நூல் அறிமுகம்: இரா.முருகவேளின் “புனைபாவை” –  பா.அசோக்குமார்புனைபாவை
இரா. முருகவேள்
ஐம்பொழில் பதிப்பகம்
பக்கங்கள் :365
₹.250
சென்னிமலை வாசகர் வட்டம் நடத்திய நூல் வெளியீட்டு விழா தொடர்பான முகநூல் பதிவை பார்த்தது முதலாகவே இந்நூலின் மீது இனம்புரியாத ஈர்ப்பு உண்டானது என்பதே உண்மை.
அதிலும் வரலாற்றுக் களமான கொடுமணல் நிகழ்விடத்திலேயே வெளியீட்டு விழா என்று கூறி நடுகல்லோ அல்லது கல்லறைகளோ என்ற ஐயம் உண்டாக்கும் பாண்டியன் நகர் நினைவிடத்தில் இருந்து வெளியிட்ட வீடியோ பதிவே ஆர்வத்தைக் கிளர்ந்தெழச் செய்தது.
முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னராக அந்த இடங்களுக்கு சென்று வந்த ஞாபகம் ஒருபுறம், சமீபத்தில் அதுகுறித்து அடியேன் எழுதிய பயணக் கட்டுரை மறுபுறமென அதீத ஆவலே உண்டானது. புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்லலாம் என்று நண்பர் கார்த்திக் Karthick Murugiah அழைத்த போதிலும் குடும்பச் சூழல் காரணமாக செல்ல முடியாத சூழலே உண்டானது.
நண்பர் Che Ka அவர்கள் வெளியிட்ட நூல் விமர்சனமும் கூடுதல் கவனத்தை விதைத்தது என்பதே உண்மை.தனது நண்பர் மூலமாக கிடைத்த புத்தகத்தைப் படித்து மகிழ்ந்த கார்த்திக் அவர்களும் அதீத தகவல்களை பகிர்ந்து கொண்டே இருந்தார். நூலும் தந்து உதவி படிக்கத் தூண்டிய நண்பருக்கு முதற்கண் வணக்கம்.
முதலில் பாராட்ட வேண்டிய மிகச் சிறந்த விஷயமாக நான் கருதுவது எழுத்தாளர் முருகவேள் அவர்களின் தேடலே ஆகும். அவரது அயராத உழைப்பு மற்றும் தீராத ஆர்வத்தின் விளைவே நாவலாக பரிணமித்துள்ளதாக கருதுகிறேன். கிட்டத்தட்ட 28 க்கும் அதிகமாக நூல்களைப் படித்து தகவல்களை திரட்டி அதனை புனைவாக படைத்த வகையிலேயே மிரட்டியுள்ளார் என கருதுகிறேன்.
பொதுவாக, இது போன்ற வரலாற்றுத் தகவல்களைக் கொண்டு கட்டுரைகள் வடிப்பதே இயல்பான ஒன்றாக இருக்கும் இலக்கிய உலகில் புனைவாக படைக்கத் துணிந்த பாங்கு பாராட்டத்தக்கது. அதில் வெற்றியும் கண்டுள்ளார் என்பது மெச்சத்தக்கது. கி.பி ஆயிரமாண்டிற்கு மேல் நடைபெறும் காலத்தை கதைக்களமாக கொண்டு வரலாற்றுக் காலத்திற்கு முந்திய (?) கொடுமணல் உருக்கு ஆலை தொழில்நுட்பத்தை இணைத்த விதம் போற்றுதலுக்குரியது.
பாகம் :1 ஆடவல்லான்
இருளர் கதை -1
பாகம் :2 மாலிக் -கபூர்
என்று இரு பகுதிகளாக இந்நாவல் புனையப் பெற்றுள்ளது.
அக்காலகட்டத்தில் ஆண்ட சோழப் பேரரசின் போர்முறைகளும் கொங்குச் சோழர்களின் உதவியையும் வணிகக் குழுவான ஐநூற்றுவர் ஆதிக்கத்தையும் முதல் பகுதி எடுத்தியம்புகிறது. முதல் இரண்டு பகுதிகள் அளவுக்கதிமான தரவுகளுடன் பயணித்து சிறிது அயர்ச்சி ஊட்டுவதாகத் தோன்றினாலும் அடுஅடுத்த பகுதிகள் நம்மை இருளர் பகுதிகளில் நடமாடச் செய்வதாக அமைந்துள்ளது.
விடங்கச் செட்டி என்ற பிரதான கதாபாத்திரம் வழியாக பயணிக்கும் நாவல் இருளர் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் நாகரிக வளர்ச்சி போல் தோன்றி இருண்ட காலத்தில் சிக்குண்டு கிடக்கும் அவலம் தனித்துவமானதே. காட்டை எரித்து புதுக்காட்டை உருவாக்கும் வழக்கம், புதிய பகுதிகளில் காடு உருவாக்கும் முயற்சி அதற்காக “காட்டம்மே” ஐ துணையாகக் கொண்டு மூப்பனும் வண்டாரியும் செய்யும் சூழ்ச்சிகள் என நாவல் புதுவேகம் எடுத்து பயணிக்கிறது.
சிறுவர்களின் விளையாட்டு, பெரியவர்களின் காமக் களியாட்டம், ரோசன் -மல்லி காதல் என பறையர் வாழ்க்கை ஒருபுறம் களிப்புடன் நடக்க, விடங்கச் செட்டியின் சூழ்ச்சி வலையில் சிக்கி உருக்கு ஆலைக்கான மூல மணலை வாரியெடுத்து தரும் அடிமைகளாக பதியினர் மாறுவது கர்ணக் கொடூரமானதே..
அன்று முதல் வரை தலைமைகள் பின்னும் வலையில் மக்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருவது தொடர்வதைக் காணும் போது சலிப்பே மேலிடுகிறது. பதவியும் பட்டமும் பொன்னும் பொருளும் கட்டடங்களும் கட்டித் தந்து ஒண்ணாமண்ணாக இருந்த பதியினர் வாழ்வில் ஏற்றத்தாழ்வை புகுத்தி வேடிக்கைப் பார்க்கும் அவலம் இன்றும் நடைபெற்றுக் கொண்டு தானே இருக்கிறது.
வயது முதிர்ந்த விடங்கச் செட்டி மல்லியின் மேல் மோகம் கொண்டு திருமணம் செய்த போதிலும் மல்லியின் ஒப்புதலுக்காக காத்திருப்பது ஒருபுறம் விடங்கச் செட்டியின் மனைவிகள் பலர்… அதில் மூத்த மனைவிக்கும் செட்டிக்குமான புரிதல் அழகான கவிதை போல் மறுபுறம் பயணிக்கிறது.
R. Murugavel Books |  நூல்கள் | Shop Books at Best Prices |  Buy Tamil & English Books Online in India | CommonFolks
இரா. முருகவேள்
அரண்மனை போன்ற வீட்டில் வாழும் செட்டியின் உறவுகள் அதில் பெண்கள் பெறும் காம இன்பம் போன்ற நிகழ்வுகளும் அதனை மல்லி தனது பதியினரின் காதலுடன் ஒப்பிட்டு பார்க்கும் தருணங்கள் கவித்துனமானவை… பச்சாதாபத்தை உண்டாக்கக் கூடியவை. ஊருக்கு ஆலையின் தொழில்நுட்பத்தை கோவன்களின் வாயிலாக எடுத்தியம்பிய விதம் அறிவியல் பூர்வமானதே…
செட்டியை கொல்வதற்காக ரோசனின் காதலியான மல்லி எடுக்கும் முடிவு துணிச்சல்மிக்கதே. அழகான காதல் வாழ்க்கை வாழும் கோவன் காமத்தில் தடுமாறி உருக்கு வாளை பரிசளிப்பதெல்லாம் காம விளையாட்டின் உச்சமன்றி வேறேது. இங்ஙனம் முதற்பகுதி கதை நடைபெற, இடையிடையே செட்டியின் படை வளர்ச்சி நிலைகளும் அதற்கான காரணங்களும் உருக்கு வாள்களின் அழகியலும் வலிமையும் நாவலில் விரவிக் கிடக்கின்றன.
வேளாளர்களுக்கும் வணிகர்களுக்குமான பூசல், அதற்கான காரணங்கள் ஆகியவற்றை நாவலில் தெரிந்து கொள்வதே சாலச் சிறந்ததாகும். சமண மதத்தை வேரறுத்து சைவம் தழைத்த விதம் மிக நேர்த்தியாக சித்தகரிக்கப்பட்டுள்ளது. போர்க்களத்தில் ஈடுபட்டு பல வெற்றிகள் பெற்ற நிலையில் மனம் மாறி சிவனடியாராக மாறி நாடோடியாக பயணம் செய்து சைவத்தை தழைக்கச் செய்யும் கிளைக்கதை அதீத விறுவிறுப்பானதே. அதிலும் குறிப்பாக வெள்ளியங்கிரி மலைப் பயண பகுதி ரம்மியமானதே…
திருக்கோவில் பணிகளுக்காகவும் வேளாண் பணிகளுக்காவும் கொல்லர்களையும் தச்சர்களையும் வேளாளர்கள் வேண்ட , உருக்கு ஏற்றுமதிக்கான உற்பத்தி தொழிலுக்காக வணிகச் செட்டிகள் தர மறுக்கும் பகுதி பெரும் கவனத்திற்குரியது. ஊர்க்கூட்டம் நடைபெறும் பகுதி சுவாரஸ்யமானது.
முன்னரே பயணம் செய்த விஜயமங்கலம், சீனாபுரம் போன்ற பகுதிகள் குறித்த பதிவுகளும் சமணம் தழைத்து விளங்கிய பதிவுகளும் நாவலை உயிர்ப்புடன் கடந்து செல்ல உதவின எனலாம்.
முதல் பகுதி பெரும்பாலும் தரவுகளாக இருப்பதாலோ என்னவோ ஆங்காங்கே தொடர்ச்சியற்று இருப்பது போன்ற பிம்பம் எனக்குத் தோன்றியது. எனக்கு மட்டும்தானா என்ற ஐயமும் உண்டாகியுள்ளது.
இருளர் கதையில் புனையப்பட்டுள்ள புலி அண்ணன் பூனை தம்பி உருவகம் ரசிக்கத்தக்கது.
இரண்டாம் பாகமான மாலிக் -கபூர் கதை ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நகர்கிறது. வீழ்ச்சியடைந்த சோழப் பேரரசிற்கு பிறகு வலுவான நிலையில் இருந்த பாண்டிய பேரரசில் பேரரசர் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவுக்குப் பின் நடைபெற்ற வாரிசுரிமைப் போரில் தொடங்கும் கதை புரவி வேகத்தில் பயணித்து விறுவிறுப்பாக நகர்கிறது.
தலைமைத் தளபதி மதிதுங்கன் தனிநின்ற பெருமாளின் சாகசங்கள் ஒருபுறமென்றால் அலாவூதீன் கில்ஜியின் அரியணையேற்றம் மறுபுறமென வரலாறு நிற்காமல் ஓடுகிறது. செட்டி வம்சத்தைச் சேர்ந்த படைத்தளபதி நானா நம்பியின் தந்திரங்கள் ஒவ்வொன்றும் படு ஆவர்த்தனமானவை. ஹொய்சால மன்னனின் படையெடுப்பை நானா நம்பி சூழ்ச்சியால் முறியடிப்பது முதல் மாலிக் கபூர் படையெடுப்பிற்கான ஒற்று வேலை என பயணித்து இறுதியில் மூக்கறுபட்டு அவதியுறும் தருணங்கள் யாவும் படு கிளர்ச்சியூட்ட கூடியவையே….
வேறொரு கோணத்தில் நாவல் முடிவுறும் என எதிர்பார்த்த தருணத்தில் திம்மன் வழியாக நாவல் பயணிக்கத் தொடங்கி செம்மி மீதான காதல் என உருமாறி திருவம்பல பிரியாதாள் வழியாக தேவரடியார் வாழ்வியல் முறை அழகாக சித்தரிக்கப்பட்டு நாவல் முதல் பாகத்துடன் நிறைவுறுவது கனக்கச்சிதம். பழங்காலத்தில் பஞ்ச காலத்தில் மனிதர்களை தானமாக கோவிலுக்குஅளிக்கும் நடைமுறை குறித்த தகவல்கள் கண்ணீரை வரவைப்பன.
மூக்கறுப்பிற்கான சிகிச்சை முறைகளும் வைத்தியருடனான உரையாடலும் நகைச்சுவைத் துள்ளலுடன் தொடங்கி சிந்திக்க வைப்பதாகவே உள்ளன. “பெண் எங்கே?” என்று வைத்தியர் கேட்பதில் அடங்கியுள்ள சூட்சுமம் மூக்கறுப்பிற்கான காரணத்தை பகர்கிறது. வைத்திய முறைகளின் அழிவிற்கான காரணத்தை பகரும் உரையாடல் ஒவ்வொன்றும் கவனிக்கத்தக்கது.
“தனது கைவிரல்களைக் கொண்டு தன் கண்களே குத்தி குருடாக்கும் நிலை” என்று கிராமப்புறங்களில் கூறப்படும் சொலவடையே ஞாபகப்படுத்தும் அருமையான உருக்கு வாளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் வரலாற்று தரவுகளுடன் பகிர்ந்துள்ள அற்புதமான படைப்பே இந்த “புனை பாவை”
கூடுதலாக தெரிந்தாலும் சொன்னவை சொற்பம்; சொல்லாதவையோ ஏராளம். வரலாற்று புனைவில் ஆர்வம் கொண்டோர் மட்டுமின்றி யாவரும் ஒரு வித புதிய அனுபவத்திற்காக இந்நாவலை நிச்சயம் வாசிக்கலாம். மறுமுறை ஒருமுறை வாசிக்க ஆவலுடன் பகர்கிறேன். எழுத்தாளருக்கு மீண்டும் ஒருமுறை பாராட்டுக்கள்‌. வாழ்த்துக்கள்.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.
புனைபாவை
இரா. முருகவேள்
ஐம்பொழில் பதிப்பகம்
பக்கங்கள் :365
₹.250
 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை