பல்லாங்குழிக்குப் பாண்டி தேவைப்படும் பொழுது
வசதிக்கேற்ற சோழிகளின் தேடலில் நான்
நானிருக்கும் இடத்தருகே அதற்கான வாங்குநராய்
நான்மட்டும் விற்பனர்களின் கடைதேடி…..
தேடி அலைச்சல்மட்டுமே மிச்சமான நிலையில்,
நிறைவாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன்……
வசதி வந்தாலும் வசதியாய் விளையாடிய
சிறுவயது நினைவலையாய் புளியங்கொட்டைகளே போதும்
இப்பொழுதும் வாங்குநராய் நான்மட்டும் தேடி அலைகிறேன்
விற்குநர் இல்லாத நாகரீகக் காட்டில் …..
இப்பொழுது நினைவலைகளாய் வந்து போகின்றன
அம்மா அப்பாயி அம்மாயிகளின் அண்டைவீட்டாரின்
வளையொலியோடு உடைபடும்
புளியங்கொட்டை ஓடுகளும்
சிதறித் தெறிக்கும் காலங்களும் ….
வீடுமுழுக்க….
புளியங்கொட்டைகள் பொறுக்கி வைத்த காலங்கள்
ஊறவைத்துத் தின்றதோடு தெறித்து விழும் பொழுதே
பட்டென்று கழுவாமல் கூட வாயில் போட்டு
தின்றபோது நோய்வரும் என்று பதறாத இதயங்கள்….
உறைத்த கொட்டைகளில் வெள்ளை விழுந்தால்
பத்து மதிப்பெண் என்று அதையே கோடைகால
விடுமுறை விளையாட்டுக் கருவிகளாக்கிய காலங்கள்…
தடுக்கி விழுந்த அப்பாவின் கால்களுக்கு
ஊறவைத்து வேகவைத்து அறைத்து போடப்பட்ட
புளியங்கொட்டை பற்றுகள்….
இன்னும் வருகின்றன நினைவிற்கு….
இன்னும் வரவில்லை இவ்வளவு பயனுள்ள
புளியங்கொட்டைகள் இருக்கும் இடத்திற்கு……
எழுதியவர்
முனைவர் பா.மனோன்மணி
உதவிப் பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அனைவரும் மறந்த, வருங்காலத்தில் இல்லாமல் கூடப் போகும் இந்த இரண்டு பொருள்களும். இதைப்பற்றி எழுதிய தோழிக்கு வாழ்த்துகள்.