Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: புனைவின் வழியே தான் மனித நாகரீகம் பிறந்தது – து.பா.பரமேஸ்வரி

 

 

 

வாழ்வின் அர்த்தம் ‌என்பது வாழ்ந்துப் பார்ப்பது தான்..
என கவியரசர் கண்ணதாசனின் வரிகளை அடிக்கோடிட்டு தமது அனுபவங்களை நேர்காணல் வழியாகப் பகிர்ந்த தோழர் காமுத்துரை அவர்கள் இன்றுவரை வறுமையின் சாளரங்கள் சிலமுறை காற்றடித்துத் திறந்துக் கொண்டாலும் எப்போதும் நிறைவானதொரு வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார்.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்க..
‌என்கிற ஆன்றோர் கூற்றுக்கு மிகப் பொருத்தமானவராகவே இன்றும் பல ஏற்றத்தாழ்வுகளை தமது பொருளாதாரத்தில் கண்டபோதிலும் துவளாது துயரத்தை தூர வீசியவர் காமுத்துரை. இன்றும் வாடகை பாத்திரக்கடைக்கு நிறையான முதலாளியாகவே திருப்தி காண்கிறார்.

இயல்பாகவே தன்னகத்தில் தனித்த முதிர்ச்சிக் கொண்ட தோழர் காமுத்துரை ஒரு அக்குபங்சர் மருத்துவர் என்பதும் கூடுதல் சிறப்பு.
அது மட்டுமா… தமிழன்னையின் செல்லப்பிள்ளை வேறு.. நிலமாந்தர்களின் மொழியில் வாசம் செய்யும் கரிசல் வழக்கு மொழியின் வளவன் என்றால் மிகையாகாது. அவரது படைப்புகளை வட்டார புழங்கு மொழிக்காகவே வாசித்து மகிழலாம். அத்துனை மாதுர்யமிக்க நடைக்குச் சொந்தக்காரரான தோழர் காமுத்துரை தன்னடக்கத்தின் உறைவிடம். நிதானமும் தம்பட்டமற்ற இயல்பும் பொதுவாகவே கொண்டவர்.

வாலிநோக்க கடல் போல கொஞ்சமும் அலை கழிக்காது தெளிந்துக் கிடப்பார். இப்படி தோழரைப் பெருமைப் பேசி சிலாகிக்கவும் விதந்தோதவும் அநேக விஷயங்கள் சக தோழமையாய் உணர்ந்த போதிலும் ஆழப்புடைந்து கிடக்கும் அவரின் மனகிளேஷங்கள் அறிவார்ந்த சிந்தனைகள் தொலைநோக்கு பார்வை என அனைத்தும் செவிவழியாகவே இங்குமங்குமாய் வந்தடைகின்றன.

நெருக்கமான நண்பர்களோ சக உறவுகளோ பிரியத்தின் பெயரில் அலையடித்து வந்த செய்திகளையும் தகவல்களையும் காற்றில் தவழ விடுவது மட்டுமே காமுத்துரை அவர்களை பற்றிய பரிச்சயமாக எனக்குள் அறிமுகமானதே ஒழிய வாழ்வின் அர்த்தங்களையும் பாடுகளையும், கொண்டாடித் தீர்த்த தருணங்களையும், மூக்கு சிந்திய வலிகளையும், கற்றுத்தேர்ந்த போதனைகளையும், உணர்த்தியும் உயிர்த்தும் தம்மோடு உறவாடிய மனிதர்களையும் நெஞ்சில் நிழலாடி வரும் நினைவுகளையும் நிஜத்தில் ஊசலாடும் அனுபவங்களையும் நினைவுக் காணலாக தமுஎகச அறம் கிளை தோழர் மு.அராபத் உமர் அவர்களுடன் பகிர்ந்தவைகளை குறுநூலாகத் தொகுத்து பிரசுரிக்கப்பட்ட படைப்பாக “புனைவின் வழியே தான் மனித நாகரீகம் பிறந்தது” என்கிற நேர்காணல் தொகுப்பு.

தமுஎகச வின் பதினோரு மூத்த எழுத்தாளுமைகளைச் சந்தித்து முற்போக்கு எழுத்தின் தடங்கள் என்கிற பொதுத் தலைப்பில் வெளிவந்த தனித்தனியான குறுநூல்கள் ஒவ்வொன்றும் வருங்காலத்தைக் கட்டமைக்கப்போகும் விதைகளாகவே நான் காண்கிறேன். காரணம் வாழ்க்கையை செம்மையாகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பக்குவத்தோடு வாழவும் வழிநடத்தவும் ஒவ்வொருவருக்கும் ஒரு முன்னோடி அவசியம் தேவை.

அதிலும் பலதரப்பட்ட ஜீவிகளையும் அனுபவதாரிகளையும் பிதாமகர்களையும் கொண்ட தமுஎகச வின் மூத்த ஆளுமைகளைப் பற்றி சிறிதளவு ஞானம் உள்ள போதிலும் முழுமையின் போதாமையால் அவர்களைப் பற்றி விசாலமாகத் தெரிந்துக் கொள்ளவும் பின்பற்றவும் இதுவரை வாய்ப்பு அமையவில்லை. அப்படியான சூழலில் அறம் கிளையின் இந்த முன்னெடுப்பும் முயற்சியும் மெனக்கிடலும் சிலிர்த்திய செயல்பாடுகள். பதினோரு குறுநூல்களும் பதினோரு ஆளுமைதாரிகளின் முற்போக்கான வாழ்க்கைத் தடங்களை முழுமையாக உள்வாங்க ஏதுவாக இருந்ததில் உள்ளபடிக்கே தேடினாலும் கிட்டாத கனிகள் என்று புளங்காகிதம் கொள்ளலாம்.

அதில் பலநூறு விருதுகளால் கௌரவிக்கப்பட்டும் சமீபமாக புதுமைபித்தன் விருதிற்குப் பெருமை சேர்த்த எழுத்தாளர் காமுத்துரை அவர்களின் நேர்காணல் சந்திப்பு இலக்கியதளத்தில் எனக்கான அர்த்தமுள்ள வாழ்க்கையை நோக்கிப் பயணப்படும் வகையில் முன்மாதிரியாக வழிநடத்தியது. என்னை ஈர்த்த சில தகவல்களை இங்கு ஜனரஞ்சகமாக பகிர விரும்புகிறேன்.

எப்போதும் போல யாரை சந்தித்தாலும் பொதுவானதொரு கேள்வியாக பள்ளிப்பருவகால அனுபவங்களைச் சார்ந்த கேள்விகளையே அனைவரும் முன்வைப்பர். காரணம் மழலைப் பருவமும் .பால்ய காலங்களும் ஒவ்வொருவரின் நினைவுச்சின்னங்கள். இயலாமையும் இல்லாமையும் ‌சூழ்ந்திருந்தாலும் குழந்தைமையின் இளமைக்காலங்கள் மறக்கவியலாத ஒன்று. காமுத்துரை அவர்களின் பள்ளிக்கால குதூகலங்களும் அவரின் நினைவுக்கிடங்கில் ஒளிந்து தான் இருந்தது.

பாம்பு விரலை இழுத்து காதின் மேல் நுனியை தொடச் செய்த சபரிமலை வாத்தியார், பிள்ளைகளை மடியில் அமர வைத்து அ னாவும் ஆ வனாவும் எழுதக் கற்றுக் தந்த ருக்மணி டீச்சர், ஹெட்மாஸ்டர் ராஜூ சார், ஆறாம் வகுப்பில் பார்க்கவும் பழகவும் கடினமாக இருக்கும் திருவேங்கட வாத்தியார், ஊமத்தம்பூவையும் அடுப்புக்கறியையும் சேர்த்தரைத்த விழுதின் பூச்சில் உயிர்த்தே வைத்திருந்த கரும்பலகைகள், வரலாற்று வகுப்பை மட்டடித்து விட்டு படம் பார்த்த சுபா திரையரங்கம் என ஒவ்வொன்றைப் பற்றியும் அவர் மலர்ந்துக் கூறுகையில் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளாய் பால்ய நினைவுகள் நம்மையும் பறக்கச் செய்தன.

பகிரும் போது தோழர் மழலையின் முகமும் சிறு பிள்ளையின் சுட்டித்தனமும் ஒரு மாணவன் போல தெளிவும் பரிமளித்ததை வாசிக்கும் வரியொன்றும் காட்சிகளாய் தரிசிக்கச் தந்தன.

தனது பிராயத்தின் கரமசிரத்தைகளை ஒளிபொருந்திய விழிகளில் பாய்ச்சிய தோழர் தனக்கு ஏற்பட்ட நீண்ட கால உடல் தொந்தரவான திக்குவாய் பிரச்சனையும் மனதின் காழ்புணர்ச்சியாக தாழ்வுமனப்பான்மையும் உருவான‌இடமாக பள்ளியமைந்ததையும் கொஞ்சம் வருந்தியே பகிர்ந்தார். தன்னம்பிக்கை தாழ்வுணர்ச்சி இரண்டும் ஆண்ட இடமாக பள்ளிக்கல்வி அமைந்ததைத் தெரிவிக்கிறார்.

தமது குடும்பம் பற்றிய சிறுகுறிப்பொன்றை தொடரும் கேள்விகளில் பகிர்கிறார். சா.மணியபிள்ளை மற்றும்

ம. பழனியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த தோழரின் குடும்பத்தை கணக்காப் பிள்ளை குடும்பம் என்று அழைக்கப்பட்டதாகவும் மூதாதயர் கணக்குப் பிள்ளையாக பணியில் ஈடுபட்டனரா இல்லையா என்கிற சர்ச்சை ஒருபுறமிருந்தாலும் கணக்காப்பிள்ளை வம்சாவளியில் தோழரின் அப்பா கமிஷன் கடையில் கணக்குப்பிள்ளையாகவும் பெரியப்பா கூட்டுறவு வங்கியில் கிளர்க் பணியிலும் சித்தப்பா கங்காணியாய் கணக்குப் பார்த்தும் என விட்ட குறை தொட்ட குறையாக குடும்ப அடைமொழிக்கு ஏற்றார் போலவே கணக்குகளில் கை நனைத்ததைப் பகிர்ந்தார்.

விவசாயம் ஹோமியோபதி மருத்துவம் சிறுதொழில் வியாபாரம் ஆடு மேய்த்தல் என வாழ்வாதாத்தைத் தகவமைக்க நாடுகள் பல கண்ட உழைக்கும் வர்க்கமாகவே அவரது பரம்பரை இருந்து வந்ததை அறிய முடிகிறது. தோழரும் பத்தாம் வகுப்பு முடித்த பின்பு பூச்சிமருந்துக்கடையில பணிபுரிந்தும் ஐடிஐ முடித்த பின் ஒர்க் ஷாப்பில் சிலகாலம் நூற்பு ஆலை பணியில் பைனான்ஸ் கம்பனியில் கொஞ்சம் போல வாடகைக்கு சைக்கிள் வழங்குவது, கட்டிட வேலைக்கான தட்டுமுட்டு சாமான் வாடகைக்கு விடுவது என நிரந்தரமாக வாடகை பாத்திரக்கடையில் தனது ஜீவாதாரத்தை ஓட்டி வருகிறார். அக்குபங்சர் சிகிச்சையும் உடன் பார்த்து வருகிறார்.

கனகு அக்காவிற்காக வாங்கிய ராணிப்புத்தகம், இரும்புக்கை மாயாவி, கோகுலம், அம்புலிமாமா என பிராயகால வாசிப்பு சிறுவர்களுக்கான பத்திரிகைகளுடனும் இதழ்களுடனும் துவங்கியதும்

“சற்றும் மனம் தளராத விக்ரமாதியன் மீண்டும் பிணத்தை தோளில் போட்டுக் கொண்டு நடந்தான்..”

என்ற சென்ற தலைமுறை விக்ரமாதித்த கதைகள் விதிவிலக்கில்லா வரிகள்.. விக்ரமாதித்தன் கதைகளையும் அம்புலி மாமா கதைகளையும் வாசித்த எனக்கும் இந்த வரிகள் பள்ளிபருவகால விடுமுறைகளை மலரும் நினைவுகளாய் கவிந்துக் கொண்டன. தினத்தந்தி கன்னித்தீவு தொடரை வாசிக்காத அன்றைய தலைமுறை பிள்ளை ஒன்று கூட நிச்சயம் இருந்திருக்க வாய்ப்பில்லை . தோழரும் சிந்துபாத்தின் கன்னித் தீவைத் தேடி காதல் கடலில் பயணப்பட்ட தலைமுறையை சேர்ந்தவர்‌ என்பதும் அறியமுடிகிறது.

ராணியில் துவங்கிய வாசிப்புப் பயணம் சிந்துபாத்துடன் கடல்கடந்து குரும்பூர் குப்புசாமி, அனுராதா ரமணன், தாமரை மணாளன், லட்சுமி, மகரிஷி, பாக்கியம் ராமசாமி,தேவன் என விதவிதமான எழுத்துக்களை சுவைத்தபடி மூத்த எழுத்தாளர் மு.வரதராசனார் அவர்களின் நாவலில் ருசித்து நின்ற‌‌ தனது இளவயது வாசிப்பைப் பட்டியலிட்டார் காமுத்துரை அவர்கள்.

அன்று துவங்கிய நாவலின் மீதான அலாதி பிரியம் இடையிடையே பரிணமித்து மீண்டும் சமீபகாலங்களாக மொழிபெயர்ப்பு நாவல் மீது தீவிர நாட்டம் ஏற்பட்டதை பெருமிதத்துப் பேசுகிறார். அண்டை மாநில நாவலைகளை பெரிதும் விரும்பி வாசிப்பதையும் குறிப்பாக மலையாள நாவலான “நிலம் பூத்து மலர்ந்த நாள்” வெகுவாக ஈர்த்ததையும் புன்னகையோடு பகிர்கிறார். போக வரலாறு தத்துவம் என காமுத்துரை அவர்களின் வாசிப்புத் தளம் விரிவடைந்து வந்ததை அறிய முடிகிற அதே வேளை கவிதை வாசிப்பில் லயிப்பு குறைவாகவும் சிறுகதை கடமையாகவே வாசித்து வந்ததையும் கலந்துகட்டிய பத்திரிக்கைகள் இதழ்கள் என அகண்ட தளமாகத் தனது வாசிப்பு விஸ்தாரம் பெற்றதையும் மகிழ்ந்துக் கூறுகிறார்.

புத்தகத்தைத் தொட்டாலே அதன் வாசம் நாசியில் மணந்துக் கிடக்கும். கூடுதலாக தொடர் வாசிப்பில் லயித்துக் கிடப்பவர் கரங்களைப் பற்றி இலக்கிய அண்டத்திற்குள் உலாவ விடாமல் விட்டவிடுவாளா புத்தகசிநேகிதி..

ஆம்.. தோழரை எழுதத் தூண்டிய நிகழ்வுகளை படம் பிடிக்கிறது தொடரும் பக்கங்கள்.
‌மாணவப் பருவத்தில் எழுதிய முதற் கவிதை ராணி இதழில் பிரசுரம் கண்டதே எழுத்துலகில் தனக்கான அழியாத தடத்தைப் பதியமிட்டதாக நெகிழும் காமுத்துரை அவர்கள் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கவிதை கார்முகிலில் தன்னை மறந்த பொழுதுகள் அநேகம் என்று புளங்காகித்துப் பகிர்கிறார். கண்ணதாசனின் இறப்பில் பெரிதும் பாதிக்கப்பட்டுத் தனது துக்கத்தைக் கவிதையாக வார்த்துக் கண்ணீருடன் ராணி இதழில் பிரசுரமாகியதையும் சற்றே மனமுருகிப் பகிர்கிறார்.

கதைக்காரனாகத் தன்னை அறிமுகப்படுத்திய முதல் சிறுகதையான “ஓய்வு கொள்ளும் ஊர்திகள்” செம்மலரில் 1983 இல் வெளி வந்ததும் தொடர்ந்து எழுத்தாளர் அல்லி உதயன் அவர்கள் வெளியிட்ட “சிறை மீட்கும் சிந்தனை” என்னும் கவிதைத் தொகுப்பில் வெளிவந்த கவிதை,”விடியும் கையெழுத்துப் பத்திரிக்கையில் பிரசுரமான சிறுகதை என தன்னை எழுத்தாளனாகிய ஆதுரமான தோழமையாக அல்லி உதயன் அவர்களை “கற்றாரைக் கற்றாரே காமுருவர்” என்று விதந்து போற்றுகிறார் காமுத்துரை.

கதை எழுதுவது பற்றிய ரகசியங்களை பகிர கேட்ட போது எதிலும் சங்கோஜப் பட்டு தயக்கத்திலேயே தனது அடிகளை ஒவ்வொன்றாக வைத்த வண்ணமிருந்ததாகவும் துண்டு காகிதத்தில் இடுக்கி நுணுக்கி பொடி எழுத்துக்களில் எழுதி இலக்கிய கூட்டங்களில் வாசித்த அனுபவத்தையும் “குப்பைக் காகிதத்தில் எழுதி பெயர் வாங்கிய ஆள்” என அனைவராலும் செல்லமாக விமர்சனப்படுத்தப்பட்ட சாமான்யனாக தோழர் காமுத்துரை இன்று முந்நூறு பக்கங்களைத் தாண்டும் படைப்புகளை அனாயாசமாக எழுதித் தள்ளும் அளவிற்கு வளர்ந்ததன் காரணமாக தமுஎகசவை சுட்டிக் காட்டுகிறார். பல ஆளுமைகளை இன்றும் உருவாக்கி வரும் தமுஎகச வின் அளபரிய செயல்பாடுகளைப் பலவிடங்களில் விதந்துப் போற்றுகிறார்.

அதே போல் தனக்கு நெருக்கமாக இருக்கும் ஆளுமைகளிடம் ஆரம்பகட்ட வாசிப்பாளராகவும் எழுத்துலகின் சமீபமாக பாதம் பதித்து வரும் பட்சத்தில் முதல் கேள்வியாக காமுத்துரை தோழரிடம் நானும் எப்போதெல்லாம் எழுதுவீர்கள் தங்களின் எழுத்துப்பணிக்கான நேரமும் மனநிலையும் எவ்வாறு வரையறுப்பீர்கள் என கேட்ட பொழுதும் அதற்கு அவரிடமிருந்து வெளிப்பட்ட சத்தமான சிரிப்பும் இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது.

‌ எழுதுவதற்கான காலம் என்பதெல்லாம் தனித்து ஒதுக்குவதில்லை என்றும் நேரம் வாய்க்கும் பொழுதுகளில் எழுதுவதாகவும் என்னிடம் பகிர்ந்த தோழர் தொகுப்பிலும் அதையே குறிப்பிட்டுள்ளார்.

வாசிப்பைப் பொருத்தமட்டில் பொறுமை இல்லாத தலைமுறை வளர்ந்துக் கொண்டு வருவதாக வளர்த்துக் கொண்டு வருவதாக வருந்தும் தோழர் பிள்ளைகள் மட்டுமில்லாமல் பள்ளி ஆசிரியர்கள், குடும்பப் பெண்கள், வாழ்க்கை பாடுகளை ஒட்டிக் கொண்டிருக்கும் வியாபாரிகள், விவசாயிகள், வர்த்தக பிரமுகர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் வாசிப்பைக் கை கொள்ள வேண்டும். வீண் பெருமை பேச நேரமிருக்கும் பட்சம் தந்தி பேப்பர் நாலு பக்கம் வாசிக்க நேரம் ஒதுக்குவதில்லை என்பதையும் அறிவுறுத்துகிறார். வாசகசாலை போன்ற சில அமைப்புகள் சமீப காலமாக வாசிப்பு கூட்டங்களை முன்னெடுத்துச் செல்வதை பற்றியும் சுட்டிக்காட்டிள்ளார்.

வாசிப்பு ஒன்றுதான் மனித குலத்தின் மீட்சிக்கான வடிகால் என்றும் நல்ல வாசகன் நல்ல எழுத்தாளன் ஆவான் எனும் மெய்பிக்கப்பட்ட வாசகத்தையும் வாசிப்பைப் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கான தமது கருத்துக்களை இங்கு வரிசையாய் அனைவருக்குமானதாகப் புரியவைக்க முற்படுகிறார்.

தமது வாசிப்புப் பயணத்தில் ஏராளமான எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பாதித்தும் தாக்கத்தை ஏற்படுத்தியும் கவர்ந்தும் மயக்கமளித்தும் வந்த போதிலும் தம்மை வெகுவாகக் கவர்ந்த மூத்த எழுத்தாளராக எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களைக் குறிப்பிடுகிறார். பூமணி, பா.செடப்பிரகாசம் ஆகியோரது எழுத்துக்களும் யதார்த்தத்தைப் பிடிப்படச் செய்ததாகவும் குறிப்பிடுகிறார்.

கூடுதலாக புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், கே.அழகிரிசாமி,கே.ப.ரா. மௌனி போன்ற எழுத்துலகின் ஆகச்சிறந்த படைப்பாளிகளின் எழுத்துக்களையும் விரும்பி வாசித்ததாகவும் சிலாகிக்கிறார். அதே போல் தன்னை கவர்ந்த இளம் எழுத்தாளர்களின் பெயர்களின் நீண்ட வரிசையை கேள்வியொன்றில் பதிவிட்டுள்ளார். அதில் பெரும்பாலும் தமுஎகச தோழர்களே வாசிப்புப் பட்டியலில் ஆகப்பெரும் இடத்தைப் பிடித்திருப்பது சிறப்பு.

பழந்தமிழ் இலக்கியங்களை அவசியம் கற்க வேண்டும். சங்ககால சமூகத்தின் திறவுகோலாக கருவூலமாகத் திகழும் சங்க இலக்கியங்களின் ஞானம் சிறிதளவேனும் தழைக்க சங்க இலக்கியங்கள் வாசிக்கப்பட வேண்டும் என்பதைப் பதிவு செய்துள்ளார் தோழர். போக,தமுஎகச சங்க இலக்கிய பட்டறை ஒன்றை நடத்தி சங்க இலக்கிய கற்றலை துவங்கி வைத்ததையும் பத்து நாட்கள் நடந்த அந்த நிகழ்வு மனதிற்குள் இன்றும் நிழலாடுவதையும் நெஞ்சுருகப் பகிர்ந்துள்ளார்.

கையெழுத்துப் பத்திரிக்கையில் “முதலிடம்” என்னும் தலைப்பில் வெளியாகிய “ஓய்வு கொள்ளும் ஊர்திகள்” கதை சமூகத்திற்கான சமூகமாற்றத்திற்கான விதையாய் முதல் கதை அமைந்ததை பிரகாசமாகப் பகிர்கிறார். தேசத்தின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் ஏகாதிபதிய அரசியலை தோலுரிக்கும் நாவலான மில் நாவலையும் தனது மனத்திற்குத் திருப்தி அளித்தப் படைப்பாக முன்வைக்கிறார்.

சமுதாயத்தின் அரசியல் பொருளாதார தத்துவார்த்தத்தோடு இணைந்த படைப்புகளே எப்போதும் கோலோச்சி நிற்கின்றன. அது போலவே இன்றைய காலத்து ஆக பெரும் வீச்சிலான படைப்புகளும், ஒன்றுக்குமே உதவாத படைப்புகளும் என இருதரப்பட்ட படைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன என்றாலும் அரசியலற்ற படைப்பும் ஒருகாலும் சாத்தியமில்லை,படைப்பு என்பதே நாம் வாழும் அரசின் இயலை நடவடிக்கையை போற்றியோ தூற்றியோ கண்டு கொள்ளாமலோ
விடுவதும் – எழுதுவதும் தான் என்பதையும் வலியுறுத்தியுள்ளார் காமுத்துரை அவர்கள்.

சமூகத்தின் அங்கமான குடும்பம் என்கிற கூட்டில் சமத்துவம் பறைசாற்றப் பட வேண்டும் அதற்கு குடும்பத்தினர்களுக்கு அறியாமையை நீக்கும் கல்வியை போதிக்க வேண்டும் என்று குடும்ப சமத்துவத்தைத் தமது கருத்துக்களுடன் இணைத்து பறைசாற்றும் தோழர், பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை அவலத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார்.

பெண்சிசுவாகக் தரிக்கும் நாள் முதல் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களை பண்பாடு வம்மை வழக்கம் குடும்ப சம்பிரதாயம் என்கிற வகையறாக்களில் பலியிடும் இந்திய சமூகத்தின் மடமையை தமது காத்திரமான வரிகளில் மூச்சுமுட்டப் பேசித் தீர்க்கிறார். அதே போல ஆண்பெண் வேறுபாட்டை பற்றிய இயற்கை சார்ந்த புரிதலை முன்வைத்துத் தோலுரிக்கிறார்.

அடுத்தடுத்த கேள்விக்கணைகள் தீக்கமான வகையில் வெளிவந்த வண்ணம் நவீன கால சாதியைப் பற்றிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில்,
படிப்பறிவும் சமூக சீர்திருத்த செயல்பாடுகளும் வர்க்க போதமும் ஓரளவு ஊட்டப்பட்ட இந்நவீன காலகட்டத்தில் சாதியம் கொஞ்சம் அடக்கி வாசிக்கப்படுகிறது.
“தீண்டாமைச் சுவர்கள் ஒன்றிரண்டு அகற்றப்பட்டிருந்தாலும் வெவ்வேறு வகையில் ஆதிக்க மனங்கள் ஆஷாடாபூதியாய் கெட்டிப்படுத்தப்பட்டுள்ளன.”
என நவீனகால சாதியத்தின் மீது பதிந்திருந்த தனது முற்போக்குப் பார்வையை நமக்குள்ளும் கடத்தியுள்ளார்.

பிள்ளைக்கால கடவுள் வழிப்பாடு காமுத்துரை அவர்களின் வாழ்வில் சுவாரஸ்யம் மிக்க ஹாஸ்பூர்வமானது. மழலைக்கே உரிய அந்த அதீத கடவுள்நம்பிக்கை சின்ன விஷயத்திற்கும் கடவுளின் பாதங்களைக் கட்டிப்பிடித்து அழுது புலம்பது மீண்டும் மீண்டும் விடாது பிரார்த்திப்பது சிறு வேண்டுதலுக்கும் தவறுக்கும் கூட கடவுளிடம் மன்றாடி நிற்பது என பிள்ளைமைதனத்தில் பக்தியும் ஒரு பசுமையான நினைவுகளே… நம் அனைவர் வாழ்விலும் எட்டிப்பார்த்த அறியாத்தனமே பக்தி… ஆனால் முதிர்விலும் முற்றிவருவதே அறியாமையின் கண்மூடிதனம் என்பதே இங்கு நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது.

எனினும் பிள்ளைப்பருவத்தில் இதுபோன்ற அனுபவங்களை நாம் நினைக்கும் போது கொஞ்சம் வெட்கமும் சிரிப்பும் மிளிரத் தான் செய்கிறது.
அற்புதமான கடவுளை மனிதர்களிடமிருந்தும் அறியாமை சூழ்ந்த மனிதர்களை கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கயவர்களிடமிருந்தும் மீட்பது என்பது முற்போக்காளர்களின் தலையாய பணியாகும் என்கிற இறைவாதத்தை இந்த ஒற்றை வரி தகர்க்கிறது.

அடுத்தடுத்த கேள்விகளுக்கான விடைகளில்…
“பகுத்தறிவு சிந்தனைகளும் இடது மாற்றம் பிறந்துள்ள இன்றைய சூழலில் ஆட்சி அதிகாரத்தையே கை கொண்டுள்ள இந்திய சமூகத்தில் மதம் ஆக்டோபஸாய் தனது ஆயிரக்கணக்கான கால்களின் மூலம் பல்வேறு பெயர்களில் தன்னை உருவாக்கி மக்களின் உரிமைகளை உரக்கப் பேசிவிடாமல் பேசுகிற குரல்வளைகளில் இருந்து சப்தம் எழும்பவிடாமலும் அழுத்திப் பிடித்தும் அறுத்து துண்டித்தும் தனது அஜண்டாக்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது என்று இன்றைய மதங்களின் தீவிர நாதத்தால் கட்டுண்டு கிடக்கும் சமுதாயத்திற்காகவும் பதைக்கிறார் காமுத்துரை அவர்கள்.

தொடரும் எழுத்துப் பயணங்களில்,
வெங்கட் சாமிநாதன்,ல.ச.ரா போன்ற எழுத்தாளர்கள் சௌந்தர்ய உபாசகர்களாய் கலை என்பது புனிதமானது என்றும் மணிப்பிரளாத நடையில் மட்டுமே எழுத்துக்கு ஊக்கப்படுத்தியும் வட்டார வழக்குகளை கொச்சை மொழி என உதாசீனப்படுத்தியும் செய்த பெரிய குடுமிகள்..

பிற்காலத்தில் கி ரா போன்ற வட்டார வழக்கு மொழிகளை உயர்த்திப் பிடித்த ஆளுமைகளை தொடர்ந்து, இருபதிற்கும் மேற்பட்ட வழக்கு மொழிகள் தமிழிலக்கியத்தைக் கொழிக்கச் செய்தாக எழுதத் துவங்கிய காலங்களில் ஏற்பட்ட எழுத்து சார்ந்த பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் பற்றி விவரித்துக் கூறியது இடைக்கால எழுத்துல தாதாக்களின் மேலாதிக்கமும் மேம்போக்கான எண்ணமும் வட்டார வழக்கு மொழிகள் இலக்கியபுழக்கத்திற்கு வந்த காலமும் திட்டவட்டமாகப் புலப்படுகிறது.

எழுத்தாளன் மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதனும் அமைப்பாதல் அவசியம் என்கிறார் காமுத்துரை. ஏற்றத்தாழ்வுகளை அங்கமாகக் கொண்ட இந்தச் சமூகத்தில் நான் சுதந்திரமானவன் என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை கருத்தியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் சுதந்திரமற்றவன் என்பதும் முழுமைப் படுத்தப்பட்ட நிதர்சனம். சாதி மதவாத சக்திகளை எதிர்த்துப் போராட நிச்சயம் அமைப்பு அவசியம் என்று அரைக்கூவலிடுகிறார் காமுத்துரை. தன்னை அணுஅணுவாகச் செதுக்கி ஒரு எழுத்துக்காரனாய் சமூக அக்கறையுள்ள சீர்மானாய் வார்த்தெடுத்த பெருமை தமுஎகசவையே சாரும் என்று நெகிழ்ந்துரைக்கிறார் தோழர்.

ஒரு எழுத்தாளனாக இலக்கியவாதியாக படிப்படியாக பண்பாட்டுப் போராளியாக மாற்றிய தருணங்கள் இலக்கியத்தில் மேலெழும்பிய எழுப்பிவிட்ட தருணங்கள் அனேகம் நினைவுப் பெட்டகத்திற்குள் ஊடாடி வருவதாகவும் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமே போடலாம் என்றும் சிலாகிக்கிறார் காமுத்துரை.
தமுஎகச வின் கூட்டங்களில் கலந்துக் கொண்ட நிகழ்வுகள், தமது படைப்பொன்றிற்காக கே.முத்தையா அவர்கள் புன்னகை முறுவலோடு வரவேற்றும், ஐ.மா.பா. மிட்டாய் ஒன்றை ஊட்டியும் அங்கீகரித்த பல தருணங்களை நூல் முழுதும் ஆனந்தக் கண்ணீருடன் சொல்லி முடித்தார்.

ரஷ்யநாவல்களில் மனம் லயித்துப் போவதைக் குறிப்பிடும் தோழர் டான்ப்ரவுன் மாதிரி நிலம் சார்ந்ததும் வரலாற்றில் பயணப்படுவதுமான கதை ஒன்று பரபரப்பாய் எழுத வேண்டும் என்பதை வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார்.
இப்படியாக தமது அனுபவங்களையும் கனவுகளையும் களஞ்சியமாகக் கொண்ட காமுத்துரை அவர்கள் கலை இலக்கிய பங்களிப்பில் தமுஎகச அறம் கிளையின் செயல்பாடுகளைப் பற்றி சில பக்கங்களில் விசேஷமாகப் பாராட்டிக் கொண்டாடியுள்ளார்.

இலக்கியத்திற்கான பணிகளில் நவநவமான உத்திகளைக் கையாள்வதில் தமுஎகச அறம் கிளை எப்போதும் தனித்து நிற்கிறது என்றும் அகவிழி இலக்கிய வாசிப்பின் சார்பில் தனது அலைவரிசை நாவலிற்கான விமர்சனங்கள் குவிந்தததும் அறம் கிளைத் தோழர்கள் அந்த நாவலை கையாண்ட விதம் அளபரியது என்றும்

“அனேகமாக தமிழில் – இந்தியாவில் சொல்லப்போனால் உலகிலேயே இதுபோல் ஒரு இலக்கியப் படைப்பிற்காக இத்தனை மெனக்கிடல்கள் இதுவரை வேறெங்கும் உறுதியாக இல்லை.. அது தமுஎகச அறம் கிளையின் அகவிழிக்கு மட்டுமே உரித்தான பெருமை..”

என்றே புளங்காகிதம் கொண்டு அறம் கிளையை போற்றிப் பேசியதில் அறம் கிளையில் நானுமொரு அங்கமாக இருப்பதில் அகண்ட பெருமையும் கொஞ்சமுமாகச் செருக்கும் எட்டிப்பார்க்கவே செய்கிறது.

“இவ்வுலகம் எல்லாருக்கமானதாக அமைதல் வேண்டும். எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர்நிறை. சக்திக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற ஊதியம் மருந்தில்லா உலகம் ரசாயனமில்லா விவசாயம்.. ”

என்று தமது பாணியில் சூளுரைக்கும் தோழர் காமுத்துரை இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் மாறுபட்ட வெளிப்பாடு படைப்பின் வழியே மேலும் விரிவுபடும். எழுத்தாளன் ஒரு பகுதியை சொல்லியிருப்பானேயானால் வாசகன் அதன் இன்னொரு பகுதியை எடுத்துக்காட்ட சிறப்பாகவே இருக்கும். ஆனால் குதர்க்க வாதிகள் இதில் அடங்க மாட்டார்கள் என்று இலக்கியம் தனிமனித அறம் வாழ்க்கைத் தத்துவம் அன்றாடம் எதிர்கொள்ளும் பாடுகளை சாதாரணமாக திடகாத்திரமாக சந்திக்கும் துணிவு, அடிமட்டத்திலிருந்து உயர்வை நோக்கிப் பயணிக்கும் நிதானம், எதிர்பார்ப்புகளற்ற இயல்பான வாழ்க்கைப் போக்கு என தோழர் காமுத்துரை அவர்களின் மனமுதிர்ச்சியும் பக்குவமும் வாசகர்க்கும் வளர்ந்து வரும் இள எழுத்தாளர்களுக்கும் முன்மாதிரியான தடங்களே எதிர்படுகின்றன. எச்சூழலிலும் தனது நிதானத்தையும் பொறுமையையும் கைவிடாத தார்மீகசிந்தனையை பற்றி விதந்துப் பேச நூலொன்றை எழுத வேண்டும்.

மேலோட்டமாக மூத்த எழுத்தாளராக மட்டுமே அறிமுகமான காமுத்துரை அவர்களை பற்றி ஆழமாக அறிந்துக் கொள்ளும் வகையில் இந்நூல் பலருக்குள்ளும் எழும்பி நின்ற கேள்விகளை அறிய விரும்பிய தகவல்களை மிகச்சரியாக தொகுத்து நேர்காணல் செய்த தோழர் அராபத் உமர் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்.. நூலை வாசித்த பின் இலக்கியதளத்தில் உயர்ந்துண்ண பெரிதாக அலட்ட வேண்டாம் சாதாரணமாக நமது செயல்களில் அவதானமும் அக்கறையும் கொண்டாலே போதுமானது தொட்டகலை கூட்டிச் செல்லும் என்கிற போதனையை புசிக்க முடிகிறது.. வாழ்த்துகள் தோழர் காமுத்துரை….
நன்றி.

நூல் : புனைவின் வழியே தான் மனித நாகரீகம் பிறந்தது.
ம.காமுத்துரை அவர்களுடன் நேர்காணல்
ஆசிரியரின் பெயர் : சந்திப்பு, மு.‌அராபத் உமர்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்

 

து.பா.பரமேஸ்வரி
சென்னை

 

Latest

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத்...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக...

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – நீலப்பூ – ரா. பி. சகேஷ் சந்தியா

      கூட்டு மனசாட்சியை கேள்வி கேட்கும் நீலப்பூ விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய நீலப்பூ நாவல்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் – முனைவர் கலீல் அகமது

        நகரத்திற்குள் பொதுவாக ஊர்ந்து செல்லும் பேருந்து நகரத்தைக் கடந்ததும் வேகமாக செல்லத் தொடங்கும். எங்கெங்கே என்னென்ன இருக்கிறது என்று மெதுவாக பார்த்துக் கொண்டிருந்த நாம் பேருந்து வேகமாக செல்லத் தொடங்க முழுமையான பயணியாகி விடுவோம். அதுபோல,...

உலகளாவி நிலவும் துயரங்களுக்கு மனிதர்களின் பரிவே தீர்வாகும் – மதம் அல்ல  – சி.பி.சுரேந்திரன் | தமிழில்: தா.சந்திரகுரு

    அக்டோபர் ஏழாம் நாளிலிருந்து தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகள் அறிவித்தன. இல்லாத தங்கள் கடவுள்களின் பெயரால் அவர்கள் சண்டையிட்டு வருகின்றனர். போரால் அனாதையாகிப் போயிருக்கும் எந்தவொரு குழந்தையிடமும் கேட்டுப்...

தொடர் – 39: சமகால சுற்று சூழல் சவால்கள் – பா. ராம் மனோகர்

      கட்டிட சிமெண்ட் தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் குறைக்க முயலுமா ? மனித வாழ்க்கையில் மிக முக்கியமானது வாழிடம், குடியிருப்பு, வீடு மற்றும் அலுவலகம், பல்வேறு காரணங்களுக்கான கட்டிடங்கள், தேவை என்பதை நாம் அறிவோம்! அவற்றை உருவாக்க உதவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here