புன்னகை குறுங்கதை – ஜெயஸ்ரீ

Punnagai Short story by Jayasri ஜெயஸ்ரீயின் புன்னகை குறுங்கதை
காலை இறைவழிபாடு முடிந்தது. நடேசன் சார், ‘பள்ளி வளாகத்திற்கு வெளியில் யாரும் வெளியே செல்ல கூடாது. பாதுகாப்பு இல்லை என்றும் கூறி விசிலடித்து முடித்தார்.

சன்விகாவும் நரேனும் மூன்றாம் வகுப்பு “இ” பிரிவுக்குள் நுழைந்தார்கள். காலை ஆங்கில வகுப்பு முடிந்தது. மணியடித்தது.

“தேங்க் யூ மிஸ்”. ஆசிரியை வெளியேறினார். சன்விகா தனது முறுக்கு டப்பாவை திறந்தாள்.

“முறுக்கா…?” எட்டிப்பார்த்தான் நரேன்.

“ம்.. இந்தா.. பர்பி எடுத்துக்கோ.. ” நரேன் சன்விகாவிடம் நீட்டினான்.

“இன்னிக்கு லஞ்ச் சாப்பிட வெளிய மரத்தடிக்குப் போலாமா பா..”

“பி.டி சார் பாத்தா அடி பின்னிடுவாரு. நீ வேணா பெர்மிஷன் கேட்டுக்கோ”. கணக்குப்பாட வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியேறவும் மதிய உணவு இடைவேளை மணியடிக்கவும் சரியாக இருந்தது.

“வா.. வெளிய போய் சாப்புடலாம்”

வெளியே மரத்துக்கடியில் இருவரும் அமர்ந்தனர். இருவருக்கும் பி.டி சாரை நினைத்து உள்ளுக்குள் பயம் வேறு.

“இன்னிக்கு நான் நூடுல்ஸ்.. நீ..?” நரேன் பாக்ஸை திறந்தான். “வெஜ் ப்ரைட் ரைஸ்”.

இருவருக்கும் இடையில் ஒரு சிறிய உள்ளங்கை நுழைந்தது. நிமிர்ந்து பார்த்தனர்.

இன்னும் பேச்சு வராத சின்னப் பையன். கிழிந்த அழுக்குச் சட்டை. மண் அப்பிய பழைய டவுசர். செம்மண் படிந்த சீவாத தலை. பசி அவன் கண்களில் தெரிந்தது.

இருவரும் டிபன் பாக்ஸ் மூடியில் நூடுல்ஸும் வெஜ் ரைஸும் பாதி வைத்து தந்தார்கள். அழுக்குச் சிறுவன் கன்னாபின்னாவென்று முழுங்கி தின்று தீர்த்து பாக்ஸ் மூடியை திருப்பிக் கொடுத்தான். பசி தீர்ந்து அழுக்குச் சிறுவன் புன்னகைத்தான். நரேனும் சன்விகாவும் புன்னகைத்துக் கொண்டார்கள் பசியில்லாத வருங்கால இந்தியாவும் புன்னகைத்தது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.