நூலாசிரியர் சமயவேல் தன் எழுத்துகள் வழியாக அவரது ஊரின் பழக்க வழக்கம் , மக்களின் வாழ்வியல் நெறி , வழிமுறைகள் , சமயம் , வழிபாடு , பண்பாடு , மதம் , சாதி உள்ளிட்ட செய்திகள் , அவர்களின் பொழுது போக்கு என அத்தனையையும் கண் முன்னே கொண்டு வருகிறார்.
இரு பகுதிகளாக எழுதப்பட்டுள்ள நூல் 135 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி முழுவதும் கலாச்சார எச்சங்கள் என்ற தலைப்பில் மேற் சொன்ன அத்தனையையும் தருகின்ற இவர் இரண்டாம் பகுதியில் ஊரில் எனது மனிதர்கள் என்ற தலைப்பில் ஒரு 12 மனிதர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.
பாரதியின் எட்டயபுரத்திற்கு அருகில் இருக்கும் ஒரு கரிசல் கிராமமான வெம்பூர் தான் நூலாசிரியரின்  கிராமம். பல நண்பர்களின் நினைவூட்டுதலாலும் ஒரு நண்பரின் தூண்டுதலாலும் இதை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்  சமயவேல் அவர்கள் .
துள்ளு மாவும் துயர நெருப்பும் அத்யாயம் என்னை எனது  வளர்ந்த நாட்களுக்கும் , எனது ஊருக்கும் அழைத்துச் சென்று விட்டது. இந்த ஒரு அத்யாயம் மட்டுமல்ல மொத்த புத்தகமும் வாசிக்க வாசிக்க என்னை இன்னொரு நினைவுக்கு அழைத்துச் செல்கிறது ,
பண்டிகைகளும் விழாக்களும் நம் இளமைக்கால நினைவுகளும் எல்லோருக்கும் பசுமரத்து ஆணியாகப் பதிந்து இருக்கும் , அந்தப் பசுமையை தொட்டு உணர்ந்து சுவாசித்து ரம்மியமாக ரசிக்க வைத்து நெகிழ வைக்கிறது துள்ளு மாவு எழுத்துகள் . கஞ்சி ஊற்றும் பண்டிகை எங்கு ஆரம்பித்து எப்படி மக்களிடையே உறவுப் பாலம் அமைத்து ஒற்றுமையை  வலுக்கச் செய்தது பற்றிய பகிர்வுகள் சிறப்பாக இருக்கின்றது. பல துவையல்களின்  பெயரில் ஏரோப்ளேன் துவையல் தான் நான் கேள்விப் படாத ஒன்று.
உருமித் திரியும் தற்கொகொலைகள் பக்கங்களைப் படிக்கும் போது இன்றைய பொள்ளாச்சி , கோவை குழந்தைகளின் பாலியல் வன்கொடுமைகள் மனதில் வந்து போகின்றன. இப்படி ஒவ்வொரு கிராமங்களிலும் ஆண்களின் பாலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளுக்கும் பெண்களையே பலி கொடுத்துக் கொண்டுள்ளோம்  என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவது போலவே உள்ளது இந்த உருமியின் துயரம் .
கடவுள் பற்றிய பொய் நம்பிக்கைகள் உதிரத் தொடங்கிய பஞ்ச காலம் பற்றி குறிப்பிட்டுள்ள காலத்தைத் துரத்திய மனிதர்களை வாசிக்கும் போது எனது அம்மாவும் பாட்டியும் அடிக்கடி சொல்லி என் மனதில் பதிந்திருந்த பஞ்ச காலம் தான்  நினைவுக்கு வந்தது.
கண்மாய்களைப் பற்றிய வாசிப்பில் கூட எனது இளமைக் காலம் , ஏற்றம் இரைக்கும் கிணறு , வாய்க்கால் சலசலப்பு , ஊரில் மழைக்காலத்தில் கேட்கும் தவளைச் சத்தம் இவைதான் என்னை ஆட்கொண்டன.
ஏரி, குளம் தூர்வாரினால் குடிநீர் ...
கரம்பை யுத்தம் முழுவதும் , கரம்பை மண் பற்றிய விளக்கமும் அது எவ்வாறு தோட்டங்களில் கலந்து வெள்ளாமையை மீட்டெடுக்கிறது என்பதையும் , அது திருடப்படுவதன் சம்பவங்களும் தான் வருகின்றன. கட்சிகளும் ஜாதிகளும் பின்னிப் பிணைந்த நமது மக்களாட்சியில் , ஜாதிகள் மக்களாட்சி முறையின் கழுத்தை அறுத்துக் கொண்டிருப்பதை நிகழ்ச்சிகளின் பதிவுகளால் நம்மை வந்தடையச் செய்கிறார் நூலாசிரியர்.
1972 இலேயே தன் ஊரில் பாரதி இளைஞர் மன்றத்தை உருவாக்கி , பாரதி படிப்பகம் ஏற்படுத்தியதையும்  கண்மாய்க்கு அணை வழியே நீர் கொண்டு வர அரசு செலவிட்ட தொகை சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து , பிரச்சனைகளைக் களைய 500க்கும் மேற்பட்ட மக்களிடம் கையெழுத்து வாங்கி ஆட்சியரை சந்தித்து செய்த பணிகள் இவரை ஒரு சமூக செயல்பாட்டாளராக ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பே அடையாளப்படுத்துகிறது. சிட்டிசன் திரைப்படத்தில் அத்திப்பட்டு அணை காணாமல் போன கதையை என் மனம் இதோடு இணைத்துப் பார்த்தது.
கனவின் இருள் பெய்யும் பாவைக் கூத்து 
வாசிக்க வாசிக்க என் ஜலகை ஊரில் தை மாதம் நடக்கும் கூத்துகள் நினைவுக்கு வருவதோடு , 10 மணிக்கு ஆரம்பிக்கும் கூத்துக்கு சாக்குப் பையோடு பக்கத்து வீட்டு பார்வதி அக்காவுடன் போய் நடுஜாமம் வரை சந்தைக் கடை மணளல் உட்கார்ந்து பார்த்து வரும் நாட்கள் கண்களின் வழியே மனதை ஈரப்படுத்தியது.
இங்கு கீதாரி ,பாவைக் கூத்துக் குடும்பம் , நிகழ்த்து கலைகள் இவற்றை சுவாரஸ்யமாகக் கூறும் ஆசிரியர் ஜடாயு போர் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். கலாச்சாரத்தின் நுண்ணிய வேர்களை அறியாதவர்களால்  தான், பாவைகள் தீப்பிடித்து எரியும் காட்சிகளைப் படமாக்க முடியும் என்று வருத்தப் படுகிறார் தசாவாதாரக் கதையின் காட்சிகளைக் கூறி வருந்துகிறார் .
samayaஇப்படியாக சேத்தாண்டி ஊர்வலம் , கோயிந்தா கோய்ந்தா , மனசுக்குள் மத்தாப்பு கொளுத்தும் பெரிய கார்த்திகை , எங்க ஊர் வெம்பூர் , ஊர் நீங்குதல் என்பதான மேலும் சில தலைப்புகளில்  எழுதியுள்ளார். சாதிப் பிரச்சனை , இரட்டை டம்ளர் முறை பற்றி கூட பேசுகிறது நூல். அதன் தொடர்ச்சியாக  25 வருடத்திற்கு முன் இன்றுள்ள எடப்பாடி ஊரின் 10 கி.மீ தூரத்தில் கட்டி நாயக்கன்பட்டி என்ற சிறு கிராமத்து அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு கண் பார்வை போனது பற்றிய வரலாறு உங்களுக்கு நினைவிருக்கலாம்  , அங்கே பிரச்சனையே இந்த இரட்டை டம்ளர் முறை தான்.
ஊரின் வரைபடமும் புத்தகத்தின் 96 , 97 ஆம் பக்கங்களில் தரப்பட்டு இரண்டாம் பாகத்தில் எனது மனிதர்கள் என்ற தலைப்பில் அவரது நினைவில் நிற்கும் மறக்க முடியாத  மனிதர்களுடனான அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
படிக்கும் ஒவ்வொருவருக்கும்  மனசை இலேசாக்க அவரவர் வாழ்க்கை , ஊர் ,மக்கள் என அழைத்துச் செல்லும் நல்லதொரு படைப்பு .இதன் அட்டைப்படம் நம்மை மெதுவாக தொட்டு ரசிக்க வைக்கிறது.
உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *