2020இல் தயாரிக்கப்பட்டு 2021 ஏப்ரல் மாதம் வெளியான பஞ்சாபி படம். அவதார் சிங் இயக்கத்தில் அமன் சித்து உரையாடல்கள் எழுதியுள்ளார். கரம்ஜித் அன்மோல், ஏக்தா குலாட்டி, பியா ஷர்மா, லக்கி தலிவால், பிஹு ஷர்மா லவ் கில் ஆகியோர் நடித்துள்ளனர். மிகக் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
ஆண் குழந்தை வேண்டும் என்று நினைத்து மூன்று பெண் குழந்தைகளைப் பெறுகிறார் அஞ்சல் நிலையத்தில் பணிபுரியும் சுனில் ஷர்மா. மூன்றாவது பிரசவத்தில் அவரது மனைவி இறந்துவிடுகிறார். முதல் பெண் திருமணமாகி மாமியாரின் அவமானப்படுத்தும் பேச்சுக்களால் கணவனைப் விட்டு பிரிந்து வந்து விடுகிறார். இரண்டாவது பெண் படிப்பில் திறமைசாலி.ஆனால் பயந்த சுபாவமும் அதிகம் பழகாத குணமும் உடையவர். மூன்றாவது பெண் தைரியமானவர்;குத்து சண்டை பழகுகிறார். (என்ன இப்பொழுது வரும் படங்கள் பல குத்து சண்டை தொடர்பானதாக இருக்கிறதே?- ஆனால் இதில் குத்துச்சண்டை சிறிய பகுதிதான்.) கட்டுப்பெட்டியான சமுதாயத்தில் வாழும் ஷர்மாவை அவரது சக ஊழியரும் பெண்களை வளர்ப்பது குறித்து அடிக்கடி எச்சரிக்கிறார். எனவே ஷர்மா தன் பெண்களை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார். பெரிய பெண்ணை கணவன் வீட்டிற்கு திரும்ப போக சொல்கிறார். மாமியார் மன்னிப்பு கேட்காமல் போக முடியாது என அவள் மறுத்து விடுகிறாள்.
பக்கத்து வீட்டு இளைஞர்கள் இரவில் சத்தமாக பாட்டுக் கேட்டுக்கொண்டு இருப்பதைக் கண்டிக்கபோகும் இடத்தில் அவர்கள் இவரை அடித்துவிரட்டி விடுகிறார்கள். பெண்கள் மூன்று பேரும் அந்த இளைஞர்களை துவைத்து எடுத்து விடுகிறார்கள். தங்கள் தந்தை மீது யார் கை வைத்தாலும் அவர்களை சும்மா விட மாட்டோம் என்கிறார்கள். அதுமுதல் அவர்கள் மீதான ஷர்மாவின் பார்வை மாறுகிறது. இரண்டாவது பெண் டிம்பிள் மாநில அளவில் பத்து இடங்களுக்குள் மதிப்பெண் பெறுகிறார். அதற்குப் பரிசாக அதுவரை உறவினர் வீட்டிற்குக் கூட அனுப்பாத அவர் இப்போது அவர்களை மலைவாசஸ்தலத்திற்கு தனியாக அனுப்புகிறார். அதற்குப் பிறகு தோழி ஒருத்தியின் பிறந்தநாள் விழா நைட் கிளப்பில் நடக்கிறது.

அதில் கலந்துகொள்ளும் மூன்று பேரும் சற்று கவர்ச்சியான உடையில் ஆடும் காணொளி ஊடகத்தில் பரவுகிறது. மிகுந்த கோபம் கொள்ளும் ஷர்மா மூவரையும் அடித்து துவைத்து விடுகிறார். இரண்டாவது பெண்ணிற்கு திருமணத்தையும் நிச்சயிக்கிறார். தந்தையின் வருத்தத்தைப் போக்குவதற்காக அவள் அதற்கு ஒப்புக்கொள்கிறாள். பெரியவளும் கணவன் வீட்டிற்கு திரும்பப் போக ஒத்துக் கொள்கிறாள். திருமணத்தன்று அவளுக்கு வேலைக்கான நேர்காணலும் வருகிறது. மற்ற இரு சகோதரிகளும் அவளைக் கட்டாயப்படுத்தி அதற்கு செல்ல வைக்கிறார்கள். அதனால் திருமண விழாவிற்கு சற்று தாமதமாக வரும் அவளை மணமகன் வீட்டார் ‘ஓடிப்போனவள்’ ‘பழைய காதலனை பார்க்கப் போயிருக்கிறாள்’ என்றெல்லாம் கேவலமாக பேசுகிறார்கள். ஆனால் அவளுக்கு மாதம் 25 இலட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது என்று தெரிந்தவுடன் குழைகிறார்கள். தன் பெண்கள் எந்த முடிவெடுத்தாலும் அது சரிதான் என்று ஷர்மா சொல்வதுடன் படம் முடிகிறது.
முதலில் சிறிது நேரம் சற்று மெதுவாகவும் அலுப்பூட்டுவதாகவும் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக படம் சுவாரசியமாகி நம்மை அதில் ஆழ்த்திவிடுகிறது. தெருக்கூத்தில் வரும் சூத்திரதாரி போல ஒரு பாத்திரம் கதையை அவ்வப்பொழுது சொல்வதும் அவர் பெயர் லாலு பிரசாத் யாதவ் என்பதும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவருக்குப் பிறகு அவரது மகன் பப்பு யாதவ் அதை தொடர்கிறார். மற்றவர்களுடன் சேர்ந்து பெண்களை திருட்டுத்தனமாக ரசிக்கும் அந்தப் பாத்திரத்திற்கும் இறுதியில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார் கதாசிரியர்.

ஆங்காங்கே வசனங்கள் கூர்மையாக விழுகின்றன. ‘வாழ்க்கை முழுவதும் சேவை செய்தாலும் மனைவியை பாராட்டாத ஒரு கணவன் மாமானாரின் ஸ்கூட்டரை துடைத்தவுடன் மனைவி மயங்கிவிடுவாள் என்று எப்படி எதிர்பார்க்கிறார்?’
‘திருமணம் செய்து கொள்வதும் வேலைக்கு போவதும் ஒன்றுதான். என்ன அதில் சம்பளம் இல்லை. அவ்வளவுதான்.’
தந்தையாக நடிக்கும் கரம்ஜித் அன்மோல் சிறப்பாக செய்திருக்கிறார். மறைந்த நடிகர் பாலையா இந்தப் பாத்திரத்தை செய்தல் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது. டிம்பிளாக நடிக்கும் நடிகை அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு சிறப்பாக செய்திருக்கிறார்.
நல்ல கருத்துகளை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்கள். பல பிரபல படங்களுக்கு உரையாடல் எழுதியிருக்கும் இதன் கதாசிரியர் அமன் சித்து ‘பஞ்சாபி திரையுலகம் நகைச்சுவை வகைமைகளிலிருந்து மாறி தீவிரமான கருத்துகளை சொல்ல தொடங்கியிருக்கிறது. ஆனால் அதை கனமாக வைக்காமல் மிருதுவாக வைக்க வேண்டும்’ என்கிறார். குறிப்பிட்ட சமூக நிலையிலிருக்கும் பகுதியினருக்கு அதுதான் சரியாக இருக்கும். அபத்தமான நகைச்சுவையையே வழங்கிக்கொண்டிருக்கும் படங்கள் இடையில் அர்த்தமுள்ள நகைச்சுவைப்படம்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

