நூல் அறிமுகம்: பாக்களத்தம்மா நாவல் – கருப்பு அன்பரசன்

Puliyur Murugensan's Pakkalathamma Book Review By Karuppu Anbarasan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.பாக்காளத்தம்மா
புலியூர் முருகேசன்
நந்தி பதிப்பகம்
விலை: ரூ. 160

எதிரில் இருப்பவரின் முகம் அறிந்தும்
அந்த வலியின் வேதனையின் பெரும் துயரத்தின் அதில் இருக்கும் பிரியத்தின், அன்பின், கடமையின், பாசத்தின்
வேர்களை தேடித்தேடி அதில் திராவகத் துளிகளை வஞ்சனையில்லாமல்
வேண்டுமளவிற்கு வைத்து ருசி பார்க்கும் மனிதர்களை, அவர்களின் முகங்களை
வஞ்சகம் பொதிந்த வார்த்தைகளை,
சிரிக்கச்சிரிக்க உச்சரிக்கும் புன்னகை சூடிய முகமூடிகள் தரித்த மகத்தானவர்கள் பலர் இருதயத்தின் அடிப்புறத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மேலெழுந்து வந்து கொண்டிருந்தார்கள் எனக்குள்.
பாக்களத்தம்மா நாவலை வாசித்து முடித்து தனிமையில் அமர்ந்திருக்கும் இந்த இரவு நேரமதில்.

சில்லென்று காற்று வீசிக் கொண்டிருக்கிறது.. சின்னச்சின்ன தூறல்..
பெரும் தூறலாகி மழையாக
எத்தனித்துக்கொண்டு.. ஒற்றைக் குயில் ஒன்று கூவிக்கொண்டு.. சிறிது நேரத்தில் இன்னொரு குயிலும் பதிலுக்கு..
ஒரு குயிலின் கேள்விக்கு இன்னொரு குரல் பதில் அளித்துக் கொண்டிருக்கிறது..
இரண்டுக்குமிடையில் ஏதோ சம்பாஷணைகள் நடந்து கொண்டிருக்கிறது..
ராப்பொழுதுகுடியிருப்பு முழுவதும் அமைதியாக கிடக்கிறது.. வீசும் காற்றின் வேகத்துக் கேற்றபடி வேப்பமரத்தின் இலைகள் ஒன்றோடு ஒன்று உரசி குயில்களின் இசைக்கு பக்கவாத்தியம் இசைக்க முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.. குயில்களின் கீதத்தில் சோகத்தை மட்டும் என்னால் உணர முடிந்தது.. அந்த இரண்டு உயிர்களின் வலிக்கு இசைந்த மாதிரி இலைகளின் உரசல் சத்தம் இல்லை என்பதை மட்டும் எனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது..

சாராயமும் சீமை சரக்கும் மட்டுமா இங்கு மனிதர்களுக்கு போதையாகக் கிடக்கிறது..
காதலும், அன்பும், பாசமும்
மனித உறவுகளுக்குள் போதையாக!
சொன்ன சொல் காப்பாற்றுதல் எந்த நிலையிலும் ஒரு மனிதனுக்கு போதையாகிறது.. சொல் தவறாமல் நடக்கும் மனிதர்களை,அன்பும் காதலும் சொந்தமும் அறுபட்டு விடக்கூடாது என நினைக்கும் மனிதர்களை.. அவர் பேசிய வார்த்தையில் நிலை தவற மாட்டார் என்பதை அறிந்தே தான் எதிர்பார்க்கும் அந்த ஒரு சொல்லுக்காக வஞ்சகமாக வார்த்தைகளால் வலைவிரிக்கும் மனிதர்களை.. அன்பு நிறைந்தது போலவும் பாசம் மிகுந்தது போலவும் வார்த்தைகளால் வேஷம் கட்டி சுகம் கண்டிடத் துடிக்கும் மனிதர்களை. சொந்தங்களை
இந்த நாவல் முழுக்க எழுத்தாளர் நடமாட விட்டிருக்கிறார்.

இந்த நாவலுக்குள் வரும் பாக்களத்தம்மா ஆச்சியினை நீங்கள் பார்த்திருக்கலாம்.. இருதயம் இருக்கும் மனிதர்களாக.. சொந்தங்கள் விடுபட்டுப் போய் விடக்கூடாது என்பதற்காக உறவு என்கிற தன்னிலை மறந்து நிற்கும் வாசம் மிகுந்த போதையினை கொண்டவர்களாக காமாட்சி அவரின் கணவர் பழனியப்பன்..
பழனியப்பனின் ஒன்றுவிட்ட சகோதரர் காளிமுத்து அவரின் மனைவி பாப்பாத்தி காமாட்சி பழனியப்பன் தம்பதியினரின் கடைசி மகன் நாகையன்.. அவரின் மனைவி ராணி.. மூத்த மகன் இளங்கோ, இளைய மகன் இரணியன்.. பொறந்த ஊரில் வாழ வழியில்லாத பொழுது இவன் எப்போதுடா ஊரைவிட்டு கிளம்புவான் என மனதில் நினைத்து குதுகலிக்கும் தான் நேசித்த சொந்தங்கள் பல இருந்தும் பழனியப்பனின் நிலையறிந்து அவரின் கையை பிடித்து கண்ணீர் சிந்தி வழியனுப்பும் வாத்தியார் ரங்கசாமி.. பொழைக்க வந்த ஊரில் தன் வீடு ஒழுகினாலும் புள்ள குட்டிகளோட வந்து தங்கியிருக்கும் குடிசைக்கு கீத்து மேஞ்சு 10 ரூபாய் வாடகைக்கு விட்டிருக்கும் போர்ட்டர் வீட்டுக்காரம்மா.. உப்பிடமங்கலம் சந்தையில் பள்ளிக்கூடத்தய்யா, சந்தை வியாபாரிகளுக்கு கறிச் சோறு போடும் குணசேகரயா.. வாழ்ந்து கெட்ட குடும்பத்திற்கு சொந்த கிராமத்திலேயே வந்து தங்கி கொள்ள இடம் கொடுக்க ஏற்பாடு செய்யும் பாசு.. சாதிவெறிக்கு எதிராக நட்பின் அடையாளமாக சண்முகராஜா-மச்சக்கன்னி..

Puliyur Murugensan's Pakkalathamma Book Review By Karuppu Anbarasan. Book Day And Bharathi TV Are Branches of Bharathi Puthakalayam.

நாகையா விழுந்து விடாமல் இருப்பதற்காக அவனை அன்பின் கைகள் பிணைந்து மேலே இழுத்துவிடும் நல்ல உள்ளங்கள் பாசத்தின் போதை ஏறிய நிறைய மனசுகள் வந்து போய்க் கொண்டே இருப்பார்கள் நாவல் முழுவதிலும்; அதே நேரத்தில் உறவின் போதையை, பாசத்தின் போதையை எல்லா நேரங்களிலும் தன் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக்கிக் கொள்ள.. பாசம் மிகுந்த வார்த்தைகளுக்குள் வஞ்சத்தைத் தடவி மனசு முழுவதும் சுயநலம் ததும்பிக் கிடக்கும் மூத்த அக்கா மருதம்மா-கிருஷ்ணன் மாமா குடும்பத்தவர்கள், அவர்களுக்கு சற்றும் குறையாமல் இளைய அக்கா தங்கம்மா -சின்னகாளை மாமா சைக்கிள் கடையில் ஒத்து போதும் முருகன் வாத்தி.. ஏமாற்றுகிறார்கள் தன்னை என்பதை அறிந்தே அன்பின் மிகுதியால் அரண்மனை வீட்டையும் நிலம் அனைத்தையும் பாகாளத்தம்மாவிடம் உயில் எழுதி மடை மாற்றிக்கொள்ளும் பாக்காளத்தம்மாவின் வழிச் சொந்தங்கள்.. இப்படி பாசத்தை பிரியத்தை அன்பை பொருளுக்கு தின்னக் கொடுத்து உயிர்வாழும் தகுதியற்ற உறவுகளை நாவலுக்குள் சொல்லியிருப்பார்.

பச்சை வேர்கடலையின் வாசத்தில்
இடம் மாறி படுத்து விடும் நாகையாவாக..
நாவல் பழத்திற்கு ஏங்கிடும் நாகையாவாக..
ஐடிஐ படிப்பு கைகூடி வரும் நேரத்தில்
சொந்தங்களால் கைவிடப்பட்ட நாகையாவாக..
தான் தலையெடுக்கும் காலத்திலாவது ஆத்தாவுக்கும் அப்பனுக்கும் உட்காரவைத்து சோறு போட நினைக்கும் நாகையாவாக
ஆச்சியின் சொத்தில் இருந்து தன் தாய் காமாட்சியின் பங்காக தனக்கு நாட்டாமையால் கொடுக்கப்பட்ட 80 ஆயிரத்தை
தன்னுடைய மகனின் படிப்பிற்காக ஆச்சியால் வழங்கப்பட்டதாக நினைத்து வாங்கிக்கொண்டு வெளியே வரும்பொழுது எதிரில் இருந்து
தனக்கும் அதில் பங்கு வேண்டும் என்று கேட்க முழுப் பணத்தையும் பிடுங்கிக் கொள்ளும் மருதம்மா தங்கம்மாவால்
ஏமாற்றப்பட்ட நாகையாவாக
நாமும்..
நாவலை வாசிக்கும் பொழுது அந்த பெரும் துயரத்தை, வஞ்சத்தை எதிர்கொள்வோம்.

நாவலை வாசித்த பிறகு வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரின் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை .. உறவுகளின் மீது வாசிப்பவருக்கு இருக்கும் போதையை.. அந்த போதையை தங்களின் மேம்பாட்டிற்காக பொருளாதார வசதியான வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொண்ட
பேரன்புகள் பேசித் திரியும்.. சிரிப்புகள் தரித்த மனிதர்கள் பலரும் நம் எதிரில் வந்து இன்னும் சிரித்துக் கொண்டே நடித்துக்கொண்டே இருப்பார்கள்..

மனசு என்று கருத்து நெழ்ச்சியானது..
பேரன்பு கொண்ட காதல் ததும்பி நிற்பது..
பகிர முடியாது வலிகளையும் துயரங்களையும் உயிர் செல் அடங்கும்வரை
சுமந்து கொண்டே கிடப்பது..
ஒருவரின் உறவு குறித்தும் அவரின் நேசம் குறித்தும் அவரின் அக்கறை குறித்தும் அவரின் காதல் குறித்தும் ஏற்படும் பதியப்படும் உருவாக்கப்படும் உருவாகிவிடும் கருத்து அப்படியே நிலைத்து நிற்கும். ஒருநாளும் அதில் மாற்றம் காண இயலாது.. அந்த கருத்தின் மேல் இன்னொரு கருத்து பதிய முடியுமே தவிர அந்த கருத்தை எண்ணத்தை ஒருநாளும் அழித்து விடவே முடியாது எத்தகைய நடவடிக்கைகள் எதிரில் மாறிக் கிடந்தாலும்.

நாவல் குறித்து எழுதி முடிக்கும் பொழுது விடியற்காலை.. வீட்டிலிருந்து வெளியே வந்து பார்க்கிறேன்..
தூறல் கிடையாது.. வேப்பமரத்தின் இலைகளின் உரசல் ஒலி கிடையாது..
ஆனாலும் அந்த குயில்கள் இன்னும் கூவிக் கொண்டே இருக்கிறது..
கூடவே பெயர் தெரியாது குருவிகளின் பறவைகளின் குரலும் இப்போது.
அதனோடு காக்கைகளின் கூவலும்.!

ஆம் காக்கைகளின் கூவல் தான் அது
மனசுக்கு பிடித்து விட்டால்
கரைதலும் கூட கூவாலாகத்தான் தெரியும்..
மனசின் பிரியமான போதை அது.

என்னுடைய யூகம் சரியாக இருக்கும் என்றால்
இந்த நாவலுக்குள்
தோழர் புலியூர் அவர்களும் அவரது இணையாரும் அவரின் இரண்டு பிள்ளைகளும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நாகையாவாகவும் ராணியாகவும்
இளங்கோவாகவும் இரணியனாகவும்.!
என்னுடைய யூகம் சரிதானே தோழர் புலியூர்.

குடும்பத்தவர் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துக்களும்.

நாவலுக்குள் பல குடும்ப உறவுகளை வாழ்ந்து கொண்டிருக்கும் பலரை எனக்குள் அடிக்கோடிட்டு சென்று இருக்கிறீர்கள்.

வாசியுங்கள் நீங்களும் ஒரே ஒரு முறை
பாகாளத்தம்மா நாவலை..
உங்களுக்கு அறிமுகமானவர்கள் நிச்சயம் அதில் இருப்பார்கள்..

கருப்பு அன்பரசன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.