Punnaigaigal Virpanaikku Poem By Adhith Sakthivel புன்னகைகள் விற்பனைக்கு கவிதை - ஆதித் சக்திவேல்

புன்னகைகள் விற்பனைக்கு கவிதை – ஆதித் சக்திவேல்




“புன்னகைகள் விற்பனைக்கு”
அறிவித்தது கடை முன் இருந்த
விளம்பரப் பலகை

உள்ளத்தின் ஊற்றுக் கண்ணில்
இறைக்க இறைக்க
உயிரோட்டமாய்ப் பெருகி
முகத்தில் ஒளிர்ந்து
மனதின் விரிந்த எல்லைகளைக் காட்டும்
அந்தப் புன்னகை

முகத்தில் ஒட்டிக் கொண்ட
நட்சத்திரத் துணுக்காய்
உதடுகளில் மலரும் உடல் மொழியாய்
நிசப்தத்தின் இடைவெளியை
நிரப்பும் ஒலியில்லா மொழியான
அந்தப் புன்னகை

எவை மேவிய பாதையில்
புயலும் நுழைய அஞ்சுமோ
நடப்பவரின் கால்கள்
தரையைத் தொடுவதில்லையோ
அவை இங்கே விற்பனைக்கு

அண்மைக் காலத்தில்
புன்னகையின் தேவை
பெருகிய பின் – அதன்
கேட்பு – வழங்கல் சங்கிலி
அறுந்திடாது தொடர
பல முனைகளில் விற்பனை ……
இன்று கடைச் சரக்கானது புன்னகை

“எங்கே கொள்முதல் செய்வீர்கள்?”
வீட்டுக்குள்
தொடுதிரையில் இணைய வழி
பாடம் படித்துக் கொண்டிருந்த
தன் குழந்தையைக் காட்டினார்
கடைக்காரர்

அதிர்ந்து போய்
குழந்தையின் முகத்தைப் பார்த்தேன்
தாயின் கருவில் சிந்திய
புன்னகைகளின் நீட்சியாய்
வகுப்பைறைகளில்
மகிழ்ச்சியும் சிரிப்பும் கலந்து
குளிர் காலப் பனி போல்
புன்னகை சொரிந்த அதன் முகத்தில்
அவை உறைந்து போயிருந்தன

ஈரம் காயக் காய – இறுகிப்
பாளம் பாளமாய் வெடித்த
களி மண்ணாய்
இலைகள் உதிர உதிர
பட்டுப்போய் மொட்டையான மரமாய்
சுருதி பிறழ்ந்த இசையின்
ஏமாற்றம் நிறைந்த ஏக்கமாய் புன்னகைகள் காய்ந்து உதிர
பாலைவனமாய் மாறியிருந்தது
குழந்தையின் முகம்
ஒரே ஒரு பகல் பொழுதில்

உதடுகள் பிரியாது
உதிரும் புன்னகையின்
முதிராக் கருக்கள் கூட
அதன் முகத்திலிருந்து
சுரண்டி எடுக்கப்பட்டிருந்தன

“இணைய வகுப்பு முடிந்ததும்
பெருக்கி எடுத்துக் கொள்வேன்
தேவையானவற்றை ”
என்றார் கடைக்காரர்

இனி
புன்னகையின்
தேவை – வழங்கல் சங்கிலியை
உடைத்திட எவராலும் முடியாது- அது
மலிவாக வீட்டிலேயே கிடைப்பதால்

“புன்னகைகள் விற்பனைக்கு
மலிவு விலையில்” எனும்
விளம்பரப் பலகைகளைக் காணலாம்
இன்னும் பல கடைகளில்
ஒரு சில நாட்களில்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *