷன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.