கவிதை : புன்னகை முட்கள்
ஒரு நிலத்தினிலிருந்து பிடுங்கி
வேறு நிலத்தினில்
நாட்கள் செல்லச் செல்ல
எனை அறியாது
விதிமுறைகளுக்குள்
அடங்கிப்போனேன்…
மிகச் சுலபமாய்
அவை எனதாகிப் போயின…
“இதுதானே நடைமுறை”
என்ற
காலம் காலமான
அறியாமையால்…
புது வீட்டில்
புதுப் பெண்ணாய்
புழங்கு வெளிகளில்
மாறி மாறி
எனது நிமிடங்கள்
கடந்து கொண்டிருந்த
நாட்களில்…
வீடு திரும்பும்
கணவன்…
எங்கிருந்தாலும்
எனைத் தேடி வந்து
ஒரு புன்னகை வீசி
நகர்வான்…
என்னதான் அச்சூழலை
பழகி வந்தாலும்…
பிரிதலின் வலிகளுக்கு
மருந்திட்டுச் செல்லும்
அவனது முகிழ்நகை….
இப்படியாய்
நகர்ந்த நாட்களில்…
திருமணத்திற்கு பின்
எனக்குப் பிரியமான
புத்தக வாசிப்பை
தொடராததை
மனம் உணர்த்த…
இன்னும் பிரிக்கப்படாத
ஒற்றை அட்டைப்பெட்டியில்
பத்திரமாய் எடுத்து வந்திருந்த
புத்தகங்களை
எனது அலமாரியில்
அடுக்கினேன் வரிசையாக…
எல்லா வேலைகளையும்
முடித்துவிட்டோமாவென
ஒரு முறைக்குப் பலமுறை
உறுதிப்படுத்திய பின்
நீண்ட நாளாய்
வாசிக்க எண்ணிய
புத்தகத்தை
உப்பரிகையிலமர்ந்து
வாசிக்கத் தொடங்கினேன்…
புதிதான இடத்தில்
வாசிப்பது கூட
நல்அனுபவமாய்…
அன்று வீட்டிற்குள் நுழைந்தவுடன்
என்னைக் காண
ஓடோடி வந்த கணவன்
எனது கையில்
புத்தகத்தைக் கண்டவுடன்
புன்னகைத்தான்
நிறைந்திருந்தது
முழுதும்
வெறுமையே …
பிறகொரு நாள்
திருமணத்திற்குப் பின்னாக
தோழியோடு
பேசவேயில்லையே
என்ற ஏக்கத்தோடு…
வீட்டு வேலைகள் யாவும்
முடித்தாகிவிட்டது
என்ற விழிப்புடன்…
அலைபேசி
வாயிலாகப் பேசிக் கொண்டிருந்தேன்
தோழியோடு…
வீடு திரும்பிய கணவன்
ஓடோடி வந்தான்
எனைக் காண…
கண்டவன் இன்றும்
வீசிச் சென்றான்
வெற்றுப் புன்னகையே…
இன்னும் வெவ்வேறு
நாட்களில்
எனக்கான வெவ்வேறு
வேலைகளில்
ஈடுபட்டிருந்தேன்…
எப்போதும்
எல்லா வேலைகளையும்
முடித்த கவனத்தோடு…
மிஞ்சியது
சூன்ய புன்னகை மட்டுமே…
பின்னொரு நாள்
அசதியினால்
சமையலறை
வேலைகள்
தாமதமாயின…
வீடு திரும்பியவன்
ஓடோடி வந்தான்
எனைத் தேடி…
சமையலில் இருந்த
எனை கண்டவன்
வெகுநாட்களிற்கு பின்
நிறைவாய்
ஒரு புனைகைத்தான்…
குத்திக் கிழித்தது முட்களாய்….
எழுதியவர் :
சு. இளவரசி
சிவகங்கை
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
//சமையலில் இருந்த
எனை கண்டவன்
வெகுநாட்களிற்கு பின்
நிறைவாய்
ஒரு புனைகைத்தான்…
குத்திக் கிழித்தது முட்களாய்….//
பெண்ணின் வலியை அப்படியே பிரதிபலிக்கும் வரிகள்.
படித்ததும் வலித்தது. 😔